Sunday, 3 May 2015

சொல்லத் தோணுது 19 - குற்றவாளிகள்

நம்மைச் சுற்றி நிகழும் சீர்கேடுகளையும், குற்றங்களையும், வன்முறைகளையும், முறை கேடுகளையும் கண்டும் காணாதது போல் இருக்க நாம் பழகிவிட்டோம். அவை வெறும் செய்திகளாக உலவி தீர்வில்லாமலேயே முடிந்து போகின்றன. இவைகளுக்கெல்லாம் காரணம் மற்றவர்கள்தான் எனச் சொல்லி ஒவ்வொருவரும் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறோம்.
சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு, 17 முறை களுக்கு மேல் ஆட்சியாளர்கள் மாறியும் சீர்கேடுகளும், குற்றங்களும் பெருகிக் கொண்டே இருப்பதன் காரணம் என்ன?
பிரிட்டிஷ்காரர்களிடம் நாம் எதை இழந்தோம் என்பதை ஒவ்வொருவரும் சிந்தித்தால், நம் குடியரசு ஆட்சி மூலம் நாம் இழந்ததையும், பெற்றதையும் அறியலாம்!
ஒவ்வொரு குடிமகனும் நம் சிக்கல்கள் அனைத்துக்குமே காரணம் அரசாங்கம்தான் என நினைத்தால் இதற்குத் தீர்வே இல்லை. வாக்களிப்பதாலும், வரிகளை செலுத்துவதாலும் மட்டுமே நம் கடமை தீர்ந்துவிடுவதாக, நாம் நினைப்பதுதான் எல்லாக் கொடுமைகளுக்கும் காரணம்.
கருவுற்ற நாளில் இருந்தே ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தையின் கல்வியைப் பற்றி கவலைப்படத் தொடங்கி, அன்று முதல் பள்ளியில் இடம் பிடிக்க அவர்கள் படும் அவஸ்தையை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். எவ்வளவு விலை கொடுத்தாவது, உரிமைகளை இழந்தாவது, அவமானப்பட்டாவது நாம் உயர்வாக நினைக்கிற பள்ளியில் சேர்க்கத் துடிக்கிறோம்.
ஒவ்வொருவரும் தங்கள் பிள்ளைகளின் கல்விக்காக செலவழிக்கின்ற பணத்தை அடைவதற்காக அவர்கள் கடக்கும் பாதைகள் என்னென்ன என்பதெல்லாம் யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாதவை. இதை எல்லாம் மீறி, அங்கு வழங்குகிற கல்வியின் தரம் பற்றியும் சிந்திக்க நமக்கு நேரமும் இல்லை.
நேற்று நான் பிறந்த கிராமத்தில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. ஐந்து முறை ஆசிரியர் பணித் தேர்வு எழுதியும் தேர்ச்சி அடையாத என் மகனுக்கு, யாரையாவது பிடித்து தேர்வில் மதிப்பெண் வாங்கித் தந்து வேலையும் வாங்கிக் கொடுங்கள். நிலத்தை விற்று பணம் ஏற்பாடு செய்து தருகிறேன்என ஊர்க்காரர் ஒருவர் கெஞ்சினார்.
மூன்று பிள்ளைகளையும் வெளியூர் விடுதி யில் தங்க வைத்து, ஆங்கிலப் பள்ளியில் படிக்க வைக்க ஆசைப்பட்டு, இருந்த நிலத்தை எல்லாம் விற்றதுபோக இன்னும் ஒன்றரை ஏக்கர்தான் மீதம் வைத்திருக்கிறார் அவர். நாடு முழுக்க கறிக்கோழிப் பண்ணைகளைப் போல் திறந்துவிடப்பட்ட ஆங்கிலப் பள்ளிகள் எல்லாமே இப்படிப்பட்ட பெற்றோர்களின் பணத்தால்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
தங்களுக்குத் தெரிந்த அரசு ஊழியர்கள், செல்வந்தர்கள், ஆசிரியர்கள், அரசியல்வாதிகள் என எல்லோரின் பிள்ளைகளும் படிக்கிறபோது, அதற்கு இணையான கல்வியை நம் பிள்ளைகளுக் கும் தர வேண்டும் என்பதற்காகவே பொருளாதார சிக்கலில் மாட் டிக் கொண்டு தவிக்கும் பெற்றோர்களின் மனக் குமுறல்களுக்குத் தீர்வுதான் என்ன?
தனியார் பள்ளிகளில்தான் சிறந்த கல்வி தரப்படுகிறது என்கிற எண்ணம் முளைத்த போதே, அரசுப் பள்ளிகள் தரத்தை உயர்த்த முயற்சித்திருந்தால் இன்று அரசுப் பள்ளி களெல்லாம் ஒவ்வொன்றாக மூடப்பட்டு, மாட்டுக் கொட்டகைகளாக மாறிக் கொண்டிருக்காது.
கல்விச் சாலைகளில் கவனம் செலுத்தாத அரசுகள் தொடர்ந்து உருவானதன் சீர்கேடுதான், இன்று கல்வியை தனியாரிடம் கொடுத்துவிட்டு மதுக் கடைகளை வைத்தும், கனிம வளங்களை சுரண்டியும் நல்லாட்சி(?) செய்து கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு பெற்றோரும் முதல் நாள் இரவில் இருந்தே விண்ணப்பப் படிவம் வாங்க ஒவ்வொரு தனியார் பள்ளியின் வாசலிலும் கால்கடுக்க நின்று கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
