Sunday, 3 May 2015

சொல்லத் தோணுது 6 - சிந்தனை செய் மனமே!



அப்போது ஒன்பதாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். அப்பாவுடன்தான் முதன் முதலாக ரயிலில் பயணம் செய்தேன். ஏழு ரூபாய் நாற்பது பைசாவில் பண்ணுருட்டியில் இருந்து மெட்ராஸ் எழும்பூருக்கு வந்து இறங்கினோம். சென்னை அப்போது மெட்ராஸாக இருந்தது.
ரயிலை வைத்து அதிகமாக படப்பிடிப்பு நடத்தியவன் நானாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.
ரயில் நிலையத்தில் நின்றாலும் நாற்றம், ரயிலுக்குள் போனாலும் நாற்றம். தூய்மைக் கேட்டின் முதல் இடமாக இன்னும் அதை நாம் வைத்துக் கொண்டிருக்கிறோம்.
வெளிநாடுகளுக்கு எங்குச் சென்றாலும் நான் செல்ல விரும்புவது ரயிலில்தான். அது ஒரு சுகம். ஒரு வீடு போலவேதான் ரயிலை தூய்மையாக வைத்திருக்கின்றனர். அங்கு மக்களை ஆடு, மாடுகள் மாதிரி அடைத்து வைப்பது இல்லை. ஏழை நாடுகள், பணக்கார நாடுகள் என எல்லாமும் ஒரே மாதிரிதான் இருக்கின்றன. நெடுந்தொலைவானாலும், குறைந்த தொலைவானாலும் ரயிலைத்தான் பயன்படுத்துகிறார்கள். பொருட்களைக் கொண்டுச் செல்ல பயன்படுத்தப்படும் பெரியப் பெரிய வாகனங்கள் மட்டுமே பெரும்பாலும் நெடுஞ்சாலையில் ஓடிக் கொண்டிருக்கின்றன.
ரயிலில் இரண்டாயிரம் மைல்களை மிகச் சாதாரணமாக பயணம் செய்கிறார்கள். நேரம், எரிபொருள், அலைச்சல் என எல்லாவற்றையும் பற்றி சிந்தித்துதான் ரயில் போக்குவரத்தை விரிவுப்படுத்தினார்கள். எல்லா நாடுகளும் சிந்தித்தன. இந்தியா மட்டும் ஏன் சிந்திக்க மறுக்கிறது? நாட்டை ஆண்டவர்கள், ஆள்பவர்கள் மட்டுமல்ல; இந்த மக்களும் இதுபற்றி சிந்திப்பதே இல்லை. எது, எதற்கெல்லாமோ போராட்டங்கள் நடந்தன.
மக்களின் நலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதைவிட பாதுகாப்புக்கு மட்டுமே 2 லட்சத்து 200 கோடி ரூபாய் ஒவ்வோர் ஆண்டும் ஒதுக்கப்படுகிறது. விதவிதமான ஏவுகணைகளை செலுத்தி வல்லரசு நாடாக பறைசாற்றிக் கொள்ள நினைப்பவர்கள் மக்களை ஆடு, மாடு போல நடத்துவதையும் கவனிக்க வேண்டும்.
இந்தக் காலம்உலகம் முழுவதும் மனிதர்கள் இடம்பெயர்கிற காலகட்டமாக மாறிவிட்டது. பறவைகளும் காட்டு விலங்குகளும் மட்டும்தான் இடம்பெயரும் என்பதெல்லாம் மாறி வெகு நாட்களாகிவிட்டது. நாளுக்கு நாள் நகரங்கள் உருமாறிக் கொண்டேயிருக்கின்றன. 40 ஆண்டுகளுக்கு முன் நான் பார்த்த சென்னை இது இல்லவே இல்லை. அந்த மக்கள் எங்கே போனார்கள் எனத் தெரியவில்லை. நான் வசிக்கும் தெருவில் மட்டுமல்ல; எல்லாத் தெருக்களிலும் அப்படித்தான். உள்ளூர்வாசிகள் எங்கோ ஒருத்தர்தான். பண்டிகைக் காலங்கள் வந்தால் இதனை உணர முடியும். அதுவும் நான்கைந்து நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துவிட்டால், நீர் வற்றிய குளம்தான் சென்னை. இதே போல்தான் எல்லாப் பெருநகரங்களும்!
