Sunday 3 May 2015

சொல்லத் தோணுது 9 - பாடாய்ப் படுத்தும் பாட்டு

முன்பெல்லாம் பாடல்கள் என்றால் திரைப்படத்தில் அதற்கான காரணமும் சூழ்நிலையும் இருக்கும். கூடவே அதில் மனநிலையும் வெளிப்படும். கவிதைநயமும், மொழி வளமும், குரல் வளமும்கூட இருக்கும். மெட்டுக்களும் இசையும் நம்மை மெய்மறக்க செய்யும்.
இப்போது உள்ள பல பாடல்கள் எல்லாம் பாடல்கள்தானா?
காக்காய் கூட்டத்தை விரட்டுவதற் குப் பயன்படும் தகர டப்பா பாடல்களைத்தான், என் மகன்களும் காது சவ்வு கிழியும் அளவுக்கு வைத்து என் வீட்டு உடற்பயிற்சி அறையில் ஒலிக்க விடுகிறார்கள். பொருளற்ற, இசையற்ற, மொழியற்ற, குரல் வளமற்ற இந்தச் சத்தத்தை வேறு வழியே இல்லாமல் நானும் தினமும் இரண்டு மணிநேரம் கேட்டுத் தொலைக்கிறேன். தலைமுறையைக் கடந்தவன் எனச் சொல்லிவிடுவார்களோ என்பதற்காக எவ்வளவுதான் சகித்துக்கொள்வது? ஏதோ நூற்றில் ஒன்று தேறுகிறது எனும் என் கருத்து அவர்களுக்கு என் மீது பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.
நான் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, சென்னைக்குப் புறப்படும்போது என் வீட்டிலிருந்து அறுநூறுக்கும் மேற்பட்ட இசைத் தட்டுக்களை எல்லாம் கொஞ்சம் கொஞ்மாக எடுத்து வந்து என்னுடன் வைத்துக்கொண்டேன். உலகம் முழுக் கப் பரவியிருக்கிற இலங்கைத் தமிழர்களிடத்தில் இருந்தும், போகிற நாடுகளில் எல்லாம் வாங்கி வந்து சேகரித்தும் வைத்திருக்கிறேன். எனக்குப் பிடித்தப் பாடல்களை மட்டும் சுமார் 400 மணி நேரம் கேட்கும் அளவுக்கு கணினியில் சேகரித்து வைத்துள்ளேன். அவை நான் பயணப்படுகிற எல்லா இடங்களுக்கும் என்னுடன் பயணப்படுகின்றன. நினைக்கும்போது கேட்கிறபடி கைப்பேசியிலும் சேமித்து வைத்திருக்கிறேன்.
வாழ்க்கை பற்றிய குழப்பங்கள், அமைதி, மகிழ்ச்சி, தனிமை என எது ஏற்பட்டாலும் எனக்கு ஒரே துணை இந்தப் பழைய திரைப்படப் பாடல்கள்தான். அதனை உருவாக்கிய கவிஞர்களும், பாடகர்களும், இயக்குநர்களும், இசையமைப்பாளர்களும், தயாரிப்பாளர்களும் இந்தத் தமிழனுக்கு விட்டுவிட்டுப் போன சொத்துக்கள் அவை. அவர்கள் இதற்காகப் பெற்ற ஊதியமும், வசதி வாய்ப்புகளும், அனுபவித்ததும் இன்றைய நிலையைப் பார்க்கும்போது ஒன்றுமே இல்லை.
முன்பெல்லாம் ஒரு பாடலைக் கேட் கும் போது அதில் இருந்த மெட்டையும், இசையையும், பொருளையும், குரலையும் ரசிப்பேன். எப்போது நம் மொழியைப் பற்றிய அறிவும், சிந்தனையும், உணர்வும் வளரத் தொடங்கியதோ அப்போது முதல் என் மனதில் குடிகொண்ட, மெய்மறந்த பாடல்கள் கூட எனக்குப் பிடிக்காமல் போய்க் கொண்டிருக்கின்றன. என் படங்களில் இடம்பெற்ற, என் பங்களிப்பும் முழுமையாக இருந்த பாடல்களும் இதில் அடக்கம்.
