Saturday 31 December 2016

வாழ்த்து – 2௦17


ஆங்கில புத்தாண்டு, தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொள்வது வழக்கம்போல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நாமும் சலித்துபோகாமல் சொல்லிக்கொண்டேயிருக்கிறோம். வறுமையும், துயரமும், தொல்லைகளும் தீர்ந்தபாடில்லை.
     இவற்றுக்கெல்லாம் மூலக்காரணமாக இருக்கின்றவர்கள் யார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். காசு செலவழித்து செய்தித்தாள் வாங்கி, தொலைக்காட்சி வாங்கி அப்படிப்பட்ட வஞ்சகர்களையும், திருடர்களையும் பார்த்து பார்த்து திட்டித்தீர்த்துக் கொள்கிறோம். போதாக்குறையைப் போக்க சமூக வலைத்தளங்களில் இரவு பகலாக  பொங்கிக்கொண்டிருக்கிறோம்.
     யாரோ ஒருவன் வயிற்றுப் பசிக்காகவும், ஐம்பது, நூறுக்காகவும் வீடுகளில் நுழைந்து திருடும்போது கையில் மாட்டிக்கொள்வான். அந்த வீட்டுக்காரன் மட்டுமல்ல, அந்த தெருக்காரன் மட்டுமல்ல; அந்த மொத்த ஊரும், பக்கத்து ஊர்காரர்களும் சேர்ந்து அந்த திருடனை மரத்தில் கட்டிவைத்து உதைப்போம். போகிற வருகிற எல்லாரிடமும் அடிவாங்கி அவன் சாவான்.
     ஆனால் ஒரு நாட்டின் சொத்தை, வளங்களை, மக்களின் நலத்திட்டங்களுக்கான நிதியைத்  திருவதோடு மட்டுமில்லாமல் ஏழைகளிலிருந்து பணக்காரர்கள் வரை எல்லோரையும் கசக்கிப் பிழிபவர்களை நாம் ஒன்றும் சொல்வதில்லை. யார் யார் திருடுகிறார்கள், எங்கெங்கே, எவ்வளவு சேர்த்து வைத்திருக்கிறார்கள் என்பதெல்லாம் தெரிந்தும் அவர்களையே ஆதரித்து வாக்களித்துவிட்டு குடுமியை அவர்களிடம் கொடுத்துவிட்டு ஒவ்வொரு முறையும் புலம்பியே சாகிறோம்.
     அப்படித்தான் காமராஜரையும், அண்ணாதுரையையும், கக்கனையும் நாமே தோற்கடித்தோம். இதையெல்லாம் செய்துகொண்டே ஒவ்வொரு பண்டிகைக்கும், புத்தாண்டுக்கும் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டிருக்கிறோம். 2017 என்ன? இந்தப்புத்தி மாறாமல், அரசியல் விழிப்புணர்ச்சி பேராமல் 3017 வந்தாலும் நம் மக்களை யாராலும் காப்பாற்ற முடியாது. இவர்களை நம்பி எந்த ஒரு நல்லவனும், நேர்மையானவனும் அரசியலுக்கு வந்து நம்மைக் காக்க முன் வரமாட்டான். அப்படியே வந்தால் அவர்களை நாம் கண்டு கொள்வதில்லை.
     உங்களை ஆளவேண்டியவர்களை நீங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள் என வெள்ளைக்காரனை எதிர்த்துப் போராடி வாக்குரிமையை ஒவ்வொரு குடிமகனுக்கும் பெற்றுத்தந்தார்கள். அப்படிப்பட்ட வாக்குரிமையின் வலிமையை உணர்ந்து கொள்ளாமல் ஆள்பவர்களையும், அரசியல்வாதிகளையும் குறை சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
     அதை உணர்ந்து கொள்ளும்வரை இந்த  மக்களுக்கேற்ற அரசாங்கங்கள் இருந்துகொண்டேதான்  இருக்கும்! அரசாங்கத்திற்கேற்ற மக்களும் இருந்து கொண்டேதான் இருப்பார்கள். இன்னும் ஒரு  வாரத்தில் பொங்கல் வாழ்த்தை சொல்லத்தயாராக இருப்போம். இப்பொழுதே நூறு ரூபாயையும், கரும்பு புள்ளையும் வாங்க வரிசையில் இடம் பிடிக்க கல் போட்டு வைப்போம்!

                                                 2017 வாழ்த்துகளோடு,
                                                      தங்கர் பச்சான்.

Friday 30 December 2016


கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படம், இலக்கியம், பொதுவாழ்வு என்கின்ற தளங்களில் தொடர்ந்து இயங்கி வருகின்றேன். அதிலிருந்து கைக்கு கிடைத்த காணொலிகளை(Videos) என் பெயரில் தொடங்கியுள்ள யூடியூப்(YouTube) தளத்தில் ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகின்றேன். என் தோழமைகளாகிய நீங்களும் இந்த இணைப்பை(link) சொடுக்கி ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய காணொலிப் பதிவை காணலாம்.https://www.youtube.com/channel/UCyZR4tB7DDMQoEWS2McSCaQ



 இவ்வார காணொலிகள்: 2011 டிசம்பர் 3௦ - "தானே" புயல் குறித்த நான் இயக்கிய ஆவணப்படமும், மனதை உருக்கும் பாடலும்.

https://www.youtube.com/watch?v=oB-wSlkFIPo
"தானே" புயல் ஆவணப்படம் -2011 - தமிழில் 
https://www.youtube.com/watch?v=8HmAnreqMEE
A Documentary about Cyclone Thane in Cuddalore (English) - 2011
https://www.youtube.com/watch?v=GavgN5iatF8
Harvest of Cyclone “Thane Song”- "தானே" பாடல்

Friday 9 December 2016

Director Thankar Bachan - Youtube channel

என் பெயரில் தொடங்கியுள்ள யூடியூப்(YouTube) தளத்தில் வாரம் ஒவ்வொன்றாக இதுவரை நான்கு காணொலிகளை(Videos) வெளியிட்டி ருக்கின்றேன். அதன்படி இன்றும் ஒரு காணொலி வெளியாகியிருக்கிறது.என் தோழமைகளாகிய நீங்களும் இந்த இணைப்பை(link) சொடுக்கி ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய காணொலிப் பதிவை காணலாம்.
https://www.youtube.com/channel/UCyZR4tB7DDMQoEWS2McSCaQ

Friday 11 November 2016

என்ன செய்யப்போகிறோம்? - தங்கர் பச்சான்



   விடுதலை அடைந்து 69 ஆண்டு களாகியும் இன்னும் 5௦ சதவீத மக்கள் கூட கழிப்பிட வசதியைப் பெறாமல் இருக்கிறோம். யாரெல்லாம் நாளெல்லாம் உழைத்து, இந்த நாட்டுக்கான முன்னேற்றத்துக்கு வசதிகளை ஏற்படுத்தித் தருகிறார்களோ, அந்த மக்கள்தான் வாழ்நாளின் இறுதிவரை அதே நிலையிலேயே இருக்கிறார்கள்.

சாகப்போகிறவனுக்கு மருத்துவம் பார்த்து உயிரைக் காப்பாற்றியாக வேண்டும். ஆளும் எழுந்து நடந்து பழைய நிலைக்கு வரவேண்டும். அதற்காக என்னென்ன மருத்துவம் செய்ய வேண்டுமோ அனைத்து வகையிலும் முயற்சிசெய்து போராடும் மருத்துவரைப் போலத்தான் இந்திய அரசாங்கம் இப்போது செயல்பட்டிருக்கிறது. பொருளாதாரச் சீரழிவு இந்நாட்டை மேலும் மேலும் பின்னோக்கி இழுத்துக்கொண்டிருக்கும் வேளையில், நம் பிரதமர் ஒரு மருத்துவரைப் போல் 5௦௦,1௦௦௦ ரூபாய் தாள்கள் செல்லாது என அறிவித்திருக்கிறார்.

உயிருக்காகப் போராடுபவர் அதற்கான வழிகளையும், வேதனைகளையும் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும். எந்த மருத்துவமும் பார்க்க வேண்டாம் என்றால் சாக வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை.

மக்களின் நலன், நாட்டின் நலன் குறித்து கவலைப்படாமல் அரசியலைத் தொழிலாக்கிக் கொண்டு மக்களின் வரிப்பணத்தையும், நாட்டின் வளங்களையும் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் கூட்டங்கள் குவித்துள்ள கறுப்புப் பணங்கள், கள்ளர்களின் 3௦ சதவீத கறுப்புப் பணங்கள், நாட்டின் முன்னேற்றத்துக்கு தொடர்ந்து சவாலாக இருக்கும் தீவிரவாத அமைப்புக்களின் திட்டங்கள், பதுக்கல்காரர்கள் மற்றும் யாரெல்லாம் உண்மையான வருமானத்தை மறைத்து வரி செலுத்தாமல் ஏமாற்றியவர்களோ என அவர்களை எல்லாம் ஒடுக்கும் முயற்சி இது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண் டும். எதிர்கருத்துக்களை சொல்வதென்று முடிவெடுத்துவிட்டால், எல்லாவற்றுக்கும் சொல்லிக்கொண்டே இருக்கலாம். அரசாங்கம் என்பது நாம் உருவாக்கியது. நம்மால் முடியாததை அரசாங்கம்தான் செய்ய முடியும்.

5௦௦, 1௦௦௦ ரூபாய் தாள்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதில் யாருக்குத் தான் பாதிப்பு இல்லை. நாட்டின் எதிர்காலம் குறித்து இந்த அவதிகளை சில நாட்களுக்கு நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். மக்களின் சொத்துக்களையும், நாட்டின் வளங்களையும் கொள்ளையடிப் பவர்களை ஆதரித்து அவர்களிடத்திலேயே மண்டியிட்டு கிடப்பவர்கள்தான் நாம். நமக்கு எதிரான எது குறித்தும் வீதிக்கு வந்துப் போராடும் துணிவு நமக்கு எப்போதுமே இருந்ததில்லை. நம்முடைய போராட்டமெல்லாம் வலைதளத்துக்குள் தான். நம் சொத்துக்களை எங்கெங்கு எப்படியெல்லாம் பதுக்கி வைத்திருக்கிறார்கள்? அவர்களெல்லாம் யார் யார் என்கின்ற பட்டியல் எல்லாம் நம் ஒவ்வொருவருக்கும் நன்றாகவே தெரியும். அவர்களெல்லாம் நம் முன்னேதான் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை நம்மால் ஏதாவது செய்ய முடிந்ததா?

நாம் செய்ய முடியாததை, அரசாங்கம் செய்திருக்கிறது. இத்திட்டத்தில் பலவீனங்கள் இருந்தாலும் பலன்களே அதிகம் என்பதை உணர வேண்டும். கறுப்புப் பணத்தால் நம்மை ஆட்டிப்படைத்து விலை வாசியை ஏற்றி நம்மை கொடுமைப்படுத்துபவர்கள் இதற்கும் ஒரு குறுக்கு வழியைத் தேடிக்கொண்டிருப்பார்கள். 2௦௦௦ ரூபாய் தாள் அறிமுகம் அவர்களுக்கே சாதகமாக இருக்கும் எனும் அச்சமும், கவலையும் இருப்பதை உணர முடிகிறது. இனி, வருங்காலம்தான் அதற்கான பதிலைத் தர வேண்டும்.

பெரிய திருடர்கள் எல்லாம் ஏற்கெனவே அயல்நாடுகளில் கொண்டுபோய் பதுக்கிக் கொண்டார்கள். மீதியைப் பல திருட்டு வழிகளையும் கையாண்டு தங்கமாகவும், வெள்ளையாகவும் மாற்றிவிடுவார்கள்.அதற்கடுத்த நிலையில் இருக்கும் திருடர்கள் செல்லாத தாள் கட்டுகளை எரிப்பதா, தூக்கிப்போடுவதா என நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் அவர்களுக்கு இன்னொரு கடைசி வாய்ப்பை அளித்து பாதிக்குப் பாதி வரி செலுத்தி பிழைத்துச்செல்லுங்கள்என அரசு அறிவிக்கலாம். அவ்வாறு செய்தால் கறுப்பு வெள்ளையாக மாறும். அந்தப் பணமெல்லாம் புழக்கத்துக்கு வந்து பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.

