Sunday, 3 May 2015

சொல்லத் தோணுது 4 - மறந்துடாதீங்க

மறந்துடாதீங்க!
இப்ப எல்லாருக்கும் எந்த வேலை இருக்கோ தெரியாது! கட்டாயம் ஒரே ஒரு வேலையை செஞ்சே ஆகணும். மத்த வேலையா இருந்தா செய்ய லாம், செய்யாம விட்டுட்டும் போகலாம். இதை செய்யாமப் போனா வீட்டுக்காரம்மா சாப்பாடுப் போடாது. முன்னெல்லாம் முன்னாடி 40 வயசுக்கு மேல இருக்கறவங்க தான் நடக்க ஆரம்பிச்சாங்க. இப்ப இருவத்தஞ்சு வயசுப் பசங்கல்லாம் தெருவுல எறங்கிட்டாங்க. ஏதோ மக்கள் போராட்டத்துக்குத்தான் தெருவுல எறங்கிட்டாங்கன்னு நெனைக்காதீங்க. எல்லாரும் அவுங்க அவுங்க உயிரக் காப்பாத்திக்குறதுக்குத்தான்!
இதெல்லாம் நம்மூர் சமாச்சாரமே இல்ல. வெள்ளக்காரன் குடுத்துட்டுப் போனதுல இதுவும் ஒண்ணு. அப்பல்லாம் சினிமா நடிகருங்க மட்டும்தான் உடம்பைக் கட்டுப்கோப்பா வெச்சிக்கணும்னு கர்லாக் கட்டை சுத்தறதுன்னும், குஸ்திக் கத்துக்கற துன்னும் இருந்தாங்க. கொஞ்சம் கிராமங் கள்ல இருக்குற இளவட்டப் பிள்ளைகள் இதை செஞ்சாங்க. இப்ப ஏறக்குறைய எல் லாருமே அவுங்க மாதிரிதான் ஆயிட்டாங்க.
கருக்கல்ல சூர்ய வெளிச்சம் பூமியில படறதுக்கு முன்னாடி நாலரை மணிக் கெல்லாம் ஆரம்பிக்கிற ஓட்டம் ஒன்பது, பத்து வரைக்கும் கூட போய்ட்டிருக்கு. சின்ன வயசுல போட்ட கால் சட்டையை, நரை விழுந்த வயசுலேயும் போட வெச்சிட்டான் வெள்ளக்காரன்.
இந்த நடைப்பயிற்சிய முதன்முதலா எப்போப் பாத்தேன்னு எனக்கு நெனப்பு இல்ல. நிச்சயமா சினிமாவுலதான் பாத்து ருக்கணும். நெஞ்சத்தைக் கிள்ளாதேபடத்துல சுஹாசினி ஓடி வர்றதுதான் ஞாபகத்துக்கு வருது. 40 வயசுல நான் மறுபடியும் கால்சட்டையைப் போட ஆரம்பிச்சேன். என்னோட ஓடிக்கிட்டிருந்த எந்த முகமும் தெரிஞ்சதா இல்ல. ஊர்ல தொலைஞ்சுபோன ஆடு, மாடைத் தேடறப்ப ஓடுற மாதிரியும், ஏதோ தொலைஞ்சுப்போன நகையையோ, காசையோத் தேடற மாதிரியும், சில பேர் தலைக்கு மேலப் பறந்து போற ஏரோப்ளேனப் பாத்துக்கிட்டே ஓடுற மாதிரிதான் நடந்துக்கிட்டிருந்தாங்க.
நாள்பூரா செருப்பில்லாதக் காலோட கொதிக்கிற பொட்ட மண்ணுலேயும் கல்லுலேயும் முள்ளுளேயும் நடந்துட்டு, நாலு மைல் நடந்து ஓடி சினிமாப் படம் பாத்துட்டு வந்து, தூக்கத்திலேயே சாப்புட் டுட்டு அசந்து விழற ஒடம்ப, அதிகாலை நாலு மணியிலிருந்தே அம்மா எழுப்ப ஆரம்பிச்சிடுவாங்க. கூழுக் கலயத்தோடவும் முந்திரிப்பழம் பொறுக்க தட்டுக்கழி யோடவும் கருக்கல்லேயே நாலு மைல் தூரம் நடந்து போனதுதான்அப்ப எனக்கு ஞாபகத்துக்கு வந்திச்சி.
