டெல்லியில்
கிடைத்த தேர்தல் முடிவால் தூக்கத்தைத் தொலைத்த தலைவர்களும் தொண்டர்களும் கணக்கில்
அடங்குவார்களா என்பது தெரியவில்லை. டெல்லி தேர்தல் முடிவுக்குப் பின்பு ’வாக்களித்தால் மட்டும் போதும்’ என்றிருந்த சாதாரண
மக்களெல்லாம் அரசியலைப் பற்றிப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.
இது
முதல்முறை அல்ல; இரண்டாம் முறையும் ஒருவர் வெற்றிப்
பெற்றிருக்கிறார் என்றால், அதுவும் பெரும்பான்மையோடு ஆட்சி
செய்து கொண்டிருக்கிற ஒரு கட்சியையும், ஏற்கெனவே ஆட்சி செய்த
கட்சியையும் தூக்கமில்லாமல் செய்துவிட்டார் என்றால் அதனை இலகுவில் கவனிக்காமல்
விட்டுவிட முடியாது. படித்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கக் கூடிய பகுதி டெல்லி என
சொல்லி நழுவிடப் பார்க்கிறார்கள்.
அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் என்கிற பெயரில் இவர்கள் செய்கிற அநியாயத்தையும், அட்டூழியத்தையும் முடிவுக்குக் கொண்டுவர ஒட்டுமொத்த ஊழல் இருட்டில்
கிடக்கும் இந்தியாவுக்கே வெளிச்சத்தைக் கொண்டுவர, டெல்லி
மக்கள் மெழுகுவத்தியை ஏற்றி வைத்திருக்கிறார்கள். அந்த வெளிச்சம் மேற்கொண்டு
எங்கும் பரவாமல் இருக்க வேண்டுமே என்கிற கவலை அரசியலை ஒரு தொழிலாகக்
கொண்டவர்களுக்கு வந்துவிட்டது.
இந்த
வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு இனியாவது நல்ல தலைவர்கள் நமக்குக் கிடைக்க
மாட்டார்களா எனவும், மக்கள் ஏங்கத் தொடங்கிவிட்டார்கள்.
மக்களுக்கானத்
தலைவர்கள் என்பவர்கள் வானத்தில் இருந்து திடீரென எங்கிருந்தோ குதிப்பவர்கள் இல்லை.
மக்களிடம் இருந்தேதான் நாம் வணங்குகிற பல நல்லத் தலைவர்கள் கிடைத்தார்கள்.
பொதுவாக
தேர்தல் முடிவுக்கு முன்புதானே கருத்துக்கணிப்பை நடத்துவார்கள். நான் மக்களின்
மனங்களை அறிவதற்காக வெவ்வேறு தளத்திலும் வெவ்வேறு வயதிலும் உள்ளவர்களிடமும்
பேசியபோது, ஒவ்வொருவரின் மனதில் உள்ள ஏக்கமும், தவிப்பும், தடுமாற்றமும்தான் இதனை என்னை எழுதத்
தூண்டியது.
நிகழ்ந்து
கொண்டிருக்கும் அரசியல் போக்கும், அரசியல்வாதிகளின் போக்கும்
அனைவருக்குமே மனநிறைவைத் தராததை எளிதாக உணர முடிந்தது. இளைஞர்களிடம் இருக்கின்ற
கேள்விகளும், கோபமும் அவர்களை நெருங்கிப் பார்த்தால்
புரியும். தங்களைப் பற்றி அக்கறை கொள்பவர்களும், மக்களுக்காகவே
தன் வாழ்வை ஒப்படைத்தத் தலைவர்களும் எங்கே இருக்கிறார்கள் காட்டுங்கள்
என்கிறார்கள்? எங்களுக்கு அரசியல் தெரியாது என
நினைத்துவிடாதீர்கள்? நாங்கள் பங்கு கொள்கிற மாதிரி இங்கு
அரசியல் இல்லை என்பதே அவர்களின் வாதமாக இருக்கிறது. அரசியல்வாதிகள்
நேர்மையற்றவர்கள், தன்னலவாதிகள் என்கின்ற எண்ணம் அவர்களின்
மனதில் குடிகொண்டுவிட்டது.