பொருளாதார முன்னேற்றத்தைப் பற்றி சிந்தித்து இப்படியொரு அதிரடி முடிவை அறிவித்திருக்கின்ற பிரதமர் பாராட்டுக்குரியவர்தான் என்றாலும், உடனடியாக ஏற்கெனவே வாக்குறுதி தந்தபடி வெளிநாடுகளில் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவர்களின் பட்டியலை வெளியிட்டு அந்தத் திருடர்களை எல்லாம் மக்களிடத்தில் அம்பலப்படுத்தி, பணத்தை மீட்டுக் கொண்டு வரவேண்டும். அத்துடன் மக்களையும், அரசாங்கத்தையும் ஏமாற்றியதற்காக கடும் சிறைத்தண்டனை விதிக்க வேண்டும். அதைத்தான் ஒரு தவறும் செய்யாமல் அல்லாடிக்கொண்டிருக்கும் இந்த மக்கள் விரும்புகிறார்கள். அதை செய்யவேண்டியது பிரதமரது கடமை. அதில் இருந்து நழுவினாலோ, தள்ளிப் போட்டாலோ இந்தப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் முழுமையான பலனைத் தராது. அதற்குப் பதிலாக மக்களிடத்தில் இத்திட்டம் அவர்மீது வெறுப்பையும், அவருக்கு களங்கத்தையுமே தேடித் தரும்.

குடிமக்களாகிய நாம் இப்போது செய்ய வேண்டியதெல்லாம் இந்தத் திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பைத் தருவது மட்டுமே! கையில் கணினி இருக்கிறது என்பதற்காக நகைச்சுவை என்கிற பேரில் கருத்துப் படங்களையும், மலினமான கருத்துக் களையும் வெளியிட்டும், ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டும் இத்திட்டத்தையும், பிரதமரையும் கேலிப்படுத்தக் கூடாது.

அதற்குப் பதிலாக, அயல்நாடுகளில் பதுக்கியிருக்கும் கள்ளப் பணத்தை மீட்டுக் கொண்டுவர பிரதமரை அனைத்து மக்களும் சேர்ந்து போராடி வற்புறுத்த வேண்டும். அது நடக்காமல் நாம் எதை பேசினாலும் பாதிக்கப்படபோவது நாம்தான்!

Tuesday 20 September 2016




இன்று வரலாற்றில் முக்கியமான நாள்.சொந்த நலனுக்காக தமிழகத்தை இவ்வளவு காலம் நசுக்கி கண்டுகொள்ளாமலிருந்த காங்கிரஸ்,பா.ஜ.கட்சிகளின் மூக்கை உடைத்து உச்ச நீதிமன்றத்தின் மூலமாக நமக்கு நீதி கிடைத்திருக்கிறது. நான்கு வாரத்திற்குள் மேலாண்மை வாரியத்தை உருவாக்க வேண்டிய கட்டயத்திற்கு மத்திய அரசு தள்ளப்பட்டிருக்கிறது.
அதிர்ச்சியில் உறைந்துள்ள கர்நாடகம் பழையபடி தன் அடாவடித்தனங்களைக்காட்டும். அதைக்காரணம் காட்டி மத்திய அரசு நிறைவேறாமல் எப்பொழுதும் போல் நழுவப்பார்க்கும்.
தமிழகத்தின் அனைத்துக்கட்சிகளும் டெல்லியிலேயே முகாமிட்டு காரியத்தை நிறைவேற்ற வேண்டும். அப்படி நடக்குமாத்தெரியவில்லை. காரியத்தை நிறைவேற்ற தமிழக மக்களின் முன் எப்போழுதுமில்லாத போராட்டம் நடத்த வேண்டியதன் தேவையும் உருவாகலாம்!
தேய்ந்து கொண்டிருக்கும் தமிழினம் இப்பொழுதாவது விழிக்கட்டும். நமதுரிமை நமக்கு கிடைக்கட்டும்.

Monday 19 September 2016




இனி ஒவ்வொன்றாய் !!

சென்னையை வெள்ளம் மூழ்கடித்து மக்கள் பரிதவித்து, கதறி அரசாங்கத்தை கேள்விகேட்டபோது, "பீப் பாடல்" வெளிவந்து அனைவரும் "பீப் பாடலை" பிடித்துக்கொண்டார்கள்.அதன்பின் வெள்ளப்பிரச்சினையை மக்கள் மறந்தே போனார்கள்!
அதேபோல் காவிரிப்பிரச்சினை கழுத்தைப்பிடிக்கிற நிலை வந்ததும் "ராம்குமார்" செய்தி வெளிவந்திருக்கிறது. இனி காவிரி மறந்துபோகும்.

Friday 16 September 2016




அப்பா என நான் அன்போடு அழைக்கின்ற தமிழின் தலைசிறந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் 94 வயது இன்று. நான் அவருடன் உரையாடிய நேர்காணலின் இணைப்பு இது. அவரது பிறந்த நாளையொட்டி இன்று தந்தி தொலைகாட்சி இந்த 3௦ நிமிடப்படத்தை ஒளிபரப்பி அவருக்குசிறப்பு சேர்த்தது.https://youtu.be/mp-6Iiu5cZI

Thursday 15 September 2016


   உலக நாடுகளிலெல்லாம் தடைசெய்யப்பட்ட தொழிற்சாலைகளுக்கெல்லாம் அனுமதி அளித்து, எங்கெல்லாம் ஆறுகள் இருக்கிறதோ அங்கெல்லாம் கொண்டுவந்து தங்களின் சொந்த நன்மைக்காக அவைகளை நிறுவியவர்கள்தான் நம்மை ஆண்டவர்களும், ஆள்பவர்களும்!
  நீர் ஆதாரங்களை பாதுகாக்காமல் அவரவர்களுக்கென தனித்தனியாக கொள்ளைக்கூட்டங்களை வைத்து கொள்ளையடித்துக்கொண்டிருக்கும் இவர்கள் மூலமாகத்தான் தீர்வு கிடைக்கும் எனத் தொடர்ந்து  நம்பிக்கொண்டிருக்கிறோம்!
  நீர் நிலைகளை,இந்த மண்ணை,காற்றை மாசுப்படுத்தி மக்களையும்,உயிரினங்களையும் அழித்துக்கொண்டிருக்கும் ஆலைகளையும்,தொழிற்சாலைகளையும் நிரந்தரமாக மூடி வெளியேற்றுவதை விட்டுவிட்டு வெறும் துடைப்பத்தை வைத்துக்கொண்டு இந்தியாவை தூய்மை நாடாக்க முயலும் பிரதமர் நரேந்திரமோடிக்கு தமிழர்களின் உரிமைப்பற்றியும்,உணர்வுப்பற்றியும்,வாழ்வுப்பற்றியும் என்ன கவலை இருக்கிறது?
  என்றைக்கும் மாறாத சிக்கலாக மாறிவிட்ட காவிரிக்காக இதுவரை எத்தனை எத்தனைத் தீர்ப்புகள்! எத்தனை எத்தனைப் போராட்டங்கள்!
  இவையெல்லாம் தெரிந்தும் நாளை நடக்கவிருக்கும் போராட்டம் ஒவ்வொரு தமிழனின் உணர்வையும்,நமக்கு இழைக்கப்படுகின்ற அநீதியையும் இந்த உலகுக்குச்சொல்லும் போராட்டம்.
  நம்மைவைத்து அரசியல் தொழிலை நடத்துபவர்கள் இதுவரை அனைவரும் ஒன்றிணைத்து எந்தப்போராட்டத்தையும் நடத்தாதவர்கள். ஒரேயொரு முறைகூட ஓரிடத்தில் அமர்ந்து இந்த மக்களின் நலனுக்காக குரல்கொடுக்காதவர்கள். இவர்களுக்கும்,கர்நாடக மாநில அரசின் செயல்பாடுகளுக்கும் எந்தவித வேறுபாடும் இல்லை.

  மூன்று வேளையும் தவறாமல், பசியில்லாமல் போனாலும் கடிகாரம் பார்த்து சாப்பிடுகிற நாம் இந்தப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். நானும் ஒரு தமிழனாக,ஒரு உழவனாக நாளை போராட்டத்தில் பங்கேற்று என் கடமையை ஆற்றுகிறேன்.


 

Monday 12 September 2016






இன்றைய தமிழ்நாட்டு மக்களின் உரிமைக் குரலாக ஒலிக்கும் இந்தக்காட்சி 2௦௦3 ஆம் ஆண்டு எனது இயக்கத்தில் வெளியான “தென்றல்” திரைப்படத்தில் இடம்பெற்றது. 27 ஆண்டுகளுக்கு முன்பாக நடப்பதாக இருக்கின்ற இக்காட்சி சொல்லும் அரசியலில் இன்னும்கூட சிறிதும் மாற்றம் ஏற்படவில்லை. இருந்தாலும் நாமெல்லாம் இந்தியர்கள்தான். நாம் இந்தியர்களாக இருந்து இழந்தவைகளும்,இழக்கப்போவதும் இன்னும் நிறைய..!.

Saturday 10 September 2016

இந்த பாரதி இன்றிருந்தால்!!



       2000 ஆண்டில் பாபநாசம் காட்டில் வெறும் 11 மணி நேரத்தில் படமாக்கப்பட்ட பாடல் இது. எனது ஒளிப்பதிவில் எனக்கு மிகவும் பிடித்தப்படம் பாரதி.

Tuesday 16 August 2016



என்ன செய்யப்போகிறோம்?


