Sunday, 3 May 2015

சொல்லத் தோணுது 11 - எமன்

முதன்முதலாக மின்சார விளக்கை எங்கள் பக்கத்து ஊர் ராஜா டாக்கீஸில்தான் பார்த்தேன். அங்கிருந்து எங்கள் ஊருக்கு மின்சார இணைப்பைக் கொண்டுவர ஐந்து ஆண்டுகள் பிடித்தது. வெறும் இரண்டு கிலோ மீட்டர் தொலைவுதான். சிறிய மண்ணெண்ணெய் விளக்கில்தான் எல்லோருடைய படிப்பும். ஒரு விளக்குக்கு வீட்டில் மூன்று பேர் சுற்றி உட்கார்ந்து படித்தோம். வீட்டுக்கு மின்சார இணைப்பு வரப் போகிறது என்கிற செய்தியில் திக்கு முக்காடித்தான் போனோம். புதுச்சேரியில் இருந்து அதற்கான உபகரணங்களை வாங்கி வந்து பொருத்தினார்கள். மின்சாரம் இல்லாத அந்தப் பொத்தானைத் தொட்டுப் பார்க்கவும், இயக்கிப் பார்க்கவும் நண்பர்களிடம் இருந்து அதற்கான கட்டணமாக முந்திரிக் கொட்டைகளை நானும் என் அண்ணனும் வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியாமல் வாங்கிக் கொள்வோம்.
மூன்று மாதங்கள் இருக்கலாம். திடீர் என ஒருநாள், ’நாளை காலையில் உங்கள் வீட்டுக்கு மின் இணைப்பு தரப்படும்எனத் தெரிவித்தார்கள். இரவு முழுக்கவும் தூக்கம் பறந்துபோனது.
ஊரில் எங்கள் வீ்ட்டுக்குத்தான் முதல் மின் இணைப்பைக் கொடுத்திருந்தார்கள். செய்தியைக் கேள்விப்பட்டு பள்ளிக்கூட மணி அடித்தவுடன் முதல் ஆளாக சிட்டாகப் பறந்து ஓடி வந்தோம்.
ஒவ்வொரு பொத்தானையும் அழுத்திப் பார்த்து விளக்கை எரிய வைத்து சோதனை செய்தோம். எனக்கு முந்தைய அண்ணனுக்குப் பொத்தானில் இருந்த துளையில் விரலை வைத்துப் பார்க்க ஆசை. இரண்டு விரலையும் கொண்டு போய் துளைக்குள் செருகினார். அந்த அலறலை என் காலம் உள்ளவரை மறக்கவே முடியாது.
மின்சாரம் வந்தவுடன் ஊரில் எல்லோருடைய வாழ்க்கைப் போக்கும் மாறிப் போனது. அதன் பிறகான காலங்களில் தெரு விளக்கில் தொடங்கி வீடுகளுக்குள்ளும் குண்டு பல்பு மறைந்து வாழைத் தண்டு பல்புகள் வந்தன. இதுபோலவே உழவுத் தொழிலிலும் பெரிய மாற்றங்கள் வந்தன. ஊரில் இருந்த வாய்க்காலில் இருந்தும் குளம், கிணறு மற்றும் ஏரியில் இருந்தும் கபிலை, ஏற்றம், டீசல் இன்ஜின் கொண்டு நீர் இறைத்த முறை மாறி, மின்சாரத்தில் நீர்ப் பாசனம் செய்யும் பம்ப் செட் முறைக்கு விவசாயிகள் மாறினார்கள். நீர் இறைக்கப் பயன்படுத்திய வடமும் சாலும் பரணையில் தூக்கிப் போடப்பட்டன.
விவசாயத்தை செழிக்க வைக்கவும், உழவர்களை வாழ வைக்கவும் எனச் சொல்லி அரசாங்கம் கிணறு வெட்டவும், பம்ப் செட் வாங்கவும் கடன் கொடுத்தது. கிணற்றை மட்டும் வெட்டி வைத்துவிட்டு, வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமலும், மேற்கொண்டு கடனை வாங்கி விவசாயம் செய்ய முடியாமலும் ஊருக்கு 10 குடும்பங்கள் கொத்துக் கொத்தாகத் தற்கொலை செய்துகொண்டன. கொஞ்சம் கையில் பசை இருந்தவர்களும், இருந்த நிலத்தில் ஒரு பகுதியை விற்று பணம் புரட்டியவர்களும் மட்டுமே மின்சாரத்தைப் பயன்படுத்தி உழவுத் தொழில் செய்து வந்தார்கள்.
