Sunday, 3 May 2015

சொல்லத் தோணுது 28 - உதிர்ந்த இலைகள்

தொலைக்காட்சிப்பெட்டி ஒன்றுதான் இன்று மனிதர்களிடத்தில் பேசிக்கொண்டிருக்கிறது. அதுவும் இல்லாமல் போனால் இந்த பெருசுகளிடம்பேசுவதற்கு யார்தான் துணையிருக்கிறார்கள்?
வீட்டிலுள்ளப் பெரியவர்கள் பேசுவதை எவரும் விரும்புவதில்லை. பேசினாலும் சுருக்கமாகப் பேசச்சொல்லி கண்டிக்கிறார்கள். நான் நண்பர்களின் வீட்டிற்கோ, விருந்தினர் வீட்டிற்கோ சென்றால் முதலில் பார்க்க விரும்புவது அந்த வீட்டிலுள்ள முதியவர்களைத்தான். பேச்சுத் துணைக்கும், நலன் விசாரிப்புக்கும் ஏங்குகின்ற அவர்களை பெரும்பாலான வீடுகளில் கட்டிவைத்திருக்காத நாய்கள் போலவே நடத்துவதை கண்டுகொண்டேதான் வருகிறேன். விருந்தினர்களும், நண்பர்களும் வீட்டிற்கு வரும்போது எத்தனைபேர் தங்களின் வயதான உறவுகளை நாம் கேட்காமலேயே அறிமுகப்படுத்துகிறார்கள்!
வெளியூர் சென்றிருந்தபொழுது என் படைப்புகள் மேல் பற்றுகொண்ட ஒருவர் பலமுறை வற்புறுத்தி அழைத்ததினால் அவர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். பெரிய விருந்து என்றே சொல்லலாம். விடைபெற்றுத் திரும்பும்போது எனது கைப்பேசியை மறந்து அங்கேயே வைத்துவிட்டு வந்து விட்டதால் மீண்டும் நினைவுக்கு வந்து அதனை எடுப்பதற்காக கொஞ்ச நேரத்திலேயே திரும்பிப் போனேன். அழைப்புமணி அடித்தும்கூட யாரும் வரவேயில்லை. வீடு திறந்திருந்ததால் நானே உள்ளே சென்றேன்.யாரும் கண்ணில் படவில்லை. ஆனால் மேலே மாடியின் அறைக்குள்ளிருந்து யாரையோ அடிக்கின்ற சத்தமும், அடியை வாங்குபவர் அலறுவதும் கேட்டது. அவரின் மனைவியும் சேர்ந்து திட்டிக்கொண்டிருந்தார். அவர்களின் கட்டுப்பாட்டையும் மீறி அடி வாங்குபவர் என்னைப் பார்க்க முயன்றதற்காக சண்டை மூண்டிருந்தது. மீண்டும் நண்பர் அவரைத் தாக்குவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் நானே மாடிக்குப் போனேன். அனைவருமே அதிர்ந்து போனார்கள்.அடி வாங்கிய அப்பா என்னைக்கண்டதும் அழுகையை மறைத்துக்கொண்டார். அதன்பின் அந்த நபர் என்னை பார்ப்பதையேத் தவிர்த்தார்.
சில ஆண்டுகளுக்குப்பின் எனக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. அந்த நபரின் அப்பாதான் முதியோர் இல்லத்திலிருந்து எழுதியிருந்தார். ஒன்பது ரூபாய் நோட்டுதிரைப்படத்தை தொலைக்காட்சியில் பார்த்தாராம். அவரால் என்னைத் தொடர்பு கொள்ள முடியாமல் இருக்கவில்லையாம். ஒருமுறை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டு அதிகப்படியான எழுத்துப் பிழைகளோடு எழுதியிருந்த அந்தக் கடிதத்தை அடிக்கடி நினைத்துக்கொள்வேன்.