     தலையில் இடி விழுந்ததுபோல் என்று சொல்வார்களே! அது இதுதானா? கல்லூரியில் படிக்கிறான் எனச்சொல்லி முத்துக்குமாரை அவனது அப்பாதான் 1993 ஆம் ஆண்டில் எனது “வெள்ளைமாடு” நூல் வெளியீட்டு விழாவில் அறிமுகப்படுத்தினார். இருபத்தி நான்கு மணி நேரமும் எழுத்து, சிந்தனை, புத்தகம் என்றே அலைந்தவன். என்னை உரிமையுடன் கண்டிப்பவனும், இறுதிவரை எனக்கு உண்மையாய் இருந்தவனும் தம்பிதான்.
     எந்த ஒரு தொலைப்பேசி அழைப்புக்கும் பதில் சொல்லாமல் இருந்ததில்லை. இனி, அவனிடமிருந்து பதில் வராது என நினைக்கிறபோது என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
     முத்துவுக்காக பெரிதாக எதையும் நான் செய்துவிடவில்லை. சில இசையமைப்பாளர்கள், சில இயக்குனர்களிடம் அவனுக்கு வாய்ப்புத்தரச்சொல்லி அறிமுகப்படுத்தியிருக்கிறேன். அன்புக்காகவும், உறவுகளுக்காகவும் ஏங்கியவன். உறவுகளைப்பற்றி அக்கறைப்பட்ட, விசனப்பட்ட ஒரு கவிஞன் இவன்போல் யாராவது இருப்பார்களா தெரியவில்லை. அண்ணா! என என்னை அழைக்கும்போது ஒவ்வொரு முறையும் நெகிழ்ந்திருக்கிறேன். இருவரும் ஒருதாய் வயிற்றில் பிறக்காத குறைதான்!
     கடந்த பத்து ஆண்டுகளாக அவன் முகத்தில் தெளிவும், மலர்ச்சியும் இருந்ததில்லை. தூக்கத்தில் எழுந்து நடப்பவன் மாதிரியே இருப்பான். இரண்டு நிமிடம் இடைவெளி கிடைத்தாலும் அவனை அறியாமலே அவனது கண்கள் மூடிக்கொள்ளும்.
     அவனிடம் நான் அன்பு காட்டியதைவிட அதிகமாக திட்ட மட்டுமே செய்திருக்கிறேன். ஓய்வற்ற அவனது உழைப்பு அவனை எங்கே கொண்டு போய்விடும் என்பதையும் எச்சரித்திருக்கிறேன். அவன் உடல்நலத்தைப்பற்றி என்னைவிட கவலைப்பட்டவர்கள் யாராவது இருப்பார்களா எனத் தெரியவில்லை. தூங்காத தூக்கத்தையெல்லாம் சேர்த்து மொத்தமாக தூங்கப்போய்விட்டான் என் முத்து.
     அவனது பாடல்களும், கவிதைகளும், எழுத்துக்களும் மட்டுமே நமக்குத்தெரியும். எல்லோரும் சேர்ந்து மொத்தமாக நேற்றோடு புகழ்ந்து முடித்து விட்டோம்.
     “அண்ணா! இந்த ஆண்டும் அதிகப்பாடல்கள் எழுதியவன் நான்தான் அண்ணா” என ஒவ்வொரு ஆண்டும் சொல்லி வந்தான். ஒவ்வொரு விருது கிடைத்தபோதும் முதலில் எனக்குத்தான் சொன்னான். பெண் பார்த்து விட்டேன், ஆதவன் பிறந்துவிட்டான், யோகலட்சுமி வந்திருக்கிறாள் என அவனது சொத்துக்களாயிருக்கின்ற மனைவி, குழந்தைகள் குறித்த ஒவ்வொரு சேதியையும் உடனுக்குடன் என்னோடு பகிர்ந்து மகிழ்ந்தான்.
     தாயின் முகத்தை ஐந்து வயதோடு மறந்துபோன அவன் போலவே தந்தை முகமறியாத மகளாக யோகலட்சுமி இருந்து விட்டாள். என் அம்மாவின் முகம் இதேதான் எனும் மகிழ்ச்சியில் சில நாட்களே வாழ்ந்து முடித்துவிட்டான். நேற்றிரவு முழுக்க புரண்டு புரண்டு படுத்து உறங்குவதற்காக எவ்வளவோ முயன்றும் முடியவேயில்லை.
     தூங்கிக்கொண்டிருந்த முத்துவின் முகத்தருகில் வெறித்து புலம்பியபடியே அவனது மனைவியும், தலைமாட்டில் அமர்ந்தபடி என்ன நடந்திருக்கிறது என்பது தெரியாமல் திகைத்திருந்த ஆதவனும், இவை எதுவுமேத் தெரியாமல் யாரோ ஒருத்தரின் தோளில் பசியில்  பாலுக்காக அழுதுக்கொண்டிருந்த ஆசை மகள் யோகலட்சுமியும் மீண்டும் மீண்டும் என் நினைவில் வந்து என் கண்களைவிட்டு அகலாமல் என்னை புலம்பவைத்து விட்டார்கள்.
“அப்பா என்றுகூட இன்னும் சொல்லவராத இந்த குழந்தையை வைத்துக்கொண்டு இனி என்ன செய்யப்போகிறேன் அண்ணா!” என என்னைப்பிடித்துக்கொண்டு கதறிய முத்துக்குமார் மனைவியின்  குரலுக்கு இங்கே என்ன பதில் இருக்கிறது? நான் இருக்கிறேன் என்றுதான் என்னால் சொல்ல முடிந்தது.
     மீண்டும், முத்துக்குமாரைப்போல் அவனது இளந்தளிர்களும் இந்த போலியான உலகத்தில் போராடி கரை சேர வேண்டும். அவன் 1500 பாடல்கள் எழுதி என்ன சம்பாதித்தான் என எனக்குத்தான் தெரியும். சொந்த பந்தங்களையும், நண்பர்களையும் விட்டுக்கொடுக்காத முத்துக்குமாருக்கு பெரும்பொருளாக அது சேரவேயில்லை. நினைத்தாலே நெஞ்சு பதறுகிறது. பணமில்லாமல் எதுவும் நடக்காத இந்த நாட்டில் இந்தக் கவிஞனின் பிள்ளைகளும் அவன் போன்ற பண்புள்ள, சிறந்த மனிதாக வாழ்ந்து காட்டத்தான் வேண்டும்.
     ஹாவேர்ட் பல்கலைக்கழகத்தில் ஒதுக்க இருக்கும் தமிழ் இருக்கைக்காக 50 கோடி ரூபாய் வேண்டும் என்று, தமிழை மூச்சாக நினைப்பவர்கள் பணத்திற்காக யார் யாரிடமோ கையேந்திக் கொண்டிருக்கிறார்கள். அதற்கான நிதியைத் திரட்டத்தான் ஐந்து வாரப் பயணமாக தம்பி அமெரிக்கா சென்று ஒவ்வொரு கூட்டத்திலும் பேசினான். “இந்த அசைச்சல் உனக்குத் தேவையா பேசாமல் உடம்பை கவனி; இருக்கிற வேலையைப்பார்” என அவன் செல்வதற்கு முன் சொன்னேன். “தமிழுக்காகப் பணி செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டாமா?” என சொல்லிவிட்டுப்போனான்.
     இங்கிருந்து எழுதியப் பாடல்களைவிட அமெரிக்காவிலிருந்தபடி பயணத்துக்கிடையில் எழுதியப் பாடல்கள்தான் அதிகம். “மகனை அறிமுகம் செய்ய இருக்கிறேன். அந்தப் படத்திற்கு அனைத்துப் பாடல்களையும் நீதான் எழுத வேண்டும், இசையமைப்பாளர் யார் என்பதையும் நீயே முடிவு செய்” என ஒரு வாரத்திற்குமுன் கைப்பேசியில் அழைத்துக்கேட்டேன். உடல்நிலை சரியில்லாமல் போய் மருத்துவமனையிலிருந்து திரும்பியிருப்பதாகவும், டைபாய்ட் காய்ச்சல்தான் பாடாய் படுத்திவிட்டதாகவும், ஆறு மாத காலம் ஓய்வு தேவையென்றும் சொன்னான்.
     நான் திட்டப்போகிறேன் என்பதை புரிந்து கொண்டு அமெரிக்கப் பயணத்தில் போகும் வழிகளில் சாப்பிட்ட கேஎப்சி, மெக்டொனால்ட்ஸ் சாப்பாடுதான் ஏற்றுக்கொள்ளாமல் போய்விட்டதாகச் சொன்னான். நான் உடனே பார்க்க வருகிறேன் எனச் சொன்னதை மறுத்து பாடல் எழுதும்போது சந்தித்தால் போதுமெனத் தடுத்துவிட்டான்.
     தமிழைக் காப்பாற்ற நிதி திரட்டப்போன கவிஞன் நா.முத்துகுமார் தன் குடும்பத்தை நடுவழியிலேயே விட்டுவிட்டுப் போய் விட்டான். தமிழைக் காப்பாற்ற எத்தனையோ பேர் இருக்கிறார்கள்! இனி முத்துக்குமாரின் குடும்பத்தைக் காப்பாற்ற யார் இருக்கிறார்கள்? தமிழ் சினிமாவில்  ஒரு படத்திற்கு ஒரு பெரிய  கதாநாயகனுக்கு தரப்படுகிற சம்பளத்தில் பதினைந்தில் ஒரு பகுதியைத்தான் இந்த பதினைந்து ஆண்டுகள் முழுக்க இரவு பகலாக கண்விழித்து சம்பாதித்தான். படைப்பாளிகள் எப்போதுமே பாவப்பட்டவர்கள்தான்.
     தமிழ் இருக்கை அமைக்க 50 கோடி ரூபாய்க்காக கையேந்துவதை உலகத்தமிழ் செல்வந்தர்களும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நம் அரசாங்கமும் அதையெல்லாம்  பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது.
     எண்ணற்ற எத்தனையோ படைப்பாளிகளைக் கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டு சிறிதும் குற்றவுணர்ச்சி இல்லாமல்  அவர்களுக்கு ஆண்டுக்கு ஆண்டு நினைவுநாளில் மட்டும் பணம் கொடுத்து பத்திரிகைகளில் விளம்பரம் செய்துகொண்டு சிலைக்கு மாலை போட்டுக்கொண்டிருக்கிறோம்.
     இவர்கள்தான் தமிழர்கள்! இதுதான் தமிழ் பண்பாடு!
     முத்துக்குமாருக்கு இப்போது புரியும்! தனக்கு உடல் முக்கியம், மனைவிக்கு கணவன் முக்கியம், தன் செல்வங்களுக்கு தந்தை முக்கியம், குடும்பத்துக்கு தலைவன் முக்கியம் என்பது!

-          தங்கர் பச்சான் 


Wednesday 10 August 2016

இம்மாத படச்சுருள்  இதழில் வெ இம்மாத படச்சு ளியாகியுள்ள "சினிமாவும் இலக்கியமும்" என்ற தலைப்பிற்கான எனது நேர்காணல்.


இலக்கியத்திலிருந்தே திரைப்படக்கலை

தங்கர்பச்சான் பேட்டி

எஸ்.தினேஷ்

இலக்கியம், சினிமா என இரண்டிலும் தன் படைப்புகளை வெளிப்படுத்தி வருகிற தங்கர்பச்சானிடம், படச்சுருள்இலக்கியமும் சினிமாவும்சிறப்பிதழுக்காக பேட்டி கண்டபோது,

உலக சினிமா, தீவிர இலக்கியம் இவ்விரண்டில் முதலில் உங்களுக்கு அறிமுகமானது எது? எதன் வழி, எதனைக் கண்டடைந்தீர்கள்?

பெரும்பான்மையானோரைப் போல நானும் ஒரு எம்.ஜி.ஆர் ரசிகன். இன்றும் அப்படியேதான் இருக்கிறேன். எங்குபோய் திரும்பி வந்தாலும், நம்மை மகிழ்விக்கிற படங்கள் என்று ஒரு பட்டியல் இருக்குமே, அதில் எம்.ஜி.ஆர் எப்போதும் இருப்பார்.
அப்படிப்பட்ட எனக்கு முதலில், திரைப்படக் கல்லூரிக்குப் போகும்பொழுது, இது நல்ல சினிமா, கெட்ட சினிமா, இது மக்கள் சினிமா, கருத்து சொல்கிற சினிமா, என எந்த வித்தியாசமும் தெரியாது. இலக்கியமும் அதிகப் பரிட்சயம் இல்லை. ஆனால், திரைப்படக் கல்லூரிக்குச் சென்றபின்னர் அங்கு பார்த்த திரைப்படங்கள்தான் என் அடுத்த வாழ்க்கைப் பயணத்தைத் தீர்மானித்தன.

முதல் நாள் வகுப்பறை’, என்று வளாகத்திற்குள்ளிருந்த திரையரங்கத்திற்கு அழைத்துச்சென்றார்கள். முதல் படமாகபதேர் பாஞ்சாலிதிரையிட்டார்கள். வில்லன், ஹீரோ, காமெடியன் என எதுவுமே இல்லாமல் ஒரு படம் பார்ப்பது அதுவே முதல் முறை. படத்தின் கீழே வருகிற துணை உரைகளையெல்லாம் படிப்பதற்குள் அந்தக் காட்சி நகர்ந்து, அடுத்த காட்சி வந்துவிடும். இருந்தாலும், அந்தத் திரைப்படத்தோடு என்னை இணைத்துக்கொள்ள முடிந்தது. ’பதேர்பாஞ்சாலியில் வருகிற அப்புவாக என்னை உணர்ந்தேன். கிராமத்திலிருந்து வருகிற எனக்கு, அந்தப் படத்திலும் வருகிற பாட்டி, பேரன் இருவருக்குமிடையிலான நெருக்கமான உறவு ரசிக்க வைத்தது. அந்தப் படத்தில் வைக்கப்பட்டிருக்கிற காட்சிக்கோணம் எல்லாமே இதுவரை பார்த்த படங்களிலிருந்து மாறுபட்டதாக இருந்தது. எப்படி மாறுபட்டது, என்பதற்கான காரணம் சொல்லத்தெரியவில்லையே தவிர, அந்தப் படம் எனக்குள் ஏதோ ஒரு விதத்தில் பாதிப்பு செலுத்தியபடியே ஓடி முடிந்தது. அடுத்த படமாகபைசைக்கிள் தீவ்ஸ்’. எப்படி இருக்கும்?. இரண்டு படங்களையும்  பார்த்து நொறுங்கிப்போனேன்.
இதுவரையிலும் நமக்கு சினிமா என்று வேறு ஒரு பிம்பத்தைக் காட்டியே ஏமாற்றியிருக்கிறார்கள். உண்மையான சினிமா என்றால் இதுதானா? என்று புரிய ஆரம்பித்தது.
இந்த இரு படங்களும் எனக்குள் பெரிய தாக்கத்தை உருவாக்கின. அதன் உதவியோடு சினிமாவின் அடிவேரை அலச ஆரம்பித்தேன். அப்பொழுதெல்லாம் திரைப்படக் கல்லூரிகளில் விருப்பப்பட்ட எந்தத் திரைப்படத்தை வேண்டுமானாலும் பார்க்கலாம். ஒருவர் இந்தப் படம் பார்க்கவேண்டும் என்று எழுதிக்கொடுத்தாலும், அவர் ஒருவருக்காக திரைப்படக் கல்லூரியில் அந்தப் படத்தை ஒளிபரப்புவார்கள். மிக நல்ல கல்விமுறை அது. அதன்படி பார்த்தால், நீங்கள் கேட்ட கேள்விக்கு பதிலாக, எனக்கு முதலில் அறிமுகமானது உலகசினிமாக்கள்தான்.

