Saturday, 2 May 2015

சொல்லத் தோணுது 2 - வானொலிக் காதலி

நான்கு வயதில் நான் பார்த்த முதல் சினிமா பெற்றால்தான் பிள்ளையா’. மாடு மேய்க்கும்போதும் பள்ளிக்குப் போகும்போதும் தோளில் வானொலிப் பெட்டியோடு அலைந்தவன்.
எனக்குத் தெரியாத பாடல்களே இல்லை என்று அடித்துச் சொல்லலாம். 5-ம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த என்னை, எங்கள் ஊர் உயர்நிலைப் பள்ளியில் இருந்து தலைமை ஆசிரியர் அழைப்பதாக கூட்டிக்கொண்டுப் போனார்கள். அனைத்து ஆசிரியர் களுக்கும் இடையில் சின்னஞ் சிறுவனாகிய என்னைக் கொண்டுபோய் நிறுத்தினார்கள்.
ஆகாய வீதியில்அழகான வெண் ணிலா…’ இது எந்தப் படத்தின் பாடல்? யார் யார் பாடினார்கள் என்று கேட்டார் கள். அவர்களுக்குள்ளான பந்தயத்தில், என் பதிலை வைத்து ஒரு முடிவுக்கு வரக் காத்திருந்தார்கள்.
சற்றும் யோசிக்காமல், படம் மஞ்சள் மகிமை’. பாடியவர்கள் பி.சுசீலா, கண்டசாலா எனச் சொன்னதும், தமிழாசிரியர் சுப்பிரமணியம் என்னைத் தூக்கிக் கொஞ்ச ஆரம்பித்துவிட்டார். சரியான பதிலைச் சொன்னதற்காக 5 ரூபாயைப் பரிசாகக் கொடுத்தார்கள்.
பத்திரக்கோட்டை தங்கராசுஎன்று சொல்லாத வானொலியே அந்த நாளில் இல்லை. ரேடியோ மாஸ்கோ (ரஷ்யர), ரேடியோ பீகிங் (சைனா), ரேடியோ வெரித்தாஸ் (மணிலா), ரேடியோ கோலாலம்பூர் (மலேசியா), இலங்கை வானொலி, ரேடியோ பிபிசி என அனைத்து வானொலிகளுக்கும் கடிதம் எழுதி, என் பெயரைக் கேட்பதிலேயே அப்போது என் காலம் கழிந்துகொண்டிருந்தது. அதிகாலை 4 மணிக்கே எழுந்து உட்கார்ந்துகொண்டு ரேடியோ கோலாலம்பூர் கேட்க ஆரம்பித்துவிடு வேன். பாதிப் பாடல்தான் தெளிவாகக் கேட்கும். மீதியைக் கேட்க கண்களை மூடிக்கொண்டு அதன் கொர... கொர... சத்தத்தோடு கற்பனையில் நானும் ஒன்றிவிடுவேன்.
என் பெரிய அண்ணன் மெட்ராஸ் மூர் மார்க்கெட்டில் இருந்து வாங்கி வந்திருந்த இங்கிலாந்து வால்வு ரேடியோதான் எனக்குத் தோழனாக இருந்தது. எப்படியும் குறைந்தது 15 கிலோ எடை இருக்கும். ஒரு நிலையில் வைத்தால் பாடல் தெளிவாகக் கேட்காது என்பதால், எல்லாத் திசைகளிலும் திருப்பிப் பார்த்து, பின் தலைகீழாகவும் கவிழ்த்து வைத்துவிடுவதும் உண்டு. இந்த வானொலிப் பெட்டியைப் பாடாய்ப்படுத்தியதாலேயே என் அண்ணன்களிடம் கணக்கில்லாத அடி, உதை வாங்கியிருக்கிறேன். அழகுப் பெட்டகமாக இருந்த வானொலிப் பெட்டி அதன் கடைசிக் காலத்தில் உருக்குலைந்து, மேல்பகுதி இல்லாமல் வெறும் எலும்புக்கூடாகக் கிடந்தும்கூட அதனால் முடிந்தவரை பாடிக்கொண்டேதான் இருந்தது.
இருப்பதிலேயே மிகப் பெரிய சவுக்கு மரத்தினை வெட்டிவந்து, அதன் உச்சியில் ஒரு கம்பியைக் கட்டி, ஒயர் ஒன்றினை இணைத்து ஏரியல் ஏற்பாடு செய்திருந்தோம். செடிக்குத் தினமும் தண்ணீர் ஊற்றுவதைப் போல் வானொலிப் பெட்டியில் இருந்து தரைக்குள் இழுத்து புதைக்கப்பட்ட ஒயருக்கும் தண்ணீர் ஊற்றுவது தினசரி என் முதல் கடமையாக இருந்தது.