இரண்டு மாதங்களுக்கு முன் அந்த ஊர் போயிருந்ததால் அவரின் நினைவு வந்து முதியோர் இல்லத்துக்குச் சென்றேன். பக்கவாதத்தால் ஒரு காலும் கையும் அவருக்கு ஒத்துழைக்கவில்லை. தன் மனதில் இவ்வளவுகாலம் தேக்கி வைத்திருந்ததையெல்லாம் கொட்டினார். அப்பொழுதும் அவரின் மகன் மீது குற்றம் சொல்லவேயில்லை. இறுதிவரை தச்சுத் தொழில் செய்து வந்த படிக்காத அவர் அவருக்கென எந்த சேமிப்பையும் வைத்துக்கொள்ளவில்லை. அடிக்கடி ஏற்படும் சண்டையைத் தவிர்க்க வெறுப்பிலிருந்து மீள முடியாமல் திடீரென ஒரு இரவு யாருக்கும் சொல்லாமல் அந்த இல்லத்தில் வந்து சேர்ந்துவிட்டாராம். பொங்கலன்று மகனும் மருமகளும் வந்து பார்த்தார்களாம். மகன்தான் கொஞ்ச காலமாக பணம் செலுத்துகிறாராம். அங்கிருந்து என்னால் மீண்டு வரவேமுடியவில்லை. அங்கிருந்த ஒவ்வொரு தாய் தகப்பன்களுக்கும் ஒரு கதை இருக்கிறது. திரும்பி வரும்போது அவர்களின் வாழ்கைப்பற்றி ஒரு படமெடுக்கச்சொல்லி கெஞ்சினார்கள்.
என்றைக்கு தொலைக்காட்சிப்பெட்டி வந்ததோ, ஒவ்வொருவரின் கைகளுக்கும் கைப்பேசிக் கருவி வந்ததோ, அன்றிலிருந்தே மனிதனோடு மனிதன் நேரில் பேசிக்கொள்வது நின்றுவிட்டது. முதியவர்களுக்கு வீட்டு விலங்குள் போலவே வேளாவேளைக்கு உணவு மட்டும் கிடைக்கிறது. கண்களில் தேங்கியுள்ள ஏக்கத்தோடு தொலைக்காட்சியை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கையிலிருந்த பிள்ளைகள் எங்கோ போய்விட்டன. பெட்டியை இயக்கும் கருவி மட்டும் ஒவ்வொரு தாய் தகப்பன் கைகளில் இருக்கிறது.
கிராமங்களிலாவது பேச்சுத்துணைக்கு இவர்கள் போலவே முதியவர்கள் இருக்கிறார்கள். நகரங்களில் எங்கே போவது. மாதச் சம்பளத்தில் பணிபுரிந்தவர்களாவது எதிர்காலம் குறித்து சிந்தித்து சேமிப்பை உருவாக்கிக்கொண்டார்கள். மற்றவர்களுக்கு கையில் எதுவும் இல்லை. அரசாங்கத்தைவிட்டால் ஏது வழி!
இந்தக் கொடுமைகளை களையத்தான் இந்திய அரசாங்கம் தங்களை உருவாக்கியப் பெற்றோர்களை இறுதிவரை பாதுகாப்பது ஒவ்வொரு பிள்ளைகளின் கடமை எனச் சொல்லி புதிய சட்டத்தை உருவாக்கியது. பெற்றோர்கள் நினைத்தால் தங்களைத் தவிக்கவிடும் பிள்ளைகள் மீது காவல் நிலையங்களில் தெரிவிக்கலாம். அவர்களின்மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தண்டனையும் கிடைக்கும். பிள்ளைகளை தண்டிக்கச் சொல்லி வழக்குத் தொடுக்கும் அளவுக்கு இன்னும் பெற்றோர்களின் மனது கல்லாக மாறவில்லை.
கடந்த முப்பதாண்டுகளுக்குப் பின்தான் இந்த மணமுறிவுகளும், முதியோர் இல்லங்களும் இந்த மண்ணில் உருவானது. இடம்பெயர்வினாலும், பொருள் தேடலினாலும்,தன்னலத்தாலும் கூட்டுக்குடும்பங்கள் காணாமல் போய்விட்டன. ஆளாளுக்கு தனித்தனியாக சம்பாதித்து கையில் பணத்தைப் பார்த்ததினால்தான் இந்தப்பற்றின்மை.