உலக சினிமாக்களை அடுத்து, இலக்கியத்திற்கான அறிமுகம் எப்படி நிகழ்ந்தது?

உலக சினிமாவிற்கு பின்புதான் இலக்கியம் இருப்பது எனக்குத் தெரிகிறது.

ஒருநாள் மழைக்காக எல்..சி கட்டிட ஓரத்தில்  நிற்கிறேன். நடைபாதையில் புத்தகக் கடை போட்டிருந்தவர் திடீர் மழையால் தவிக்கிறார். அப்போது  ஓடி அவருக்கு உதவுகிறேன். அவர், புத்தகங்களை நனையாதபடிக்கு   ஒரு இடத்தில் பத்திரமாக வைத்துக்கொண்டார். நான் 40-ஆம் எண் பேருந்திற்காக காத்திருக்கிறேன். அதுவரையில் ஒரு புத்தகத்தை எடுத்துப் பார்க்கலாமே என்றுபிஞ்சுகள்என்ற கதையைப் புரட்டுகிறேன். கையெழுத்துப் பிரதியில் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்றது என்று கொட்டை எழுத்துகளில் புத்தகத்தின் முகப்பில் அச்சிடப்பட்டிருந்தது. ”அப்படி என்னதான் புத்தகத்தில் இருக்கிறது?” என்று எடுத்துப் படித்தால் ஒரு சிறுவனின் வாழ்க்கை அந்தக் கதையில் விவரிக்கப்பட்டிருக்கிறது. படித்துக்கொண்டிருக்கும்பொழுதே எனக்கான பேருந்தும் வந்துவிட்டது. புத்தகத்தை அங்கேயே விடவும் மனமில்லை. சட்டைப்பையில் சரியாக 1.50 பைசாதான் இருந்தது. அதை புத்தகக் கடைக்காரரிடம் கொடுத்துவிட்டு பேருந்தில் ஏறினேன். அங்கிருந்து அம்பத்தூர் வருவதற்குள்  புத்தகத்தை நான் படித்துமுடித்துவிட்டேன். அன்றைக்கு இரவெல்லாம் எனக்கு அமைதியில்லை. கதையில்அசோக்என்ற சிறுவனைப் பற்றி விவரிக்கப்பட்டிருந்ததன் தாக்கம் என்னையும் பிடித்துக்கொண்டது.

இப்படி, இலக்கியம் எனக்கு கி.ராஜநாராயணன் மூலமாக  அறிமுகமாகிறது. அவரதுபிஞ்சுகள்என்ற கதையின் மூலமாகத்தான் இலக்கியத்திற்குள் நுழைகிறேன்.

அடுத்தகட்டமாகஐந்து ரூபாய் செலுத்தி அம்பத்தூர் நூலகத்தில் உறுப்பினராகச் சேர்ந்து, கி.ரா.வின் புத்தகங்கள் ஒவ்வொன்றாய் தேடித்தேடிப் படித்தேன். நூலகத்தில் இருக்கிற சிற்றிதழ்களைப் புரட்டினேன். கி.ரா-வின் மூலமாக நாஞ்சில் நாடனின் எழுத்துகள் அறிமுகமாகின்றன. பின்னர் சா.கந்தசாமி என ஒவ்வொரு எழுத்தாளராக படித்து, அடுத்த ஆறுமாதத்திற்குள் அதுவரையிலான இலக்கியங்களையெல்லாம் படித்து முடித்துவிட்டேன். இப்படி ஒரே நேரத்தில் தீவிர இலக்கியத்தையும், தீவிர சினிமாவையும் தேடிக்கொண்டே இருந்த காலம்தான் திரைப்படக் கல்லூரி.

எந்த இடத்திலும், எழுத்தாளர்களில் கி.ராஜநாராயணனை அதிகமாக விரும்ப, அவரைப் பற்றிப் பேச என்ன காரணம்.? அவரது எழுத்துக்களின் வழி நீங்கள் கண்டுணர்ந்தது?

மற்ற எழுத்தாளர்கள் எழுத மறந்தது என்பதை விடவும், எழுத மறைத்ததை கி.ரா அதிகம் எழுதினார். கிராமத்து மனிதர்கள் எல்லாம் வாழத் தகுதியற்றவர்கள் போல நான் நினைத்துக்கொண்டிருந்தேன். கிராமத்து மனிதர்கள் என்றால் அவமானமாகக் கருதக்கூடியதான சூழல் இருந்தது. நான் கிராமத்திலிருந்து வந்திருக்கிற காரணத்தினால் எனக்கு இது தெரியும். நான் அதிகம் படிக்காதவன், பொருளாதாரத்திலும் பின் தங்கியவன், நான் சொல்லிப் பெருமைப்பட்டுக்கொள்வதற்கு வாழ்க்கையில் எதுவுமே இல்லை, என்று புறந்தள்ளுகிற வாழ்க்கைக்கு மாறாக, அந்தக் கிராமத்து மனிதர்களை மட்டுமே எழுதியவர் கி.ரா. அந்த எழுத்துக்குள்தான் எல்லாமே இருக்கிறது.
மற்றவர்களெல்லாம், பெற்ற படிப்பறிவை வைத்துக்கொண்டு, ஒரு கதை எழுதுவதற்கும், வாழ்க்கையிலிருந்து ஒருவர் கதை எழுதுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. மற்ற எழுத்தாளர்களின் கதைகளில் முழுப் புனைவும் போலியும்தான் இருக்கிறது. கி.ரா.வின் எழுத்துக்களில்தான் அசல் வாழ்க்கையை  கவனிக்கிறேன். அதுதான், நான் வாழ்ந்த வாழ்க்கைக்கும், எனக்கும் நெருக்கமாக இருக்கிறது. நான் பார்க்கிற மக்களுடைய வாழ்க்கையாக அவர் கதைகள் மட்டுமே இருக்கின்றன.

தமிழ் சினிமாவில் மற்ற படைப்பாளிகளிடமிருந்து உங்கள் படங்கள் வித்தியாசப்படுவதற்கு, இலக்கியம்தான் அடித்தளமா?

நிச்சயமாக.


ஏனெனில், திரைப்படக் கல்லூரியில் படித்தவர்கள் எல்லோருமே இத்தகைய படைப்புகளை எடுக்கவில்லையே!. என்னுடன் படித்த உதயகுமார், அரவிந்த ராஜூ, ஆபாவாணன், செல்வமணி, இப்படி எத்தனையோ பேரைச் சொல்லிக்கொண்டே போகலாம். எல்லோரும் சமகாலத்தில் என்னுடன் படித்தவர்கள். மற்றவர்கள் செய்யாததை, நான் செய்ததற்கு இலக்கியம்தானே காரணம். இலக்கியம் என்ற அடித்தளம் இல்லையென்றால், சினிமாவை இப்படி நான் ஆழ்ந்து பார்த்திருக்கமாட்டேன்.

இலக்கியத்திலிருந்துதான் திரைப்படக் கலை உருவாகியிருக்கிறது. நாம் இன்றைக்கு அதிகம் சிலாகிக்கிற படத்தொகுப்பிற்கான உத்திகள், நுணுக்கங்கள் எல்லாம் எழுத்திலிருந்துதான் வருகிறது. Parallel action, Steam of Consciousness இதெல்லாமே எழுத்திலிருந்துதான் உருவாகிறது. ஆக, திரைப்படங்களுக்கான மூலதனம், தீவிர இலக்கியத்திலிருந்துதான் உருவாகிறது என்ற உண்மையை நான் உள்வாங்கிக்கொள்கிறேன்.

சொல்ல மறந்த கதைநாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் நாவலை வைத்து எடுக்கப்பட்டது. நாவலின் படி பார்க்கும்பொழுது, அந்தக் கதை நாஞ்சில் நாட்டில் நடக்கிற கதையாக  இருக்கும். அந்தக் கதையை கடலூர் மாவட்டத்தில் நடப்பதாக மாற்றுவதற்கு என்ன காரணம்?

அழகிபடம் வெற்றியடைந்த பிறகு, தமிழ் சினிமாவின் பிரபலமான அனைத்து நடிகர்களும்என்னை வைத்து ஒரு படம் இயக்குங்கள்என்று என்னிடம் கேட்டிருக்கின்றனர். ஆனால், நான் அப்படி எந்த வாய்ப்புகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த நடிகர் சொல்கிறவற்றைக் கேட்கிற இயக்குனராக நான் இயங்க விரும்பவில்லை. ”இந்த இயக்குநர் சொல்கிறவற்றைக் கேட்கிற நடிகர்களாக அவர்கள் இருக்கவேண்டும்”, என்று சொன்னவுடன் சில நடிகர்கள் பின்வாங்குகிறார்கள்.

பின்னர், நான் திரைப்படக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே நாஞ்சில் நாடனுக்கும் எனக்கும் கடிதத்தொடர்பு ஏற்பட்டிருந்ததுகி.ரா, நாஞ்சில் நாடன் இன்னும் சில எழுத்தாளர்களுடன் படிக்கிற காலத்தில் நான் கடிதத்தொடர்பிலேயே இருக்கிறேன்.

படைப்புகளின் வழி அறிமுகத்தை அடுத்து, கி.ரா.வை நேரில் பார்த்தது பத்து ஆண்டுகள் கழித்துதான். அதுவரையில் வெறும் கடிதத்தொடர்புதான். என்னுடைய திருமணத்தை நாஞ்சில்நாடன், கி.ரா. இவர்கள்தான் முன்னின்று நடத்திவைத்தார்கள்.

நாஞ்சில் நாடனின்தலைகீழ் விகிதங்கள்நாவலை படமாக எடுக்கலாம் என்கிறபொழுது முதலில் எல்லோரும் பயமுறுத்தினார்கள்.  ’’இந்நாவலே வேண்டாம்’’ என்றுதான் சொன்னார்கள். ஆனால், கிராமங்களில் இருக்கக்கூடிய அறுபது விழுக்காடு இளைஞர்களின் வாழ்க்கையைச் சார்ந்து அந்நாவலின் மையக்கரு இருந்தது. அதன் மையக்கதாபாத்திரமான சிவதாணு என் மனதிலேயே இருந்தான். அதையெல்லாம் நாஞ்சில் நாடனிடம் கூறி, இந்நாவலை படமாக்கலாம், என்ற என் எண்ணத்தை வெளிப்படுத்தினேன்.

