Thursday 23 February 2017


பயணம்: மழையில் நனைந்துகொண்டிருந்தார்
குரோசவா!

தமிழ் இந்து: சினிமா டாக்கீஸ் 

நான்கு மாதங்கள் இருக்கும். ஜப்பான் தமிழ்ச் சங்கத்திலிருந்து துரைபாண்டி என்பவர் அழைத்துப் பேசினார். பெரும்பாலான தமிழ்ச் சங்கங்கள் தமிழை வளர்ப்பதற்கான முயற்சிகள் தவிர மற்ற வேலைகளையெல்லாம் செய்து கொண்டிருக்கின்றன என்பதால் அழைப்புக்குச் சம்மதம் தெரிவிக்கக் காலம் தாழ்த்தினேன். அழைத்தவர்கள் பட்டிமன்றம் நடத்தி, திரைப்பட, சின்னதிரை நாடக நடிகர்களை அழைத்து, பலகுரல் கலைஞர்களை அழைத்துப் பரவசப்படுபவர்கள் அல்ல, பரிதிமாற் கலைஞரையும், தேவநேயப் பாவாணரையும், மறைமலை அடிகளையும், இலக்குவனாரையும், பெருஞ்சித்திரனாரையும் பின்பற்றித் தமிழை வளர்க்க நினைப்பவர்கள் என அறிந்துகொண்டு ஜப்பான் வரச் சம்மதம் தெரிவித்தேன்.
நிறைவேறாத விருப்பம்
நான் ஜப்பான் செல்ல மனமிசைந்ததன் பின்னணியில் இருந்த முதல் காரணம் உணர்வுபூர்வமானது. எனக்குள்ளிருந்த படைப்பாளனை எனக்கு அடையாளம் காண்பித்த எனது ஆசான்களில் முதன்மையானவர் திரைப்பட மேதை அகிரா குரோசவா (Akira Kurasowa). அவர் பிறந்த ஊரைத் தொட்டு வணங்க வேண்டும் என்பதே உண்மை.
1998-ம் ஆண்டு ‘கள்ளழகர்’ படப்பிடிப்பில் ஒளிப்பதிவாளனாகப் பணியாற்றிக்கொண்டிருந்த நேரம் அது. அந்தப் படத்துக்கு உரையாடலை எழுதிக்கொண்டிருந்த இயக்குநர் மகேந்திரன், குரோசவா இறந்த செய்தியை என்னிடம் சொன்னார். பாதி நாள் படப்பிடிப்பை நிறுத்தி நினைவஞ்சலி செலுத்தினோம்.
சரியாக முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் ‘ரஷோமான்’(Rashomon) படம் பார்த்தேன். நான் கண்ட முதல் ஜப்பானியத் திரைப்படம் அதுதான். குரோசவாவின் திரைக்கதை ஆளுமையும், உரையாடல்களும், இயக்கத் திறனும், கசுவோ மியாகவாவின் (Kazuo Miyagawa) கேமரா காட்சிப் படிமங்களும் என்னை உறையச் செய்துவிட்டன. அவரது ‘செவன் சாமுராய்’ (Seven Samurai) பார்த்ததும் பேச்சே நின்றுபோனது. பின், ‘ரெட் பியர்ட்’ (Red Beard), ‘இகிரு’ (Ikiru), ‘ஹை அண்ட் லோ’ (High and Low) ‘யோஜிம்போ’ (Yojimbo) என ஒவ்வொரு படமும் என்னைத் திக்குமுக்காட வைத்தன.
குரோசவாவின் ஒவ்வொரு படைப்பும் வாழ்க்கை குறித்தே கேள்வி எழுப்புபவை. கட்டமைத்த காட்சிகள் மூலமாகவும், பாத்திரப் படைப்பு மூலமாகவும் கேள்விகளை எழுப்பிக்கொண்டேயிருந்தார். திரைக்கலையையும், இலக்கியத்தையும் அவரது திரைப்படங்கள் எனக்குக் கற்றுக்கொடுத்தன.
அகிரா குரோசவாவை என்றாவது ஒரு நாள் சந்தித்துவிட வேண்டும் எனத் துடித்தேன். நிறைவேறாமலேயே போனது. ஜப்பானியத் திரையில் அவரது ஆசான் கஜிரோ யமமொதோ (Kajiro Yamamoto), யசுஜிரோ ஒஸு (Yasujiro Ozu), கெஞ்சி மிசோகுச்சி (Kenji MIzoguchi), நகீசா ஒஷிமா (Nagisa Oshima) என நான் மதிக்கும் பல மேதைகள் இருந்தும் குரோசவாவின் படைப்புகள் என்னுடன் உரையாடிக்கொண்டேயிருக்கின்றன.
தூக்கம் தொலைத்த இரவு
தமிழ்ச் சங்கப் பொங்கல் விழா டோக்கியோ நகரில் சிறப்பாக நிறைவுற்றதும் எனக்கு வாக்களித்தபடி விழாக் குழுவினர் அகிரா குரோசவாவின் கல்லறைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தார்கள்.
விடிந்தால் நான் குரோசவாவை பார்க்கப் போகிறேன் எனும்போதே என்னால் அன்றிரவு முழுக்க உறங்க முடியவில்லை. தொடர்ந்து அவரது படைப்புகள் காட்சி காட்சியாக மனக்கண்களில் ஓடிக்கொண்டேயிருந்தன. அகிரா குரோசவாவுக்கு இணையாக கேமிராவைக் கையாளத் தெரிந்த இயக்குநர் இன்றுவரை ஒருவரும் இல்லை என்றே சொல்லுவேன்.
