மக்கள்தொகைப்
பெருகுவதற்கேற்ப நோய்களும் பெருகுவதைப் போல அவர்களின் மனமும் நோயால்
பீடிக்கப்படுவதும் பெருகிக் கொண்டே செல்கிறது. நோயைக் கட்டுப்படுத்த
மருத்துவர்களைத் தேடி ஓடுகின்றோம். அவர்கள் உண்மையிலேயே அந்த நோயைத் தீர்க்கக்
கூடியவர்களா? அதற்கான தகுதியும் திறமையும் அவர்களிடம்
இருக்கிறதா என்பதெல்லாம் வேறு பிரச்சினை. நம் நாட்டில் எல்லாவற்றிலும் போலிகள்
பெருகிக் குவிந்துவிட்ட மாதிரி, அதிலும் போலிகள் என்பது
நமக்கு ஒரு செய்தியாகவே முடிந்துவிடுகிறது.
நமக்கு
உணவை உருவாக்கித் தருகின்ற விதைகளில் போலி, விளைச்சலுக்குப்
பயன்படுத்துகிற இடுபொருள், பூச்சிக்கொல்லிகளில் போலி,
நம் பிள்ளைகளுக்குக் கல்வி கற்றுத் தருகிற கல்விக் கூடங்களில் போலி,
பாடம் சொல்லித் தந்து இந்தச் சமுதாயத்தை உருவாக்குகின்ற ஆசிரியர்களில்
போலி, அன்றாடம் பயன்படுத்துகின்ற, ஒவ்வொரு
குழந்தைக்கும் கட்டாயம் தேவைப்படுகிற பாலில் போலி, விற்கப்படுகிற
உணவுப் பண்டங்களில் போலி, வயிற்றுப் பசியைத் தீர்க்கின்ற
உணவகங்களில் போலி, குடிக்கின்ற உயிரைத் தருகிற தண்ணீரில்
போலி, மூக்கு வழியாக ஒவ்வொரு நொடியும் உள்ளே போய்க்
கொண்டிருக்கின்ற காற்றும் போலி, மக்களை
நல்வழிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதாகச் சொல்லிக்கொள்கின்ற மத வழிபாடுகளை
வழிநடத்துபவர்களிலும் போலி, மக்களுக்கு
தொண்டாற்றுவதற்காகவேதான் தன் வாழ்நாளை ஒப்படைத்துவிட்டதாகச் சொல்லும்
அரசியல்வாதிகளிலும் போலி!
எதில்தான்
போலிகள் இல்லை. இதற்கு ஒரே சொல்லில் அசலே இல்லாத உலகம் என உடனே சொல்லியிருக்கலாம்.
தூய்மை இல்லாத ஒன்றை போலி எனச் சொல்லாமல் எவ்வாறு சொல்வது? அவ்வாறு சொல்ல எது தடையாக இருக்கிறது? நம் மனமா?
சூழலா? எது? எல்லாவற்றிலும்
போலிகள் உருவானதற்கும், உருவாகிக்கொண்டு இருப்பதற்கும் யார்
காரணம் என ஒரு நொடி சிந்திக்க நாம் பயப்படுகிறோம். அதற்கான பதில் நமக்கு
மகிழ்ச்சியைத் தராது என்பதால் உடனே விலகிக்கொள்கிறோம்.
ஓரிடத்தில்
தவறு நேரும்போது எதிர்க் குரல் எழுப்பவோ, எதிர்
நடவடிக்கைகளில் செயல்படவோ நம்மால் முடிவது இல்லை. கண்டும் காணாதது போல்
விலகிவிடுகிறோம். ஒரு குழந்தைப் பிறந்து இந்த உலகத்தைக் கண்டு, ஒவ்வொரு நொடியும் கற்றுக்கொள்ளும்போது, அதன் மனதில்
விதைக்கப்படுவதுதானே பின்பு விளைச்சலாகக் கிடைக்கும்? நம்
குழந்தை நம்மைப் பார்த்துக் கேள்வி எழுப்புவதையோ, எதிக்
குரல் எழுப்புவதையோ நாம் விரும்புவது இல்லை. உடனே, அப்பாவும்
அம்மாவும் மாறி மாறி அடக்கியாள நினைக்கிறோம்.
உலகத்திலே
சிறந்த இடம், மனித வாழ்வில் மிகமிக முக்கியமான இடம்...