இந்நாவலை படமாக எடுத்தால் தொலைக்காட்சி தொடர் போல இருக்கும் என்றெல்லாம் சொன்னார்களே!, இதையா படமாக்கப் போகிறீர்கள்?” என்று நாஞ்சில்நாடன் கேட்டார். ”தொலைக்காட்சித் தொடர், திரைப்படம் என்பதெல்லாம் எடுக்கிற பாணியைப் பொறுத்ததுதான். சீரியலிலேயே சிறந்த சீரியலை நம்மால் செய்ய முடியும்.” என்று எடுத்துக்கூறியவுடன் பின் சம்மதித்தார்.
முதலில் நாவலை திரைக்கதையாக மாற்ற வேண்டும். நாவலில் எழுதியிருப்பவை எல்லாவற்றையும் திரைப்படமாக எடுக்கமுடியாது. மேலும் இந்நாவல் 1978-ஆம் ஆண்டில் எழுதப்பட்டிருக்கிறது. அன்றைக்கிருந்த பொருளாதார நிலை, அன்றைக்கிருந்த கிராமத்தின் கலாச்சாரங்கள், வாழ்க்கை முறைகள் என எல்லாமே 2002-ல் மாறியிருந்தது. அதனால், நாவலிலிருந்து திரைப்படத்திற்கு நிறைய விஷயங்களை மாற்றியமைக்கவேண்டிய கட்டாயம் வந்தது. அடுத்தது முக்கியமானதாக, நாவலில் கையாளப்பட்டிருக்கிற வட்டார வழக்கு. அதை என் திரைக்கதையில் பயன்படுத்துகையில், இந்தப் படத்தை நான் இயக்குவதுபோன்ற நினைப்பு வரவில்லை. அங்குதான் எனக்கு பயமேற்பட்டது.

பின்னர் உடனடியாக நாஞ்சில் நாடனைச் சந்தித்து, “இந்தக் கதையை நாஞ்சில் நாட்டில் நடப்பது போன்று என்னால் எடுக்கமுடியாது. கதை ஒட்டுமொத்த தமிழ்வாழ்க்கைக்கும் பொருத்தமானதாகவும் இருக்கிறது. அதனால் நாஞ்சில் பகுதியிலேயேதான் இந்தக் கதை எடுக்கப்படவேண்டும் என்ற அவசியமெல்லாம் இல்லை. நான் இந்தப் படத்திற்கு நேர்மையாக இருக்கவேண்டுமென்றால், இந்தக் கதைக்குள் இன்னும் ஆழ்ந்துபோய் என்னுடைய படைப்பாகவும் வெளிக்கொண்டுவரவேண்டுமானால், வட தமிழ்நாட்டில் இந்தக் கதை நடப்பதுபோல் அமைத்துக்கொண்டால்தான் சாத்தியப்படும்”, என்று என் நிலையை விளக்கினேன். அதற்கு நாஞ்சில் நாடனும் சம்மதித்தார். பின்னர் நாவலிலிருந்து சில விஷயங்களை மாற்றினேன். அதில்தான் நீங்கள் குறிப்பிட்ட நாஞ்சில் பகுதியில் நடக்கவேண்டிய கதை, கடலூரில் நடப்பதுபோல் மாற்றப்பட்டது.

அதேசமயம், என்னால் நாவலிலிருந்து மாற்றமுடியாமல் போன ஒன்று, அந்த மையக்கதாபாத்திரத்தின் பெயரான சிவதாணு. சிவதாணு என்ற பெயர் வடதமிழ்நாட்டில் கிடையவே கிடையாது. இருந்தாலும், அந்தக் கதாபாத்திரத்தின் பெயர் எனக்கு நெருக்கமாக பிடித்திருந்ததால் அப்படியே பயன்படுத்தினேன். அப்பெயரை மாற்ற மனமில்லை. இலக்கியப் படைப்பிலிருந்து, திரைப்படம் உருவாக, படைப்பாளர் தரப்பிலிருந்து எல்லா உரிமையையும் கொடுத்தவர் எழுத்தாளர் நாஞ்சில் நாடன்.

ஒரு இலக்கியப் படைப்பினை சினிமாவாக மாற்றும்பொழுது அதிலிருக்கிற சாதக, பாதங்கள் என்னென்ன?  

இலக்கியம் திரைப்படமாக்கப்பட வேண்டும் என்பது எல்லா நேரங்களிலும் சாத்தியமில்லை. சில இடங்களில் இலக்கியம் இலக்கியமாகத்தான் இருக்கவேண்டும். திரைப்படம் திரைப்படங்களாகத்தான் இருக்கவேண்டும். இலக்கியம் போலவே சினிமா இல்லையே என்பது ஒருவகை அறியாமைதான். அப்படி நாம் எதிர்பார்க்கவே கூடாது. திரைப்பட மொழியைத் தெரிந்தவர்கள் அதனைச் சொல்லமாட்டார்கள். இலக்கியமொழி வேறு திரைப்பட மொழி வேறு. இலக்கியத்திலிருந்து சினிமா செய்யும்பொழுது, அந்தத் திரைப்படத்திற்குத்தான் நேர்மையாக இருக்கவேண்டும். ஏற்கனவே இருக்கிற இலக்கியத்திற்கு நேர்மையாக இருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை. மக்கள் படத்தைத்தான் பார்க்க வருகிறார்கள். ஒரு இலக்கியத்தை படமாக எடுப்பதனால், அந்தக் கதை ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கிற எழுத்திலிருந்து  வீணாகப் போவதில்லை.

திரைப்படமாக சாத்தியப்படக்கூடிய இலக்கியங்கள், கவனிக்கப்படாமல் இன்னும் என்னென்ன இருக்கின்றன?

சா.கந்தசாமியின்அவன் ஆனது’, மிக முக்கியமான நாவல். எல்லோரும் அவருடையசாயாவனம்நாவலை சுற்றுச்சூழல் சார்ந்து எழுதியதால் கவனித்து சிலாகிப்பார்கள். ஆனால், ஒருவருடைய அகம் புறம்மனவோட்டம் பற்றிய சித்திரத்தை ஆல்பெர்ட் காம்யூ போல கையாண்டது சா.கந்தசாமிதான் (அவன் ஆனது). அது படமாக எடுக்கப்பட்டால் வெகு சிறப்பாக வரக்கூடும். அதேபோல, அவருடையசூரிய வம்சம்கதையையும் சொல்லவேண்டும்.

சுந்தர ராமசாமியின்புளியமரத்தின் கதைநாம் எடுக்கவேண்டிய ஒரு படம். இடையில், நானும், கலை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தியும் இணைந்து அந்தப் படம் இயக்குவதற்கான சில முயற்சிகளையும் செய்தோம்.       ஆனால், அந்தக் கதைக்கு பொருளுதவி செய்வதற்கு யாரும் முன்வரவில்லை.

கி.ரா-வின்  ’கோபல்ல கிராமம்முதலில் எடுக்கப்பட வேண்டிய படைப்பு. அதேபோல அவருடைய சில சிறுகதைகளும் இருக்கின்றன.
நாஞ்சில் நாடனின் சிறுகதைகளையும் படமாக எடுக்கலாம்.

தலித் படைப்பாளிகள் அதிகமானோர் எழுதி வருகின்றனர். இலக்கியமாக இருந்தாலும், சினிமாவாக இருந்தாலும் அப்படைப்பாளிகள் கணிசமான எண்ணிக்கையில் இருக்கின்றனர். ஆனால், தலித் சமுதாயத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட கதைகளை அவர்களே எடுப்பதில்லை. அவர்கள் சார்ந்த கதைகளை, அவர்களே எடுத்தால் அந்தக் கதை இன்னும் சிறப்பாக வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.
அதன்படி மலர்வதி எழுதியதூப்புக்காரி’  மிக முக்கியமாகக் குறிப்பிடவேண்டும்.

நீங்கள் சார்ந்திருக்கிற சினிமாத்துறையில் சக படைப்பாளிகளிடம் வாசிப்புப் பழக்கம், ஆர்வம் எந்த அளவில் இருக்கிறது?

என்னை ஒளிப்பதிவாளராக எடுத்துக்கொண்டால்கூட, இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட இயக்குநர்களுடன் வேலை செய்திருக்கிறேன். அதில் இரண்டு இயக்குநர்கள்தான் நான் எழுதிய எழுத்துக்களையே படித்திருக்கிறார்கள். பின்னர் அவர்கள் எப்படி மற்றவர்களின் எழுத்துக்களைப் படித்திருக்க முடியும்?. திரைப்படத்துறையில் இயக்குதல் என்பதுதான் மிக முக்கியமான பணி. அவர்கள்தான் ஒரு படைப்பு உருவாக அடித்தளமாக இருக்கிறார்கள். ஆனால், அவர்களே எதுவும் படிப்பதில்லை.
பின்னர், நான் ஒரு எழுத்தாளன், நானே அவர்களுக்கு ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியிருக்கிறேன். கதைகள் எழுதியிருக்கிறேன். அந்தக் கதைத்தொகுப்புகளின் வெளியீட்டு விழாவிற்கும் அவர்களை அழைத்து வருவேன். கையில் புத்தகங்கள் கொடுப்பேன். இருப்பினும் எதையும் அவர்கள் படித்ததில்லை. ஆனால், அதே சமயம் அதிகம் படிப்பவர்கள் இருப்பார்கள். அவர்களும் திரைப்படம் எடுப்பதில்லை. இதுதான் இங்குள்ள பிரச்னை. இங்கு நிலைமையே தலைகீழாக இருக்கிறது.

எழுத்தாளராக, ஒளிப்பதிவாளராக, இயக்குனராக, நடிகராக, இத்தனைப் பரிமாற்றம் உங்களிடமிருந்து வரவேண்டிய அவசியம்/சூழல்?

முதலில் ஒரு திரைப்படத்தை இத்தனைபேரும் சேர்ந்துதான் உருவாக்குகிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. அந்த அறிவுடன் கூட நான் திரைப்படக் கல்லூரிக்குப் போனதில்லை. நான் போனதற்கு ஒரே காரணம், அங்கு படித்தால் வேலை கிடைக்கும் என்பதுதான். அப்போதுதான் இந்தியத் தொலைக்காட்சி தொடங்கிய நேரம். 1975 காலகட்டம். அப்போதெல்லாம் அங்கு ஒளிப்பதிவாளர்களே கிடையாது. ஆனால், அதற்குத்தான் அவ்வளவு தேவை இருக்கிறது. திரைப்படக் கல்லூரியிலிருந்து படித்துவிட்டுச் செல்கிறவர்கள் வெறும் ஐந்து பேர்தான் இருப்பார்கள். இந்த ஐந்துபேரும் எத்தனை தொலைக்காட்சிக்குத்தான் வேலை செய்யமுடியும். அதனால் ஒளிப்பதிவாளருக்கான தேவை அதிகமாக இருப்பது எனக்குத் தெரியும். அந்த வேலைக்கு விண்ணப்பிக்கவேண்டிய அவசியம் கூட இல்லை. நீங்கள் கடைசித் தேர்வு எழுதிமுடித்த உடனேயே உங்களை வேலைக்கு சேரச்சொல்லி அனுமதி வந்துவிடும். அப்படித்தான் அப்போதைய சூழல் இருந்தது. அந்தக் காலகட்டத்தில்தான் எனக்கும் வேலை கிடைக்கும் என்று திரைப்படக் கல்லூரிக்குப் போகிறேன். அதுவரைக்கும் கேமராவுக்கும் எனக்குமான எந்த உறவும் கிடையாது.

படிக்கிற காலத்தில் வகுப்பில் குழுவாக நிற்கவைத்து புகைப்படம் எடுப்பார்களே, அப்படி ஒரு புகைப்படம் நானும், என் அண்ணனும் எடுத்தோம். சிறுவயதில் எனக்கும் கேமராவுக்குமான பரிச்சயம் அவ்வளவுதான்.
பின்பு, சென்னை வந்தவுடன், எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த காலத்தில் பதினைந்து ரூபாயில், சென்னை முழுக்க பேருந்தில் ஒரு மாதத்திற்கு இலவசமாகப் பயணம் செய்யலாம் என்ற திட்டம் இருந்தது. அந்த பஸ் பாஸ் பெற எனக்கு ஒரு புகைப்படம் தேவைப்பட்டது. அப்பொழுது ஒரு புகைப்படம் எடுத்திருக்கிறேன். இதைத்தவிர எனக்கும் ஒளிப்பதிவுக் கருவிகளுக்கும், எந்தவிதத் தொடர்பும் இல்லை. இப்படிப்பட்ட நான் ஒளிப்பதிவிற்கான வகுப்பிற்கு போகிறேன். எப்படியிருக்கிறது நிலைமை பாருங்கள்?

