திரைப்படக்கலை
உருவானப்பின் உலக வரலாற்றிலேயே சினிமாவுக்குள்ளேயே வாழ்க்கையை குழிதோண்டி
புதைத்துக் கொண்டவன் தமிழன் மட்டுமே. நூறு ஆண்டுகள் கடந்தும் இன்னும் சினிமாவின்
போதை மயக்கத்திலிருந்து எழுந்திருக்கவில்லை. சினிமாக்காரர்களுக்கு வாடகைக்கு வீடு
கொடுக்கத் தயங்குபவர்கள் மகிழ்ச்சியோடு நாட்டைக் கொடுப்பார்கள். ஐந்து
முதலமைச்சர்களை நாற்காலியில் அமர்த்தி அழகு பார்த்தவர்கள் ஆறாவதாக ஒரு ஆளைத் தேடி
விடுவார்களோ என்பதில் குழப்பத்திற்கும், அச்சத்திற்கும்
இடமிருப்பதாகவேத் தோன்றுகிறது.
சென்ற ஆண்டு
தேசிய திரைப்பட விருதுக்குழுவில் இருந்தபோது மற்ற மாநிலத்து உறுப்பினர்களால் ஒரு
நாள் அளவுக்கதிமாக இதற்காகவே நையாண்டி செய்யப்பட்டேன். உங்கள் அறிவியல் அறிவு, இலக்கிய அறிவு, அரசியல் அறிவு, கலை அறிவு அத்தனையையும் சொல்ல உங்களுக்குத் தகுதியில்லை என்றார்கள். பழம்
பெருமைகளைப் பேசி காலந்தள்ளுவதை விட்டுவிட்டு நிகழ்கால வாழ்க்கைக்கு வாருங்கள்
எனச் சொன்னார்கள். அன்றைக்கு நான் வேட்டியில்தான் படம் பார்க்க அரங்குக்கு
சென்றிருந்தேன்.
சொல்லி வைத்த
மாதிரி எல்லோரிடமிருந்தும் ஒரே முகபாவம். அந்த சிரிப்பில் ஏளனம்
ஒட்டிக்கொண்டிருந்தது. விவரம் புரியாமல் நான் விழித்தபோது அசாம் மாநிலத்தைச்
சேர்ந்த அந்த படைப்பாளி எனக்கு அதற்கான காரணத்தைச் சொல்லி, மென்மையாக இதனை எடுத்து கொள்ளுங்கள் எனச்சொன்னபோது
வெட்கித் தலை குனிந்துபோனேன். அதன்பின் திரையில் என் மனது ஒன்றுவதற்கு நெடுநேரம்
எடுத்துக்கொண்டது.
அன்றைய இரவும்
அதே நண்பர்களிடம் வெளிப்படையாகவே இதுபற்றி உரையாடினேன். வேட்டியைப் பார்த்தாலே
எங்களுக்கு தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்தான் நினைவுக்கு வருகிறது. ஊழலை
இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கற்றுக்கொடுத்தது அவர்கள்தான். ஆனால்
அதைப்பற்றி எந்த குற்றவுணர்வும் இல்லாமல் பெருமையோடு அலைவதுதான் வேதனையாக
இருக்கிறது எனச் சொன்னார்கள். நாங்கள் வேட்டியை மடித்துக்கட்டாமல் கட்டுகிறோம்.
நீங்கள் வளைத்து முறுக்கி விதம் விதமாகக்கட்டி அதே ஊழலைச் செய்யவில்லையா என நானும்
பதிலுக்குக் கேட்டேன். அதன் பிறகும் பல நாட்கள் வேட்டியுடன்தான் படங்களைப்
பார்த்தேன்.
நான் அவர்களுடன்
இருந்த ஆறு வாரங்களில் நம்மைப்பற்றிய மதிப்பீடு அவர்களின் மனதில் என்னவாக
இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டேன். ‘மொழி
வெறியர்கள்’ என ஒற்றை வரியில் எல்லாரும் சொல்கிறார்கள்.