தான் பிறந்த மண்ணை, தன் உறவுகளை நினைத்தபடியேதான் பிறந்த மண்ணைவிட்டு வெளியேறிவர்களின் வாழ்வு கழிகிறது. என் ஊர் சென்னைக்கு கொஞ்சத் தொலைவிலேயே இருப்பதால் எனக்குப் பிரச்சினை இல்லை. தமிழ்நாட்டின் மையப் பகுதிகளில் இருந்தும் கடைகோடியில் இருந்தும் பிழைக்க வந்தவர்களின் மனநிலையையும் போராட்டத்தையும் உணர்ந்திருக்கிறேன். இந்த நவீன காலத்தில்கூட இன்னமும் பத்து, பதினைந்து மணி நேரங்கள் பயணம் செய்கிறக் கொடுமையை யாருமே உணரவில்லையா? இதற்காக என்ன செய்தீர்கள்? கறிக் கோழி மாதிரி நம்மை அடைத்து பேருந்திலும், ரயிலிலும் ஏற்றிக் கொண்டு போகிறார்களே. இதற்காக யாராவது வாய் திறந்து பேசுகிறீர்களா? தீபாவளியோ, பொங்கலோ வந்துவிட்டால் ஊர்ப் போய் சேருவது பற்றிய பயம் வந்து தொற்றிக் கொள்கிறது. பத்து நிமிடங்களில் ரயிலில் முன்பதிவு தீர்ந்துவிடுகிறது. அதே நிலைதான் பேருந்துகளிலும். வசதி படைத்தவர்கள் சொந்த வாகனங்களில் போய்விடுகிறார்கள். வாகனம் இல்லாதவனின் நிலையைப் பற்றி யாரும் கவலைப்படுவதே இல்லை. போய்ச் சேர்ந்தால் போதும் என எவ்வளவு பணம் கேட்டாலும் கொடுத்துவிட்டு, ஊர்ப் போய்ச் சேர்ந்துவிடுவதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
இது மக்கள் தொகை அதிகமான நாடு. இங்கு இப்படித்தான் இருக்கும் என ஆட்சியாளர்கள் சொல்லலாம். போக்குவரத்தைச் சீர் செய்யாத, ஒழுங்கு செய்யாத குணத்தை என்னவென்று சொல்வது? வெளிநாடுகளுக்குச் செல்லும் அமைச்சர்களும், அதிகாரிகளும் எதைப் பார்க்கப் போகிறார்கள்? எதைப் பார்த்துவிட்டு வருகிறார்கள்? விமானத்தில் இருந்து இறங்கி, நட்சத்திர விடுதிகளுக்குள் சென்று தங்குவதோடு முடிந்துவிடுகிறதா?
ஏதோ வெள்ளைக்காரன் புண்ணியத்தில் இந்த வசதியாவது நமக்குக் கிடைத்தது. 68 ஆண்டுகளாக ரயில் போக்குவரத்துத்துறை மட்டும் பாதாளத்தில் கிடப்பதற்கு என்ன காரணம்? நம் ஊர் ரயில் ஓடுகிற நேரத்தைவிட நிற்கின்ற நேரம்தான் அதிகம் என்பது விவரம் அறிந்தவர்களுக்குத் தெரியும். உலகத்தில் உள்ள எல்லா கார் கம்பெனிகளையும் கொண்டு வருவதிலும், ஒப்பந்தம் போடுவதிலும் இருக்கின்ற ஆர்வம், ஏன் இதில் இல்லை?
லண்டலில் இருந்து பிரான்ஸுக்குக் கடல் வழியாக ரயில் போக்குவரத்து செய்து வைத்திருப்பது மாதிரி உங்களை செய்யச் சொல்லவில்லை. ஏற்கெனவே இருக்கிற ரயில் பாதையைத்தான் விரிவுபடுத்தக் கேட்கிறோம். மூன்று ரயில் போகிற மாதிரி, மூன்று ரயில் வருகிற மாதிரி பாதையை விரிவுபடுத்தி மாற்றிப் பாருங்கள். எவ்வளவு பொருளாதாரம் உயரும்! மக்களின் நேரம், அலைச்சல், பணம் என எல்லாமும் மிச்சமாகுமே. இந்தக் காற்று மண்டலத்தை நச்சாக்கும் புகையை உருவாக்கும் எரிபொருளில் இருந்து விடுதலைக் கிடைக்குமே! நெடுஞ்சாலைகளில் சுமை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மட்டுமே அல்லவா இருக்கும். இதைச் செய்வதை விட்டுவிட்டு சுங்கச் சாவடிகளில் கட்டணம் அதிகம் எனச் சொல்லி கத்திக் கொண்டிருக்கிறோம்.