ஆரம்பத்தில் எனக்கும் கேமராவுக்குமான நெருக்கமே வரவில்லை. ஆனால், கேமராவை கையில் வாங்கியவுடன் என்னை அப்படியே மாற்றியதுஒன்று புரிந்தது. எவ்வளவு சிறந்த ஒளிப்பதிவாளரும், கடைசிவரை சினிமாவில் ஒன்றுமே சாதிக்க முடியாது.  அவர்கள் ஒரு கூலிக்காரனாக மட்டுமே இருக்கமுடியும்.

நன்றாக நினைவிருக்கிறது. 1985ஆம் ஆண்டில் நான் உதவி ஒளிப்பதிவாளராக வேலை பார்த்து வருகிறேன். அப்போது என்னிடம் ஒரு பேட்டி எடுக்கிறார்கள். அப்போதும் இதையேத்தான் சொல்கிறேன். ”கேமராமேன் என்பவன்  ஜீன்ஸ் போட்ட ஒரு கூலிதான்”. அதைத்தாண்டி அவனால் திரைப்படத்திற்குள் ஏதும் செய்திட முடியாதுஅடுத்தடுத்து, நாற்பது படங்களுக்கு நான் ஒளிப்பதிவாளராக வேலைபார்த்து சலித்துப் போகிறது. ஒரே நாளில் மூன்று படங்களுக்கான படப்பிடிப்பில் எல்லாம் கலந்துகொண்டிருக்கிறேன். காலையில் எனக்காக மூன்று கார்கள் வரை வந்து நிற்கும். இந்நிலை ஒரு கட்டத்தில் வெறுத்துப் போகிறது. பின்னர் நாம் நினைக்கிற படத்தை யாரும் எடுக்கவில்லை, என்கிற கோபமும் உடன் இணைகிறது. அதனால்தான் நான் இயக்குனராக மாறுகிறேன்.

கதை எழுதுகிற விஷயங்களும் அதேபோலத்தான்.  கி.ரா.வைப் படித்த பிறகு, எனக்குள்ள அனுபவங்களையும் இதேபோல வெளிக்கொண்டுவர வேண்டுமே என்று நினைத்துதான் எழுத்தாளனாக மாறுகிறேன். அதுதான் என்னைப் பதிப்பாளனாகவும் மாற்றுகிறது. என்னுடையவெள்ளைமாடுதொகுதியிலிருக்கிற மிகச்சிறந்த கதைகள், ’அழகியின் மூலமான கல்வெட்டு முதற்கொண்டு   எல்லா கதைகளுமே கணையாழிக்கும், சுபமங்களாவிற்கும் அனுப்பிய கதைகள்தான். அத்தனைக் கதைகளையும் திருப்பிக் கொடுத்தார்கள். எதுவும் சரியில்லை என்றார்கள். அவர்கள் படிப்பதெல்லாம் நகரத்துச் சாயலில் இருப்பதால், இந்தக் கதையை புரிந்துகொள்ள முடியவில்லை. பின்னர்தான் நான் போராடி, உதவி ஒளிப்பதிவாளராக இருந்துகொண்டே பணம் சேர்த்துவெள்ளைமாடுகதைத்தொகுதியைக் கொண்டு வந்தேன்.
பின்னர், திரைப்படம் நாம் நினைத்தபடி எடுத்தாக வேண்டும், அது சரியாக வராத பட்சத்தில் தயாரிப்பாளராகவும் மாறவேண்டிய சூழல்.

என்னுடைய படங்களில்அழகியில் ஆரம்பித்துகளவாடிய பொழுதுகள்வரையிலும், கதையின் நாயகனுக்கு கல்யாணம் ஆகியிருக்கும், குறைந்தது இரண்டு குழந்தைகள் இருப்பார்கள்இந்திய சினிமாவில், எந்தவொரு இயக்குனரின் படமும் இப்படியிருக்காது.

அவர்கள் இயக்குகிற படங்களிலெல்லாம் சினிமா என்பது திருமணத்தோடு முடிந்துவிடும். அதன் பிறகான வாழ்க்கைதான் என் படத்தில் காண்பிக்கப்படுகிறது. அதையாரும் தொடுவதில்லை. அதை நான் கையிலெடுக்கிறேன். வாழ்க்கைக் கதைகளாக நான் தேடித்தேடிப் போய் எடுத்துக்கொண்டிருந்தேன். என் கதைக்கு யாருமே நடிக்க முன்வராத போது, நானே நடிகனாக மாறவேண்டியதிருக்கிறது. இது எதையுமே நானே ஆசைப்பட்டு செய்ததில்லை. அந்தச் சூழ்நிலைதான் இந்நிலைகளுக்கெல்லாம் என்னை மாற்றுகிறது.

இந்த நான்கிலும் எதில் அதிக தன்னிறைவுடன் உணர்கிறீர்கள்?

எழுத்துதான்.

தங்கர் பச்சானுக்குள் இருப்பதை, வெளிக்கொண்டுவர உதவியது எழுத்து மட்டும்தான். மீதமுள்ளவற்றில் அது சாத்தியப்படவில்லை.

திரைப்படத்தில் காட்சியாக காட்டிவிட்ட ஒன்றை, எழுத்தில் வர்ணிப்பது இயலாத காரியம் என்றும், இலக்கியத்தில் வர்ணிக்கப்பட்ட ஒரு காட்சியை, திரையில் காட்டுவது சாத்தியமில்லை, என்றும்  வாதங்கள் இருபிரிவினருக்கும் மத்தியில் நிகழ்ந்தே வருகிறது. இவ்விரண்டிலும் தன் பங்கினை செய்துவருகிற நீங்கள், எதன் பக்கம் நிற்பீர்கள்?

இரண்டுமே உண்மைதான். அதை மறுப்பதற்கில்லை.
ஆனால், கவனித்துப் பார்த்தால், மிக வீரியமானது கேமராதான்.
இலக்கியத்தில் இருபது பக்கங்களுக்கு எழுதிக்கொண்டு வந்ததை, கேமராவினால் ஒரு பத்துநொடிகளில் கடத்திவிட முடியும். அந்தக் காட்சியை புரியவைத்துவிட முடியும். அந்த இலக்கிய அனுபவத்தையும் கொடுத்துவிட முடியும்.

சினிமா என்பது கூட்டியக்கம். அதில் நீங்கள் கொண்டிருக்கிற கருத்தியல் சித்தாந்தத்தோடும், முரண்பாடுகளோடும், வேலை செய்யவேண்டியிருக்கும். உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற நீங்கள் அதனை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

பெரிய போராட்டம்.
என்னுடன் பணிபுரிந்த எல்லோருக்குமே தெரியும். நான் வெறும் ஒளிப்பதிவாளனாக மட்டும் படப்பிடிப்பில் இயங்குகிற ஆள் கிடையாது. கதைக்கான கரு கிடைத்த காலத்திலிருந்து, அது கதையாக, திரைக்கதையாக உருவாகி, பின்னர் அந்தக் கதைக்கு தயாரிப்பாளரைத் தேடிக்கண்டுபிடித்துபடமாக்கப்பட்டு, படத்தொகுப்பிற்குச் சென்று, அதன் பிறகு படம் முழுமையடைந்து  கடைசியாக அது திரையரங்கத்திற்குப் போகும் வரையிலும் இயக்குனருடனே இருக்கக்கூடியவன்மற்ற ஒளிப்பதிவாளர்கள் எல்லாம் அந்தப் படப்பிடிப்பிற்கு போவார்கள், வேலை செய்வார்கள். திரும்பி வந்துகொண்டேயிருப்பார்கள். அவர்கள் வேலை அத்தோடு முடிந்துவிடும். ஒருசில படங்களுக்கு வேறு வழியே இல்லாமல் நானும் பணத்திற்காக வேலை செய்திருக்கிறேன்மறுக்கவில்லை. ஆனால், பெரும்பாலும் ஒரு வேலைக்கு என்னை ஒப்படைத்துவிட்டேனென்றால் அதைச் சரியாகச் செய்துவிடுவேன். இதில் பிரச்னை என்னவென்றால், நாம் புரிந்துகொண்ட அளவிற்கு இயக்குநர் புரிந்துகொள்ளமாட்டார். அதேபோல தயாரிப்பாளர் புரிந்துகொள்ளமாட்டார். குறிப்பாக நடிகர்களும் புரிந்துகொள்ளமாட்டார்கள். இப்படி எல்லோரையும் ஒன்றாகச் சேர்த்து அந்த வேலையைச் செய்துமுடிப்பது மிகப்பெரிய பணி.

நான் திரைப்படத்துறையை ஒரு படிப்பாக படித்துவந்தவன். இலக்கியமும் என் கையில் இருக்கிறது. அரசியலும் தெரிகிறது. தவிர அனுபவமும் இருக்கிறது. உலக சினிமாவும் தெரிகிறது. இருப்பினும், நான் வேலை செய்கிற சினிமாவில்அந்த இடத்தில் என்னுடைய பார்வைக்கும் என்னுடைய கருத்துக்கும், அங்கு இடமில்லாமல் போகிறது. அது ஒரு சாதாரண பாமரனுக்கான கருத்தியல் பார்வையோடு இருக்கிற  இடமாக பாவிக்கிறார்கள். பின்னர் அதற்குள் நான் நினைப்பதை கொண்டுவரவேண்டும் என்ற ஆதங்கம், போராட்டமெல்லாம் நடக்கிறது. அதில் பலமுறையும் சச்சரவுகள் சண்டையோடு, நிறைய பொருளாதார இழப்போடு அவமானப்பட்டுத்தான் வெளியேற வேண்டியிருக்கிறது. இந்தப் போராட்டங்கள்தான் என்னை இயக்குனராக மாற்றியது எனலாம்.

ஊர்ப்பற்று, மொழிப்பற்று, இனப்பற்று, சாதிப்பற்று இந்நான்கினையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?

நான்குமே வேறுபட்டது.

நம்மை வளர்த்த, நமக்குச் சொல்லிக்கொடுத்த அந்த மண்ணையும், மரங்களையும், நீரோடைகளையும், பறவைகளையும், அங்கு நம்மோடு இருந்த ஆசிரியர்கள், பள்ளிக்கூடங்கள்இதையெல்லாம்  நினைத்துப்பார்ப்பதுதான் ஊர்.

 அடுத்து தாய் தந்தையர் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு  மொழி மூலகாகத்தான் உலகத்தின் எல்லாவற்றையும் நாம் அடைகிறோம். அந்த அளவில் மொழிக்கு முக்கியமான ஒரு இடமிருக்கிறது.

இன அடையாளமும் மிக முக்கியமானது. நான் என்னைப்பற்றி பெருமையாக நினைத்துக்கொள்வது, ”நான் ஒரு தமிழன்”. ஏனென்றால், தமிழனுக்கு இருக்கிற  பெருமைகள் உலகத்தில் எவனுக்கும் இருக்கக்கூடிய வாய்ப்பே இல்லை.

பின்னர், சாதிப்பற்றை ஒரு பற்றாக ஏற்றுக்கொள்ள முடியாது. அது நமக்குள் ஊட்டப்பட்ட  விஷயம். அதிலிருந்து நாம் வெளிவரத்தான் பார்க்கிறோம். பின்னர், அதற்குள் ஆசைப்பட்டு, ஒட்டி உறவாடுவது என்றெல்லாம் ஒன்றுமே கிடையாது. ஆனால், அதேநேரம் இந்தச் சமுதாயத்தில் அதற்குள் இருந்துதான் வாழமுடியும். அதை உடைத்துக்கொண்டு வெளியேறுவது என்று சொல்வதெல்லாம் பொய்.

கடலூர் அது சார்ந்த பகுதி என்ற குறுகிய எல்லையில் மட்டுமே உங்கள் சிறுகதைகள், திரைப்படங்கள் பெரும்பாலும் தொடர்பு கொண்டிருக்கின்றன. ஒரு படைப்பாளியாக பல களங்களைக் கடந்து செல்ல நீங்கள் ஆசைப்படவில்லையா?