குளிர் எனது கட்டுப்பாட்டைக் கடந்தாலும் அது ஒரு பொருட்டாகவே இல்லை. டோக்கியோவிலிருந்து இரண்டரை மணி நேரப் பயணத்தைத் தொடங்கினோம். கமாமுரா சிறு நகரத்திலுள்ள புத்தர் கோயில் புகழ்பெற்றது. அதன் சுற்று வட்டத்தில்தான் கல்லறை இருப்பதாகக் கூகுள் வரைபடக் குறி சுட்டிக்காட்டியது. இதற்கு முன்பாக இயக்குநர் மிஷ்கின் அந்தக் கல்லறைக்குச் சென்று பார்த்ததாக அவர்கள் சொன்னார்கள். இடம் நெருங்க நெருங்க எனது ஆசானை நேரில் பார்க்கப் போவது போன்றதொரு பதற்றமும் படபடப்பும் என்னை ஆட்கொண்டுவிட்டன. நாங்கள் சென்றிருந்த வாகனத்தை நிறுத்துவதற்கு இடமில்லாமல் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தவித்த தவிப்பு எனது பொறுமையைச் சோதித்தது.
மண்ணின் கலைஞனை மறந்துபோனவர்கள்
வழியில் ஒரு கடையில் பூங்கொத்தை வாங்கிக்கொண்டு குளிருடையோடு நடந்து அந்த இடத்தை நெருங்கியபோது அது கோயிலாக இருந்தது. எதிர்ப்பட்ட பலரிடம் கேட்டுப்பார்த்தபோது எவருக்கும் அப்படியொரு இடம் அங்கே இருப்பதாகத் தெரியவில்லை என்றார்கள். ஆங்கிலம் கற்ற ஒரு ஜப்பான் இளைஞன் ஆர்வத்துடன் எங்களுக்கு வழிகாட்ட முயன்றாலும், அவனாலும் எங்களுக்கு உதவ முடியவில்லை.
பின் ஒரு முதியவர் உதவ முன்வந்தார். எண்பது வயதுக்கு மேலிருக்கும். அந்த நாட்டு இயக்குநர் ஒருவரை நாங்கள் மதித்து வந்திருப்பது அவரைச் சுறுசுறுப்பாக்கியது. இறுதியாக அவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. மழை தூறத் தொடங்கிவிட்டது. கடையில் விலை கொடுத்து குடை வாங்கிக்கொண்டு தேடினோம். நாங்கள் நெடுநேரமாக அலைவதைப் பார்த்துவிட்டு அந்தக் கோயிலிலிருந்த ஒருவர் எங்களிடம் “குரோசவாவின் கல்லறை இங்கேதான் இருக்கிறது. அது சுற்றுலாத்தலமல்ல. கல்லறை என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் நினைத்த மாத்திரத்தில் பார்க்க முடியாது.” எனக் கோபத்துடன் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
உண்மையில் தங்கள் மண்ணின் நிகரற்ற கலைஞனை அந்த மண்ணின் மைந்தர்கள் மறந்துபோய்விட்டார்கள். மீண்டும் கூகுளின் உதவியுடன் வழி தேடியதில் கோயிலின் பக்கவாட்டில் சிறிய நடைபாதை ஒன்று தெரிந்தது. அதன் வழியாகச் சென்று பார்த்ததில் கல்லறைகள் கணக்கில்லாமல் இருப்பதைக் கண்டோம்.
நனைந்துகொண்டிருந்த ஆசான்
பார்க்காமல் போவதில்லை என்கின்ற முடிவோடு குடையைச் சுருட்டி வைத்துக்கொண்டேன். உடன் வந்திருந்த நண்பர்களுக்கு ஜப்பானிய மொழி படிக்கத் தெரியும். ஒவ்வொரு கல்லறையாகப் படித்துக்கொண்டு போனதில் இறுதியாக ‘இதுதான்’ என உடன் வந்த நண்பர் சொன்னார்.
மழையில் அகிரா குரோசவா நனைந்துகொண்டிருந்தார். எண்ணற்ற படைப்பாளிகள் உருவாகக் காரணமான மூளை இங்கு இருப்பதைப் பார்த்ததும் கலங்கிப் போனேன். குரோசவாவின் அன்பான குரல் என்னை வரவேற்பதுபோல் தெரிந்தது. எனது ஆசானின் காலடியில் பூங்கொத்தை வைத்துவிட்டு மண்டியிட்டுக்கொண்டு கண்களை மூடியிருந்த அந்த நேரங்களில், இவ்வளவு காலம் எனக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த அவர் மீதான பற்றும் இறுக்கமும் மேலும் மேலும் அவரது படைப்புகளிலேயே உழன்றன.
தலைப்பகுதியைத் தொட்டுப் பார்த்தேன். வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றுக்கொள்ளும்போது ஆஸ்கர் விழாவில் அவர் சொன்ன சொற்களும், சொன்ன விதமும் ஒவ்வொரு கலைஞர்களும் பார்க்கத் தவறக் கூடாதவை. அடக்கமான அவரது பணிவும் புன்னகையும் அப்போது என்னுள் தோன்றி மறைந்தன.
குரோசவா முப்பது திரைப்படங்களைத்தான் இயக்கினார். இறுதிக் காலத்தில் கண்பார்வை இழந்த பிறகும் பிடிவாதமாக இரண்டு படங்களை இயக்கினார். 88-வது வயது வரை அவர் கண்ட இவ்வுலகம் முப்பது திரைக்காவியங்களிலும் கல்வெட்டாய்ப் பதிந்திருக்கிறது. ஆசானின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றான ‘கனவுகள்’ (Dreams) போலவே நான் அவருடனிருந்த கணங்கள் கனவுபோல் தெரிந்தாலும் என் வாழ்வு முழுக்க நிலைப்பவை.
- தங்கர் பச்சான் 