நண்பர்களோட, அண்ணன் தம்பியோட சினிமாவுக்கு நடந்து ஓடினதும், தெருக் கூத்துப் பாக்கறதுக்காக தீப்பந்தத்தையும், டயரையும் கொளுத்திப் புடிச்சிக்கிட்டு காட்டு வழியா அப்பாவோட சாதாரணமா 10 மைல் நடந்து போனதும், ஒருமுறை ஆனத்தூர் சீனிவாசன் சொல்லிட்டாருன்னு பள்ளிக்கூடத்துக் குக்கூட மத்தியானத்து மேலப் போவாம, குறுக்குவழியா 20 மைலுக்கு மேல நடந்து, கட்டு சோத்தோட அப்பாவுடன் உளுந்தூர் பேட்டைக்குப் பக்கத்துல தெருக்கூத்துப் பாக்கப் போன தெல்லாம் மனசுக்கு மகிழ்ச் சியா இருந்துச்சு. தூங்குற நேரத்துல இந்த வயசுல ஒடம்ப குறைக்கறதுக்காக எழுந்து ஓடுன்னாஎப்படி இருக்கும்? நெறைய்ய நண்பர்கள் சேர்ந்துட்டதால, ஆரம்பத்துல இருந்த தயக்கமும், கூச்ச மும், சோம்பேறித்தனமும் கொஞ்ச நாள்ல காணாமப்போச்சு.
ஒவ்வொருத்தரும் பிரச்சினைகளுக்கு மேல பிரச்சினையோட வாழ்க்கைய ஓட்டிக் கிட்டிருக்கிறதெல்லாம் போய், தொந்தி தொப்பையப் பாத்துப் பாத்து ஒடம்பக் கொறைக்கறதை நெனைச்சுக் கவலைப் படறதே பெரும் பிரச்சினையாப் போச்சு.
மனுசன் உடலுழைப்ப நிறுத்தினான். மருந்துக் கடையும், மருத்துவமனையும் பெருகிப்போச்சு. இயந்திரங்கள்கிட்ட வேலையைக் குடுத்துட்டு உக்கார ஆரம்பிச்சாச்சு. ஆம்பிளைங்கதான் அப்பிடி உருண்டு புரண்டு ஓடி, ஒரு நாலு சொட்டு வேர்வையப் பாத்து சந்தோஷப்படறோமுன்னா, பாவம்நம்மப் பொம்பளைங்க நெலமை படுமோசம். குனிஞ்சு நிமிர்ந்து எவ்வளவு நாளாச்சுன்னுக் கேட்டா, ‘அதெல்லாம் ஞாபகம் இல்லேன்னுதான் பதில் வருது.
வீட்டுக்காரரு அதிக நாள் வாழ்ந்தாப் போதும்ன்னு நெனைக்கிறாங்க அவங்க. தன்னோட உடம்பு நல்லா இருந்தாப் போதுமா, மனைவியும் நல்லா இருக்கட்டு மேன்னு கொஞ்சம் பேரு அவுங்களையும் இழுத்துப் புடிச்சிஅவங்களுக்கும் ஷூவை மாட்டிவிட்டு இழுத்துட்டு வந்துட றாங்க.
இப்போ நாடு பூரா நடக்குற ஒரே வேல இந்த நடக்குற வேலதான். தெனமும் அதே எடத்துல, அதே நிமிஷத்துல, அதே முகத்தப் பார்க்க யாரும் தவறுவதில்ல. தெரிஞ்சவங்களக் கடந்துபோனா அதே சிரிப்பு, அதே ஒண்ணு ரெண்டு சுருக்கப்பட்ட வார்த்தை. இப்பிடித் தான் ஒவ்வொரு காலையும் கழியுது. இப்படிப்பட்ட ஆளுங்களாப் பார்த்து பிடிக்கறதுக்காகவே மூலைக்கி மூல நின்னுக்கிட்டு, ‘இலவசமா சோதனப் பண்றேன்னு கைய, காலப் புடிச்சிகடைசியா ஒரு முகவரியக் குடுத்து, ‘வந்துடுங்க, நாளைக்கேஒங்க உடம்ப நாங்க சரிபண்ணிடறோம்னு சொல்லிட்டு நிக்கிற கூட்டம் பாடாப்படுத்துது.