குடும்பப்
பொறுப்பில் உழன்று கொண்டிருப்பவர்களும், தொழில்
நடத்துபவர்களும் இதையெல்லாம் எங்களிடம் கேட்டுத்தான் தெரிந்துகொள்ள வேண்டுமா?
எங்களைப் பார்த்தால்… நாங்கள்
மகிழ்ச்சியோடுதான் வாழ்வதாக உங்களின் கண்களுக்குத் தெரிகிறதா எனவும் அவர்கள்
கேட்கிறார்கள்.
ஊடகங்களில்
அறிக்கையை வெளியிட்டுவிட்டு, தெருவில் இறங்கி மக்களின் வாழ்க்கையில் பங்கு
கொள்ளாமல் நேரடியாக செயலில் இறங்கி போராடாதவர்கள்தான் தலைவர்களா? கோடி கோடியாகப் பணத்தை இறைத்து கூட்டத்தைக் கூட்டி, குளிரூட்டப்பட்டக்
காரில் படு வேகமாக அவர்களின் முன்னேயும் பின்னேயும் கார்களைப் போகவிட்டு, மக்களை விரட்டியடித்து, சாலையில் அவர்களே வைத்துக்
கொண்ட பதாகைகளின் விளம்பரத்தைப் பார்த்தே மகிழ்பவர்களா தலைவர்கள் என்பதையும்
கேட்கிறார்கள்.
ஆளாளுக்கு
ஒரு தொலைக்காட்சியையும், ஒரு பத்திரிகையையும் வைத்துக்கொண்டு தங்கள்
புகழையேப் பாடிக் கொண்டும், உண்மைச் செய்திகளை மக்களுக்குத்
தெரியப்படுத்தாமல் அதனைத் திரித்து அவரவர்களுக்குத் தகுந்த மாதிரி வெளியிடுவதை
எல்லாம் இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் சகித்துக் கொண்டிருப்பது?
மக்களைப்
பற்றி மட்டுமே சிந்தித்து, அவர்களுக்காகவே தான் கொண்ட உறுதியில் இருந்து
மாறாமல் அவர்களுடனேயே கிடந்து ஊழலுக்கு எதிராகவும், மக்களின்
வாழ்வு நலனுக்காகவும் ஓடி உழைத்துக் கொண்டிருக்கும் தலைவர்களை எங்கள் கண்ணில்
கொஞ்சம் காட்டுங்களேன் என்கிறார்கள்.
தலைவர்களிடம்
மட்டும் நேர்மையை எதிர்பார்க்கும் நாம்தானே அத்தனை சீர்கேடுகளுக்கும் காரணமாக
இருக்கிறோம். நம் காரியம் நடந்தால் போதும் என கேட்பதைக் கொடுத்துவிட்டு, சுருட்டுபவர்களை சுட்டிக் காட்டாமல் கண்டும் காணாமல் இருந்துவிடுகிறோமே என
நான் கேட்டதற்கு, வழிகாட்டும் தலைவர்கள் நேர்மையாக
இருந்தால்தானே நாங்களும் நேர்மையாக இருப்போம் என கேள்வியைத் திருப்புகிறார்கள்..
இவர்கள்
அரசியலில் நுழைந்தபோது கொண்டுவந்த சொத்து எவ்வளவு? என்ன
தொழிலை செய்து இவ்வளவு பணத்தை இவர்கள் சம்பாதித்தார்கள்? இவர்களின்
குடும்பத்தில் உள்ளவர்கள் என்ன செய்து சம்பாதிக்கிறார்கள்? அவர்களுக்கு
எங்கே இருந்து இவ்வளவு மூலதனம் வந்தது என்பதையெல்லாம் கவனிக்காமலா இருக்கிறோம்
என்றும் அந்த இளைஞர்கள் கோபத்துடன் கேட்கிறார்கள்.