பாடசாலைகளைவிட எதுவாக இருக்க முடியும்? அறிவை உருவாக்கித்
தருகின்ற இடமும், சூழலும், அந்தப்
பாடங்களும், அதனைப் போதிக்கின்ற ஆசிரியர்களும் அவர்களுக்குப்
பிடித்தமானவர்களாக இருக்கிறார்களா?
ஒரு
குற்றமும் செய்யாதப் பிள்ளைகளை மூன்று வயதிலேயே சிறைக்கு அனுப்பி, அடைத்துவிடுகிறோம். இரவில் மட்டும் வீடு போன்ற ஒன்றில் தூங்கவைத்து,
மீண்டும் சிறையில் கொண்டுபோய் அடைத்துவிடுகிறோம். ஒழுக்கம் என்கிற
பெயரிலும், அறிவு என்கிற பெயரிலும் அங்கு கற்றுக்
கொடுக்கப்படுபவைகளைப் பற்றி நமக்கெல்லாம் ஒரு நிமிடம் சிந்திக்க நேரம் இருக்கிறதா?
தன்
தலையிலேயே குப்பையைக் கொட்டினாலும், தன்னை எந்தெந்த
வகைகளில் இடையூறு செய்தாலும், தனக்கு எதிராக எது நடந்தாலும்
ஓடிவந்து வீட்டுக்குள் உட்கார்ந்துக்கொண்டு, பாதுகாப்பான
வாழ்க்கை வாழத்தானே பழகியிருக்கிறோம். அதைப் பார்த்து வளரும் நம் பிள்ளைகள் அதே
போலத்தானே வளர்கிறார்கள்? அவர்களின் வயிற்றுப் பிழைப்பைப்
பற்றி மட்டுமே சிந்திக்கக் கூடிய கல்வியைத்தானே சொல்லிக்கொடுத்துக்
கொண்டிருக்கிறோம்.
இதையே
சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்டவர்கள், தங்களை மட்டுமே
அல்லது அதிகப்படியாகத் தன் குடும்பத்தைப் பற்றி மட்டுமே கவலைப்படுபவர்களாக
வளர்கிறார்கள். நாட்டில் எது நடந்தாலும் எதைப் பற்றியும் கவலைப்படுவது இல்லை.
அவனுக்கு, அவன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு, அவனது வேலைக்கு சிக்கல் வந்தால் மட்டுமே போராடுகிறான். துள்ளிக்
குதிக்கிறான். மனிதனைத் தவிர ஆடு, மாடு போன்ற விலங்குகளும்
மற்ற உயிரினங்களும் மேற்கொண்டு சிந்திக்கத் தெரியாமல் இதைத்தானே
செய்துகொண்டிருக்கின்றன?
அதிகாரத்தாலும், ஆட்சியாளர்களாலும், அரசியல்வாதிகளாலும் நேரடியாகவோ,
மறைமுகமாகவோ மிரட்டப்படுகின்ற இந்த மக்களுக்காகப்
போராடுகின்றவர்களாக உங்கள் மாணவர்களை உருவாக்கியிருக்கிறீர்களா? அல்லது இந்த மண்ணுக்கோ, இந்த இனத்துக்கோ, இந்த மொழிக்கோ சிக்கல்கள் வரும்போதெல்லாம் எதிர்ப்புகளைத் தெரிவித்துப்
போராட முன் நிற்கின்றவர்களாக உருவாக்கியிருக்கிறோமா?
ஒவ்வொரு
வேளையும் விதவிதமாக உண்டு மகிழ்கிறோமே! வாழ்வு முழுக்க உழைத்து உழைத்து
வறுமையிலேயே கிடந்து, கடனாளியாகவே மாண்டுவிடுகின்ற உழவனாக மாறுங்கள்...
அவன் விதியை மாற்றுங்கள்... என எந்தப் பெற்றோராவது, ஆசிரியராவது,
அரசியல்வாதியாவது, ஆட்சியாளர்களாவது
சொல்லியிருக்கிறோமா? உழவுத் தொழிலைச் செய்யச் சொல்லித்
தராமல் போனாலும், அதைச் செய்பவனையும், அந்தத்
தொழில் ஒன்று இருப்பதையும் சொல்லியாவது கொடுத்திருக்கிறோமா? அந்தத்
தொழிலையும், அவர்களையும் மதிக்கக்கூடச் சொல்லித் தராதக்
கொலையாளிகள்தான் நாம்.