எல்லாப் பிள்ளைகளும் நேரத்துக்கு பள்ளிக்குச் சென்றுவிட்டாலும் நான் மட்டும் எதையோ படிக்கிற மாதிரியோ, எழுதுகிற மாதிரியோ பாவனை செய்தபடி வானொலியின் காலை இறுதி நிகழ்ச்சியான பொங்கும் பூம்புனல்பாடல்களைக் கேட்டுவிட்டுத்தான் பல நாட்கள் பள்ளிக்குப் போயிருக்கிறேன். பாவிகள்! காலை 9.30-க்குத்தான் நல்ல நல்லப் பாடல்களாக ஒலிபரப்புவார்கள். அதிலும் இந்த இலங்கை வானொலி அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜா வந்து விட்டால் அன்றைக்கு எந்தப் பரீட்சை யாக இருந்தாலும் அந்த இடத்தைவிட்டு நகரவே மாட்டேன். என் தொல்லை தாங்காமல் ஒருநாள் என் அப்பா, விறகு உடைக்கும் கோடாரியோடு வந்துவிட்டார். சொல்லிச் சொல்லிப் பார்த்துவிட்டு இறுதியாக பாடிக்கொண் டிருந்த இங்கிலாந்து வானொலிப் பெட்டியைப் பார்த்து கோடாரியாலேயே ஒரு போடு போட்டார். அன்றோடு அதன் ஆயுள் முடிந்தது.
எப்படி ஒன்றுக்குள் ஒன்றாகப் பழகி உயிரோடு இணைந்துவிட்ட காதலியை மறக்க முடியாதோ, அப்படித்தான் நானும் என் வானொலிப் பெட்டியை மறக்க முடியாமல் அலைந்தேன். இன்று நான் போகிற இடங்களில் எல்லாம் அலுவலகமானாலும், வீடானாலும் எல்லா அறைகளிலும் வெவ்வேறு வடிவங்களில், உருவங்களில் பாடல்களைக் கேட்கும் கருவிகள் இருந்தாலும் எதிலும் நாட்டமில்லை. என் மனது இளம் பருவத்திலேயே சிக்கித் தவிக்கிறது. அழகுத் தமிழ் பேசி ஒவ்வொரு பாடலுக்கும் விளக்கம் சொல்லி ஒலிபரப்பும் அறிவிப்பாளர்களின் குரல் கேட்க மனம் அலைகிறது.
பண்பலை எனச் சொல்லி இன்று என் மொழியை சீர்குலைத்து கொலை செய்யும் போக்கினைக் கண்டு கொதித்துப் போயிருக்கிறேன். வானொலியைத் தொடவே அச்சமாக இருக்கிறது. தமிழை ஆங்கிலம் மாதிரி உச்சரிப்பதும், ஆங்கிலத்தோடு கலந்து பேசுவதும்தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவர்களுக்கு இந்த அதிகாரத்தைக் கொடுத்தது யார்?
ஒரு மொழி என்பது காலம் காலமாக வளர்த்தெடுக்கப்பட்ட ஓர் இனத்தின் சொத்து. மொழி, பண்பாடு, கலாச்சாரம், அரசியல் அறிவு எதுவுமே இல்லாமல் இவர்கள் பணம் பறிப்பதற்காக இந்தப் பிழைப்பு பிழைப்பதை எவ்வாறு அனுமதிப்பது? இந்தக் கூட்டத்தைப் பார்த்து தனியார் தொலைக்காட்சிகளும் இந்த மொழிக் கொலையைச் செய்கின்றன. பணம் கொடுத்து, எவ்வளவு விலையானாலும் எதையும் வாங்கிக் கொள்ளலாம் என்பது மாதிரி மொழியை விலைக்கு வாங்கிவிட முடியுமா?
ஒருத்தரும் இதைப் பற்றி சிந்திப்பது இல்லை; பேசுவதும் இல்லை; கண்டனக் குரல் எழுப்புவதும் இல்லை. அடித்தட்டு மக்களிடத்தில்தான் தமிழ் கொஞ்சமாவது பிழைத்திருந்தது. இப்போது இந்த மொழிக் கொலையால் மேலும் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. என் மக்களும் அது போலவே வேறுமொழி கலந்து பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
இவர்களின் பேச்சு போலவேதான் இவர்கள் ஒலிபரப்புகிற பாடல்களும் இருக்கிறது. பேசுகிறார்களா? பாடுகிறார் களா? அது எந்த மொழிப் பாடல்? எதைப் பற்றி பாடுகிறான்? யாருக்காகப் பாடு கிறான் என்று எதுவுமே புரியாமல் எல்லா தனியார் வானொலிகளும் இதையே தான் போட்டு கத்திக்கொண்டிருக் கிறார்கள். அதிலும் ஒரு வானொலி தமிழ் மக்களைப் பார்த்து மச்சான் (மச்சி) எனச் சொல்லி அழைக்கிறது. ஒரு நடிகை தமிழர்களைப் பார்த்து மச்சான் என அழைக்கிற மாதிரி இரண்டுமே வடநாட்டு கைங்கர்யம்தான்.
நானும் நீங்களும் இப்படிப்பட்ட வானொலிகளிடமிருந்து தப்பித்துவிட லாம். நம் மொழி தப்பிக்க என்ன செய்யப் போகிறோம்?
- இன்னும் சொல்வேன்
எண்ணங்களைத் தெரிவிக்க: thankartamil@gmail.com

1 comment:

  1. இந்த வானொலி நடத்துபவர்கள் எல்லாம், பாரதி இல்லையென்ற ஒரு தயிரித்தில் செய்கிறார்களோ என்னோவோ.

    ReplyDelete