Sunday, 3 May 2015

சொல்லத் தோணுது 3 - சுதந்திரம் கொடுத்த நட்டமில்லாத் தொழில்

ஆடிப் பட்டத்தில் விதைப்பதற்காக உழவர்கள் நிலத்தைச் சீர்செய்து, தயார்படுத்தி ஆடி மாதம் எப்போது வரும் எனக் காத்திருப்பது போல் அரசியல்வாதிகள் தேர்தலுக்காகக் காத்திருக்கிறார்கள். சட்டமன்றத் தேர்தல் வரப் போகும் மாதங்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. என்னென்ன கணக்கு போட்டு? எப்படியெல்லாம் ஆள்பிடித்து? யார் யாருக்கு எதை எதைக் கொடுத்து? எப்படியெல்லாம் வாக்காளர்களைத் தங்கள் வலையில் வீழ்த்தலாம் என்கிற கணக்கு தொடங்கிவிட்டது.
24 மணி நேரத்தில் தூங்குகிற நேரம் போக மற்ற நேரங்கள் முழுக்க இந்த மண்ணுக்கும், இனத்துக்கும், மொழிக்கும், மக்களுக்கெல்லாம் எந்தெந்த விதங்களில் நன்மைகளைச் செய்யலாம் எனச் சிந்திப்பதைவிட, எப்படி எல்லாம் தங்களின் பெருமைகளைப் பறைசாற்றிப் பீற்றிக்கொள்வது, மற்றவர்களின் செயல்பாடுகளைக் குற்றம் சொல்வது, எந்தக் கட்சியும் தங்களுடைய கட்சியை மிஞ்சாமல் பார்த்துக்கொள்வது, இதுபோக முக்கியமாக எவ்வாறு மக்களைத் தங்களின் கட்சியின் வலையில் விழவைப்பது எனச் சிந்தித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
அரசியல் என்பது தொண்டாக இருந்தது மாறிப் போய், முதலீடு இல்லாமல், நட்டத்தைச் சந்திக்காத, மிகப்பெரும் வியாபாரமாக மாறிப்போனதுதான் நம் மக்களாட்சியின் மிகப்பெரும் சோகம். அளவுக்கு அதிகமாகக் கோடி கோடியாகப் பணம் குவிக்க, மற்றவர்களை மிரட்ட, விரும்பியபடி எல்லாம் குற்றங்களைச் செய்ய, செய்த குற்றங்களில் இருந்து தப்பித்துக்கொள்ள என இவைகளுக்காகவே பெரும்பாலும் மேலும் மேலும் அரசியல் கட்சிகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன.
எதற்கெல்லாமோ சட்டம் இயற்றுபவர்கள், எல்லா மாற்றங்களையும் பற்றி பேசுபவர்கள் இதற்கென்று ஒரு சட்டத்தை உருவாக்குவார்களா? இந்தியாவில் உள்ள பெரும்பாலான அரசியல்வாதிகள் ஆளுக்கு ஒரு தொலைக்காட்சி, ஆளாளுக்கு ஒரு பத்திரிகை என நடத்துகிறார்கள். எவ்வாறு நேர்மையான செய்தியையும் நியாயமான கருத்துகளையும் மக்களுக்கு அவர்களால் தர முடியும்? அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருப்பதைப் போன்ற தேர்தல் அரசியலுக்குள் களம் இறங்குபவர்கள் ஊடகத்தைக் கைக்குள் வைத்திருக்கக்கூடாது. எந்த ஒரு தொலைக்காட்சியோ, பத்திரிகையோ, வானொலியோ தொடங்கக்கூடாது. 10 விழுக்காடு முதலீடு செய்த பங்குதாரராகக் கூட இருக்கக்கூடாது. இதே போல் நம்நாட்டிலும் சட்டத்தை உருவாக்குவார்களா? இவர்களிடம்தானே நாடாளுமன்றம் இருக்கிறது.
குடிக்கும் நீரிலிருந்து, நமக்கு உணவளிக்கும் மண்ணிலிருந்து, உயிர் வாழத் தேவையான உள்ளிழுக்கும் காற்றிலிருந்து எல்லாவற்றையுமே நாசமாக்கிவிட்டார்கள். இவற்றை எல்லாம் செய்யச் சொன்னவர்கள், அனுமதி கொடுத்தவர்கள், திட்டம் தீட்டியவர்கள் எல்லாம் யார்? அன்றாடங்காய்ச்சி களாக வாழ்க்கையை நடத்திக்கொண்டு திரியும் இந்த மக்களா செய்தார்கள்?
சரிந்துபோன தங்களின் வாக்குவங்கியைச் சரிசெய்துகொள்ளவும், மேலும் தங்களின் செல்வாக்கை வளர்த்துக்கொள்ளவும் கொண்டுவருகிற திட்டங்களால் இந்த மக்களின் எதிர்கால வாழ்வு, எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்பதாகவே இருந்ததன் விளைவுதானே இந்நிலைக்குக் காரணம்!
எந்தக் கட்சி எப்போது மாநாட்டு அறிவிப்பை வெளியிடுவார்களோ என அஞ்ச வேண்டியிருக்கிறது. இந்த மாநாடுகள் சொல்லும் சேதி என்ன? இங்கே பாருங்கள்… ‘எங்களுக்கு இவ்வளவு கூட்டம் உண்டு. எங்களைச் சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள். நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல; எங்கள் செல்வாக்கைப் புரிந்துகொள்ளுங்கள்என மக்களை மிரட்டும் செயல்தானே தவிர, வேறென்ன?