வகுப்பில்
உள்ள மாணவர்களைப் பார்த்து நீங்கள் என்னவாகப் போகிறீர்கள்? எதைச் செய்து கிழிக்கப் போகிறீர்கள் எனக் கேட்கிறீர்களே. ஒரே ஒரு
மாணவனாவது, ‘‘நான்... உழவுத் தொழில் செய்து இந்த மக்களுக்கு
உயிர் காக்க உணவளிக்கும் வேலையைச் செய்யப் போகிறேன்’’ எனச்
சொல்லியிருக்கிறானா? அவ்வாறு அவன் ஒருவேளை சொன்னால், அது அங்குள்ள மாணவர்களுக்கு கவுண்டமணி, வடிவேல்
நகைச்சுவைக் காட்சி போலல்லவா அது ஆகியிருக்கும்.
அல்லது
எந்த ஆசிரியராவது இந்தத் தொழிலைச் செய்யுங்கள் என்றாவதுதான் சொல்லிருயிப்பீர்களா? ஒன்று நீங்களும் சொல்ல மாட்டீர்கள். அப்படிச் சொன்னால் அவர்களின்
பெற்றோர்களும் உங்களை உயிரோடு விட மாட்டார்கள். பிறகு நீங்கள் சார்ந்திருக்கின்ற
கல்வி நிறுவனமே உங்களின் வேலையைப் பறித்துவிடும்.
‘உழவுத் தொழில் படிக்காதவன் செய்கிற வேலை‘ என நாம்
சொன்னதால்தான், இன்று நாம் தன்னலவாதியாக, சோம்பேறிகளாக, வேலையில்லாதவர்களாக மாறிவிட்டோம்.
இதைச் செய்ததெல்லாம் இந்தக் கல்வி நிறுவனங்களும், அதற்குத்
துணையாக இருந்த நம் பெற்றோர்களும், எல்லாரையும்
வழிநடத்துகின்ற அரசாங்கங்களும்தானே பொறுப்பேற்க வேண்டும்? தமிழ்நாட்டில்
மட்டும் ஐநூரைத் தாண்டும் பொறியியல் கல்லூரிகள். ஆனால், வேளாண்மைக்
கல்லூரிகளை இரண்டு கை விரல்களுக்குள் எண்ணிவிடலாம்.
அங்குப்
படிக்க வந்தவர்களில் பெரும்பாலானோர் ஆர்வத்தோடு அதனைப் படிக்க வந்தவர்கள் இல்லை.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்... என
இந்திய அரசுப் பணிகளில் சேருவதற்காகக் குறுக்கு வழிகளைத் தேடி வந்தவர்கள். இந்த
லட்சணத்தில் எங்கள் பள்ளிதான் சிறந்தப் பள்ளி, எங்கள்
கல்லூரிதான் சிறந்தக் கல்லூரி... என ஆர்ப்பாட்டமும் பெருமிதமும் வேறு. ‘எங்கள் கல்லூரியில், பள்ளியில் படித்தவர்கள் தாங்கள்
ஆற்றிவரும் பதவிகளில், பொறுப்புகளில், நிர்வாகத்தில்
நேர்மையாகவும் கண்ணியமாகவும், பொறுப்புடனும் சமுதாயத்துக்கு
வழிகாட்டுபவர்களாகவும், எதிர்காலத் தலைமுறைக்கு
முன்னோடிகளாகவும், நம் சமுதாயத்துக்கு அடையாளமாகவும்
விளங்குகிறார்கள்.
அவர்களெல்லாம்
இவர்கள்தான்‘ எனும் பட்டியலைக் கொஞ்சம் வெளியிடுங்களேன். ‘எங்கள் கல்லூரியில் படித்தால் உடனே வேலை‘ என மட்டும்
விளம்பரப்படுத்துகிறீர்கள். வேலையை வாங்கிகொண்டு அவன் என்ன செய்வான்? ‘அவன் உண்டு... அவன் வேலை உண்டு‘ எனச்
சமுதாயத்தைவிட்டு ஒதுங்கிவிடுகிறான். அல்லது இந்த ஊரே வேண்டாம் என நாட்டைவிட்டே
ஓடிவிடுகிறான்.