இரவில் மட்டுமே விவசாயத்துக்கு மின்சாரம் கொடுத்ததால் வயலுக்கு நீர் பாய்ச்சப் போனவர்களில் பலரை பாம்பு கடித்ததால், அவர்களைப் பிழைக்க வைக்க முடியாமல் போய்ச் சேர்ந்தார்கள். தொடக்கத்தில் 55 அடி ஆழத்தில் நீர்மட்டம் தென்பட்டது போய், இப்போது 700 அடியைத் தாண்டிவிட்டது. 40 ஆண்டுகளில் நிலத்தடி நீர் மட்டும் 600 அடி கீழே போய்விட்டது.
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. மழைக் காலம் வந்துவிட்டால் ஊரைச் சுற்றியிருக்கிற ஓடைகளில் சிறிய நீர்வீழ்ச்சியில் இருந்து மாதக்கணக்கில் தண்ணீர் கொட்டிக் கொண்டேயிருக்கும். குத்துப்பள்ளத்துஓடையில் ஓட்டமாக ஓடிவந்து மூன்று கரணம் போட்ட காலமும் உண்டு. சுற்றுவட்டாரத்தில் உள்ள நாற்பத்துக்கும் மேற்பட்ட ஊர்களில் இருந்தும், எங்கள் ஊரில் தேவநதி என அழைக்கப்படும் ஆண்டு முழுவதும் வற்றாத தாழம்பூ அடர்ந்த நீரோடையில் கரிநாளன்று குளிப்பதற்காகவே வருவார்கள். ஆனால், இன்று அதே ஊரில் ஓடை இருந்த தடயம் மட்டுமே கொஞ்சம் மிச்சமிருக்கிறது.
இன்று மின்சாரம் இல்லாத நீர் நிலைகள் முற்றிலுமாக அருகிவிட்டன. இந்நிலை எங்கள் ஊரில் மட்டுமில்லை; சுற்றியுள்ள 150 கிலோ மீட்டர் வரைக்கும் நிலத்தடி நீர் பாதாளத்துக்குப் போய்விட்டது.
ஆர்ட்டீசியன் ஊற்றுப் பகுதியாக இருந்த எங்கள் பகுதி, இன்று பாலைவனமாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. என்றைக்கு நெய்வேலிப் பகுதியில் நிலக்கரி கண்டுபிடித்தார்களோஅன்றைக்கே இந்த மண் பாலைவனமாகத் தொடங்கிவிட்டது.
2,400 அடியில் கிடக்கின்ற நிலக்கரியை வெட்டி எடுக்க, அதுவரை உள்ள எல்லாத் தண்ணீரையும் வெளியேற்றினால்தான் முடியும். 12 அடி விட்டம் உள்ள மூன்று குழாய்கள் மூலம் 24 மணி நேரமும் ராட்சத இயந்திரங்களை வைத்து விடாமல் நீரை இறைத்துக் கொண்டே இருக்கிறார்கள். வெறும் 8 நிமிடங்கள் இயந்திரங்கள் நின்று போனால் சுரங்கம் மூழ்கத் தொடங்கிவிடுமாம். இது மட்டுமில்லை; வெளியேற்றிய நீர் வயலில் பாய்ந்து கரித் துகள்கள் படிந்து நிலத்தை மலடாக்கி விடுகின்றன. இந்தச் செய்தி கொஞ்ச காலத்துக்கு முன்புதான் இந்த மக்களுக்குத் தெரியவந்தது.