Tuesday 14 February 2017

தலைவர்கள் பஞ்சமும் தடுமாறும் மக்களும்! – தங்கர் பச்சான்

மக்களுக்கானத் தலைவர்கள் என்பவர்கள் வானத்தில் இருந்து திடீரென எங்கிருந்தோ குதிப்பவர்கள் இல்லை. மக்களிடம் இருந்தேதான் நாம் வணங்குகிற பல நல்லத் தலைவர்கள் கிடைத்தார்கள்.
நிகழ்ந்து கொண்டிருக்கும் அரசியல் போக்கும், அரசியல்வாதிகளின் போக்கும் அனைவருக்குமே மனநிறைவைத் தராததை எளிதாக உணர முடிந்தது. இளைஞர்களிடம் இருக்கின்ற கேள்விகளும், கோபமும் அவர்களை நெருங்கிப் பார்த்தால் புரியும். தங்களைப் பற்றி அக்கறை கொள்பவர்களும், மக்களுக்காகவே தன் வாழ்வை ஒப்படைத்தத் தலைவர்களும் எங்கே இருக்கிறார்கள் காட்டுங்கள் என்கிறார்கள்? எங்களுக்கு அரசியல் தெரியாது என நினைத்துவிடாதீர்கள்? நாங்கள் பங்கு கொள்கிற மாதிரி இங்கு அரசியல் இல்லை என்பதே அவர்களின் வாதமாக இருக்கிறது. அரசியல்வாதிகள் நேர்மையற்றவர்கள், தன்னலவாதிகள் என்கின்ற எண்ணம் அவர்களின் மனதில் குடிகொண்டுவிட்டது.

ஊடகங்களில் அறிக்கையை வெளியிட்டுவிட்டு, தெருவில் இறங்கி மக்களின் வாழ்க்கையில் பங்கு கொள்ளாமல் நேரடியாக செயலில் இறங்கி போராடாதவர்கள்தான் தலைவர்களா? கோடி கோடியாகப் பணத்தை இறைத்து கூட்டத்தைக் கூட்டி, குளிரூட்டப்பட்டக் காரில் படு வேகமாக அவர்களின் முன்னேயும் பின்னேயும் கார்களைப் போகவிட்டு, மக்களை விரட்டியடித்து, சாலையில் அவர்களே வைத்துக் கொண்ட பதாகைகளின் விளம்பரத்தைப் பார்த்தே மகிழ்பவர்களா தலைவர்கள் என்பதையும் கேட்கிறார்கள்.

