Sunday, 31 May 2015

Director Thankar Bachan Speaks about Balu Mahendra

Director Mahendran Speech at Thankar Bachan Kathaigal - Book Launch - Video 3

Thankar Bachan Kathaigal – Book Launch - Video 2

Thankar Bachan Speech at Thankar Bachan Kathaigal - Book launch

Actor Sathyaraj at Thankar Bachan Kathaigal - Book launch

Director Balu Mahendra Speech at Thankar Bachan Kathaigal - Book launch

Thankar Bachan Kathaigal – Book Launch - Video 1

Kalavadiya Pozhudhugal - Pressmeet - Thankar Bachan

Kalavadiya Pozhudhugal -Thedi Thedi - Video song

Kalavadiya Pozhudhugal - Azhagazhage - Video song

Kalavadiya pozhudhugal - Official Trailer - 2

Kalavadiya Pozhudhugal - Official Trailer

Saturday, 30 May 2015

சொல்லத் தோணுது 36: காசிருந்தால் வாங்கலாம்!


எந்தப் பொறுப்பும் அற்ற மக்களையாவது என்றைக்காவது ஒருநாள் சிந்திக்க வைத்துவிட முடியும். இம்மக்களுக்கு அரணாக இருக்கும் அரசை யார்தான் சிந்திக்க வைப்பது? சமூகத்தின் எந்த சிக்கல்களும் அவர்களின் காதுகளுக்கு எட்டியதுபோல் தோன்றவில்லை.
வாரம் ஒருமுறை ஊடகங்களை சந்திப்பேன் எனக்கூறிவிட்டு ஆட்சி முடியும் வரை அதை நிறைவேற்றாத அரசாங்கம் யார் மூலமாக மக்களின் தேவையை உணர்ந்து கொள்கிறது? மக்களாட்சியின் தூண்களில் நான்காவதான ஊடகங்களே ஆட்சியாளர்களை நெருங்க முடியாத பொழுது, வாய்க்கும் வயிற்றுக்குமே திண்டாடிக் கொண்டிருக்கின்ற ஒரு சாதாரண குடிமகன் எவ்வாறு அவனது கோரிக்கைகளை இந்த அரசிடம் எடுத்துக்கூற முடியும்?
இப்போது எந்தத் துறைக்கு எந்த அமைச்சர்கள், அவர்களின் பெயர்கள்தான் என்ன என்பது ஊடக நண்பர்களுக்கேத் தெரியவில்லை.விபத்துக்குள்ளாகும் பொழுதும், மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைக்காக சேர்க்கப்படும்பொழுதும், பதவி மாற்றம் அல்லது நீக்கம் செய்யும்பொழுது மட்டுமே அவர்கள் குறித்த செய்திகள் வெளியாகின்றன.

மனிதனை உருவாக்குகின்ற மனித முயற்சியே கல்வி எனக் கூறலாம். அந்தக் கல்வியைப் பெறுவதற்காக ஒவ்வொரு சாதாரண மனிதனும் இன்று எவ்வாறு எத்தனை சோதனைகளையும், தடைகளையும், போராட்டங்களையும் கடக்க வேண்டியிருக்கிறது!
இம்மண்ணில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் தர வேண்டிய அடிப்படைத் தேவைகளான கல்வி, மருத்துவ வசதிகள்கூட தனியார் வசம் ஒப்படைத்து விட்டதால் ஏற்படுகின்ற இன்னல்கள் கணக்கற்றவைகள். ஈ, எறும்பு போல், பறவை விலங்கினங்கள் போல் தினமும் கை, கால்களைக் கொண்டு உழைதால் மட்டுமே உணவு கிடைக்கும் எனும் நிலையில் இருக்கும் அன்றாடங்காய்ச்சி மக்கள் இந்தக் கல்வியைப் பெறுவதற்காகவும், நோய்களிலிருந்து உடலைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் படும் பாட்டை கடமைப்பட்டவர்கள் உணரவேயில்லை. அதனால்தான் இவைகளை தனியாரிடம் கொடுத்துவிட்டு வருவாய் தரும் மதுவை விற்பதிலேயே கவனம் செலுத்தி கொண்டிருக்கிறார்கள்.

அரசு பொறுப்பிலிருந்து நழுவியதால் அந்தச் சுமை முழுக்க பெற்றோர்களின் தலையில் விழுந்து விட்டது. அரசாங்கம் இந்தப் பிள்ளைகளுக்கு பணம் செலவில்லாத கல்வித் தந்து பொறுப்புடன் செயல்பட்டிருந்தால் தன் உழைப்பையும், இம்மக்கள், இம்மண், இந்நாடு என சிந்தித்து கடமையாற்றுவான். அவனிடம் பணம் வாங்கிக் கொண்டு கொடுத்ததால் தன் குடும்பம், தன் நலம் மட்டுமே என சமூகத்திலிருந்து கழன்று விடுகிறான்.
சொர்க்கவாசலை திறந்து வைத்துவிட்டோம் எனச் சொல்லித்தான் புதிய பொருளாதாரக் கொள்கைகளை அறிமுகப்படுத்தினார்கள்.விடுதலைபெற்று 67 ஆண்டுகளைக் கடந்த பின்னும் இன்னுங்கூட உயர்கல்வி என்பது சாதாரண மக்களுக்கு கனவாகவும் எட்டாக்கனியாகவும் இருந்து கொண்டிருக்கிறது.வசதியும், வாய்ப்ப்பும், வலிமையும் படைத்த மேட்டுக் குடியினர் அதிகப் பணம் கொடுத்து பெறும் இக்கல்வி எவ்வளவு ஆற்றல் திறமைகள் இருந்தாலும் எளிதில் ஒரு சாதாரண மனிதனுக்குக் கிடைத்து விடுவதில்லை.

ஏற்கெனவே படித்து முடித்து வேலையில்லாமல் அலைபவர்கள் ஒரு கோடியைத் தாண்டிவிட்ட நிலையில் இன்னும்கூட தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு அலையும் பொறியியல் பட்டதாரிகளாக மாற்றிவிட்டதோடு அல்லாமல் அவர்களுக்கு படிக்கக் கடன் கொடுத்து கடனாளியாகவும் மாற்றிவிட்டப் பெருமை அரசாங்கத்தையே சாரும்.

500 மதிப்பெண்களுக்கு 499 மதிப்பெண்ணை 41 பேர் பெறும் மாநிலமாக இருப்பது எல்லோருக்கும் பெருமைதான். உண்மையில் இவர்களை உருவாக்கிய கல்வி தரமானது என்றால் ஏற்கெனவே இதேபோன்று அதிக மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களைக் கொண்டு எந்த மாதிரியான சமுதாயத்தை உருவாக்கி விட்டோம்.
என் உறவுக்காரப்பெண் ஒருத்தி ஒரு கிராமப் பள்ளியில் படித்துவிட்டு 1122 மதிப்பெண்களை பெற்றுவிட்டாள் என அனைவரும் மகிழ்ந்தது போலவே நானும் மகிழ்ந்தேன். முன்பின் நகரத்தை,கல்லூரியைப் பார்த்தறியாதவள் என்பதால் உயர்கல்விக்கான கல்லூரியைத் தேர்வு செய்யும் பொறுப்பை நானே ஏற்றுக் கொண்டேன். தேர்வுமுடிவு தெரிந்த நாளிலிருந்து தொடங்கப்பட்ட இது தொடர்பான வேலைகள் நேற்றுதான் ஒருவாழியாக முடிந்தது. வெறும் கையெழுத்தை மட்டுமே எழுதத்தெரிந்த அவளின் தந்தை தினமும் காலையில் எழுந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் போய் நின்றால் இரவுதான் கிராமம் திரும்புவார். அவருக்கு யாரைப் பார்த்தாலும் கைகட்டி மரியாதை கொடுக்க மட்டுமேத் தெரிந்திருக்கிறது.
இருப்பிடம், வருமானம்,முதல் பட்டதாரி போன்ற சான்றிதழ்களைப்பெற அவர் பட்டப்பாட்டினை என்னால் விளக்கி மாளாது. இத்தனைக்கும் நாள்தோறும் அவர்கள் கூறும் நேரத்துக்கொல்லாம் போய் வாசலிலேயே நின்று விடுவார். கடைசிநாள் நெருங்கிவிட்டதைக் காரணம் காட்டி எனது நண்பர் ஒருவர் உடன் சென்று அழுத்தம் கொடுத்தப்பின்தான் அந்தத்தாள்கள் இறுதிநாளில் கைக்குக்கிடைத்தது.