அப்பழுக்கற்ற
சீரியத் தொண்டனே தலைவனாக மாறுகிறான். அவன்தான் மக்களின் அன்றாட வாழ்வு நிகழ்வுகளை
அறிந்து உணர்ந்து திட்டங்களைத் தீட்டி, தீர்வைத்
தேடுகிறான். சாதியோ, மதமோ யாருக்கும் விருப்பமில்லைதான்.
சாதியை விதைத்து அந்த உணர்வில் மக்களை கூறுபோட்டு, அதற்கேற்றபடி
வேட்பாளர்களைத் தேடி காண்பதுதானே காலம்காலமாக நடக்கிறது. தன் சாதிக்காரனுக்கு
மட்டுமே கட்சிப் பொறுப்பும் பதவியும் கொடுத்து சாதி வெறியை மக்களா வளர்த்தார்கள்?
மதம்தானே
முதலில் மனிதனை கூறுபோட்டு தனித் தனியாகப் பிரித்தது. மனிதனை
நல்வழிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட மதம்தான், இன்று
உலகத்தின் பெரும் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. அதன் அடிப்படையில்தான்
ஒவ்வொரு நாடும் எதிர்ப்பை வளர்த்துக்கொண்டு சண்டையிட்டுக்கொள்கின்றன. கழிப்பிட
வசதிக்கே வழியில்லாத நம் மக்களின் வரிப் பணம் பாதிக்கும் மேல் பாதுகாப்பு எனும்
பெயரால் ராணுவத்துக்கு செலவிட வேண்டியிருக்கிறது.
சாதியும்
மதமும் ஒன்றாகச் சேர்ந்து அரசியல் எனும் பெயரால் நம்மை சீரழித்துக் கொண்டிருப்பதை
இனியும் தடுத்து நிறுத்திவிட முடியுமா? சாதிக் கட்சிகளை
அடையாளம் கண்டு எதிர்ப்பை வெளிப்படுத்துபவர்கள், மதக்
கட்சிகளைக் கண்டுகொள்வதே இல்லை. இவற்றையெல்லாம் சீர் செய்ய வேண்டிய ஊடகங்களில் பல,
தங்களின் சாதியைச் சேர்ந்தவர்களை மட்டுமே பணியில்
சேர்த்துக்கொள்வதும் அவர்களின் செய்திகளுக்கு மட்டுமே முன்னுரிமை தந்து
தகுதியற்றவர்களை வளர்த்துக்கொண்டிருப்பதும் நடந்துகொண்டுதானே இருக்கிறது. ஆனால்,
இவர்கள்தான் அரசியலில் சாதி, மதமற்ற
தூய்மைக்காக வரிந்து கட்டுகிறார்கள் என்பதெல்லாம் மக்களுக்குத் தெரியாதா?
முதலில்
நமக்குத் தேவை நேர்மையான ஊடகங்கள். அவைகள் கிடைத்தால் நல்ல நேர்மையான தலைவர்கள்
கிடைத்துக்கொண்டே இருப்பார்கள்.
ஊழல்
இருட்டில் இருக்கும் இந்தியாவுக்கு, நேர்மையான
அரசியலை முன்னெடுத்துச் செல்ல இனியும் ஒரு தலைவர் பிறந்து வரப் போவதில்லை. ஒன்று,
தவறு செய்துவிட்டவர்கள் மனம் திருந்தி முற்றிலும் மாறி அர்விந்த்
கேஜ்ரிவால் செய்ததைப் போல் மக்களிடம் மன்னிப்புக் கேட்டு, நேர்மையான
தலைவர்களாக மக்கள் மனதில் கண்ணுக்குத் தெரியலாம். அல்லது, மக்களுக்காக
செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள் அவர்களின் தீவிரமான செயல்பாடுகளால் ஊடகங்களால்
கண்டுபிடிக்கப்பட்டு மக்களின் முன்னிறுத்தப்பட்டு இனம் காட்டப்படலாம். தலைவர்கள்
பஞ்சம் தீருமா? தடுமாறும் மக்களின் மனம் மாறுமா?
- சொல்லத் தோணுது…
எண்ணங்களைப்
பகிர்ந்துகொள்ள: thankartamil@gmail.com
No comments:
Post a Comment