இதுபோக 24 மணி நேரமும் நிலக்கரியை எடுப்பதினால் வெளியேற்றப்படும் கரித் துகள்கள் அவ்வளவு மக்களுக்கும் நோய்களை வாரி வாரி வழங்குகின்றன. ஐந்தே ஐந்து நிமிடங்கள் மட்டும் வாகனங்களை நிறுத்தி வைத்துவிட்டு எடுக்கும்போது பளிச்சென்றுத் தெரியும் அளவுக்கு, உங்களின் பெயரை வாகனத்தின் மேல் படர்ந்திருக்கும் கரித்தூளில் எழுதிப் பார்க்கலாம். இந்தத் துகள்கள் உணவுப் பயிர்களின் மேல் படிந்து விளைச்சலை பெரிதும் பாதித்துவிட்டன.
நெய்வேலியைப் பற்றித் தமிழர்கள் பெருமையாகப் பேசிக்கொண்டிருக்கும் வேளையில், இந்தச் செய்தி பலருக்குத் தேவையற்றதாகவும் அதிர்ச்சியூட்டுவதாகவும் கூடத் தோன்றலாம். சுரங்கத்துக்காக விரட்டப்பட்ட இருநூறுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மண்ணின் மைந்தர்கள் மனநோயாளிகளாக, அகதிகளாக அங்கேயே சுற்றிக்கொண்டு வருவதை யாரும் கேள்விப்பட்டிருக்க நியாயமில்லை. எந்தெந்த மாநிலத்துக்காரர்களோ வந்து கோலோச்சி அவர்களை ஆட்டிப் படைக்கிறார்கள். மூன்றில் ஒரு பகுதியை விடக் குறைவாகவே தமிழ்நாட்டுக்கு மின்சாரத்தைக் கொடுத்துவிட்டு, பிற மாநிலங்களுக்குக் கடத்திவிடுகிறார்கள்.
இதனைக் காரணம் காட்டித்தான் 10 ஆண்டுகளுக்கு முன்பு காவிரி சிக்கல் பெரிதாக உருவானபோது, தமிழ்த் திரையுலகத்தினர் கூட்டியிருந்த ஆலோசனைக் கூட்டத்தில் நெய்வேலியில் போராட்டத்தை முடுக்கி, மின்சாரத்தை முடக்க வேண்டும் என கடுங்கோபத்துடன் என் கருத்தினை வெளியிட்டுப் பேசினேன். பெரும் பரபரப்பினையும், எழுச்சியினையும் உருவாக்கிய அந்தக் கூட்டத்தால் போராட்டம் வெடித்தது. நெய்வேலியில் நடந்த கூட்டத்தில் யார், யாரெல்லாமோ பேசி தங்களின் அரசியல் ஆதாயத்தைத் தேடிக் கொண்டார்கள். என்னைப் பேச அனுமதிக்காததால் ஆறு கிலோ மீட்டர் நடந்தே என் உறவினர் வீட்டுக்கு வந்துவிட்டேன்.
எல்லோரும் புகழ்ந்து கொண்டிருந்த நெய்வேலி எனக்கு எமனாகத் தெரிந்தது. அதனால்தான் எமன்எனும் நாவலை 1992-ம் ஆண்டு எழுதத் தொடங்கினேன். 1874-ம் ஆண்டு மேட்டுக்குப்பத்தில் வடலூர் ராமலிங்க அடிகள் மறைந்த 10 நிமிடத்துக்குப் பின், பக்கத்து வீட்டில் பிறக்கிற ஒரு குழந்தையிடம் இருந்து நாவல் தொடங்குகிறது. 2009-ம் ஆண்டு மேல்மருவத்தூரில் முடிகிற இந்த நாவல், கடந்த காலங்களில் ஏற்பட்ட அனைத்துத் துறை சார்ந்த மாற்றங்களினால் சீரழிந்த தமிழர்களின் வாழ்வியல் போக்குகளைத் தோலுரிக்கும் படைப்பாகும். எனக்கு இருந்த தொழில் சிக்கல், பொருளாதார சிக்கல் என எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு, 1950-ம் ஆண்டு வரையிலான நிகழ்வுகளை 800 பக்கங்களுக்கு மேலாக புனைந்திருந்தேன்.