கி.ராஜநாராயணனிடம் சென்று சென்னை வாழ்க்கையைப் பற்றியும், மும்பை வாழ்க்கையைப் பற்றியும் எழுதச்சொன்னால் அந்தப் படைப்பு என்னவாகயிருக்கும்? குரசோவா, ப்ரஸ்ஸான், ஆந்த்ரா வாய்தா படங்களைப் பார்க்கிறேன். ஆந்த்ரா வாய்தா படங்களில்,  Philoshphy, கதையின் தீர்க்கமான அடித்தளம், பாத்திரப் படைப்புகளைச் சரியாகக் கையாள்கிற பக்குவம் என எல்லாமே இருக்கிறது. இப்படி ஒவ்வொருவருக்கும் தன் ஆளுமை எதில் இருக்கிறதோ, அதைவிடுத்து வெளியே வந்தால், மீனைத் தூக்கி தரையில் போட்டுவிடுவதுபோல் ஆகிவிடும். அதை நான் செய்யமாட்டேன்.

அடுத்து எனக்கு அப்படியொரு ஆசையும் கிடையாது. 14 ஆண்டுகள்தான் கிராமத்தில் வாழ்ந்திருக்கிறேன். மூன்று வயதிலேயே என்னை பள்ளிக்கூடத்தில் சேர்த்திவிட்டார்கள். நான் பண்ருட்டியிலிருந்து சென்னை வரும்போது ரயில் கட்டணமாக 7.50 பைசாதான் இருந்தது. சென்னை வந்தே நாற்பதாண்டுகள் ஆயிற்று. ஆனாலும், நான் சிறுவயதில் கடந்துவந்த மனிதர்கள், என்னுடைய நிலம், மரம், பறவைகள், வாழ்க்கை என்பவனவற்றில்தான் என் மனம் இப்போதும் நிற்கிறது. சென்னைக்குள் என் மனதால் வரவே முடியவில்லை. சென்னை எனக்கு பிழைப்பிற்கான ஒரு இடமாகத்தான் தெரிகிறதேயொழிய, அதைத்தாண்டி இங்கிருந்து கற்றுக்கொள்ளவோ, தேடவோ எதுவுமே இல்லாததுபோலத்தான் உணர்கிறேன். அதுதான் உண்மை.

பின்னர், ’அம்மாவின் கைபேசிநாவலாகப் படித்தாலும், படமாகப் பார்த்தாலும் கொஞ்சம் பகுதிதான் கடலூரைச் சுற்றியதாக இருக்கும்இன்னும் வெளியாகாதகளவாடிய பொழுதுகள்முழுக்க முழுக்க நகரம் சார்ந்த திரைப்படம். ’தென்றல்’, ’சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமிகூட நகரம் சார்ந்த வாழ்க்கையைச் சொல்கிற படங்கள்தான். மூன்று நான்கு படங்கள்தான் கிராமத்தில் எடுத்திருக்கிறேன். ஆனால், அது  வலுவாகவே மனதில்போய் பதிந்திருக்கிறது.
பாரதிராஜா ஒரு முப்பது படங்கள் கிராமத்தில் எடுத்திருப்பார். அப்படங்கள் ஏற்படுத்திய தாக்கத்தை, ’அழகிஎன்கிற ஒரே படம் ஏற்படுத்தியிருக்கிறது. பாரதிராஜாவிடமிருந்துதான் நான் வந்திருக்கிறேன், அதை மறுக்கவில்லைஆனாலும், ’அழகியின் ஒவ்வொரு சட்டகமும், ஒவ்வொரு காட்சியமைப்புகளும், ஒவ்வொரு பாத்திரங்களும், அவை பேசுகிற உரையாடல்களும், ஏற்படுத்தியிருக்கிற தாக்கம், அதீதமாக இருக்கிறது. பொதுவாக மற்ற இயக்குநர்கள் கிராமத்துப் படங்கள் எடுப்பதற்கும், நான் எடுப்பதற்கும் வித்தியாசங்கள் இருப்பதை உணர்கிறேன். அதனால் அந்தத் தாக்கம்தான் உங்களை இந்தக்கேள்வி கேட்க வைத்திருக்கிறது.

இது என்னோட நாடு, என்னோட மொழி, இதற்கு எதிரா யார் எது வந்தாலும் அடிப்பேன், உதைப்பேன் இதுதான் என் இருப்பிற்கு அடிப்படை, என் வாழ்தலுக்கு நம்பிக்கை”, என்ற மனநிலையில்தான் இப்போதும் இருக்கிறீர்களா? என்ன காரணம்?

பின்னர்நான்என்பதில் என்னயிருக்கிறது?
எனக்கான ஒன்றில் யார் கையை வைத்தாலும் பிரச்னைதான்.
இவையெல்லாம் ஒரு மனிதனுடைய அடிப்படை உணர்வு. இது என்னுடையது என்றால், இதில் யாருக்கும் உரிமையில்லை என்று அர்த்தமாகாது. நீங்கள் வரலாம், போகலாம், ஆனால், என்னை வெளியே தள்ளிட்டு, என்னுடையதை நீ கைப்பற்றினால் உதைப்பேன். அதைத்தான் சொல்கிறேன்.
நீங்கள் வரலாம், வாழலாம், என்னவேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் எனக்கே இங்கு இடமில்லை என்கிறபொழுதுதான் சிக்கலாகிறது.

சம்பவங்கள், இலக்கியக் கதைகளில் இருந்தும் கிடைக்கலாம். செய்தித்தாள்களில் வருகிற கதைகளிலிருந்தும் கிடைக்கலாமல்லவா?

இப்பொழுது நான் அதிகமாக செய்திகளைப் படிக்கிறேன். நாளிதழ்களில் வருகிற செய்திகள். அவற்றை நிறைய பேர் வெறும் செய்தியாக மட்டுமே கடந்துபோகிறார்கள். என்னால் அப்படிப் பார்க்கமுடியவில்லை. சில சமயங்களில் நாம் உருவாக்கி வைத்திருக்கிற கதைகளே, செய்திகளாக நாளிதழ்களில் படிக்க நேரலாம். நீங்கள், ஒரு நாவலையோ, சிறுகதையையோ படமாக்குவதைக் காட்டிலும், நாளிதழ்களில் நாள்தோறும் வரக்கூடிய செய்திகளைக் கவனத்தில் வைப்பது மிக முக்கியமாக நினைக்கிறேன். குறைந்தது ஒருவாரத்திற்கு ஒரு செய்தியாவது கதைக்கான மையத்துடன் வருகிறது. இயக்குநர்களாக, கதாசிரியர்களாக இருப்பவர்கள் நாளிதழ்களையும், வார இதழ்களையும் தொடர்ந்து படிக்கவேண்டும். அதைவிடுத்து நாம் வெறும் புனைகதைகளாக தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம். புத்தகங்களில் ஒரு கதை வந்தால்தான் அதற்கான அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்று நினைக்கிறோம். அப்படிக் கிடையாது.

தமிழ் திரைப்பட உலகில், எழுத்தாளருக்கும், இயக்குனருக்குமான உறவு எப்படியிருக்கிறது. சில எழுத்தாளர்கள், தங்கள் படைப்புகளைப் படங்களாக பார்க்கிறபொழுது, “என் எழுத்தை இயக்குநர் சிதைத்துவிட்டார்என்று சண்டைகள் நடந்திருக்கிறது. அதேபோல இயக்குநர்களும், எழுத்தாளர்கள் மேல்என் படத்திற்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லைஎன்று குற்றம் சுமத்தலாம். இவ்விருவருக்கான புரிதல்களில் எந்த இடங்களில் தவறுகள் நடக்கின்றன?

கற்பனைகளின் உச்சம் எழுத்தாளன். திரைப்பட இயக்குனரைக்காட்டிலும் எழுத்தாளன் கற்பனையில் எந்த எல்லைக்கும் போகக்கூடியவன். அப்படி எழுதியவற்றையெல்லாம் படமாக்க வேண்டும் என்று நினைத்தால் அது எப்படிச் சாத்தியம்?. அவர்கள் எழுதியதெல்லாமே எழுத்திற்கானது. அவற்றை எப்படி திரையில் கொண்டுவரமுடியும்?.
மோகமுள்படத்தில் நான் வேலைசெய்தேன். ’மோகமுள்நாவலைப் படித்துவிட்டு ஆளாளுக்கு ஒரு கற்பனையில் இருந்தார்கள். ’மோகமுள்ஞானராஜசேகரனின் மனதில் தோன்றியதிலிருந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. உங்களுக்கு அந்நாவல் பற்றி வேறொரு பார்வை இருக்கிறதா? நீங்கள் நினைத்த பார்வையிலிருந்தும் அந்நாவலை நீங்களே படமாக்கலாம். அதில் என்ன பிரச்னை?.

பாரதியைப் பற்றி எழுபத்தைந்து ஆண்டுகளாக எவருமே படமாக்கவில்லை. அதை ஒரு இயக்குநர் எடுத்துவிட்ட பிறகு, அந்தப் படத்தைப் பற்றிக் குற்றம் சொல்வதற்கு அவர்களுக்குத் தகுதியே இல்லை. பாரதியை அவர் ஒரு கவிஞனாகப் பார்க்கிறார். பாரதியிடம் கவனிக்கத்தக்க எத்தனையோ விஷயங்கள் இருக்கிறது. அவரை ஒரு கணவனாக, தேசப்பற்றுள்ள ஒரு ஆளாக, இப்படி எத்தனையோ வகைகளில் நீங்கள் பாரதியை உருவகப்படுத்திக்கொள்ள முடியும். அந்த உருவகங்களின் அடிப்படையில் நீங்கள் எத்தனையோ படங்களை எடுக்கலாமே.

அதுபோல, எழுத்தாளன், திரைப்படக் கலைஞர்களைப் பார்த்து ஆதங்கப்படுவது அவர்களைப் பொறுத்தவரை நியாயமாக இருக்கலாமே தவிர, பொதுப்படையாகப் பார்க்கிறபொழுது அது சரியான பார்வையல்ல. முக்கியமாக, திரைப்பட இயக்குநர் என்பவர், எழுத்தை சிதைத்தால்தான் அது திரைப்படத்திற்குரிய வடிவமாக மாறும்.

எழுத்தை அப்படியே வைத்துக்கொண்டு ஒரு நல்ல திரைப்படத்தைச் செய்யமுடியாது. செய்யவும் கூடாது. அதனுடைய கருவை எடுத்துக்கொண்டு அதனைத் திரைமொழியில் கொண்டுவரும்பொழுதுதான் இருவருக்குமிடையில் பிரச்னை வருகிறது. நான் பூமணியின்கருவேலம்பூக்கள்திரைப்படத்தில் வேலை செய்திருக்கிறேன். சிவகாமியுடன்ஊடாகஎனும் படத்திலும் வேலை செய்திருக்கிறேன். பிறகு, மோகமுள், பாரதி, பெரியார்சிவசங்கரியின் கதையானகுட்டிபடத்திலும் பணிபுரிந்திருக்கிறேன். என்னுடைய கதை கல்வெட்டினை எடுத்துக்கொண்டாலும், அதைப்படித்துப் பாருங்கள், அதைவைத்துச் சொல்லுங்கள், அந்தக் கதையை படமாக எடுக்கமுடியுமா? அந்தக் கதையை அப்படியே படமாக எடுத்தால் ஓடுமா? அதனால்தான், ஆறு பக்கக் கதையைஅழகிஎன்ற திரைப்படமாக நான் மாற்றியிருக்கிறேன். பின்னர், ’ஒன்பது ரூபாய் நோட்டு’, ’அம்மாவின் கைபேசி’, இதெல்லாமே இலக்கியத்திலிருந்து மாற்றங்கள் பல செய்து வந்த படைப்புகள்தானே.

இயக்குனராக, நீங்கள் எழுதிய கதைகளை அதிகமாக படமாக்கியிருக்கிறீர்கள். அத்திரைப்படங்களை, இயக்குநர் பக்கமாக நிற்காமல்எழுத்தாளர் பார்வையிலிருந்து பார்த்து, இந்நாவல், அல்லது கதை சிதைக்கப்பட்டிருக்கிறது என்று தோன்றியதுண்டா?