எல்லா
போலிகளையுமே உருவாக்கித் தருகிற கூடமாக கல்விக்கூடங்கள் மாற்றப்பட்டுவிட்டது என
எப்போது நாம் உணரப் போகிறோம்? இவர்கள்தான் தூய்மையானவர்கள்,
இவர்கள்தான் நம் தலைவர்கள், இவர்களெல்லாம்
நாம் போற்றப்பட வேண்டியவர்கள், இவர்கள் போல்தான் நீயும்
உருவாக வேண்டும் என யார், யாரை சுட்டிக் காட்டிப் பிள்ளைகளை
வளர்க்கப் போகிறோம்? கொஞ்சம் நம் இளைய தலைமுறைகளிடம்,
நம் மாணவர்களிடம், நம் மக்களிடம் யார்
யாரெல்லாம் இந்தச் சமூகத்தில் முக்கியமானவர்கள்? யார் யாரை
நீங்கள் மதிக்கிறீர்கள்... எனக் கேளுங்களேன்.
அவ்வப்போது
ஒரு நேர்மையான அதிகாரியையோ, மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடுபவர்களையோ நாம்
பார்க்கிறோம், கேள்விப்படுகிறோம். அந்த நேரத்தில் எல்லாம்
மனதளவிலோ, அருகில் உள்ளவர்களிடத்திலோ பாராட்டிவிட்டு,
நம் வேலையைப் பார்க்கத் தொடங்கிவிடுகிறோம். இந்தச் சமுதாயத்தில்
நிகழ்கிற அநியாயத்தைக் கண்டு போராடுபவர்களுக்கும், கொதித்தெழுபவர்களுக்கும்
நாம் எப்போதாவது துணையிருந்திருக்கிறோமா?
நேர்மையான
அதிகாரி என்றால்... சகாயம் மட்டும்தானா? அவர்களைப்
போன்றவர்கள் நேர்மையான கடமையைச் செய்வதற்காகவே எவ்வாறெல்லாம்
பழிவாங்கப்படுகிறார்கள்? எவ்வாறெல்லாம் பந்தாடப்படுகிறார்கள்?
அவர்களைப் போன்றவர்களுக்கு நாம் வெறும் பாராட்டை மட்டும்
தெரிவித்துவிட்டால், நம் கடமை முடிந்துவிடுகிறதா? நம்மால் செய்ய முடியாததை, அவர்கள் செய்கிறார்கள். நம்மால்
சாதிக்க முடியாததை, அவர்கள் சாதிக்கிறார்கள். நம்
சமுதாயத்துக்கு வழிகாட்டியாக மாறுகிறார்கள்.
அதே
போல் தொடர்ந்து பொதுநல வழக்குகளைத் தொடுத்து, எத்தனை
இன்னல்கள் வந்தாலும் போராடிக்கொண்டேயிருக்கிற டிராபிக் ராமசாமியை எத்தனைப்
பேருக்குத் தெரியும்? மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும்
கேடு விளைவிப்பதாகச் சொல்லி, விளம்பர பதாகைகளுக்கு உயர்
நீதிமன்றம் தடைவிதித்தபோதும், சிறிதும் உத்தரவை மதிக்காமல்
தங்களுக்குப் பிழைப்புக் காட்டும் தலைவர்களுக்கு வினைல் விளம்பரம் வைத்து நன்றி
செலுத்த நினைத்தார்களே... இதனை எதிர்த்து எத்தனையோ முறை அவர் போராடியிருப்பார்.
தாக்குதலுக்கும் ஆளாகியிருப்பார். எந்த மக்கள் அவருக்குத் துணையாய் நின்றார்கள்?
தன்னுயிரையும், தன் குடும்பத்தையும் பொருட்படுத்தாமல் அவ்வப்போது கோடியில் ஒருவராக
உருவாகும் இவர்களைப் போன்ற ஆளுமைகளை... நாம் எவ்வாறு பாதுகாக்கப் போகிறோம்?
அவர்கள் செல்லும் நேர்மையான பாதையை வேடிக்கை பார்த்துக்கொண்டு
கைகட்டி நிற்கப் போகிறோமா? பொதுநலவாதிகளை, சிந்தனைவாதிகளை, போராளிகளைப் பாதுகாப்பதுதான் நம்
கடமை. வெறும் பாராட்டை மட்டும் தெரிவிப்பதல்ல. சமூக வளைதளங்களில் லைக் போட்டு,
ஷேர் போட்டு கடமையை முடித்துக் கொள்வதல்ல. அதைச் செய்யக்கூட நம்
தலைமுறை போலி பெயரில்தான் தங்களின் கருத்துக்களைத் தெரிவிக்கிறது.