தமிழ்த் திரைப்பாடல்களில் அந்த நாளில் இருந்து இந்த நாள் வரை சமஸ்கிருதச் சொற்களைப் பயன்படுத்தாமல் பாடல்களை உருவாக்க முடியவில்லை. மெட்டுக்கு ஏற்றபடி சொற்களைப் பொருத்த வேண்டியிருக்கிறது. இது இப்படியென்றால், முதலில் பாடலை எழுதிவிட்டு பின்பு மெட்டுக்கள் அமைத்து உருவாக்கிய பாடல்களுக்கும் இதே கதிதான். பிற மொழி கலந்து பேசுவதையோ, எழுதுவதையோ பற்றி கேள்வி எழுப்பியவர்கள்இந்தச் சிக்கலைக் கண்டுகொண்டதே இல்லை. அதனால் காலப்போக்கில் ஒரு பாடலில் இருக்கிற நூற்றில் இருபத்தைந்து சமஸ்கிருதச் சொற்களும் தமிழ் சொற்களாகவே மாறி போய்விட்டன.
நான் அடிக்கடி நினைப்பது உண்டு. இன்னும் ஒரு பத்து ஆண்டுகள் கண்ணதாசன் உயிரோடு இருந்து இளையராஜாவின் இசைக்கு முழு மூச்சாக எழுதியிருந்தால், காலத்தால் அழிக்க முடியாத இன்னொரு பெரும் இசைச்செல்வம் நமக்குக் கிடைத்திருக்கும். இளையராஜா எனும் பெரும் கலைஞனின் மெட்டு, ராகம், இசையைத் தாங்கியே பெரும்பாலானப் பாடல்கள் நிலைத்து நிற்கின்றன. அவர் இசையில் உருவாகிய கதைச் சூழலுக்கும், பாத்திரத்துக்கும் பொருந்திய பாடல்கள் என்றும் அழியாதவை. வெறும் மெட்டுக்காக வரிகள் இட்டு நிரப்பப்பட்ட அவர் இசையமைத்த பல பாடல்களை இப்போது கேட்கும்போது மீண்டும் எனக்குக் கண்ணதாசனே நினைவுக்கு வருகிறார். இனிமேலாவது நேரம் இருந்தால் நீங்களும் கேட்டுப் பாருங்கள். குறிப்பிட்ட ஒரு மெட்டில் அடங்குகிறது என்பதற்காக குறிப்பிட்ட பத்துக்கும் குறைவான சொற்கள் பல பாடல்களில் கையாளப்பட்டிருப்பது புரியும். அதில் பெரும்பாலான பாடல்கள் எனக்கு மட்டுமல்ல; எல்லோருக்குமே பிடித்தவை.
இளையராஜா என்னும் பெருங்கலைஞனின் ஓட்டத்துக்கும் கலைத் திறமைக்கும் ஈடுகொடுக்க முடியாமல் பாடலின் வரிகள் திணறுவதை எளிதாக கவனிக்கலாம். அப்பாடல்களில் சிறிதும் தன் மொழியைப் பற்றிக் கவலைப்படாமல் எழுதப்பட்ட சமஸ்ககிருதச் சொற்கள் என்னை எரிச்சல் அடைய வைக்கின்றன. எப்படியிருந்தாலும் அவை என் தமிழ்ப் பாடல்கள் அல்லவா! இனிவரும் காலங்களிலாவது திரைப்படப் பாடல் எழுதும் கவிஞர்கள் இது பற்றிச் சிந்திக்க வேண்டும்.