இரண்டு ஆண்டுக்கு முன்ப்ய், நான் தற்போது குடியிருக்கும் சென்னை வீடு புதுப்பிக்கப்பட்டபோது என்னுடைய கவனக்குறைவால் அந்த நாவல் காணாமல் போனது. அதனைத் தேடி கிடைக்காத வேளைதான் என் வாழ்வில் தாங்கிக்கொள்ள முடியாத துயரமான நாட்கள். பொருள் வைத்திருந்த பெட்டிகள் இடம் மாற்றப்பட்டதில் எமன்நாவலை இழந்ததோடு, என் மன நிம்மதியையும் இழந்துவிட்டேன். தேடி அலைந்து முடிந்து ஒரு மாதம் கடந்திருக்கலாம். வீட்டின் மாடியில் நின்று இருந்தபோதுதான் அதனைக் கவனித்தேன். இரண்டு குப்பைப் பொறுக்கும் சிறுவர்கள் வெற்றிடமாகக் கிடந்த பக்கத்து மனைப் பரப்பில், சிதறிக்கிடந்த தாள்களைப் பொறுக்கிக் கொண்டிருந்தார்கள். காலம் கடந்துதான் அந்தத் தாள்கள் கண்ணில்பட்டன. 150 பக்கங்களுக்குத் தேறலாம். ஒன்றுக்கொன்றுத் தொடர்பில்லாத பக்கங்கள். என்னால் எதனையும் ஒரு வரியைக் கூடப் படித்துப் பார்க்க முடியவில்லை. கண்டுபிடித்த பக்கங்கள் மேலும் மேலும் என் மனச் சுமையைத்தான் கூடுதலாக்கின. நெய்வேலி அனல்மின் நிலையம்தான் எமனாக வந்து எங்களின் வாழ்வாதாரத்தையும் இயற்கை வளங்களையும் அழித்தது என்றால், இந்த எமன்நாவலும் என்னைக் கொன்றுவிடும் என முடிவு செய்து, எடைக்குப் போடப்படும் செய்தித் தாள்களுக்கு இடையில் யாருக்கும் தெரியாமல் வைத்துவிட்டேன். இனி மறுபடியும், எப்போது எனக்கு எழுதுகிற மனநிலையும் நேரமும் கிடைக்கப் போகிறது என்பதும், எப்படி நான் அந்த நாவலை முழுமையாக எழுதி முடிப்பேன் என்பதும் எனக்குத் தெரியவில்லை.
ஊர்ப் பக்கம் போகவே பிடிக்கவில்லை. மின்சாரம் வந்ததும் கிணற்றை மறந்துபோனார்கள். ஊருக்கு ஒரு கிணறு கூட இல்லை. மின்சாரம் வந்தால்தான் குடிக்கவே நீர் கிடைக்கும் என்கிற நிலையில் 700 அடி ஆழத்தில் இருந்து தண்ணீர் எடுத்து விவசாயம் செய்து பிழைக்க முடியுமா? காலம் காலமாக ஏதோ கொஞ்சம் வயிற்றுக்குக் கஞ்சி ஊற்றி வந்த பலா மரங்களும், முந்திரி மரங்களும் தானேபுயலால் பாலைவனமாகிப் போனது. ஒரு பக்கம் நெய்வேலிகாரன் 24 மணி நேரமும் நிலத்தடி நீரை உறிஞ்சி வெளியேற்றுகிறான். தண்ணீர் பற்றாக்குறை காரணமாக சென்னைக்குத் தண்ணீர் தேவைப்படும்போதெல்லாம், அரசு அமைத்த ராட்சத ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து தண்ணீர் உறிஞ்சப்பட்டு, யானை மாதிரியான பெரியப் பெரிய குழாய்கள் மூலம் இந்த மண்ணுக்குள்ளிருந்து தண்ணீர் வெளியேறிக்கொண்டே இருக்கின்றது. தானேபுயல் நிவாரண நிதியின் மூலம் வளர்க்கப்பட்ட பலா, முந்திரிக் கன்று நாற்றுகள் தோண்டிக் கொண்டிருக்கும் 700 அடி ஆழக் கிணறுகளில் இருந்து தண்ணீரைப் பெற்று மீண்டும் மரமாகக் காத்திருக்கின்றன.
காத்திருப்பது நாற்றுகள் மட்டுமல்ல; பிழைக்க வேறு வழியே தெரியாத இந்த மக்களும்தான்.
- இன்னும் சொல்லத்தோணுது
எண்ணங்களைத் தெரிவிக்க: thankartamil@gmail.com

No comments:

Post a Comment