இவ்வாறு ஒவ்வொரு வட்டாச்சியர் அலுவலகத்திலும் தினமும் பிழைக்கிற கூலிவேலைப்பிழைப்பை விட்டுவிட்டு கால்கடுக்க பசியுடன் தெருநாய்போல காத்துக்கிடக்கும் பொற்றோர்கள் எந்த பாவத்தைச் செய்தார்கள். இந்த தாளைக் கொடுப்பதற்கு அவர்களை எத்தனை முறை எங்கெல்லாம் அலைய வைக்கிறார்கள்.
தானேபுயலில் தாக்குப்பிடித்து உயிர்வாழும் மரத்திலிருந்து ஒரு பலாக்காயுடன் தந்தையும் மகளும் சென்னை வந்து நான்கு நாட்களாக என் வீட்டிலேயேத் தங்கியிருந்தார்கள். அந்தப்பளியிலேயே முதல் மாணவியாக அனைவராலும் பாராட்டைப் பெற்று வந்தவளுக்கு மேற்படிப்பாக எதைத்தேர்வு செய்வது என்கிற தெளிவில்லை; விண்ணப்பங்களை நிரப்பத் தெரியவில்லை. கணினி வலைதளங்கள் மூலம் எவ்வாறு விண்ணப்பிப்பது என்கிற அறிவும் இல்லை. எந்தப்படிப்பைச் சொன்னாலும் படிக்கிறேன் என்கிறாள். மூன்று நாட்கள் இரண்டுபேர் உதவிசெய்து அவள் பெயரில் ஒரு மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி இணையதளம் மூலம் நிரப்பி பணம் செலுத்தி விண்ணப்பித்தோம்.
கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க அவர்கள் பட்ட பாட்டை கண்டு கலங்கிவிட்டேன். நகரத்து மாணவர்களோடு கிராமத்து மாணவர்கள் எதிலெல்லாம் போட்டிப்போட வேண்டியிருக்கிறது? எந்தெந்த கல்லூரிகளில் எந்தெந்தப் பாடங்களைப் படிக்கலாம் என்கின்ற ஆலோசனைகளைத் தரவேண்டியது இந்த அரசாங்கம்தான். ஆனால், அதற்கோ வேறு வேலைகள் இருப்பதால் தனியார் தொலைக்காட்சிகளில் பணத்தைக் கொடுத்துவிட்டு கல்விக் கொள்ளையர்கள் அவரவர்களுக்கு சாதகமாக மாணவர்களை வலைவீசி பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். பின்னிரவு நேரங்களில் தொலைக்காட்சிகளில் இனவிருத்தி ஐய்யங்களுக்கு பதிலளித்து லேகியம் விற்பதுபோல கல்வி திறனாய்வாளர்கள் ஆலோசனை தந்து கொண்டிருக்கிறார்கள்.

விவசாயக் கல்லூரிகளையும் தனியார் மயமாக்கிவிட்டக் கொடுமை நம் நாட்டில்தான் நடந்திருக்கிறது. விவசாயம் தொடர்பான எந்தவித அடிப்படை அறிவும் இல்லாதவர்கள் 16 பாடப்பிரிவுகளைப் பார்த்து ஏதாவதொன்றை தேர்வு செய்துகொள்ள வேண்டும். அதை இணையதளம் மூலமாக மட்டுமே செய்ய முடியும். எந்த விவரமும் அறியாத குழப்ப நிலையிலுள்ள ஏழை எளிய மாணவனால் எவ்வாறு இதை விண்ணப்பிக்க இயலும்?விண்ணப்பப் படிவங்களுக்கு, கலந்தாய்வுகளுக்கு இணைப்புச் சான்றிதழ்களுக்கு சான்றொப்பங்களுக்கு என எல்லாவற்றுக்கும் பணத்தை செலவு செய்து அலையும் இந்நிலை தொடரத்தான் வேண்டுமா?
ஐ.ஐ.டி., ஐ.எம்.எம்., எல்லாம் வசதி படைத்தவர்களுக்கு மட்டும்தானா? துணை வேந்தர்களின் தகுதியும்,தரமும், பதவிபெரும் முறைகளையும் ஊடகங்கள் மூலமாக அறியும் பொழுது அவர்களின் பொறுப்பில் இயங்கும் கல்லூரிகளிலிருந்து இந்த ஏழைகளுக்கு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எந்த நியாயம் கிடைக்கும்?

கல்வியின் தேவையையும், நோக்கத்தையும் புரிந்துகொள்ளாமல் அதையும் வணிகமயமாகப் பார்க்கும் அரசாங்கம் உள்ளவரை சமுதாயத்தில் எந்த மாற்றங்களும் நிகழப்போவதில்லை!

- சொல்லத் தோணுது…
#ThankarBachan

Saturday, 23 May 2015

சொல்லத் தோணுது 35: அசோகர் மீண்டும் பிறப்பாரா?