நகரம் மட்டும்தான்னு இப்பிடி இல்ல. கிராமங்கள்ல என்ன வாழுதாம். அவன் இவனுக்கு மேல தொந்திய வளர்த்துட்டு நிக்கிறான். இந்த மெஷினெல்லாம் அங்கேயும் போயி எவ்வளவோ நாளாச்சு!
மாசக் கணக்குல, வருஷக் கணக்கு லெல்லாம் எதிர்லப் போகும்போது, கூடப் போகும்போது வணக்கம் சொன்னவங்க, திடீர்னு ஒருநாளு காணாமப் போயிட றாங்க. ஞாபகம் இருந்தா, அந்த நேரம் மட்டும் நண்பர்கள்கிட்ட விசாரிச்சுட்டு விட்டுட றோம். அப்புறம் அவங்கள மறந்தே போயிட றோம். ஒருவேளை வாழற இடத்த மாத்தி யிருக்கலாம். ஒருவேளை இறந்துபோய் நமக்கு செய்தி தெரியாம இருக்கலாம். புதிய புதிய முகங்களோடு நடைப்பயிற்சி தொடர்ந்துக்கிட்டேதான் இருக்கு.
ஒருநாள் எனக்கு நடந்த அந்த சம்பவத்த மறக்கவே முடியல. ஒரு ஏழெட்டு வருஷமாவே அவர நான் பார்க்கறேன். நான் சிரிச்சாத்தான் சிரிப்பாரு. தனியா யாரோடயும் சேராம ஒரு ஓரமா நடந்துக் கிட்டே இருப்பாரு. ஏழையும் இல்ல, பணக்காரன் மாதிரியும் தெரியல. ஒருநாள் நடந்துக்கிட்டிருந்தப்ப சாலையில சுருண்டு விழுந்துட்டாரு. 9 மணிக்கு மேல ஆயிட்டதால, யாரும் உடனே அவரை கவனிக்கல. இறந்துபோனவர கொண்டு போய் சேக்கறதுக்கு அவர்கிட்ட எந்த அடையாளப் பொருளும் இல்ல. வங்கிக்குப் போனப்பதான் நானே பாத் தேன். நானும் அங்கிருந்தவங்களோட சேந்து கண்டுபிடிக்க முயற்சி செஞ்சேன். பலனில்லை. என்னை மாதிரியேதான், தெனமும் அவரப் பாக்கறவங்களும் சொன் னாங்க. போலீஸ்காரங்க வந்து அவரோட ஒடம்ப எடுத்துக்கிட்டுப் போய்ட்டாங்க.
கொஞ்ச நாள் எங்க நண்பர்கள் வட்டத்துல இதேப் பேச்சா இருந்துச்சி. அவருக்கு நடந்த துயரம் நமக்கும் நடந்துடக் கூடாதேன்னு நெனைக்கிறதால, ஒரு துண்டு தாள்ல வீட்டோட முகவரியையும், கைப்பேசியையும் நடைப் பயிற்சி போறப்ப எடுத்துக்க மறக்கறதே இல்ல.


- இன்னும்சொல்லத்தோணுது 
எண்ணங்களைத் தெரிவிக்க

thankartamil@gmail.com



1 comment:

  1. உடல் ஆரோக்கியம் கெட்டு போனதுல, நம் உணவும், இப்போது நாம் வாழும் இந்த இயந்திர வாழ்கையும் ஒரு பெரிய காரணம். 30 வயசுல உள்ளவங்களுக்கு எல்லாம் இதய சம்பந்த கோளாறு மிக சகஜமான ஒரு செய்தியாகிவிட்டது. இப்பொது உள்ள காலகட்டத்திற்கு இந்த ஒரு விழிப்புணர்வு தரும் பதிவு மிகவும் அவசியம்.

    ReplyDelete