அவ்வாறு உண்மையிலேயே நாம் இருந்தால் என்னைவிட மகிழ்ச்சி அடைய யார் இருக்கிறார்கள்?
அப்படித்தானடா ஒரு காலத்தில் இருந்தோம்! இப்போது நாம் இருக்கிற
நிலையை நெருங்கி வந்து பார்த்தால் பொறாமைப்பட்டு வயிறு எரிந்தவர்கள்
மகிழ்ச்சியில் மூழ்கிப் போவார்கள். இந்தியை எதிர்த்த ஒரே காரணத்துக்காக மட்டுமே
நம்மை எதிரியாக பார்க்கிறார்கள்.
தமிழர்களில் 99 விழுக்காடு மக்களுக்கு தமிழில் பெயர்கள் கூட இல்லை என்பதும்,
தமிழில் தங்கள் குழந்தைகள் பேசுவதையோ, தமிழைப்
படிப்பதையோ அவர்கள் விரும்புவதில்லை என்பதும், தமிழில்
பேசிவிட்டால் குழந்தைகள் பள்ளிகளில் தண்டிக்கப்படுகிறார்கள் என்பதும், ஒரு தமிழன் இன்னொரு தமிழனிடம் தமிழில் பேசுவதை இழிவாக நினைக்கிறான்
என்பதும் குடும்ப நிகழ்ச்சிகளுக்கும், விழாக்களுக்குமான
அழைப்பிதழில் கூட தமிழை ஒதுக்கிவிட்டான் என்பதும், கோவில்களில்
தமிழில் வழிபாடு செய்யச்சொல்லி வற்புறுத்தாமல் சமஸ்கிருதத்தில் சொல்லப்படும்
மந்திரத்தையே விரும்புகிறான் என்பதும் தன் வாழ்வில் தமிழுக்காக எந்த இடத்தையும்
தராமல் மகிழ்ச்சியோடு தமிழன் என நினைத்து வாழ்கிறான் எனவும், நீதிமன்றங்களில் தமிழில் வாதாடுவதற்காக மனுபோட்டு கெஞ்சிக்
கொண்டிருக்கிறான், அதுமட்டுமா ஒரே ஒரு நிமிடம்
ஆங்கிலத்தையோ, சமஸ்கிருதத்தையோ கலக்காமல் தமிழில்
பேசச்சொன்னால் எல்லா தமிழனும் தோற்றுப் போகிறான் என்பதும் அவர்களுக்குத்
தெரியவாய்ப்பில்லை.
ஆனால்
எங்களுக்காக ஒரு மாநிலம் வேண்டும் எனச்சொல்லி 72 நாட்கள் உண்ணாநிலையிலிருந்து போராடி சங்கரலீங்கனார் உயிர் நீத்தார்.
நாங்களும் எங்கள் மாநிலம் தமிழ்நாடு எனவும், எங்கள் அரசு
தமிழ்நாடு அரசு எனவும் அழைத்துக்கொண்டு வருகிறோம்.
நாங்கள்
தமிழர்கள்தான் என்பதை காட்டிக்கொள்ள ஒரு தமிழர் அவமானப்படுத்தப்பட்டதற்காக
கொதித்து எழுந்து உடனடியாக சட்டமன்றத்தில் வேட்டிகட்ட உரிமை வாங்கித்தந்து சட்டம்
இயற்றினோம். இந்தப் பெருமை எந்த மாநிலத்துக்காவது இருக்கிறதா?
உடனடியாக ஊடங்கள்
முழுக்க அதற்கு பாராட்டு தெரிவித்து கொண்டாடினார்கள். இதைவைத்து வியாபாரம்
செய்யும் ஆடை நிறுவனமும் மலையாள நடிகர் வேட்டி கட்டி வணக்கம் செலுத்தும்
படத்தைப்போட்டு பத்திரிக்கைகளில் முதல் பக்கத்திலேயே தமிழர்களின் மானத்தை
மீட்டுத்தந்தததற்காகப் பாராட்டும் நன்றியும் தெரிவிக்கும் விதமாக ‘தமிழக அரசுக்கு’ சல்யூட் என்றார்கள்.