பணத்தை சம்பாதிக்க ஓடிக்கொண்டிருக்கும் நாம் தண்ணீருக்கும் சேர்த்து சம்பாதிக்க பழகிவிட்டோம். தேவையின்றி வீணாக்கப்படும் ஒவ்வொரு துளி நீரும் மீண்டும் திரும்பி வராது என்பது புரிவதில்லை. உலகத்தில் விலை மதிக்கமுடியாத ஒன்று தண்ணீர்தான் என்பதை மற்ற நாடுகளும்,மற்ற மாநிலங்களும் உணர்ந்து செயல்படுவதுபோல் இன்னும் நாம் செயல்படவில்லை. பணம் கொடுத்தால்தண்ணீர் வரும் என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அரசாங்கத்தை மட்டுமே குறை சொல்லப்பழகிவிட்ட நாம் ஒவ்வொரு நிமிடமும் செய்யும் குற்றங்கள் பற்றி சிந்திப்பதே இல்லை. நிறைய மழை பெய்தால் நிலைமை சரியாகிவிடும் என நினைக்கிறோம். 
தண்ணீருக்குப் பஞ்சமான நாட்டில் வளர்சசியும், செழுமையும் காணாமல் போய்விடும். தண்ணீரை பாட்டிலில் பிடித்து விற்கும் நிலைக்கு அரசாங்கமே திட்டங்களை வகுத்தற்குக் காரணம் நம்மை தொடந்து ஆண்டவர்களா? அரசாங்கத்தை நடத்திய அதிகாரிகளா? இதைப்பற்றி சிந்தனை இல்லாத இந்த மக்களா? மக்கள் உயிர் வாழ்வதற்கான குடிநீரைக்கூட விலையில்லாமல் தாரளமாக தரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டது குறித்து யாருக்குமே இன்னும் குற்றவுணர்ச்சி இல்லை. வங்கியில் சேமித்து வைத்திருக்கின்ற பணத்தை கண்மூடித்தனாமாக எடுத்து செலவு செய்வதை மட்டுமே வேலையாகக் கொண்டு பணத்தை சேமிப்பது குறித்து சிந்திக்காமல் விட்டுவிட்டால் என்ன நடக்குமோ அதுதான் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. 
எப்பொழுதிலிருந்து தண்ணீரை பாட்டிலில் பிடித்து விலைக்கு விற்கப்படுவதை பார்த்தீர்கள்? நினைவிருக்கிறதா? வரலாற்றில் இதுவரை இப்படி தண்ணீரை விற்பது குறித்து கேள்விப்பட்டிருக்கிறோமா? நம் கண்முன்னே வெறும் இருபது ஆண்டுகளில்தான் இந்தக்கொடுமையும், சீர்கேடும் நடந்திருக்கிறது. நீரையும், நீர் ஆதாரங்களையும் பாதுகாக்கத் தெரியாதவர்கள், அது பற்றி அக்கறையில்லாதவர்கள் மூலமாகவே இத்தகைய சீரழிவு நிகழ்ந்திருக்கிறது. இருபத்தி நான்கு மணி நேரமும் பணத்தை எப்படி சேர்த்து வைப்பது எனத் தெரிந்தவர்களுக்கு, தண்ணீரை சேர்த்து வைப்பது குறித்து சிந்திக்கவே நேரமில்லாமல் போய்விட்டது. 
மழை என்பது உடலுக்கு குளிச்சியைத் தருவதற்காகவும், பார்த்து மகிழ்வதற்காகவும் மட்டுமே என நினைக்கும் ஒரு சமுதாயத்தை உருவாக்கி வைத்து விட்டோம். நகரத்து மனிதர்களுக்கு மழை என்பது எப்பொழுதுமே ஒரு இடைஞ்சல் தான். மழைநீரை பாதுகாப்பதிலும், தண்ணீரை வீணாக்காமல் இருப்பதிலும் தங்களுக்கு எந்தப்பொருப்பும் இல்லை என நினைத்து மக்கள் வாழப்பழகிவிட்டார்கள். நீர்ப்பாதுகாப்பு, நீர் மேலாண்மை குறித்து நம் கல்வி பாடத்திட்டங்களில் சொல்லித் தருவதே இல்லை. குழந்தைகளாக இருக்கும் பொழுதே அதற்கான சிந்தனையும், பயிற்சியும் தரப்பட்டிருந்தால் இந்த சீர்கேடு நிகழ்ந்திருக்காது. கேரளாவும், கர்நாடகமும், ஆந்திராவும் தான் நம்முடைய தண்ணீர் பற்றாக்குறைக்கெல்லாம் காரணம் என ஒவ்வொருவரும் நினைத்துக் கொள்ளும் அளவுக்கு நம் அரசியல்வாதிகள் நம் மக்களை பயிற்று வைத்திருக்கிறார்கள். 
அண்டை மாநிலங்கள் நீர் ஆதாரங்களை பாதுகாப்பதற்கும், பெருக்குவதற்கும், மழைநீரை சேமிப்பதற்கும், நிலத்தடி நீரை பாதுகாப்பதற்கும் உருவாக்கும் திட்டங்களையும்,நடவடிக்கைகளையும் கண்டு கொள்ளாமல், முல்லைப் பெரியாற்றுக்கும், காவிரியாற்றுக்கும், பாலாற்றுக்கும் சண்டைபோட்டு அரசியல் செய்வதிலேயே ஐம்பது ஆண்டுகளை கழித்துவிட்டோம். நம்மிடமிருக்கும் தமிழகத்திற்குச் சொந்தமான ஆறுகளை பாதுகாப்பதிலும், தூய்மையாக வைத்துக் கொள்வதிலும் அக்கறை செலுத்தாமல் 17 முதன்மை ஆறுகளையும், 16 துணை ஆறுகளையும் அழித்தொழித்துவிட்டோம். குடிமைக் கழிவுகளையும், தொழிற்சாலைக்கழிவுகளையும் தூய்மைப்படுத்தி கையாளும் முறையை கடைபிடிக்காமல் ஆறுகளை குப்பைத் தொட்டிகளாக கையாண்டு சாக்கடையாக மாற்றி ஆட்சி நடத்திவிட்டோம்.
நீரை உறிஞ்சி நிலத்தடியில் சேமிக்க உதவும் மணலை அள்ளி விற்பதையே இருபத்தி நான்கு மணி நேரத் தொழிலாகச் செய்து வேளாண்மைக்கு வழியில்லாமல் போனதோடு அல்லாமல் குடி நீருக்கே அலைகிறோம். ஐநூறுக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ள மாநிலத்தில்தான் இ்நதக் கொடுமை நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நீர் பாதுகாப்பு, நீர் ஆதாரங்கள், நீர் மேலாண்மை பற்றிய எந்த அறிவையும் பெறாத பொறியாளர்களையும் மாணவர்களையும் உருவாக்கிக் கொண்டேயிருக்கிறோம். 
வரலாறு பாடங்களைப் படிப்பதையும், படித்தவர்களையும் கேவலப்படுத்தி பரிகாசம் செய்தோம். ‘குளம், குட்டை வெட்டினார், மரம் வளர்த்தார், ஏரிகளைப் பெருக்கினார்’ என பழைய பாடத்தையே சொல்லிக் கொடுத்து அசோகர் ஆட்சி செய்ததை எத்தனை நாளைக்குதான் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறோம் என நாம் கேலி செய்தோம். இவைகளை செய்வதுதான் சிறந்த ஆட்சி என்பதை இன்னும்கூட நம் மண்டையில் ஏற்றிக்கொள்ள மறுக்கிறோம்.
பொதுப்பணித்துறையும், வேளாண்மைத்துறையும், சுற்றுச்சூழல் துறையும் போட்டிப் போட்டுக் கொண்டு ஆறுகளை சுரண்டிவிட்டன. காடுகளை பாதுகாக்கத் தவறிவிட்டன.இவர்கள் கடமையிலிருந்து தவறிப்போனதன் விளைவு ஆறுகள் நிறைவதற்குப் பதிலாக கடல் நிறைந்து கொண்டிருக்கிறது. ஆறுகளிலும், குளம், குட்டை ஏரிகளிலும் நீரைப் பிடிப்பதற்குப் பதிலாக கடலுக்குப் போன தண்ணீரை மேல் நாட்டுத் தொழில்நுட்ப உதவியுடன் திட்டங்களைத்தீட்டி கோடிக்கணக்கில் செலவு செய்து மீண்டும் குடிநீராக்கும் சாதனையை நிகழ்த்திக் கொண்டிருக்கிறோம். 
கேரளமும், கர்நாடகமும் ஆற்றில் மணல் அள்ளத் தடை விதித்திருக்கும் பொழுது நாம் மட்டும் அதை அள்ளி விற்பதையே வேலையாகக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு ஆறுகளின் பெயரெழுதி வைத்து வீதிகளில் அண்டை மாநிலங்கள் நம் மணலை விற்கும் அவலத்தை இன்னும் எவ்வளவு காலத்துக்கு அனுமதிக்கப் போகிறோம். ஐரோப்பிய நாடுகளும், மற்ற நாடுகளுக்கும் மணல் பயன்பாட்டுக்குப் பதிலாக மாற்றுப் பொருளை கண்டுபிடித்து எப்பொழுதோ பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். ஏற்றம், கபிலை பயன்படுத்தியே இயற்கை வேளாண்மை முறையை பின்பற்றி வந்தோம். கிணறுகளிலிருந்தும், குளம், குட்டை, ஏரிகளிலிருந்தும், ஆறுகளிலிருந்தும் குடி நீரைப் பெற்றது போய் எல்லாவற்றையும் அழித்து ஆண்டாண்டு காலமாக இயற்கை சேர்த்து வைத்திருந்த நிலத்தடி நீரை ஆழ்துளை கிணறுகளை அமைத்து இரவு பகலாக உறிஞ்சிக் கொண்டிருக்கிறோம். 
மழைநீரை நம்பி புன்செய் பயிர்களை விளைவித்து வந்த உழவர்களிடம் பணப்பயிர்களைக் கொடுத்து ஆசை காட்டி அவர்களை அழித்ததோடு நிலத்தடி நீரையும் வரைமுறையில்லாமல் உறிஞ்சி இனி குடிநீருக்கு எங்கே போவது எனத் தெரியாமல் அடித்துக்கொண்டு சாகப்போகிறோம்.நீர் ஆதாரங்கள் இருந்த இடங்களே இன்றைக்குத் தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் அரசு கட்டிடங்களாகவும், பேருந்து நிலையங்களாகவும் உருவாக்கப்பட்டு ஏரிப்பகுதிகளெல்லாம் கூறுபோடப்பட்டு குடியேற்றப்பகுதிகளாகி வளர்ச்சி பெற்ற நகரங்களாக மாறி நிற்கின்றன. ஏரிகள் மாவட்டம் என அழைக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டம் இன்று குடிநீருக்கு வழியின்றி தாகத்துக்குத் தவிக்கிறது. சென்னை நகரைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலுள்ள ஏரிகளை முறையாகத் தூர் வாரி நீரை சேமித்து வந்திருந்தால் எதற்காக அண்டை மாநிலங்களிடம் குடிநீருக்கு கையேந்த வேண்டும். 
பராமரிப்புக்காக நிதி ஒதுக்கப்பட்டாலும் முறையாக அது செயல் படுத்தப்படாததால் அதில் பலனில்லை.சொட்டு நீர் பாசனத்தை விரிவுப்படுத்தி, கட்டாயமாக்கி, பணப்பயிர்கள் பயிரிடுவதை தடைசெய்து உழவர்களுக்கு மாற்றுப் பயிரிடும் திட்டங்களை உருவாக்கி நிலத்தடி நீர் வரைமுறையின்றி உறிஞ்சி வீணாவதைத் தடுத்து ஆழ்துளை கிணறுகளுக்கு கட்டுப்பாடு விதிகளை உருவாக்குவது இன்றைய உடனடியான அடிப்படைத் தேவை. அதே போல் நகர்ப்புறங்களிலும் மழைநீர் சேகரிப்பை கட்டாயப்படுத்தி கட்டிடங்களை ஆய்வு செய்து மறுசீரமைப்பதே முதல் கடமையாக இருக்க வேண்டும். இன்னும் கூட நீர்ப்பாதுகாப்பின் தீவிரத்தை உணராமல் நடுவண் அரசுக்கு மடல் வரைந்து கொண்டிருப்பதாலும், அண்டை மாநிலங்கள் வஞ்சிப்பதாலேயே நாம் இன்னல்களை அனுபவிக்கிறோம் எனச்சொல்வதாலும் மக்களுக்கு துயரம் மட்டுமே மிஞ்சும். 
- சொல்லத் தோணுது…

சொல்லத் தோணுது 34 - எதைப் பார்த்து சிரிக்கிறார்கள்?

