Thursday 19 January 2017

தங்கர் பச்சான் அறிக்கை
தமிழினத்தின் அடையாளத்தை மீட்டெடுக்க இளைய தலைமுறை சாலைகளில் இறங்கி விட்டது. ஏற்கெனவே படித்து முடித்து ஒன்றே முக்கால் கோடி இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கும் நிலையில் தங்களுக்கு வேலை கொடுங்கள் என கேட்டு போராடாமல் தன் இனத்துக்காக ஒன்று கூடி இருக்கிறார்கள். தமிழ் நாட்டின் உரிமைகளையும்,தமிழர்களின் உரிமைகளையும் தொடர்ந்து இழந்து வருவற்கான கோபத்தை ஒவ்வொருவரிடமும் தெறிக்கிறது. இப்போராட்டம் வெறும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டமாக மட்டும் இருந்துவிடக்கூடாது. நமக்கான தேவைகளையும்,உரிமைகளையும் தர வேண்டியது நம்மை ஆளும் அரசும்,தமிழ்நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்த  அனைத்துக்கட்சி சட்டமன்ற,நாடாளுமன்ற உருப்பினர்களும்தான். அனைவரும் தங்கள் பகைகளை மறந்து இம்மக்களுக்காக ஒன்றுகூடி மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்திருந்தால் எப்பொழுதோ இதற்கொரு தீர்வு கிடைத்திருக்கும். பொங்கலுக்கு முன்பே முடியாது என தெரிந்திருந்தால் மக்கள் நம்பிக்கையை வளர்த்திருக்க மாட்டார்கள்.
இரண்டு வருடமாக ஜல்லிக்கட்டை நடத்த விடாமல் கரணம் சொல்லி தப்பித்துக்கொண்டதுபோல் இம்முறையும் மத்திய அரசு கை விரித்து விட்டது. இந்நிலைக்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களும்தான். எங்கள் மக்களுக்கான உரிமைகளை எங்களால் பெற்றுத்தர முடியவில்லை என அனைத்து சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்களும் அறிவித்தால் நழுவும் மத்திய அரசு உடனே அவசர சட்டம் இயற்றி தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலிலிருந்து காளை மாடுகளை விலக்கித்தான் தீர வேண்டும்.
ஆனால் வரலாற்றில் இதற்கு முன்பு எப்பொழுதும் இல்லாததுபோல் நான்கு நாட்களாக தமிழகத்தில் ஒரு புரட்சி உருவாகியிருக்கிறது. நம் பிள்ளைகள் கொட்டும் பனிக்குளிரிலும்,வெயிலிலும் கிடந்து போராடுகிறார்கள். இப்போதுகூட மத்திய அரசு கை விரித்த பிறகும் தமிழகத்தின் அனத்துக்கட்சியும் ஒன்று கூட மறுக்கிறது.

நாமும் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். போராட்டம் வெற்றி பெற்றால்தால் நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நம்மை கை விடும் பொழுது இப்படிப்பட்ட போராட்டங்கள் மூலம் எதிர்காலத்தில் வேண்டியதைப்பெற முடியும். இன்றைய அடிமைத்தனமான கல்வி கற்றுக்கொடுக்காததையும்,நாம் கற்றுக்கொடுக்காததையும் நம் பிள்ளைகள் போராட்டத்தின் மூலம் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். போராட்டத்தை அடக்குவதற்கான அனைத்து வேலைகளையும் இதுவரை பதவிகளையும்,அதிகாரத்தையும் சுகமாக அனுபவித்தவர்கள் செய்து முடிக்கத் தயாராக இருக்கிறார்கள். இந்தியாவின் பிற மாநிலங்கள் மட்டுமல்ல உலகமே இந்தப்போராட்டம் என்னவாகும் என எதிர்பார்த்து காத்திருக்கிறது. பெற்றோர்களாகிய நாம் ஒவ்வொருவரும் இனி குடும்பத்துடன் வீதியில் இறங்காமல் இந்தப் போராட்டத்தை வெற்றியடைய வைக்க முடியாது. தமிழினம் தலை நிமிற இதுதான் சரியான நேரம். களத்தில் நாம் அனைவரும் இறங்கி போராட்டத்தை வென்றெடுப்போம். ஜல்லிக்கட்டுக்காக போராடும் நம் இளைய தலைமுறை அதற்குக் காரணமான தினம் தினம் செத்து மடியும் நம் விவசாயிகளையும்,விவசாயத்தையும் காப்பற்றுவார்கள்.

Friday 13 January 2017



“தமிழர் திருநாள்” வாழ்த்து

‘நான் தமிழன்’ என ஜல்லிக்கட்டு நடத்திக்காட்டி வீரத்தைப் பறைசாற்ற மல்லுக்கட்டும் தமிழ்க்கூட்டம்.
‘பொங்கலோ திருநாளோ எது  வந்தால் நமக்கென்ன? என காவல் நாயாய் காலையிலேயே மதுக்கடை வாசலில் காத்துக்கிடக்கும் தமிழ்க்கூட்டம்.
‘நூறு ரூபாய் பொங்கல் பரிசு கிடைக்காமல் போய்விடுமோ’ என கல் போட்டு இடம் பிடித்து ஒரு முழ கரும்புத்துண்டுக்கும், ஒரு கிலோ பச்சரிசிக்கும் கால் கடுக்க காத்துக் கிடக்கும் தமிழ்க் கூட்டம்.
கடனில் கிடந்தாலும், வறுமையில் உழன்றாலும் நட்டம் வரும் என அறிந்தே நமக்கெல்லாம் உணவளித்து கால்படி அரிசிக்கு வழியில்லாமல் தன் வீட்டு இழவுச் செய்தியைக்கூட யாரும் கண்டு கொள்ளாததால் கால் நடைகளை கட்டிக்கொண்டு அழும் உழவுக்குடிகளின் கூட்டம்.
இவைகள் அனைத்தையும் கண்டுகொண்டே நாடெங்கும் சிரித்தபடி பதாகைகள் நட்டு வைத்து சிறிதும் மனசாட்சியின்றி எப்பொழுதும்போல் தமிழர்களை வாழ்த்தும் அரசியல் கூட்டம்.
இந்நிலையில் என்ன சொல்லி வாழ்த்துவது?
சாதி,மதம்,கட்சி,ரசிகர் மன்றங்கள் என கடந்து தமிழர்களாய் ஒன்றிணைந்தால் தமிழன் எனச் சொல்லலாம்! தலை நிமிர்ந்து நிற்கலாம்!
தள்ளாடும் தமிழன் தலை நிமிர்ந்து வாழும் நாள் என்று வருமோ அதுதான் தமிழனுக்கு உண்மையான பொங்கல்.
அந்த நாள் வர வாழ்த்துகிறேன்.
அன்போடு

தங்கர் பச்சான்