ஆளாளுக்கு ஒரு தொலைக்காட்சியையும், ஒரு பத்திரிகையையும் வைத்துக்கொண்டு தங்கள் புகழையேப் பாடிக் கொண்டும், உண்மைச் செய்திகளை மக்களுக்குத் தெரியப்படுத்தாமல் அதனைத் திரித்து அவரவர்களுக்குத் தகுந்த மாதிரி வெளியிடுவதை எல்லாம் இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் சகித்துக் கொண்டிருப்பது?
மக்களைப் பற்றி மட்டுமே சிந்தித்து, அவர்களுக்காகவே தான் கொண்ட உறுதியில் இருந்து மாறாமல் அவர்களுடனேயே கிடந்து ஊழலுக்கு எதிராகவும், மக்களின் வாழ்வு நலனுக்காகவும் ஓடி உழைத்துக் கொண்டிருக்கும் தலைவர்களை எங்கள் கண்ணில் கொஞ்சம் காட்டுங்களேன் என்கிறார்கள்.

இவர்கள் அரசியலில் நுழைந்தபோது கொண்டுவந்த சொத்து எவ்வளவு? என்ன தொழிலை செய்து இவ்வளவு பணத்தை இவர்கள் சம்பாதித்தார்கள்? இவர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் என்ன செய்து சம்பாதிக்கிறார்கள்? அவர்களுக்கு எங்கே இருந்து இவ்வளவு மூலதனம் வந்தது என்பதையெல்லாம் கவனிக்காமலா இருக்கிறோம் என்றும் அந்த இளைஞர்கள் கோபத்துடன் கேட்கிறார்கள்.
அப்பழுக்கற்ற சீரியத் தொண்டனே தலைவனாக மாறுகிறான். அவன்தான் மக்களின் அன்றாட வாழ்வு நிகழ்வுகளை அறிந்து உணர்ந்து திட்டங்களைத் தீட்டி, தீர்வைத் தேடுகிறான். சாதியோ, மதமோ யாருக்கும் விருப்பமில்லைதான். சாதியை விதைத்து அந்த உணர்வில் மக்களை கூறுபோட்டு, அதற்கேற்றபடி வேட்பாளர்களைத் தேடி காண்பதுதானே காலம்காலமாக நடக்கிறது. தன் சாதிக்காரனுக்கு மட்டுமே கட்சிப் பொறுப்பும் பதவியும் கொடுத்து சாதி வெறியை மக்களா வளர்த்தார்கள்?

மதம்தானே முதலில் மனிதனை கூறுபோட்டு தனித் தனியாகப் பிரித்தது. மனிதனை நல்வழிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட மதம்தான், இன்று உலகத்தின் பெரும் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது.

சாதியும் மதமும் ஒன்றாகச் சேர்ந்து அரசியல் எனும் பெயரால் நம்மை சீரழித்துக் கொண்டிருப்பதை இனியும் தடுத்து நிறுத்திவிட முடியுமா? சாதிக் கட்சிகளை அடையாளம் கண்டு எதிர்ப்பை வெளிப்படுத்துபவர்கள், மதக் கட்சிகளைக் கண்டுகொள்வதே இல்லை. இவற்றையெல்லாம் சீர் செய்ய வேண்டிய ஊடகங்களில் பல, தங்களின் சாதியைச் சேர்ந்தவர்களை மட்டுமே பணியில் சேர்த்துக்கொள்வதும் அவர்களின் செய்திகளுக்கு மட்டுமே முன்னுரிமை தந்து தகுதியற்றவர்களை வளர்த்துக்கொண்டிருப்பதும் நடந்துகொண்டுதானே இருக்கிறது. ஆனால், இவர்கள்தான் அரசியலில் சாதி, மதமற்ற தூய்மைக்காக வரிந்து கட்டுகிறார்கள் என்பதெல்லாம் மக்களுக்குத் தெரியாதா?

முதலில் நமக்குத் தேவை நேர்மையான ஊடகங்கள். அவைகள் கிடைத்தால் நல்ல நேர்மையான தலைவர்கள் கிடைத்துக்கொண்டே இருப்பார்கள்.

ஊழல் இருட்டில் இருக்கும் இந்தியாவுக்கு, நேர்மையான அரசியலை முன்னெடுத்துச் செல்ல இனியும் ஒரு தலைவர் பிறந்து வரப் போவதில்லை. ஒன்று, தவறு செய்துவிட்டவர்கள் மனம் திருந்தி முற்றிலும் மாறி அர்விந்த் கேஜ்ரிவால் செய்ததைப் போல் மக்களிடம் மன்னிப்புக் கேட்டு, நேர்மையான தலைவர்களாக மக்கள் மனதில் கண்ணுக்குத் தெரியலாம். அல்லது, மக்களுக்காக செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள் அவர்களின் தீவிரமான செயல்பாடுகளால் ஊடகங்களால் கண்டுபிடிக்கப்பட்டு மக்களின் முன்னிறுத்தப்பட்டு இனம் காட்டப்படலாம். தலைவர்கள் பஞ்சம் தீருமா? தடுமாறும் மக்களின் மனம் மாறுமா?


15-02-2015-அன்று வெளியான “சொல்லத் தோணுது” – நூலில் இருந்து.