அரசியல் என்பது என்ன? புதிது புதிதாக எதற்காக கட்சிகள் தொடங்கப்படுகின்றன? அந்தக் கட்சிக்குள் இருப்பவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்? தொடங்குபவர்களின் தகுதியும், அற்குள் இணைந்து கொள் பவர்களின் தகுதியும் என்ன? மக்கள் முன்னேற்றத்துக்காக எனத் தொடங் கப்பட்ட கட்சிகளும் யாரையெல்லாம் முன்னேற்றின? தலைமுறை தலைமுறை யாகத் தொடர்ந்து செய்துவந்த தொழில் கள் எல்லாம் அழிக்கப்பட்டு, எல்லாத் தொழில்களையும் தனது காலடியில் போட்டுக்கொண்ட அரசியல்... இன்று பெரும் தொழிலாக மாறிப் போனதன் காரணங்கள் என்ன?
காலையில் கண்விழித்து நாளேடு களைப் பார்த்தாலோ மற்றும் தெருக்கள், சாலைகளுக்கு சென்றாலோ அங்கெல்லாம் அரசியல் கட்சிகளின் பெயர்களும், தலைவர்கள், குட்டித் தலைவர்களின் பெயர்களும் படங்களும் நிரம்பி வழிகின்றன. அந்தப் படங்களில் எல்லாம் அவர்கள் மக்களைப் பார்த்து சிரித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
சிற்றூர்கள், சிறு நகரங்கள், நகரங் கள், பெருநகரங்கள், தலைநகர் என ஒவ்வோர் இடத்திலும் அரசியல்வாதி யாக இருப்பவரின் தோற்றம், வளர்ச்சி, அவர்களின் செயல்பாடு என எல்லா வற்றையும் மக்கள் கவனித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
தங்களுடனேயே சுற்றித் திரிந்தவர் கள் வளர்த்துக் கொண்ட வசதிகளும், செல்வாக்கும், சொத்துக்களும் எங்கி ருந்து வந்தன என்பதெல்லாம் மக்களுக்குத் தெரியும். அரசியலில் நுழைந்து காலடி எடுத்து வைக்கும்போது அவர்கள் எப்படி இருந்தார்கள்? அவர்களின் குடும் பம் என்ன தொழிலைச் செய்து, எவ்வளவு வருமானத்தைப் பெற்றது? எவ்வளவு சொத்து இருந்தது என்பதெல்லாமும் தெரியும். குடும்பத்தில் உள்ள ஒருவர் கூட எந்தத் தொழிலையும் செய்யாமல் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான கோடிகள் எங்கிருந்து வந்தன என்பதும் மக்களுக்குத் தெரியும்.
சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் பதவி, முதலமைச் சர் பதவி, பிரதமர் பதவி என எல்லாவற்றுக்கும் சம்பளம் எவ்வளவு கிடைத்தது? செலவுகள் போக மீதி எவ்வளவு இருக்கும் என கணக்குப் பார்த்தால், இந்நாட்டில் எத்தனை பேர் நேர்மை யாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும். ஆனால், தங்கள் பதவிக்காக தரப்பட்ட ஊதியத்தில் மட்டுமே நேர்மையோடு அரசியல் வாழ்வை மேற்கொண்டவர்களும் இருக் கின்றனர். ஏனெனில், அவர்கள் அரசியலை தொண்டாக மதித்தவர்கள்.
யார் யார் பெயரிலோ, எந்தெந்த நாட்டிலோ அரசியல்வாதிகள் மறைத்து வைத்திருக்கும் சொத்துக்களை எல் லாம் பிடுங்கினால் உலகத்திலேயே இந்தியாவே பணக்கார நாடு. ஒரு ரூபாய் கூட மக்களிடத்தில் வரி விதிக்காமல் 50 ஆண்டுகள் சிறந்த ஆட்சியை நடத்தலாம். அரசியலில் வெற்றிபெற்றவர்கள் மட்டு மில்லை; தோற்றவர்களும் வளமாக வாழ்ந்து கொண்டிருக்கும் நாடு நம் நாடுதான். ஆனால், மக்களாட்சி மலர்ந்து மக்களுக்குக் கிடைத்ததெல்லாம் நோய் களும் ஒவ்வொருவரின் தலையிலும் கடன் சுமைகளும்தான்.
எவ்வாறு கட்சித் தொடங்குவது? எவ் வாறு மக்களைத் திரட்டுவது? எவ்வாறு தலைவனாக உருவெடுப்பது? எவ்வாறு மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது? அதன் மூலம் காவல்துறை, சட்டத் துறை, நீதித் துறையை வளைப்பது? பின், இந்த பணத்தைக் கொண்டு எவ்வாறு மக்களை விலைக்கு வாங்குவது என்பதெல்லாம் அறிந்த அரசியல்வாதிகள், நம் நாட்டைத் தவிர வேறெங்கிலும் இல்லை.
மக்களை மேம்படுத்த உருவான ஜனநாயகம் எனும் மக்களாட்சி, இந்த 67 ஆண்டுகளில் கண்டதெல்லாம் மக்களின் அடிப்படை வசதியான கழிப்பிடம் கூடம் 63 கோடி மக்களுக்கு இல்லாமல் வைத்திருப்பதுதான்!
தன்னலவாதிகள் அரசியலுக்குள் நுழைந்ததால், அரசியல் என்பது ஒரு தொண்டாக இருந்ததுபோய், வெறும் தொழிலாக மாறிப் போனது. பிழைப்பு வாதிகள் செய்யும் அரசியல் தொழிலுக்கு, தொண்டர்கள் எனும் பெயரில் அதே போன்ற பிழைப்புவாதிகளே தேவைப்படு கிறார்கள். அரசியல்வாதிகள் எப்படியெப் படியோ பணம் சம்பாதிப்பதையும், அப்படி சம்பாதிப்பது தண்டனைக்கு உள்ளாவது இல்லையென்பதையும் பார்க்கும் தொண்டனும், தானும் அதே வழியில் சம்பாதிக்க, அதே அரசியலை பயன்படுத்துகிறான்.
எந்தத் தொழிலில் இன்று இழப்பு வந்தாலும் அரசியல் தொழில் மட்டும் வருமானம் தரும் தொழிலாக பரிணாமம் பெற்றிருக்கிறது.
தங்களின் குழப்ப நிலையால் முடிவெ டுக்கத் தெரியாமல், ஒவ்வொரு முறை யும் எதிர்காலத்தில் எந்த முன்னேற்றத் தையும் காணாத கட்சிகளில் மாறி மாறி சேர்ந்து, குடும்பத்தை கவனிக்காமல் சொத்துக்களை இழந்து, குடிகாரர்களாக மாறி கடைநிலைத் தொண்டனாக செத் துப் போகிறவர்களின் பட்டியலும் இதில் ஏராளம்.
கட்சித் தலைவர்களின் பகை உணர்ச்சி களுக்குள் சிக்கிக் கொண்டு அவர்கள் அடிக்கடி எடுக்கும் தவறான முடிவுகளால் வாழ்க்கை திசைமாறி எதிர்காலத்தை இழந்து நிற்பவர்களும் ஏராளம். இப்படிப் பட்ட பிழைப்புவாதிகள் மற்றவர்களிடம் தாவிவிடக் கூடாது என்பதற்காகவே அவ்வப்போது சுறுசுறுப்பை ஏற்றி ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் பொதுக்குழுக் கூட்டங்களும், கட்சி மாநாடுகளும் நடத்தப்படுகின்றன.
இதுமட்டுமின்றி யாராவது இறந் தாலோ, குற்றம் உறுதி செய்யப்பட்டு பத வியை இழந்தாலோ, இடைத் தேர்தல் வந்தாலோ… அது பெரும் கொண் டாட்டமாகிவிடுகிறது. தேர்தலுக் குத் தயாராகும் காலங்களில் இருந்தே பிரியாணிப் பொட்டலங்களுக் கும், மதுவுக்கும், செலவுக்குப் பணத்துக் கும் குறைவிருக்காது. போதை ஊசி ஏற்றப்பட்டதுபோல் தலைவரின் புகழ் பாடி வளர்பவர்கள் அவர்களை கடவு ளுக்கு இணையாகப் பார்க்கிறார்கள். ஊழல்வாதிகளாகவும், குற்றவாளி களாகவும் சொல்லப்படுவதை அவர் களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் நாக்கை அறுத்து, மொட்டையடித்து, சிலவேளைகளில் பலர் உயிரையும் மாய்த்துக் கொண்டுவிடுகிறார்கள்.
அரசியல் நமக்கான இடமில்லை என படித்தவர்களெல்லாம் விலகிப் போய் விடுகிறார்கள். நேர்மையானவர்கள் பழி வாங்கப்படுவதையும், கொலை செய்யப் படுவதையும் கண்டு, வாக்களிப்பது மட்டுமே தங்களின் கடமை என மக்களும் இருந்துவிடுகிறார்கள்.
‘நேர்மையான என் தலைவன் பின் னால்தான் என் வாழ்க்கை’ என தன் கட்சிக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட என் அண்ணன், இரவு பகலாக அந்தக் கட்சிக்காகவே உழைத்தார். குறுக்கு வழியில் போகப் பிடிக்காமல் தன் சொத்துக்களை எல்லாம் இழந்து, குடும்பத்தைக்கூட கவனிக்காமல் ஏழை யாகவே மாண்டு போனார். அவரின் மகன் ஒருவன் அரசு மதுபானக் கடையில் பணியாளனாக மது ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருக்கிறான். மற்றொருவன் வரப் போகும் தேர்தலுக்காக அதே கட்சிக்காக ஊர்ப் பகுதியில் எல்லா சுவர்களிலும் பெயரெழுதி இடம்பிடித்துக் கொண்டிருக்கிறான். நாட்டின் எந்த மூலைக்கு பயணித்தாலும் இவ்வாறான தொண்டர்களால் வரையப்பட்ட கட்சித் தலைவர்கள் மக்களைப் பார்த்து சிரித் துக் கொண்டேயிருக்கிறார்கள். எதற் காக இப்படி சிரிக்கிறார்கள் என எனக் குத் தெரியவில்லை. உங்களையெல் லாம் நோயாளிகளாக, தன்மானம் இழந்த வர்களாக, குடிகாரர்களாக, சிந்தித்து வாக்களிக்கத் தெரியாதவர்களாக, பணம் வாங்கிக் கொண்டு வாக்களிப்பவர்களாக தொடர்ந்து வைத்துக் கொண்டிருக் கிறோமே என்பதற்கான சிரிப்பாக இருக் குமோ? நீங்கள்தான் சொல்ல வேண்டும்!
- இன்னும் சொல்லத் தோணுது!

