முறைப்படுத்தப்பட்ட முறைகேடுகள்
எப்போது இந்த நாட்டுக்கு
விடுதலை கிடைத்ததோ, அப்போதே இந்த
மண்ணில் லஞ்சமும் ஊழலும் முளைக்கத் தொடங்கிவிட்டன. விடுதலை பெற்ற இந்த 68 ஆண்டுகளில் எது வளர்ந்ததோ இல்லையோ, ஊழலும் லஞ்சமும்
மட்டும் யாராலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு எல்லாத் துறைகளிலும், எல்லோரின் மனங்களிலும் வளர்ந்து நிற்கிறது. சமூகத்தில் நிகழும்
ஏற்றத்தாழ்வுக்கு எல்லாருக்கும் எல்லாமுமே கிடைக்கும் என்கின்ற உத்தரவாதமற்ற
நிலைதானே காரணம்.
குழந்தைகளிலிருந்து
கடவுள் வரைக்கும் லஞ்சம் கொடுக்கப் பழக்கப்பட்டுவிட்டது இந்த சமூகம். பணம்
இருந்தால் எவ்வளவு பெரிய கூட்டத்திலும், எல்லோரையும்
கடந்து தனி ஆளாக அனைத்து மரியாதைகளோடு கடவுள் சந்நிதானத்தின் முன் நின்றுவிடலாம்.
பணம் இல்லாதவன் தொலைவில் நின்று, இருளில் நிற்கும் சிலையைப்
பார்த்து தோராயமாகக் கும்பிட்டுவிட்டுத் திரும்ப வேண்டியதுதான்.
இளம்
பருவத்திலேயே தன்னைச் சுற்றிலும் நிகழ்கின்ற இது போன்றச் செயல்களைப் பார்த்து
வளரும் குழந்தைகள், அதனை ஒரு குற்றமாகவும் சீர்கேடாகவும் நினைக்காமல்,
அதனை ஒரு முறையாகவே பார்த்து தாங்களும் அதனைக் கடைபிடிக்க
பழகிவிடுகிறார்கள்.
எனது பள்ளிப் பருவத்தில் நிகழ்ந்த
அந்த நிகழ்வு ஒன்றுதான், இப்போது எனக்கு நினைவுக்கு வருகிறது.
பிற்படுத்தப்பட்ட
மாணவர்களுக்கான உதவித்தொகை 70 ரூபாயைப் பெறுவதற்குள் நான்
பட்டப் பாட்டைச் சொல்லாமலிருக்க முடியவில்லை. தொடர்ந்து நான்கு நாட்கள்
வட்டாட்சியரிடம் கையெழுத்துப் பெறுவதற்காக, எங்கள்
ஊரிலிருந்து புறப்பட்டுச் சென்று பண்ருட்டியில் காலை 9 மணிக்கெல்லாம்
நின்றுவிடுவேன். என்னைப் போலவே என் பள்ளியில் இருந்து நிறைய மாணவர்கள்
வருவார்கள். வட்டாட்சியர் வேகமாக வருவார். அலுவலகத்தில் பல மணி நேரம் இருப்பார்.
பின்னர்
விர்ரென்று ஜீப்பில் புறப்பட்டுப் போய்விடுவார். இப்படியே நான்கு நாட்கள்
கழிந்தன. பள்ளிக்குப் போகாமல் அந்த ஒரே ஒரு கையெழுத்துக்காக காத்துக் கிடந்த
நான்காவது நாளில்தான், அந்தக் கையெழுத்து எங்களுக்குக் கிடைத்தது.
மாணவர்கள் ஆளுக்கு இரண்டு ரூபாய் போட்டு வட்டாட்சியருடைய உதவியாளரிடம் கொடுத்தப்
பின்னர்தான் அதுவும் சாத்தியமாயிற்று.
இறுதி
வரைக்கும் வட்டாட்சியரின் முகத்தை நாங்கள் பார்க்கவே இல்லை. பேருந்துக்காக
வைத்திருந்த பணத்தை வட்டாட்சியர் அலுவலகத்தில் கொடுத்துவிட்டதால், அந்த 13 கிலோ மீட்டர் தொலைவை செருப்பில்லாத
கால்களோடு நடந்து இரவு 9 மணிக்கு வீடு வந்து சேர்ந்ததையும்
அம்மா சுடுதண்ணீர் வைத்து கால்களுக்கு ஒத்தடம் கொடுத்ததையும் இன்னும் என்னால்
மறக்க முடியவில்லை.
எப்படியாவது மக்களின் வாக்குகளைப் பெற
வேண்டும் என்பதற்காக கோடிக்கணக்கான பணத்தைச் செலவழித்து வாக்குகளைப்
பெற்றுவிடுகிறார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் செலவழித்த தொகையை அறுவடை
செய்வதற்காகவும் மேலும் ஆட்சியைத் தொடர்வதற்காகவும் லஞ்சம், ஊழல் என்கிற ஆயுதங்கள் கையில் எடுக்கப்படுகின்றன. தங்களின் காரியங்கள்
நிறைவேறப் பணத்தைக் கொண்டுபோய்க் கொடுக்கின்ற மக்களே, இந்தக்
கொடுமைக்கு துணையாயிருப்பதுதான் நம் சமூகத்தின் மிகப்பெரும் இழிவான, அவமானகரமான அவலநிலையாகும்.