இவைகள் மட்டுமல்ல; நெடுஞ்சாலை விபத்துக்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கைக் கூடிக் கொண்டேப் போகிறதே ஒழிய குறைந்திருக்கிறதா? சாலைகளை உருவாக்குகிற முறையை வெளிநாட்டவர்கள் நம் நாட்டில்தான் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும். பூம் பூம் மாட்டுக்காரன் சட்டை மாதிரி ஒட்டுப் போட்டு சாலைகளை பராமரிக்கிற முறை உலகத்தில் எங்குமே பார்த்திருக்க முடியாது.
துள்ளியெழும் அலைகளில் பயணம் செய்யும் படகுப் பயணம் போலத்தான் சரிசமம் இல்லாத நம் சாலைகள். என்ன பாவம் செய்தோமோ! உயிர்ப் பலி தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
நம் ஆட்சியாளர்கள் யார் வந்தாலும், யாரும் ரயில் பாதையை விரிவுப்படுத்தும் திட்டத்தை முன்னெடுக்க சிந்திப்பதில்லை. இந்திய அரசாங்கம்தான் இதைச் செய்ய வேண்டும் எனச் சொல்லி தப்பித்துக் கொள்ளலாம். அல்லல்படுபவர்கள் தமிழ்நாட்டு மக்கள், முன்னேற்றத் தடை தமிழ்நாட்டுக்குத்தான். ஒவ்வொரு முறையும் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது பற்றி சிந்தித்திருப்பார்களா?
எனக்கு இந்தக் கேள்விதான் இப்போது எழுகிறது:
எந்தக் காரணத்துக்காக தமிழ்நாட்டில் உள்ளவர்கள் எந்த வேலைக்கானாலும் சென்னைக்குத்தான் வரவேண்டும்? மற்ற நகரங்கள் எல்லாம் நகரங்கள் இல்லையா? இந்த வசதி வாய்ப்புகளை நம் மக்களுக்கு அங்கே உருவாக்கித் தர முடியாதா? ஆந்திராவையும், கர்நாடகத்தையும் தொட்டுக் கொண்டுள்ள சென்னையில் மட்டும்தான் அமைச்சரவையும், மற்ற அனைத்துத் துறை தலைமை அலுவலகங்களும் செயல்பட முடியுமா? கன்னியாகுமரியில் இருப்பவனும், கோயம்புத்தூரில் இருப்பவனும் இன்னமும் எதற்காக எதற்கெடுத்தாலும் சென்னைக்கு ஓடி வர வேண்டும். ஆட்சியாளர்கள் சிந்திக்க மறந்தாலும் மக்களும் சிந்திக்க மறந்துவிட்டார்களா அல்லது சிந்திக்க மறுக்கிறார்களா?
எம்.ஜி.ஆர் ஒருமுறை சொன்னார். திருச்சிராப்பள்ளிதான் தமிழ்நாட்டுக்குத் தலைநகரமாகச் செயல்படத் தகுதியான மையப் பகுதி. அதுதான் இம்மாநிலத்துக்கு வளர்ச்சியைக் கொடுக்கும்எனச் சொன்னார். எனக்கும் அதுதான் மிகச் சரியாகப்படுகிறது.
கத்திதிரைப்படத்தில் ராஜபக்சவுடன் வணிகம் செய்பவரின் பணம் இருக்கிறது என்பதாகச் சொல்லிப் போராடும் நம் மூளைகள் இது பற்றியும் சிந்திக்கலாமே!
- இன்னும் சொல்லத் தோணுது
எண்ணங்களைத் தெரிவிக்க: thankartamil@gmail.com

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. மிக சிறந்த கருத்து, சரியாக சொன்னீர்கள். ஒரு நாடு வளர்ச்சி அடைந்து உள்ளதா இல்லையா என்பதை இப்படி கூட நாம் பிரித்து கூறலாம்; மக்களுகாக அரசால் இயக்கபடும் வாகனத்தை அதிகமாக உபயோகபடுத்தினால் அந்த நாடு வளர்ச்சி அடைத்துள்ளது என்றும், அதேசமயம் தன்னுடைய சொந்த வாகனத்தை உபயோகபடுத்தினால் இன்னும் வளர்ச்சி அடையவில்லை என்றும். இங்கு நாமும் வணிகத்திற்கு ஒன்று, நிர்வாகத்திற்கு ஒன்று, அரசியல் சட்டமன்றத்திற்கு ஒன்று, நீதித்துறைக்கு ஒன்று என்று தலைநகரதை பிரித்து வைத்தால் இந்த சென்னைக்கு பயணிக்கும் எண்ணம் மக்கள் மனதில் இருந்து கணிசமாக குறையும்.

    ReplyDelete