Sunday, 10 May 2015

சொல்லத் தோணுது 33: சண்டைக்கோழிகள் + கறிக்கோழிகள் = மாணவர்கள்


இனி, எந்நாளுமே தற்கொலை காலங்கள்தான். உழவர்களிடம் இருந்து தொடங்கிய தற் கொலைகள், இப்போது அரசு அதிகாரி களைத் தொற்றிக்கொண்டது. தற்போது கல்வி கற்று இந்நாட்டை மேம்படுத்த அனுப்பப்பட்டவர்கள் தற்கொலை செய்து மாண்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்தத் தற்கொலைகளின் பின்னாலுள்ள அரசியலையும் அதற்கானத் தீர்வையும் பற்றி யாருமே சிந்திப்பதில்லை. சிந்தித் துத் தீர்வை உருவாக்க வேண்டிய ஆட்சியாளர்களும், பெற்றோர்களும் தீர்வை உருவாக்குவது தங்களுடைய கடமை இல்லை என நினைக்கிறார்கள்.
பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் மதிப்பெண் சாதனை புரிந்தவர்களின் படங்களின் அருகே தேர்வில் தோல்வி அடைந்து தற்கொலையில் வாழ்வை முடித்துக்கொண்ட மாணவர்களின் படங்களையும் நாளேடுகளில் காண்பது பற்றிய கவலை ‘தற்காலிகமானது’ என நினைக்கிறோம்.
மதிப்பெண்கள்தான் வாழ்வின் முடி வைத் தீர்மானிப்பதாக நினைத்து தற் கொலை செய்துகொண்ட மாணவர் களும், வெற்றி பெற்று பணம் எனும் ஒன்றை மட்டுமே சிந்தனையில் முன்னிறுத்திக்கொண்டு கல்விக்கூடங்களுக்குச் சென்று கொண்டிருக்கும் மாணவர்களும்தான் நாம் உருவாக்கி வைத்திருக் கும் கல்வி முறையின் விளைச்சல்கள்.
இந்தப் பள்ளிகள் யாருக்கானவை? ஆசிரி யர்களுக்கா? பெற்றோர் களுக்கா? மாணவர் களுக்கா? அல்லது அனை வரையும் ஆட்சிபுரியும் அரசுகளுக்கா? அவை அறிவுக்கானதாகவும், வாழ்வியலுக்கானதாக வும் இல்லாமல் எதிலும் நம்பிக்கைகளை இழந்த கோழைகளை யும், எல்லாவற்றுக்கும் வளைந்து கொடுக்கும் அடிமைகளையும் உருவாக்கு வதால்தான் இந்தக் கேள்விகள்!
கல்வியைக் கற்றுக் கொடுப்பதால் கல்லா கட்ட முடியாது. வெறும் செலவு தான் என்பதால் அதிக வருமானம் வருகிற துறையை மட்டும் ஆட்சியாளர்கள் கையில் வைத்துக்கொண்டார்கள். மக்களின் கேள்வியில் இருந்து தப்பிக்கும் நோக்கில் மட்டுமே, மிஞ்சியிருக்கிற அரசுப் பள்ளிகள் நடத்தப்படுகின்றன. ‘அதெல்லாம் இல்லை. சிறந்த கல்வியை அரசுப் பள்ளிகள்தான் தருகின்றன’ எனச் சொன்னால், அரசாங்கத்தை நடத்துபவர்களின் பிள்ளைகள் அங்கே தானே படித்திருக்க வேண்டும்? எது எதற்கோ சட்டம் இயற்றுபவர்கள், அரசு ஊதியம் பெறுகிறவர்களின் பிள்ளை களும் அரசின் கல்விக் கூடங்களில்தான் பயில வேண்டும் என்கிற சட்டத்தை உட னடியாக இயற்றியிருக்க வேண்டும் அல் லவா? கல்வித் துறையில் அரசாங்கத்தின் வேலை என்பது தேர்வை நடத்தி முடிப்பதற்கு மட்டுமே பயன்படுகிறது.
கோழிச்சண்டைக்காக வளர்க்கப் படும் கோழிகள் என்னென்ன முறைகளில் வளர்க்கப்படுகிறதோ. அவ்வாறேதான் இங்கு பயிலும் மாணவர்களும் உருவாக் கப்படுகிறார்கள். மாணவர்களுக்குள் ளேயே போட்டி மனப்பான்மையை உருவாக்கி, மனப்பாடம் செய்ய வைத்து, அதனை மீண்டும் தேர்வுத் தாளில் வாந்தி எடுக்கும் தலைமுறைகள்தான் இவர்களால் உருவாக்கப்படுகின்றன.
எதிலும் நம்பிக்கையற்ற, அடிமைத் தனமும் கோழைத்தனமும் கொண்ட, போர்க்குணம் அற்ற, கேள்வி கேட்காத தலை முறைகளை உருவாக்கிக் கொண்டு இந்நாட்டை சீரழித்துக் கொண்ச்டிருக் கிறோம் என்கிற குற்றவுணர்வு பெற்றோர் களுக்கும் இருப்பதில்லை; நிறுவனங் களுக்கும் இருப்பதில்லை; அரசுக்கும் இருப்பதில்லை.
இந்த எல்லாக் குறைபாடுகளை யும் களைந்து, வளமான முன்னேற் றப் பாதைக்கு இந்நாட்டைக் கொண் டுச் செல்ல இனி எங்கிருந்து, யார் வரப் போகிறார்கள்? அரசியலை தொழிலாக மாற்றிக் கொண்டுவிட்ட, அரசியல்வாதிகளிடமா நாம் தீர்வையும், விடுதலையையும் எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கிறோம்?
ஒருவேளை யாராவது வந்தால் சத்தியமாக அவர்கள் அடிமைகளையும் கோழைகளையும் உருவாக்கும் ஆங்கிலக் கல்வி புகட்டும் தனியார்ப் பள்ளியில் இருந்து வர மாட்டார்கள். யாருமே கண்டுகொள்ளப்படாத, கால் வயிற்றுக்கும், அரை வயிற்றுக்கும் கஞ்சி இல்லாததால் காய்ந்த தலையுடன், புழுதிக் கால்களுடன் நடந்து சென்று படிக்கிற, ஒவ்வோர் ஆண்டும் மூடப்பட்டுக் கொண்டிருக்கும் அரசுப் பள்ளிக்கூடங்களில் இருந்துதான் வருவார்கள். எல்லா இடர்பாடுகளையும், தடைகளையும் கடந்து வளரும் அந்தக் காட்டுச் செடிகள்தான் நம் நாட்டுக்கு ஒரே நம்பிக்கை. ஆனால், நாம் அனைவரும் ஒருநாள் கவனிக்காமல்கூட போனால், வாடி வதங்கி பட்டுப்போகும் எந்தப் பலனையும் தராத, வெறும் காட்சிப் பொருளான குரோட்டன் செடிகளைத்தான் தனியார் பள்ளிகளில் வளர்த்துக் கொண்டிருக்கிறோம்.
மதிப்பெண்களே கல்வி என்பதனையும் கடந்து மதிப்பெண்களே வாழ்க்கை என கற்பித்து மாணவர்களின் உயிரை காவு கொள்ளும் பள்ளிகள்தான் இந்நாட்டின் புற்று நோய்கள். மதிப் பெண்களை குறைவாகப் பெற்றதற் காகவும், தேர்வில் தோல்வி அடைந்த தற்காகவும் நிம்மதியை இழந்து ஒவ்வொரு நொடியும் அவமானத்தில் உழலும் மாணவர்களை உருவாக்கும் போக்கு நீடிக்கத்தான் வேண்டுமா? என்றைக்காவது இந்தக் கல்வி ---முறை சரியில்லை எனச் சொல்லி நாம் போராடியிருக்கிறோமா? ஊதிய உயர்வுக்காகவும், பிற தன்னலத் தேவைக் காகவும் போராடும் ஆசிரியர்கள் இந்தக் கொடுமைகளில் இருந்து இம் மாணவர்களை காப்பாற்ற வேண்டும் எனப் போராடியிருக்கார்களா?
ஆசிரியர்களின் ஒடுக்குமுறைகளுக் கும், அதிகாரத்துக்கும் பயந்து நடுங்கி அடையாளத்தை இழந்து, உடன் பயிலும் தோழமையை எதிரியாகக் கருதும் எண்ணத்தில் வளர்ந்து, ஆராய்ச்சி மற்றும் ஆய்ந்தறியும் மனநிலையை இழந்து, கோழைகளாகவே கறிக் கோழிகள் போல் வெறும் பணம் சம்பாதிக்கவே வளர்க்கப்படும் நம் தலைமுறைகளின் நிலை யார் கண்களுக்கும் தெரியவில்லையா?
மாநில அளவில் சாதனைபுரிந்து மதிப் பெண்களை வாரிக் குவித்தவர்களின் தற் போதைய வாழ்க்கை என்னவாக இருக் கிறது? கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் முதல் பத்து இடங்களில் இடம் பெற்றவர்கள் தற்போது என்ன செய்துகொண்டிருக் கிறார்கள்? யாருக்குப் பயன்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்
எதற்கும் விளங்காதவர், யாருக் கும் பயன்படாதவர் என பெற்றோர் களாலும், ஆசிரியர்களாலும் இகழப் பட்ட மாணவர்கள்தான் இம்மக்களுக் காக, இம்மொழிக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். சொந்தக் காலில் நின்று பெரும் தொழில் செய்யும் முதலாளிகளாக, உற்பத்தியாளர்களாக, சூழலியல் செயல்பாட்டாளர்களாக, மக்கள் செயல்பாட்டாளர்களாக, அரசி யல் தலைவர்களாக, திரைப்பட இயக்குநர்களாக, மக்கள் கொண்டாடும் நடிகர்களாக, எழுத்தாளர்களாக, ஓவியர் களாக, சிற்பிகளாக, இசைக் கலைஞர் களாக இவை எல்லாவற்றையும்விட நமக்கெல்லாம் உணவை உற்பத்தி செய்து தரும் யாரும் கண்டுகொள்ளாத உழவர்களாக இந்நாட்டிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சாலையில் நடந்து செல்லும்போதுகூட அடிபட்டால் ஓடிவந்து தூக்கி உதவிசெய்து காப்பாற்று பவர்கள் அதிக மதிப்பெண்களை பெறத் தெரியாதவர்கள்தான். அதிக மதிப்பெண் பெற்றவர்கள் வேடிக்கை பார்ப்பவர்களாகவே இருக்கிறார்கள். இதுதான் நம் கல்வி!
இதனை மாற்றாமல் இங்கு எந்த அரசியல் மாற்றமோ, சமூக மாற்றமோ, புரட்சியோ நடக்கப் போவதில்லை. சண்டைக் கோழிகளையும், கறிக் கோழிகளையும் உற்பத்தி செய்துத் தருகினற நம் கல்விமுறை இருக்கும் வரை நாம் வெறும் இனப்பெருக்கத்தை உற்பத்தி செய்யும் கூட்டம்தான்.
- சொல்லத் தோணுது…
எண்ணங்களை பகிர்ந்துகொள்ள: thankartamil@gmail.com

Sunday, 3 May 2015

சொல்லத் தோணுது 32 - அவமானச் சின்னங்கள்!