நம்
பெற்றோர்களும், நம் ஆசிரியர்களும், கல்விக்கூடங்களும்
சமுதாயப் பற்றை, மொழிப் பற்றை, மண்
பற்றை, இனப் பற்றை விதைக்க மறுத்தாலும்... மறந்தாலும்... நம்
பிள்ளைகளிடம் முற்றிலுமாக அந்தத் தீ அணைந்துபோய்விடவில்லை. நெறிப்படுத்தி வழிகாட்டும்
ஒரு தலைமைக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். சமூக வலைதளங்களில் மட்டும் கனன்று
கொண்டிருக்கிற நம் சிந்தனைகளும் போராட்டக் குணங்களும் கணினியோடு முடங்கிப்
போகக் கூடியதா? எல்லாருடைய போராட்டக் குணமும், உணர்ச்சிகளும் கணினிக்குள்தான் அடக்கி வைக்கப்பட்டிருக்கிறதா? மின்சாரத்தை நிறுத்திவிட்டால் கணினி இயங்காது. கணினி இயங்காமல் போனால்
நம் உணர்வுகளும் அடங்கிப் போகும். அவ்வப்போது தடைபடும் மின்சாரத்தை நம்பி
விடுதலை உணர்வை நம்பிக் கொண்டிருப்பது... இந்த மண்ணுக்கும், இனத்துக்கும், மொழிக்கும், சமுதாயத்துக்கும்
இழைக்கும் பெரும்துரோகம் இல்லையா? எகிப்து மற்றும் சூடான்
நாட்டில் சமூக வலைதளத்தால் நடந்த எழுச்சி இங்கு நடக்கும் எனச் சொன்னால் நான் நம்ப
மாட்டேன்.
வெளியில்
நிரம்பிக் கொண்டிருக்கிற அதே சமூக அவலங்கள்தான் சமூக வலைதளங்களில் நிரம்பிக்
கிடக்கின்றன. சாதி நோய், மத நோய், சினிமா நடிகர்கள்
நோய், தேர்தல் அரசியல் நோய் போன்ற நோயால்... எது தமிழ்
அரசியல்? எது தமிழர்களுக்கான அரசியல்? யார்,
யாரை நாம் வளர்த்தெடுக்க வேண்டும? இந்தச்
சமுதாய மேம்பாட்டுக்கு வேண்டியவர்கள் யார்... என்பதை எல்லாம் விழிப்புணர்ச்சி
இல்லாதவர்களும், உணர மறுப்பவர்களும்தான் நிரம்பிக்
கிடக்கிறார்கள்.
இந்த
வலைதளங்களில் என்னதான் நடக்கிறது என்பதைக் கவனிக்கத்தான் நானும் கணக்கைத்
தொடங்கினேன். மிக மிக முக்கியமான சிந்தனையாளர்கள் என் நட்பு வட்டத்தில்
இருக்கிறார்கள். அவர்களின் கருத்துக்கள் கவனிக்கப்படுவதில்லை. தமிழ்நாட்டில் உள்ள
தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள், அநீதிகள்,
துரோகங்கள் பற்றியெல்லாம் பெரும்பாலானவர்கள் பெரிதாகக்
கண்டுகொள்வதே இல்லை. இரண்டு வாரங்களாக ‘கத்தி‘ திரைப்படம் பற்றிக் கருத்துத் தெரிவித்தவர்களுக்கு, இதற்கு
முன்பு தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு நடந்தவைகளுக்கோ, இந்த
இடைப்பட்டக் காலகட்டத்திலோ நடந்தவைகளுக்கு தன் பார்வையையும், கவனத்தையும் திருப்பவில்லை. ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு
நாளும் இந்த மக்களுக்கு நிகழ்ந்து கொண்டிருக்கிற இழப்புக்களைக் கண்டுகொள்ளாமல்,
இன்னொரு பிரச்சினைக் கிடைக்காமல் ஏங்கிக் கொண்டிருக்கிறோம்.
- இன்னும் சொல்லத் தோணுது...
எண்ணங்களைத் தெரிவிக்க...
thankartamil@gmail.com
எண்ணங்களைத் தெரிவிக்க...
thankartamil@gmail.com
No comments:
Post a Comment