உண்மையான தமிழ்ச் சொத்தாக மாறிவிட்ட சில பாடல்களை நான் கேட்கும்போது என் காதலியின் காலில் விழுந்துக் கிடக்கின்றேன். என் தாய், தந்தையரை நினைத்து அழுகின்றேன். உடன் பிறந்தவர்களை நினைத்து ஏங்குகின்றேன். கண்ணதாசன், பட்டுக்கோட்டையார், வாலி எனும் பெருங்கலைஞர்களைத் தினம் பல முறை வணங்குகிறேன். கே.வி.மகாதேவன், விஸ்வநாதன், ராமமூர்த்தி, ஜி.ராமநாதன், சி.ஆர்.சுப்புராமன், வி.குமார், இளையராஜா போன்ற பெருங்கலைஞர்களை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். டி.எம்.சவுந்த ரராஜனையும், சுசீலாவையும், பி.பி.சீனிவாசனையும் பாராட்டிப் பாராட்டி பைத்தியக்காரன்எனச் சொல்லும் அளவுக்கு ஆகிவிட்டேன்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், கே.ஜே.யேசுதாசும், பி.சுசீலாவும் சேர்ந்து பாடிய பாடல்கள் ...மெட்டுக்களும், ராகங்களும், குரல் வளமும், பாடல் வரிகளும், சூழ்நிலைகளும் ஒன்றுக்கொன்றுக் குறையாமல் கேட்பவர்களைக் கர்வம் கொள்ளச் செய்கின்றன.
வேற்று மொழிகளைத் தாய் மொழியாகக் கொண்ட டி.எம்.சவுந்தரரா ஜனும்,பி.சுசீலாவும், எஸ்.ஜானகியும், எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் எப்படியெல்லாம் தமிழை அழகாகஅதன் உணர்ச்சி, வளமைக் குறை யாமல் உச்சரித்தார்கள்! தமிழன் எனச் சொல்லிக் கொள்கிற இந்தத் தலைமுறையில் பாட்டுப் பாடுபவர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது. இவற்றையெல்லாம் என் மகன்களிடம் பேசினால் என்னை ஏளனமாகப் பார்த்து பரிகாசம் செய்கின்றனர்.
எவ்வாறு கெட்ட நீரை, கெட்ட காற்றை, ரசாயனத்தில் தோய்ந்த உணவை உண்பதைப் பற்றியெல்லாம் உணராமல் பெருமிதமாக சிந்திக்க மறந்து வாழ்கிறார்களோ, அவ்வாறேதான் ஒன்றுக்கும் உதவாத தரம் குறைந்த பாடல்களை விதவிதமான நவீன கருவிகளில் ஒலிக்கவிட்டு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். இது தலைமுறை இடைவெளியின் பிரச்சினை மட்டுமல்ல...வாழ்க்கையை உணராமல் போனதன் சீர்கேடு என்பதை அவர்களின் பிற்காலத்தில் உணர்வார்கள் என்கின்ற நம்பிக்கை எனக்கு இல்லை.
பேட்டரி வாங்க காசு இல்லாமல் பழைய பேட்டரிகளைத் தேடித் தேடி எடுத்துப்போட்டு ஒரு பாட்டுக் கேட்பதும், உடனே பிடிக்காத பாடல் வரும் நேரத்தில் பேட்டரியைக் கழற்றி வெய்யிலில் காய வைத்து சக்தியேற்றி மீண்டும் பொருத்தி, பாடலைக் கேட்ட காலங்கள்தான் என் வாழ்நாளில் நான் வாழ்ந்த காலங்கள். பழைய பாடல்களும், பழைய அறிவிப்பு குரல்களும், வானொலியில் இருந்து மறைந்து கொண்டிருக்கின்றன. என் மொழியைத் தூய்மையாகப் பேச என் வானொலி மறுக்கிறது. என் தமிழைக் கவிதையாகப் பாடாமல் இரைச்சலிடுகிறது. ஏனென்று கேட்டால், ‘எதைப் பற்றியும் சிந்திக்காத என் இளைய தலைமுறையை மேலும் மகிழ்ச்சிப்படுத்துவதற்காகவேஎன்கின்றனர் பொறுப்புணராத சில திரைப் படைப்பாளிகளும், ஊடகத்தினரும். நான் யாரிடம் போய்ச் சொல்வது?
- இன்னும் சொல்லத் தோணுது
எண்ணங்களைத் தெரிவிக்க: thankartamil@gmail.com

No comments:

Post a Comment