எழுத்தால் எழுதி இதனைப் புரிய வைத்துவிட முடியும் என எனக்குத் தோன்றவில்லை. யாருக்குப் புரிய வைக்கிறோம், புரிந்து எதுவும் நடக்கப் போவதில்லை என்பதும் எனக்கு நன்றாகவே தெரிகிறது.
உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாதுஎன்பதெல்லாம் தெரிந்தும் அவனது பாரம்பரியத் தொழிலைத் தொடரவே நினைக்கிறான். அவனது உழைப்பில் உடல் வளர்த்து, உயிர் வளர்த்துக் கொண்டிருக்கும் மக்களும், அரசாங்கமும் கண்டு கொள்ளாமல் விட்டது போல் இயற்கை யும் அவனை கைவிட்டுக் கொண்டிருக் கிறது. அவனும் அவனது குடும்பமும் மற் றவர்களைப் போல் வாழ வேண்டுமென யாருமே நினைப்பதில்லை.
தங்களது ஊதிய உயர்வுக்காகவும் இன்னும் பிற தேவைகளுக்காகவும் இந்த நாட்டில் ஒரு உழவனைத் தவிர, யார் வேண்டுமானாலும் போராடி வெற்றி பெற்றுவிட முடியும். காலம் முழுக்க உழைத்து ஏற்கெனவே பட்டினியில் கிடக்கும் அவன், யாரை நம்பிப் போராடுவது?
எந்த ஒரு உழவனும் அவன் உற்பத்தி செய்த பொருட்களை, தன் குடும்பத்துக் காக வைத்துக் கொள்வதில்லை. இர வோடு இரவாக அதை கால் விலைக்கும் அரை விலைக்கும் கொடுத்துவிட்டு, கடன்காரனிடம் இருந்து தப்பித்துக் கொள்ள முடியுமா என்றுதான் நினைக் கிறான். நடைபாதையில் கைக்குட்டை களையும், விளையாட்டுப் பொருட்களை யும் விற்றுப் பிழைக்கிறவனுக்குக் கிடைக் கிற வருமானத்தில் கால் பகுதிகூட ஒரு குடும்பமே உழவு மாடுகளை வைத்துக் கொண்டு, இரவும் பகலும் நிலத்திலேயே உழன்றாலும் ஆண்டுக்கு ஒருமுறைகூட உழவனுக்குக் கிடைப்பதில்லை.
இந்தியாவுக்கு என்றைக்கு விடுதலை கிடைத்ததோ அப்போதே உழவனும், இந்த நிலங்களும் விலங்கிடப்பட்டன. இருப்பவற்றைக் கொண்டே யார் கையை யும் எதிர்பார்க்காமல் செய்துவந்த உழவுத் தொழிலை, கடன் வாங்கி பெரும்பொருள் செலவழித்து செய்யும் தொழிலாக மாற்றிவிட்டார்கள். நிலத்தில் கால் படாதவர்களும், ஒருபிடி மண்ணை தொட்டுக்கூடப் பார்க்காத ஆட்சி யாளர்களும், வேளாண்மை விஞ்ஞானி களும்தான் ஓராண்டுத் திட்டம், ஐந்தாண் டுத் திட்டம் எனத் தீட்டி இந்தத் தொழி லையும், உழவனையும் படுகுழியில் தள் ளினார்கள். திட்டங்களைத் தீட்டியவர் களுக்கும், செயல்படுத்தியவர்களுக்கும் பெருவாழ்வு கிடைத்தது.
மூலைக்கு மூலை, கிராமத்துக்கு கிராமம் ஓசையின்றி உழவன் தற்கொலை செய்துகொள்கிறான். இவன் இவ்வாறு சாகக் கூடாது என்பதற்காகத் தான் கால்வயிறு கஞ்சி குடித்துக் கொண் டிருந்த அவனது நிலத்தையும் பிடுங்க, அவசர அவசரமாக நாடாளுமன்றத்தைக் கூட்டி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆயுதங்களைக் கொண்டுத் தாக்கி கொலை செய்வதுதான் கொலைப் பட்டி யலில் சேர்க்கப்படுகிறது. இவ்வாறு திட் டங்களைத் தீட்டி செய்யப்படும் கொலை கள் எந்தப் பட்டியலிலும் சேருவதில்லை. புது தில்லியில் ஆயிரக்கணக்கானவர்கள் முன்னாலேயே தூக்கில் தொங்கிய உழவன் கஜேந்திர சிங், ஆசைக்காகவா செத்தான்? “என்னால் எனது மூன்று பிள்ளைகளுக்கு உணவும், உடையும், வசதியும் செய்து தர முடியவில்லை. என் நிலம் என்னைக் காப்பாற்றவில்லை. என் குடும்பத்தை நடுத் தெருவில் விட்டு விட்டு அவர்களை கடனாளியாக்கிச்விட்டு போகிறேனே!எனக் கதறிவிட்டுத்தான் செத்தான்.
மற்றவர்களைப் போல அவன் போராடாமல் ஏன் செத்தான்என் கிறார்கள். எதிரி யார் என்பதே தெரிய வில்லை. யாரை எதிர்த்து, எப்படிப் போராடுவது?
கால்நடைக் கழிவுகளைக் கொண்டு பயிர் செய்தவனிடத்தில் இரசாயன உரங் களைக் கொடுத்தார்கள். சாம்பல் தெளித்து, பூச்சிகளை விரட்டியவ னிடத்தில் இரசாயன பூச்சிக்கொல்லி களைக் கொடுத்தார்கள். மழை நீரைக் கொண்டு இயற்கையாக உழவுத் தொழில் செய்தவனிடத்தில் கடன் கொடுத்து கிணறு வெட்டச் சொல்லி, கனரக இயந் திரங்களைக் கொடுத்து கடனாளியாக்கி னார்கள்.
அதிகாரத்தில் இருந்தவர்கள் ஏரி களையும், குளம், குட்டைகளையும், ஆறுகளையும் தங்கள் வசமாக்கி மூடி விட்டார்கள். நிலவளம் அழிந்து, தன் னிடம் இருந்த கால்நடைகளும் அழிந்து ஒவ்வொரு உழவனும் மன நோயாளியாக, உற்பத்தி செலவு பல மடங்குக் கூடிப் போய் வாழவழியின்றி குடும்பத்தையே காலம் முழுக்க தீராதக் கடனாளியாக்கிவிட்டுச் சாகிறான்.
சென்ற வாரம் வீசிய பெருங்காற்று மழையில், இன்னும் அறுவடைக்கு மூன்று மாதங்களே இருக்கிற நிலையில் இருந்த இரண்டு ஏக்கர் வாழை மரங் களும் முறிந்து சேதமடைந்தன. அதைப் பார்த்து ஏற்கெனவே இருக்கிற கட னோடு இதற்காக வாங்கியக் கடனும் சேர்ந்துவிட்டதே எனக் கலங்கிப்போன எனக்குத் தெரிந்த ஒரு ஏழை உழவன், தற்கொலை செய்துகொண்டு மாண்டு போனான். சென்ற மாதம் எங்கள் கிரா மத்தில் இதேபோன்று ஒரு தற்கொலை. இவையெல்லாம் நமக்கு உணர்த்தும் சேதி என்ன? எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக, எல்லோராலும் புது தில்லிக்குச் சென்று ஊடகத்தினரின் தொலைக்காட்சி கேமராக்களுக்கு முன்னால் தற்கொலை செய்துகொள்ள முடியுமா?
இம்மக்களுக்கு உணவளித்த, கணக் கில் வெளிவராத இலட்சக்கணக்கான உழவர்கள் மாண்டுகொண்டே இருப் பதை இன்னும் எத்தனைக் காலத்துக்குத் தான் அனுமதிக்கப் போகிறோம்? இதன் பாதிப்பை ஆட்சியாளர்கள்தான் உணரவில்லையென்றால், மக்களும்கூட உணரவில்லை. ஒரு தோசைக்கு 100 ரூபாய் கொடுக்கத் தயாராகிவிட்ட வர்கள், குளுகுளு அறைக்குச் சென்று ஒரு உடைக்கு 5 ஆயிரம் ரூபாய் தாராளமாக செலவு செய்பவர்ச்கள், உழவன் பொருளுக்கு மட்டும் பேரம் பேசுவார்கள்.
ஒரு காலத்தில் தொழில் போட்டி என்பதுகூட நம் நாட்டில் குடும்பத்துக்கு உள்ளேயே இருந்ததால், சூதாட்டத்தில் பணம் வைத்துத் தோற்றால்கூட , அந்தப் பணம் நம்மிடமே இருந்தது. இப்போது குடும்பத்துடன் போட்டியிட கார்ப்பரேட் எனும் பன்னாட்டு முதலாளிகளை இறக்கி விடுகிறார்கள். கால் காணி, அரைக் காணி வைத்திருந்தவன் எல்லாம் இந்த கார்ப்பரேட் முதலாளிகளிடம் உழவுத் தொழில் செய்து போட்டிப் போட முடி யுமா? இத்தொழிலையும், உழவர்களை யும் கொன்றுவிட்டு இயற்கை வளங்களை அழித்து நம் பணத்தை மூட்டைக்கட்டி அவர்களின் நாடுகளுக்குக் கொண்டு போகத் தொடங்கிவிட்டார்கள்.
தற்கொலை செய்துகொண்டவனுக்கு வழங்கப்படுகிற உதவித் தொகையோ, சலுகையோ, நிவாரணமோ தீர்வைக் கொடுத்துவிடுமா? அல்லது செய்தி களில் வருத்தம் தெரிவித்தால் மட்டும் போதுமா?
நாடு முழுக்க 32 வேளாண்மைப் பல்கலைக்கழகங்களை உருவாக்கி வைத்துக்கொண்டு, எதை ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள்? அவர்களின் ஆராய்ச்சியெல்லாம் அரைக் காணி, ஒருகாணியை வைத்துக்கொண்டு தலைமுறை தலைமுறையாக செத்து மடியும் பெரும்பான்மை உழவர்களுக் குப் பயன்படுவதே இல்லை. 10 ஆண்டு களுக்குப் பின் எது நடக்கும் என்பதை கணக்கில் கொண்டு திட்டங்களை வழி வகுக்க உதவுபவர்கள்தான் விஞ்ஞானி கள். அவர்களின் திட்டங்கள் இத்தொழி லுக்கு எதிரானதாகவும், அழிவைத் தருவதாகவும் உணரும்போது மாற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டாமா?
நீர்நிலைகளை மீட்டெடுத்து, நில வளங்களைக் காப்பாற்றி செலவில்லாத பழையமுறை உழவுத் தொழிலை நடைமுறைப்படுத்தும்படியான நடவடிக் கைகளை உடனடியாகச் செய்யவேண் டியதுதான் இதற்கெல்லாம் உடனடி யான ஒரே தீர்வு. இதை விட்டுவிட்டு ஆட்சியில் பொறுப்பேற்ற உடனே, அவ னிடம் இக்கிற மீதி உயிரான நிலத் தையும் பிடுங்குவதற்கான சட்டத்தை உருவாக்குவதையே முதன்மையாக நினைத்தால், இனி இந்நாட்டின் உழவர்கள் மட்டுமல்ல; பிற மக்களும் பட்டினியால்தான் தற்கொலை செய்துகொள்வார்கள்.
உழவுத் தொழிலுக்காக தனி நிதிநிலை அறிக்கையை உருவாக்கி செயல்படுத் தாத ஆட்சியாளர்களே இந்நாட்டுக்குத் தொடர்ந்து வாய்த்திருக்கிறார்கள். தொடர்வண்டி சேவைகளுக்காக தனி நிதிநிலை உருவாக்குபவர்களுக்கு, இது கட்டாயம் என்பது புரிவதில்லை. ஒதுக்குவதே சிறு தொகை. அதையும் இத்தொழில் என்னவென்றே தேரியாத அமைச்சர்கள், அதிகாரிகள், நிர்வாகி களிடம் கொடுத்துவிட்டு மானியத்தை யும், நிவாரணத்தையும், கடன்களை யும் கொடுத்துவிட்டால் போதும் என இருந்துவிடுவது தொடரும்வரை இந்தத் தற்கொலைகள் தொடர்ந்துகொண்டு தான் இருக்கும். நிலங்களும் அழிந்து கொண்டுதான் இருக்கும்.
இதற்கு ஒரு தீர்வு எட்டும் வரை இந்நாட்டின் அவமானச் சின்னங்கள் தற்கொலை செய்துகொள்ளும் இந்த அப்பாவி உழவர்களா? இல்லை அவர் களைக் கண்டுகொள்ளாமல் எல்லா வற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் இந்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களா? நீங்கள்தான் சொல்ல வேண்டும்!
- சொல்லத் தோணுது...
எண்ணங்களை பகிர்ந்துகொள்ள: thankartamil@gmail.com