தன்னை உருவாக்கியவர்களை கைவிடக்கூடாது என ஒவ்வொரு பிள்ளைகளும் நினைத்தாலும் வாழ்வு அனைவருக்கும் வசதியாக வாய்த்து விடுவதில்லை. நகரத்து வாழ்வில் தொலைந்து போய்விட்ட கோடிக்கணக்கான பிள்ளைகளுக்கு அவர்கள் வாழ்வதற்கே இங்கு ஒரு அறைக்கு உத்திரவாதமில்லை. வீடு இருப்பவர்கள் வீட்டுக்குமேல் வீடு வாங்கி குவித்துக்கொண்டேப் போகிறார்கள். அப்பா, அம்மாவுக்கு ஒரு அறை தந்து அவர்களை மகிழ்ச்சியாக தங்களுடன் வைத்துக்கொள்ள நினைத்தாலும் பொருளாதாரம் இடம் தருவதில்லை.
தங்கள் பிள்ளைகள் தங்களின் தாய் தகப்பன்களின் கைகளில்தான் வளர வேண்டும் அதுதான் சிறந்த வாழ்வு என நினைத்தாலும் அது கனவாகவே பலருக்கு முடிந்துவிடுகிறது.
மெத்தப்படித்த தேர்ந்த மருத்துவர் ஒருவர் எனக்கு நெருக்கமான நண்பனாக இருக்கிறார். கிராமத்தில் ஏழு பேரோடு பிறந்தவர். சுவற்றில் மாட்டியிருக்கும் தன் தாய் தந்தையரின் படத்தையும், தங்களின் மகன்கள் இருவரின் படத்தையும் கணினியில் பார்த்த படியும் உட்கார்ந்திருக்கிறார். முதுமை அவரை முடக்கிவிட்டது. அமெரிக்காவில் ஒருவரும், லண்டனில் ஒருவரும் குழந்தைகளோடு வாழ்கிறார்கள். மாடிப்படி ஏறி இறங்க முடியவில்லை. தங்களை கவனித்துக்கொள்ளத் துணைக்கு ஆட்களும் இல்லை. ‘‘தங்களால் இனி தமிழ்நாட்டில் வந்து வாழமுடியாது. இருப்பதிலேயே சிறந்த முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகிறோம். அவர்கள் சிறப்பாக கவனித்துக்கொள்வார்கள். நிம்மதியாக வாழலாம். பணத்தை நாங்கள் இருவருமே பகிர்ந்துகொள்கிறோம்’’ என மகன்கள் சொல்லிவிட்டார்களாம். என் வீட்டிற்கும், அவர் வீட்டிற்கும் தொலைவு என்றாலும் அடிக்கடி அவரைச் சென்று பார்த்தும், தொலைபேசியில் பேசிக்கொண்டும் வருகிறேன்.
இன்று கட்டிடக்கலை எனும் படிப்பை கரைத்துக் குடித்த பிள்ளைகள் இப்படிப்பட்ட முதியோர்கள் ஒரே இடத்தில் வாழும்படி முதியோர் இல்லங்களை அவரவர்களுக்கு சொந்தமாகவே கட்டித்தர தொடங்கிவிட்டார்கள். அங்கே நீங்கள் கேட்கின்ற எல்லாமும் இருக்கும்.. நீங்கள் பெற்று வளர்த்தப்பிள்ளைகள் தவிர! கோயம்புத்தூர் மாவட்டத்தில்தான் இதுபோன்ற வீடுகள் அதிகமாக கட்டி முடிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.இறுதிச்சடங்கிற்கு மட்டும் பிள்ளைகள் வந்தால் போதும்.ஒருவேளை வராமல்போகிறவர்களுக்கு வீடியோவில் அவர்களே படமெடுத்தும் அனுப்பி வைப்பார்களாம்.
கூடிய விரைவில் அரசின் நிதிநிலை அறிக்கைகளில் அரசாங்கமே முதியோர் இல்லத்துக்கான நிதியை ஒதுக்கி அறிவிக்கப்போகும் நாட்கள் வரத்தான் பொகிறது.
- சொல்லத் தோணுது
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: thankartamil@gmail.com

No comments:

Post a Comment