உலகம் முழுக்க
முக்கால்வாசி நாடுகளுக்கு சென்று வந்திருக்கிறேன். தமிழன் தன் தாய்மொழியைக்
கண்டுகொள்ளாமல் விட்டுவிட்ட அவல நிலை உலகத்தில் எங்குமே இல்லை. இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முன்பாகவே இலக்கணத்தை வகுத்த செம்மொழி இன்று தமிழனின் நாக்கில் ஒரு
நிமிடம் பேச முடியாமல் தள்ளாடிக்கொண்டிருக்கிறது. எல்லாருமே சூப்பர்
தமிழராகிவிட்டோம்.
தன் தாய்மொழி, தன் இசை, தன்கலை, தன்
இலக்கியம், தன் மருத்துவம், தன்
அறிவியல் என எல்லாவற்றையும் வெளிநாட்டவர்கள் தங்களின் பிள்ளைகளுக்குத்
தொடக்கத்திலேயே கற்றுக்கொடுக்கிறார்கள். பின் உலகத்திலுள்ள அவர்கள் விரும்பிய
மொழியை எல்லாம் கற்கிறார்கள். இதனால் அவர்களின் அடையாளங்கள்
பாதுகாக்கப்படுகின்றன. அவனது இனத்தையும் மொழியையும் நாட்டையும் கண்களாக
கருதுகிறார்கள்.
அறிவுக்காக
உருவாக்கப்பட்ட கல்வி இன்னும் வயிற்றுப்பிழைப்புக்காக என மாறிப்போயிருக்கிறது.
நான் அரசமரத்தடியில் தரையில் அமர்ந்து படித்த சிறிய கிராமத்துப் பள்ளிகளில் கூட
இன்று தமிழ் வழியில் படிக்க ஆள் இல்லை. என் கிராமத்தில் அரசுப்பள்ளித்தவிர மூன்று
ஆங்கிலப் பள்ளிகள் தொடங்கப்பட்டுவிட்டன. இதுபோக பக்கத்து சிறு நகரங்களிலிருந்தும்
பேருந்துகள் வந்து அதிகாலை ஆறரை மணிக்கே குழந்தைகளை அள்ளிக்கொண்டு
போய்விடுகின்றன. எல்லாருமே இன்று டாக்டர், எஜ்ஜினியர்
ஆக வேண்டும் என பெற்றோர்கள் அலைந்துகொண்டிருக்கிறார்கள்.
ஏற்கெனவே தமிழ்
வழியில் படித்தவர்களுக்கு வேலையில்லை. அவர்களுக்கு வேலைத்தர அனைவருமே
மறுக்கிறார்கள். இதனால் அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன.
இதுபற்றிய எந்தக் கவலையும் நம்மை ஆண்டவர்களுக்கும்,ஆள்பவர்களுக்கும்
இல்லை. தமிழில் படிப்பவர்களுக்கு வேலைத்திட்டங்களை உருவாக்கித் தரவும் முயலவில்லை.
பெயரளவிற்கே
தொலைக்காட்சிகளும், வானொலிகளும் தமிழை இணைப்பு மொழியாக
ஆங்கிலத்தோடும், சமஸ்கிருதத்தோடும் பயன்படுத்தி
தமிழ்மொழியை சிதைத்து கொலை செய்துகொண்டிருக்கின்றன. சட்டமன்றத்திலிருந்து கீரை
விற்கும் பாட்டி வரைக்கும் சூப்பர் எனச்சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.