சொல்லத் தோணுது 31 - மக்களாட்சியின் மகத்துவம்!

தமிழர்களுக்கு சிக்கல்கள் என்பது புதிதில்லை. கடந்த காலங்களில் நடந்து முடிந்த ஈழ மக்களின் படுகொலைகளுக்குப்பின் எத்தனைத் தமிழர்கள் கொல்லப்பட்டாலும் அதனைக்காண பழகிவிட்டார்கள். எப்பொழுதுமே எல்லாவற்றிலுமே உயிரை இழப்பவர்கள் எதுவுமறியாத அப்பாவி மக்களாகவே இருக்கிறார்கள். அதிகாரப் பசியும், பணப் பசியும், இனவெறிப்பசியும்தான் இவ்வாறான அப்பாவி மக்களின் உயிரை சூரையாடிக் கொண்டேயிருக்கின்றன.
ஈழத்துப் போரிலிருந்து உயிரைக்காப்பாற்றிக் கொள்ள முடிவெடுத்தவர்கள் அதிகளாக வெளியேறினார்கள். எதிர்த்துப் போரிட்டவர்களும், வெளியேற விரும்பாத, வசதியற்ற மக்களும் அரசியல் ஆதிக்கர்களின் சூழ்ச்சியினால் படுகொலை செய்து குவிக்கப்பட்டார்கள். போரில் எத்தனைத் தமிழர்கள் கொல்லப்பட்டா்கள் என்பதை துல்லியமாகக் கணிக்க முடியாமல் போனாலும் ஒன்றரை லட்சம் பேருக்கு மேல்தான் என்பதை எல்லோராலும் சொல்ல முடிந்தது.
இலங்கை அரசே அந்நாட்டு மக்களை திட்டம் வகுத்துக் கொன்றது. தமிழகத்தில் இதுவரை நடந்த நெடியதும், வரலாற்றில் என்றும் மறக்க முடியாத, மறைக்க முடியாதப் போராட்டமும் ஈழ ஆதரவுப்போரட்டம்தான். இந்தப் படுகொலைகளை நிகழ்த்தியதற்காக இலங்கை அரசின் மீது ஆவேசப்பட்டோம்,தமிழ்நாட்டிலிருந்து 19 போரளிகளைப்பலி கொடுத்தோம்.
அண்மையில் ஆந்திராவில் கொல்லப்பட்ட இருபது தமிழர்களின் உடல்களும் மீண்டும் தமிழகத்தில் அதேபோன்ற அதிர்வை ஏற்படுத்தியது. கூலிக்காகச் சென்றத் தமிழர்கள் குற்றுயிரும் கொலை உயிருமாக கொல்லப்பட்டு சிதைக்கப்பட்டதை முன்வைத்து தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்தன. அரசியல் கட்சிகளும், தமிழர் இயக்கங்களும் ஒன்று சேர்ந்தன. இதற்கான நியாயத்தைப் பெற்று உரியவர்களுக்குத் தண்டனை பெற்றுத்தர சாட்சியங்களை முன்வைத்து வழக்கினை உச்சநீதிமன்றம் வரை கொண்டு சென்றிருக்கின்றன. நியாயம் கேட்டு நாடாளுமன்றத்தில் நமது உறுப்பினர்கள் குரலை எழுப்பினார்கள். உண்மை கண்டறியப்பட்டு உரியவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
பிறந்து நாற்பதே நாளான பச்சிளம் குழந்தையோடு நடுத்தெருவில் நிறுத்தப்பட்டு குடும்பத் தலைவர்களை இழந்து பாதிக்கப்பட்டமக்கள் நீதிமன்றங்கள் நோக்கி அலைந்து கொண்டிருக்கும் காட்சியினைப் பார்க்க யாராலுமே சகித்துக்கொள்ள முடியாமலிருக்கிறது.
அதேபோல், அண்மைக்காலமாக எதுவுமறியாத அப்பாவித் தமிழர்கள் தமிழகத்திலேயே குடும்பம் குடும்பமாக நாள்தோறும் பலியாகிக் கொண்டிருப்பதை நாம் உணர்ந்திருக்கின்றோமா? சொந்த நாட்டிலேயே சொந்த மக்களை இலங்கை அரசு கொன்றழித்ததுபோல் தமிழ்நாட்டில் தமிழக மக்களையே மது எனும் அரக்கன் செய்யும் கொலைகளைப் பற்றிக் கணக்கில் கொள்ளப்படுகிறதா?
குடும்பத்தை கால் வயிற்றுக் கஞ்சியோடு தவிக்கவிட்டு, குழந்தைகளின் எதிர்காலத்தைக் கணக்கில் கொள்ளாமல், தானும் வேலைக்குப் போகாமல் அவர்கள் கூலி வேலை செய்து சம்பாதித்து வரும் பணத்தைப் பிடுங்கி வந்து அதிகாலையிலிருந்தே மதுக்கடை முன் காத்துக் கிடந்து அரசாங்கத்திடமே கொடுக்கும் கொடுமைகள் யார் மனதையும் அசைக்காதது ஏனென்றுதான் புரியவில்லை.
நாள் முழுக்க எதைப்பற்றியும் சிந்திக்காமல் தெரு நாய்கள் போல மதுக்கடைகளின் பெயர்ப்பலகையையே பார்த்து பார்த்து அங்கேயே சுற்றிச்சுற்றி வந்து அனைத்து உறுப்புகளும் செயலிழந்து, குடும்பத் தலைவனாக இருந்து மனைவியையும், பெற்ற மக்களையும் காப்பாற்ற வேண்டியவன் ஒவ்வொரு ஊரிலும் மடிந்துகொண்டிருக்கிறான். மண்ணுக்குள் போய்க்கொண்டிருப்பவனின் எண்ணிக்கைகளை இந்த கொலைப்பட்டியலில் சேருவதில்லை. இவர்களெல்லாம் மதுவினால் மட்டுமே இறந்தார்கள் என ஒரு நாளும் மருத்துவர்கள் ஆய்வறிக்கைச் செய்து அறிவிக்க மாட்டார்கள். அதுவரை அவைகளெல்லாம் இயற்கை மரணங்கள்தான்.
தொடர்ந்து ஆண்டு வந்த அரசாங்கங்களால் குடிநோயாளிகளாக ஆக்கப்பட்டு இன்று விதவைக் கோலத்தில் கைப்பிள்ளைகளோடு தெருவில் திரியும் குடும்பங்களின் எண்ணிக்கைப் பற்றிய கணக்குகளை யாராவது சொல்ல முடியுமா? குடும்பத் தலைவனை இழந்து பொருளாதாரத்தை இழந்து, குடும்ப பாதுகாப்பினை இழந்து, ஒட்டுமொத்தக் குடும்பத்தின் வாழ்க்கையே கேள்விக்குள்ளாக்கப்பட்டு அரசாங்கத்திடமே எல்லாவற்றுக்கும் கையேந்துகிற அவலம் ஒவ்வொரு நொடியும் பெருகிக்கொண்டிருப்பதை யாருமே உணரவில்லையா?