தேர்தல் என்பதை மக்களுக்கும் ஒரு வருமானம் தரும் நாளாக மாற்றியதில் பலருக்கும் பங்கு உண்டு. இனி, இந்தக் கூட்டத்திலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள முடியாது. கிடைத்தவரை லாபம், வாங்கிக்கொள்வதால் அவர்களுக்கு எந்த நட்டமும் இல்லை. நம்மை வைத்துப் பணம் சம்பாதிப்பதற்குத்தானே இதைத் தருகிறார்கள் என்கிற மனநிலைக்கு மக்களும் பக்குவப்பட்டுவிட்டார்கள். மக்களையும் தங்களின் கொள்ளைக்கு துணைச் சேர்த்துக்கொண்டதைப் பார்த்துக் கொதித்தெழும் செயலுக்கு இங்கு எந்தப் பதிலும் இல்லை.
உண்மையில் மக்கள் நலன் குறித்து, அவர்களின் எதிர்காலம் குறித்து சிந்திப்பவர்களை ஊடகங்களும் கண்டுகொள்வதே இல்லை. இதனால், மக்களும் இதனை உணர்வதில்லை. இதனாலேயே உண்மையில் மக்களுக்கானவர்கள் யாரோ, அவர்கள் இந்தத் தேர்தல் அரசியலுக்குள் வந்து பாழ்பட்டுப்போவதை விரும்பாமல் ஒதுங்கிவிடுகிறார்கள். பணபலம் இல்லாமல் இங்கு எதனையும் செய்ய முடியாது எனும் மனநிலைக்குத் தள்ளப்பட்டு ஒதுங்கிவிடுவது போல், அவர்களின் கருத்தினைப் பின்பற்றி மக்களுக்குப் பணியாற்ற வருபவர்களும் ஒதுங்கிவிடுகிறார்கள்.
தன்னைப் போல தங்களுடன் இருந்த சாதாரணமானவர்கள் இன்று அரசியல் கட்சிகளில் சேர்ந்து அதனை ஒரு தொழிலாகவே நடத்திப் பணம் குவிப்பதைக் கண்டு, மனசாட்சிகளை உதறித் தள்ளிவிட்டுத் தாங்களும் வெள்ளை உடை உடுத்தி வெளிப்படையாகத் தெரிந்தும் தெரியாத மாதிரிச் சட்டைப் பையில் தங்கள் தலைவரின் படத்தை வைத்துக்கொண்டு, கொடியுடன் தொழிலுக்குப் புறப்பட்டு விடுகிறார்கள்.
இன்று தமிழ்நாட்டில் மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்தியாவிலும் நடந்துகொண்டிருக்கிற மும்முரமான வியாபாரம்... அரசியல் எனும் தொழில்மட்டும்தான்!
அந்தத் தொழிலைத் தேர்ந்தெடுத்துவிட்டால் எந்தத் தொழிலையும் தொடங்கி விடலாம். எதையும் சாதித்துவிடலாம் என்கிற நிலையைத்தான் இந்தச் சுதந்திரம் நமக்குப் பெற்றுத் தந்திருக்கிறது. ஒரு சில வெள்ளைக்காரர்கள் இந்தியாவை ஆண்டது போல், ஒவ்வொரு மாவட்டத்தையும் ஒரு சில குடும்பங்கள் மட்டுமே இந்தத் தேர்தல் அரசியலால் ஆண்டு கொண்டிருக்கின்றன. இதில் சுதந்திரம் எனச் சொல்லப்படுகிற விடுதலை என்ன சாதித்துக் கொண்டிருக்கிறது?
நாடாளுமன்ற உறுப்பினர்களில் எத்தனைப் பேர் மக்களுக்காக உழைப்பதற்காகவே சென்றிருப்பார்கள் என்பதை யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாது. அப்பழுக்கற்ற, தூய்மையான எண்ணத்தோடு மக்களுக்குப் பாடுபடுவது என்ற எண்ணத்தோடு மட்டுமே உருவாக்கப்பட்ட தேர்தலில், ஒரு ரூபாய் கூடச் செலவழிக்க முடியாத ஒருவர்இனிமேல் நாடாளுமன்ற உறுப்பினராகவோ, சட்டமன்ற உறுப்பினராகவோ தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதா? இது என்னுடைய கேள்வி மட்டுமே அல்ல; வாக்குகளைக் கையில் வைத்துக் கொண்டிருக்கிற ஒவ்வோர் இந்திய வாக்காளனும் கேட்டுக்கொண்டிருக்கிறான்.
வெள்ளையனின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையைப் பெற்றுத் தந்த நம் முன்னோடித் தலைவர்களின் ஆன்மா, நிச்சயம் அரசியலை ஒரு தொழிலாக மாற்றிவிட்டவர்களைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்கும் என நினைக்கிறேன். ஒருவேளை கேட்டால்… ‘ஆமாம்! தொழில்தான் செய்கிறோம்என அவர்களையாவது மதித்து உண்மையை ஏற்றுக்கொள்வார்களா?

- இன்னும் சொல்லத் தோணுது 
எண்ணங்களைத் தெரிவிக்க: thankartamil@gmail.com


1 comment:

  1. இன்று நம் தமிழகத்தில் சாதாரண பணிக்கே நிறைய தகுதிகள் வேண்டும் என்று வரையரக்கபட்டு தான், ஆட்கள் தேவை விளம்பரமே வருகிறது. தேர்தலில் போட்டியிடும் MLA அல்லது MP ஆகட்டும், அமெரிக்க, ஐரோப்பா நாடுகளில் உள்ளது போல தகுதிகள் வகுக்கப்பபட்டு சட்டமாக்கபட வேண்டும் என்று உங்கள் அந்த ஒரு கருத்து நிறைவேறினால் போதும், நினறைய மாற்றம்/முன்னேற்றம் உறுதி.

    ReplyDelete