அப்படிப்பார்த்தால், ”ஒன்பது ரூபாய் நோட்டுஎன்ற என் நாவல் படமாக்கப்பட்ட விதம் எனக்குப் பிடிக்கவில்லை. அந்நாவலை நான் சிதைத்துவிட்டேனோ, என்ற கோபம் என்மீது எனக்கே இருக்கிறது. இதுவும் எழுத்தாளனின் சுயநலம் தான்.

என்ன காரணம்?

இன்றைய காலகட்டத்தில்ஒன்பது ரூபாய் நோட்டுநாவலை திரைப்படமாக எடுக்கவே முடியாதுஇதை நான் எப்பொழுது புரிந்துகொண்டேனென்றால், நாவலில் நாற்பத்தாறு பக்கங்களுக்கு, மாதவர் ஆடுகளை வளர்ப்பதையும், அந்த ஆடுகள் செத்துப்போகிற கொடுமையையும் எழுதியிருப்பேன். நாவலாக இருந்தாலும், படமாக இருந்தாலும் இது மிக முக்கியமான கட்டம். இதை என்னால் எப்படி காட்சியாக்க முடியும்? இங்கு தான் ஆட்டின் மேல் கை வைத்தாலே, சென்சாரில் கேட்பார்களே!. பின்பு, இந்தக் காட்சியை எப்படி என்னால் திரையில் காட்ட முடியும்.?

இப்படி நிறைய படங்களில் நடந்திருக்கிறது. பாதித்த மிகச்சிறந்த விஷயங்களைக் கூட படங்களில் கொண்டுவர முடியாமலேயே போய்விடுகிறது.

இயக்குனராக, ஒளிப்பதிவாளராக அதிகம் அடையாளங்காணப்படுகிற நீங்கள், ஏன் ஒரு எழுத்தாளராக அதிகம் அறியப்படவில்லை?

நான் ஒரு திரைப்படக் கலைஞனாகவும், எழுத்தாளராகவும் இருக்கிற காரணத்தினால், ஏன் என் எழுத்தைப் பேசவேண்டும்? என நினைக்கிறார்கள். ஆனால், அவ்வளவு சிறந்த விஷயங்களைஒன்பது ரூபாய் நோட்டுநாவலில் எழுதி வைத்திருக்கிறேன். என்னுடையபெருவழியில் ஒரு கூத்து  மேடை’, அதை அப்படியே  திரைப்படமாக எடுக்கலாம். பசு, இசைக்காத இசைத்தட்டு இதையெல்லாம் படமாக எடுத்துக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு முக்கியமான கதைகள் என்னிடமே இருக்கிறது. அதை வேறு ஒரு நபரும், திரைப்படங்களாக எடுக்கலாம். என் கதையை நான் மட்டுமே எடுக்கவேண்டும் என்பதில்லை.

மற்றநாடுகளிலெல்லாம், எழுத்தாளர்களும், இயக்குநர்களும் இணைந்து நல்ல படைப்புகளைக் கொடுக்கிறார்கள். தமிழ்நாட்டில் அதுபோன்ற ஒரு வரலாறு இல்லை. எழுத்தாளர்கள் சினிமாவில் வேலை செய்தாலும், கலையாக அவர்கள் படைப்புகள் சிறந்துவிளங்க முடியாமல் போய்விடுகிறது. எழுத்தாளர்கள் சினிமாவில் வேலைசெய்வதற்கு போதிய பயிற்சி இல்லை என்று நினைக்கிறீர்களா?

அதுதான் உண்மை. இங்கு பிரச்னை என்னவென்றால்எழுத்தாளர்களுக்கு சினிமா பற்றி தெரிய வாய்ப்பே கிடையாது. ஒரு இடத்தில் உட்கார்ந்துகொண்டு பத்திரிக்கைகளில் விமர்சனங்கள் வேண்டுமானால் எழுதலாம். அதைக் கடந்து ஒரு படம் எடுத்துப்பாருங்களேன், அப்போதுதான் தெரியும். நான் அவர்களுக்கு கேமரா என எல்லா உதவிகளையும் செய்துதருகிறேன், ஆனால், அவர்களால் ஒரு காட்சியை எடுத்துவிட முடியாது. அப்படியிருக்க, அவர்கள் எழுத்து என்கிற இடத்திலிருந்து புரிகிற தர்க்கம் இருக்கிறதே!. ஆனால், நம் கதை இப்படித்தான் வரும், அதற்கு நாம் ஒத்துழைக்கணும் என்ற புரிதல் அவர்களிடம் இருந்தால் சிறந்த படைப்புகள் சாத்தியமாகும்

குறைந்த பட்சம் ஒரு  மூன்றாந்தர நாவல்கள் என்று சொல்கிறோமே, அந்நாவல்களாவது வெளிநாடுகளில் படமாகிறது. அவர்கள் எதைத்தொட்டாலும், பின்னால் ஒரு இலக்கியப் பின்புலம் இருக்கிறது. ஆனால், தமிழில் அதுபோன்று இல்லாததற்கான காரணமேஇந்த இயக்குநர்களுக்கு இலக்கியம் பற்றிய அடிப்படை புரிதல் இல்லாதது. அதற்கான பயிற்சி இல்லாதது. அதேபோல எழுத்தாளர்கள்என் எழுத்தையெல்லாம் எவனும் படமே எடுக்கமுடியாது’, என்று நினைப்பது

அவர்கள் ஒரு கதையை படமாக்கக் கொடுத்துவிட்டால், நாஞ்சில் நாடன் கொடுத்ததுபோல கதையைக் கொடுத்துவிட்டால், அடுத்து அவர்கள் ஒதுங்கி நிற்பதுதான் சரியானது. நாஞ்சில் நாடனுக்கு சொல்ல மறந்த கதைமிகவும் பிடித்திருந்தது, அதுதான் எனக்கு பெரிய மகிழ்ச்சியைத் தந்தது. அந்நாவல் போலவே படமும் வரவேண்டுமென்று நாஞ்சில் நாடனே அப்படத்தை இயக்கினாலும் அது நடக்காது. இலக்கியம் என்பது வேறு, திரைப்படம் என்பது வேறு. அப்படி ஒரு எழுத்தாளனின் மனநிலையை சிதைக்காமல் படமெடுப்பதும் இயக்குனருக்கு முக்கியம்.

எனக்கும் ஒரு ஆசை. இங்கிருக்கிற எழுத்தாளர்களும், திரைப்பட இயக்குநர்களும் சேர்ந்து ஒரு படைப்பை உருவாக்கும்பொழுது, மிகச்சிறந்த படைப்புகள் நமக்குக் கிடைக்கும். இது எதிர்காலத்தில் கனியும். ஏனெனில் இப்போது நவீன இலக்கியப் புரிதல்களோடு நிறைய இளைஞர்கள் உள்ளே வருகிறார்கள்.


தமிழில் எழுத்தாளர்களின் மனக்குறையாக, சிலவற்றைச் சொல்லலாம். அதன்படி என் கதையிலிருந்து இந்தக் காட்சியை எடுத்துப் பயன்படுத்தியிருக்கிறார்கள். என் கதையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள், அதற்கான பணத்தைத் தரவில்லை, என்ற செய்திகள் அடிக்கடி கேள்விப்படலாம். ஒரு தயாரிப்பாளராகவும் செயல்படுகிற நீங்கள் இவற்றை எப்படி அணுகுகிறீர்கள்?

மற்றவர்களைப் பற்றித் தெரியவில்லை. ஆனால், நாஞ்சில் நாடனுக்கு, அவர் எதிர்பாராதபடிக்கு தன்னிறைவாக கொடுத்திருக்கிறேன். அதேபோல எல்லோரும் செய்வார்களா என்பது தெரியாது. ஆனால், நீ நஷ்டப்பட்டாலும், எழுத்தாளர்களுக்கு, அவர்களுக்குரிய பொருளை  கொடுத்தாக வேண்டும். கதையிலிருந்து ஒரு விஷயத்தால் கவர்ந்து, உள்வாங்கி ஒரு படைப்பை எடுப்பதென்பது வேறு. ஆனால், திருடினாலும் எழுத்தாளருக்குரிய பங்களிப்பைச் செய்யவேண்டும்.

அடுத்தது, தயாரிப்பாளருக்கு இதுபற்றியெல்லாம் என்னவென்றே தெரியாது. இயக்குநர்கள் தான் எழுத்தாளர்களுக்கு, தயாரிப்பாளர்களிடம் எடுத்துச்சொல்லி பணம் வாங்கித்தரவேண்டும். தயாரிப்பாளர்களும் எழுத்தாளர்களுக்கு பணம் கொடுக்கக்கூடாது என்று நினைப்பதில்லை. அதை முறைப்படி இயக்குநர் செய்வதுதான் நல்லது

இலக்கியம் எழுதுகிற எழுத்தாளர்கள் மேல்மட்டத்தில் இருப்பதுபோலவும், சினிமா எடுப்பவர்கள் அவர்களை விடக் கீழே இருப்பதுபோலவும், ஒரு பார்வை இருக்கிறது. சினிமாக்காரர்களே தங்கள் நிகழ்ச்சிக்கு இலக்கியவாதிகள் வந்தால் தங்களுக்கு ஒரு கெளரவம் கிடைத்ததாக நினைக்கிறார்கள். படைப்பு சார்ந்து இல்லாமல், தனக்கான மரியாதைக்காக,   இயக்குநர்கள் கூட எழுத்தாளர்களை அருகில் வைத்துக்கொண்டு வேலை செய்வது போன்ற போக்கு ஆரோக்கியமானதாக இருக்கிறதா?

மிகத் தவறானதுதான். இலக்கியம் என்பது அவரவர்களுக்குப் பிடித்த கதைகளை எழுதி வைப்பதல்ல. ஒரு காலத்தினுடைய வரலாறு, நிகழ்காலம், நிகழ்கால வரலாறு, கடந்தகால வரலாறு, பின்பு மக்களின் மனநிலை, சமூகத்தின் பிரச்னைகள், எதிர்காலச் சிக்கல்கள் என எல்லாவற்றையும் உள்ளடக்கியதுதான் இலக்கியம். இதைக் கடந்தா ஒரு திரைப்படம் செய்யப்போகிறீர்கள்? அப்படியெனில் அதைப் படித்துத்தானே ஆகவேண்டும். ஆனால், எனக்கு  என்ன தெரியுமோ, அதை வைத்துமட்டும் படமெடுக்கிறேன் என்பதில்தான் பிரச்னை. அதேநேரத்தில் அவர்களுக்குள்ளும் ஒரு ஆசை இருக்கிறது. இந்த எழுத்தாளர்களை வைத்துக்கொண்டு இந்தக் கதையை எடுக்கலாம், என்று நினைத்தால் அந்த எழுத்தாளர்கள் சொல்கிற கதைதான் திரைப்படமாக வரும்.

திரைப்படக் கல்லூரியில் நான் படித்ததால் தெரிந்துகொண்டது என்னவென்றால், எனக்குத் தெரிந்து அங்குள்ளது போன்ற புத்தகங்கள் எங்குமே கிடையாது. கொல்கத்தா, மும்பை, டெல்லி போன்ற இடங்களிலும் பார்த்திருக்கிறேன். அவற்றையெல்லாம் விட மிகச்சிறந்த நூல்கள் எல்லாம் சென்னைத் திரைப்படக் கல்லூரியில்தான் இருக்கின்றன. நான் அவற்றை படித்தேன். அதனால், அது எனக்குப் புரிந்துவிட்டது. மற்றவர்களுக்குப் புரியவில்லை. என் கூட இருந்தவர்களையே அந்நிலைக்கு கொண்டுவர முடியவில்லையே!. இந்த வேறுபாட்டைத் தீர்க்கவேண்டுமெனில், வேறு வழியே கிடையாது, இங்கு எல்லோருக்குமே அடிப்படை இலக்கியப் புரிதல் வேண்டும். அது இல்லாமல் எதுவும் சாத்தியமே கிடையாது.