இந்த மதுவெனும் அரக்கனால் உயிர் மட்டுமா பலியாகிறது. இத்தனை ஆயிரம் கொலைகள், இத்தைனை ஆயிரம் கொள்ளைகள், இத்தனை ஆயிரம் விபத்துக்கள் என பட்டியலிடுகிறோம். எல்லாவற்றுமான ஊற்றுக்கண் இந்த மது அரக்கன்தான் என்பதை எப்பொழுது அனைவரும் ஏற்றுக்கொள்ளப்போகிறோம்.
குடிநோயாளியான கணவனைத் திருத்த முடியாமல் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளும் கொடுமையும், பெற்றவனே தன் மகளை நிகழ்த்தும் வன்புணர்ச்சிக் கொடுமையும் தமிழ்நாட்டைத்தவிர இந்தியாவில் வேறெங்காவது நிகழ்கிறதா?
படிப்படியாக நோயாளியாக்கப்பட்டு மரணத்தைத் தழுவும் மக்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்தால் எத்தனையோ ஆயிரங்களைத் தாண்டும். நாளொன்றுக்கு பல ஆயிரம் என்றால் மாதத்துக்கு எத்தனை லட்சங்கள்? ஆண்டுக்கு இரண்டாயிரம் கோடி மது விற்பனையாக இருந்தபோது குடிக்கத் தொடங்கியவர்கள்தான் இப்போது சாகத் தொடங்கியிருக்கிறார்கள். அதன்பின் இப்போது அது பத்து மடங்குகளுக்குமேல் உயர்ந்திருக்கிறது. ஆறு ஆண்டுகள் இந்த மதுவைக் குடித்தால் அத்தனையும் அடங்கி நடைபிணமாக மனிதன் ஆகிவிடுவான் என இது பற்றி ஆய்வு செய்தவர்களும் மருத்துவர்களும் சொல்கிறார்கள்.
அப்படியானால் இன்னும் ஆறேழு ஆண்டுகளுக்குப்பின் தமிழ்நாட்டில் மதுவினால் ஏற்படும் மனித உயிர்ப்பலிகளின் எண்ணிக்கை இப்பொழுது இருப்பதைவிட பத்து மடங்குகளுக்குமேல் இருக்கும். ஒட்டுமொத்தமாக ஈழப்போரில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையை தமிழகம் அரை மாதத்திலேயே தொட்டுவிடுகிறது! வருங்காலங்களில் யாரையும் புதைப்பதற்குக்கூட இடமிருக்காது. அவர்களை அடக்கம் செய்வதற்காகவே புதிதாக ஒரு துறையை தொடங்கநேரிடலாம்!
ராஜபக்சே புதுடில்லிக்கு வருவதற்கே நரம்புகளை முருக்கேற்றி கொக்கரித்தவர்கள் தமிழ்நாட்டிலுள்ள தமிழர்களுக்கு ஏற்படும் நிலையைக்கண்டு என்ன செய்து கெண்டிருக்கிறார்கள்? இனி என்ன செய்ய போகிறார்கள?
இப்படியெல்லாம் ஒரு நாள் நடக்கும் எனத்தெரிந்துதான் எனக்கிருந்த உரிமையினாலும், ஒரு தமிழ்க்குடிமகன் என்பதாலும் முன்னாள் முதலமைச்சர் ஒருவரிடம் மதுவிலக்குச்சட்டத்தைக் கொண்டுவந்து இம்மக்களைக் காப்பாற்றுங்கள். நீங்கள் இதை ஒன்றைச் செய்தாலே போதும், பேருதவியாக இருக்கும் என கெஞ்சினேன்”. “எல்லை மாநிலங்களுக்கும், புதுச்சேரிக்கும் சென்று குடிக்கப் போய்விடுவார்கள். மக்களின் பணமெல்லாம் அண்டை மாநிலங்களுக்குப் போய்விடும். கள்ளச் சாராயம் பெருக்கெடுத்து அப்பாவி மக்கள் அதைக்குடித்து இறந்து போவார்கள்என்று காரணம் சொல்லி அவர் சமாளித்தார்..
இன்றைக்கு கள்ளச்சாராயத்தை மக்கள் குடிக்கவில்லை. நண்பர்கள்,உறவினர்கள்,ஊர்க்காரர்கள் இறக்கின்ற செய்தி வந்துகொண்டே இருக்கின்றது. அதற்காக மட்டுமே அதிகமாக நான் என் ஊருக்குப்போகிறேன். அரசு விற்கும் மதுவினால் ஏற்படும் பலிகளின் எண்ணிக்கை கணக்கில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. இன்னும் சில காலங்களில் கடைகளின் எண்ணிக்கையில் புதுச்சேரியைத் தாண்டலாம்.
உடலுக்கு நன்மைதரும் கள்ளுக்கடைகள் அனுமதிக்கப்படுவதையே மது எனச்சொல்லி காந்தியடிகள் எதிர்த்தார். அவருக்கு ஆதரவாக பெரியார் தன் மனைவி நாகம்மையையே போராட்டத்துக்கு தலைமை தாங்கச் செய்து தன் தோட்டத்திலிருந்த ஐநூறு தென்னை மரங்களையும் வெட்டி சாய்த்தார்.
மக்களே தங்களை ஆளவேண்டியவர்களை தேர்ந்தெடுத்துக்கொள்வதுதான் மக்களாட்சி. மக்களுக்காகத்தான் அரசாங்கம் உருவாக்கப்படுகிறது. மக்களுக்கு பாதிப்பு என்பதை உணரும் போது அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதுதான் அரசின் கடமை. அதை உணர்ந்து பக்கத்து மாநில கேரள அரசு படிப்படியாக மதுக்கடைகளை அகற்றி மக்களை காக்கும் பணியைத் தொடங்கி செயல்படுத்திவிட்டது. அதேபோல் தமிழகத்திலும் உடனே நடைமுறைப்படுத்தலாம்.
இருபது தமிழர்கள் ஆந்திர அரசின் வனத்துறையால் கொல்லப்பட்டதற்காக நாடாளுமன்றத்தில் தமிழக ஆளும் கட்சி நீதி கேட்கிறது. மது அழிவின் பலிக்காக மக்கள் யாரிடம் நீதி கேட்கப்போகிறார்கள்?
குடிமகன் எனும் சொல் இன்றைக்கு தமிழ் அகராதியில் கேலியாக்கப்பட்டிருக்கிறது. மக்களுக்காக செயல்படவேண்டிய சட்டமன்றம் இதுபோன்ற செயல்களுக்காக முடங்கிப்போகிறது.. மக்களும் முடங்கித்தான் போயிருக்கிறார்கள். தேர்தலை மட்டுமே எதிர்பார்த்துக்கொண்டு. பாவம், அவர்களிடம் இருப்பதெல்லாம் இந்த ஒரே ஒரு வாக்குச்சீட்டு மட்டும்தான்! வாழ்க மக்களாட்சி!!
- இன்னும் சொல்லத் தோணுது
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள:
thankartamil@gmail.com