தமிழ்த்திரைப்படத்துறையில்
பலபேருக்கு வெளியில் காட்டிக்கொள்ள முடியாத கோபமிருக்கிறது. எதற்காக நாம்
தமிழில் படத்தின் பெயரை சூட்டவேண்டும் என நினைக்கிறார்கள். பிறமொழிகளில் பெயர்
சூட்டக்கடாது தமிழிலேயேதான் இருக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட
விதியின்படி வெளியாகியிருக்கிற படங்களில் எழுபது விழுக்காடுப் படங்கள்
சமஸ்கிருதத்தைத் தலைப்பாகக் கொண்டவைகள்தான். தமிழை நன்கறிந்தவர்களுக்கும், தமிழறிஞர்களுக்கும் மட்டுமே இதுத் தெரியும். மக்களுக்கும்,
மற்றவர்களுக்கும் இந்த சூழ்ச்சி புரிவதில்லை. அரசாங்கமும்
இதனைக்கண்டு கொள்லாமல் வரிச்சலுகை வழங்கிவிடுகிறது. சமஸ்கிருதத்தில் தலைப்பு
வைக்கும் போது ஆங்கிலத்திலேயே சூட்டி விடலாமே! பிறகு ஏன் இதற்கு ஒரு விதி,
வரிச்சலுகை அதற்கு சான்றிதழ் வழங்க ஒரு அமைச்சரகம்?
நம் இளம்
படைப்பாளிகளும், தயாரிப்பாளர்களும் பத்திரிகைகளில்
வெளியிகின்ற சில விளம்பரங்களில் படத்தின் தலைப்பு மட்டுமே தமிழில் இருக்கின்றன.
மற்ற விவரங்கள் குறிப்பாக தொழில் நுட்பக்கலைஞர்கள் பற்றிய விவரங்கள் ஆங்கிலத்தில்
இருப்பதையே பெருமையாகக் கருதுகிறார்கள். போராட்டம், எதிர்ப்பு
என்றால் அது ஈழத்தமிழர் அரசியல்தால் என்றாகிவிட்டப் பிறகு இதனையெல்லாம் கேட்க யார்
இருக்கிறார்கள்?
தமிழர்கள், தமிழில் தங்கள் குழந்தைகளை படிக்க வைப்பதிலோ, தமிழைப் பேசுவதிலோ, வேலைவாய்ப்பை பெருவதிலோ,
வாழ்வியலில் தமிழர்களின் அடையாளத்தை மீட்டெப்பதிலோ தமிழில் பெயர்
சூட்டுவதிலோ காட்டுவதில்லை. வேட்டிக்கு நேர்ந்த அவமானத்தை தமிழனுக்கு நேர்ந்த
அவமானமாக கருதிய அரசு தமிழ்படிக்காதப் பிள்ளைகளை தமிழில் படிக்க வைக்கவும்,
அவர்களுக்கு வேலை தரவும் ஏன் சட்டங்களையும், திட்டங்களையும்
உருவாக்க மறுக்கிறது?
தமிழ்நாடு எனும்
பெயரில் தமிழர்களாக தமிழ் இனமாக வாழ்ந்துகொண்டிருக்கும் எங்களுக்கு தமிழில் கல்வி
கொடுங்கள், தமிழில் படித்தவர்களுக்கு மட்டுமே
உயர்நிலை பதவி கொடுங்கள், எங்களுக்கு 80 விழுக்காடு வேலை கொடுத்ததுபோக மீதியை மற்றவர்களுக்குக் கொடுங்கள்.
அப்பொழுதுதான் தமிழர் வேட்டிக்கட்டுவது பொருத்தமாகவும், பெருமையாகவும்
இருக்கும். அதுவரை வேட்டி கட்டும் மலையாளியைப் பார்த்து ஏங்கிக் கொண்டிருக்க
வேண்டியதுதான். ஏனென்றால் வேட்டியிருந்தும் மொழியிழந்த கண்களிழந்த குருடர்கள்தான்
இந்தத் தமிழர்கள்.
- இன்னும் சொல்ல தோணுது…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: thankartamil@gmail.com
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: thankartamil@gmail.com
No comments:
Post a Comment