கடந்த ஆண்டு அறுபதுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்களை சந்தித்து உரையாற்றச் சென்றிருந்தேன். எனக்குப் பெரும் கவலைதான் மிஞ்சியது.
வெறும் மதிப்பெண்களை மட்டுமே குறிக் கோளாகக் கொண்டு பயிலும் மாணவர்களையும், தனது பிள்ளை ஒரு வேலையில் சேர்ந்து பணம் மட்டுமே சம்பாதித்தால் போதும் என நினைக்கும் பெற்றோர்களையும், மதிப்பெண்களுக்காகவே பயிற்றுவிக்கும் ஆசிரியர்களையும், பெற்றோர் களிடம் இருந்து பணத்தைக் கொள்ளையடிக் கவும்... அரசாங்கத்தை எப்படி தந்திரமாக ஏய்த்து பணம் பறிக்கலாம் எனக் கற்றுக்கொண்ட கல்வி கடை உரிமையாளர்களையும் கண்டு வந்த பின்னர், இந்த சீர்கேடுகளுக்கு எல்லாம் சிகிச்சை எங்கிருந்து தொடங்க வேண்டும் என்பதை உணர்ந்தேன்.
மக்களின் பொருளாதாரத்தை அழித்து, தரமற்ற கல்வியைத் தந்து இந்த சமுதாயத்தை அழித்துக் கொண்டிருக்கும் கொள்ளையர்களின் பிடியில் இருந்து, அரசு நினைத்தால் சில மாதங்களிலேயே விடுதலை பெற்றுத் தந்துவிடலாம். இரண்டு மாதங்களுக்கு முன் சென்னையில் உள்ள மாநகராட்சிப் பள்ளிகளை நேரில் சென்று பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. தமிழகத்தின் முதல் மதிப்பெண் பெறும் மாணவனாக சென்னை மாநகராட்சிப் பள்ளியில் பயிலும் மாணவன்தான் வர வேண்டும் என்பதற்காக திட்டம் தீட்டப்பட்டு செயல்படுவதாகக் கேள்விப்பட்டேன். அதற்காக மாணவர்களுக்கு அடிப்படை பயிற்சியளிக்கும் சிலரையும் சந்தித்தேன். பல பள்ளிகளுக்கு நேரில் சென்று அங்கு உருவாக்கப்பட்டு வரும் மாற்றங்களையும், மாணவர்களுக்கான தேவைகளையும், அதன் சூழலையும் உருவாக்கித் தருவதை கவனித்த பின்னர் எனக்கு இப்படித்தான் தோன்றியது.
இதே போன்ற நடவடிக்கைகளை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிக்கூடங்களிலும் செயல்படுத்தினால், இந்தச் சமுதாயத்தை நாசமாக்கும் தனியார் பள்ளிகளின் கொள்ளை களில் இருந்து மாணவர்களையும், பெற்றோர் களையும் காப்பாற்றிவிடலாம் என்கிற நம்பிக்கைப் பிறந்தது.
அரசு எத்தனை சட்டங்களை உருவாக்கினா லும், நீதிமன்றங்கள் எவ்விதமான ஆணைகளை பிறப்பித்து, இவர்களின் கொள்ளையைத் தடுக்க நினைத்தாலும் தனியாரின் கொடுமை களைக் களைய முடியாமல் போவதற்குக் காரணம்... இதில் மக்களின் பங்களிப்பு இல்லாததுதான்.
அரசு அறிவித்த கட்டணங்களுக்கு மேல் அவர்கள் கேட்கிறபடி எல்லாம் கொடுப்பதும், அது பெற்றதற்கான அத்தாட்சி நகலைக் கேட்டுப் பெறாமல் திருட்டுத்தனத்துக்கு உடன்படுவதும் பெற்றோர்கள்தான். ஒருவர்கூட இதனைக் கண்டித்து நடவடிக்கை எடுக்கக் கூறி புகார் அளிப்பதில்லை.
இந்த அநியாயங்களுக்குத் துணை போகாமல், அரசு அறிவித்துள்ள திட்டங்களின்படிதான் பள்ளியை நடத்த வேண்டும் என, அனைத்துப் பெற்றோரும் ஒரே ஒரு பள்ளியின் முன்பு போராடினால்... ஒரே வாரத்தில் தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் முன்பும் போராட்டம் தொடங்கிவிடும். தனியார் பள்ளிகளும் வழிக்கு வருவார்கள். அரசாங்கமும் உண்மை நிலையை உணர்ந்து, தன் தவறைத் திருத்திக்கொண்டு தன் கடமையை உணர்ந்து செயல்படும்.
அரசியல் கட்சிகள் போராடிப் பெற்றுத் தரும் என நினைத்தால், அது எந்தக் காலத்திலும் நடக்கப் போவதில்லை.
தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைத் தாங்கள் மட்டுமே உருவாக்கிக் கொள்ளவேண்டும் என முடிவெடுத்து, மக்களே கல்விப் புரட்சியில் குதித்தால்தான் இதற்கு விடிவு. இதற்கு மட்டுமல்ல தங்களுக்கு எதிரான அனைத்துக்குமே மக்கள் வீதியில் இறங்கிப் போராடினால்தான் முடியும் என்பதை எப்போது உணர்கிறோமோ... அதுவரை குற்றவாளிகள் மற்றவர்களில்லை; மக்களாகிய நாம்தான்!
- சொல்லத் தோணுது
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: thankartamil@gmail.com

No comments:

Post a Comment