நான்
ஆட்சிக்கு வந்தால் லஞ்சம், ஊழல் இருக்கவே இருக்காது என்று சொல்லி ஒருவர்
மாற்றத்தை ஏற்படுத்த முற்பட்டாலும், மக்கள் அதனை நம்பத் தயாராக
இல்லை. இந்தப் பரிதாபமான நிலைக்கும் காரணம் மக்கள்தான். பணம் கொடுத்தால் நம்முடைய
வேலை நடக்கிறதல்லவா… அதுவே போதும் என மக்கள்
நினைக்கிறார்கள்.
லஞ்சத்தை
வளர்த்ததற்காக ஒருவர் இங்கே தேர்தல் மூலம் தண்டிக்கப்பட்டிருந்தால், ஊழல் மூலம் கோடிக் கோடியாக மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் இங்கே
நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்டிருந்தால், சட்டமன்றங்களிலும்
நாடாளுமன்றங்களிலும் நுழைய முடியாத மாதிரி சட்டத்தின் வாயிலாகத்
தடுக்கப்பட்டிருந்தால்… தவறு செய்பவர்களுக்கு நிச்சயம் பயம்
இருக்கும்.
எவ்வளவு
காலம் வேண்டுமானாலும் வழக்கைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கலாம் என்பதால், இங்கே என்ன மாற்றம் நிகழ வாய்ப்பு இருக்கிறது? சட்டத்தின்
மீதும் நீதிமன்றத்தின் மீதும் பயம் போய்விட்டது. இங்கே சட்டத்துக்கும், நீதிமன்றத்துக்கும், காவல்துறைக்கும் பயந்து
வாழ்ந்து கொண்டிருப்பதும் அலைக்கழிக்கப்படுவதும் அன்றாடங்காய்ச்சிகளாக வாழும்
மக்கள் மட்டும்தான். பாதிக்குப் பாதி குற்றவியல் வழக்குகளில் சிக்கியுள்ள
அரசியல்வாதிகளைக் கொண்டு எவ்வாறு தூய்மையான ஆட்சியைத் தந்து விட முடியும்?
ஐநூறு
ரூபாய், ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றவர் முகத்தை
மூடிக்கொள்ள, அவரை காவல்துறையினர் இழுத்துக் கொண்டுப்
போவதை ஊடகங்களில் வெளியிடுவதும், நாட்டின் சொத்தையும்
மக்களின் வரிப் பணத்தையும் குறுக்கு வழியில் கொள்ளையடிப்பவர்களை கொண்டாடுவதும்
நடைமுறையாக இருக்கிறது.
நீதி, காவல்துறை, ஆட்சித்துறை, கல்வித்துறை
என எல்லாத் துறைகளிலும் எனக்கு நண்பர்களும், என்மேல்
அன்புள்ள பற்றாளர்களும் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் நேர்மையாகச்
செயல்படுவதனாலேயே எப்படியெல்லாம் பழி வாங்கப்படுகிறார்கள், துன்புறுத்தப்படுகிறார்கள்,
அவமானப்படுத்தப்படுகிறார்கள் என்பதையும் நான் தொடர்ந்து
பார்த்துக்கொண்டேதான் இருக்கிறேன். இத்தகைய மாசற்ற மனிதர்களும் இந்த லஞ்ச,
லாவண்யக் கூட்டத்தோடு சேர்ந்துவிட நெடுநேரம் ஆகாது.
தகுதியுடைய
எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கும் என்றால், யாரும்யாருடையதையும்
பறிக்க வேண்டியதில்லை. இங்கு தகுதி இல்லாதவர்களுக்கு மட்டுமே இடம் தரப்படும்போது,
தகுதி உடையவர்களும் லஞ்சம் தரத் தயாராகிறார்கள். கொடுத்ததை
மீண்டும் எடுக்க அந்தச் செயலை இவர்களும் செய்து, இறுதியாக
ஊழல்வாதிகளாகி செத்து மடிகிறார்கள்.
இரண்டு பேருக்கு மட்டுமே தரப்போகிற
வேலைக்காக ஆயிரம் பேர்கள் வரிசையில் நிற்கின்றனர். இதுவே லஞ்சம் கொடுக்க வழி வகை
செய்கிறது. எல்லோருக்கும் வேலை வேண்டும் என்பதை யாருமே முன்வைப்பதில்லை.
உற்பத்தித்துறை முற்றாக முடங்கிவிட்டது. அதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை.
சேவைத்துறை மட்டுமே வளர்ந்து கொண்டிருக்கிறது. இங்கே தொடர்ச்சியாக மீறப்பட்ட
முறைகேடுகளே முறையானவையாக மாற்றப்பட்டுவிட்டன.
இந்த
அவல நிலைக்கு இதனை யாரும் கண்டுகொள்ளாத சமூக நிலையே காரணம். ஒரு இயந்திரம்
இயல்பாக இயங்க, அதற்கு உராய்வு எண்ணெய் அவ்வப்போது இடப்படுவதைப்
போல, சமூக இயக்கத்துக்கு லஞ்சம் என்கிற எண்ணெய்யை
அவசியமாக்கிவிட்டார்கள்.
- இன்னும் சொல்லத்தோணுது...
எண்ணங்களைத் தெரிவிக்க...
thankartamil@gmail.com
- இன்னும் சொல்லத்தோணுது...
எண்ணங்களைத் தெரிவிக்க...
thankartamil@gmail.com
No comments:
Post a Comment