Sunday 30 August 2015

சொல்லத் தோணுது 49: மக்கள் - குரல் - மன்றங்கள் - தங்கர் பச்சான்




மக்களின் குரல் எழுப்புவதற்காக மக்களால் உருவாக்கப்பட்ட மன் றங்கள்தான் சட்டமன்றங்களும், நாடாளுமன்றமும். ஆனால், அந்த மன்றங்கள் எல்லாம் இப்போது மக்களின் குரலை எழுப்புவதற்கு பதிலாக நாடக மன்றங்களாக மாறிவிட்டன.
கடமையை ஆற்றுவதற்குப் பதிலாக சடங்குகளைக் கடைபிடிப்பதில் மிக வல்லவர்கள் நம் ஆட்சியாளர்கள். மக் களைக் காப்பாற்றுவதற்கு உருவாக்கப் பட்ட அரசியல் சட்டங்களை தங்களுக் குத் தகுந்ததுபோல் எவ்வாறு வளைப் பது என்னும் நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்து, அந்த அரசியல் சட்டத்தையே தங்களுக்கு அரணாக மாற்றிக் கொண் டவர்களில் உலகத்திலேயே முதலிடம் நம் அரசியல்வாதிகளுக்குத்தான்.
சட்டமன்றத்துக்கும், நாடாளுமன்றத் துக்கும் செல்லாமலே அவர்களால் ஐந்து ஆண்டுகள் அந்தத் தொகுதி மக்களின் உறுப்பினராக பதவியை அனுபவிக்க முடியும். பலர் எப்போதாவது ஒருமுறை கையெழுத்தை போட்டுவிட்டு வந்துவிடுகிறார்கள். இப்படிப்பட்டவர்களைத்தான் நம் நாட்டு மக்கள் மீண்டும் மீண்டும் ஒவ்வொரு தேர்தலிலும் தேர்ந்தெடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
வாக்களித்த பலருக்கு தங்கள் சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயரும் தெரியாது; முகமும் தெரியாது. தேர்தல் நேரத்தில் மட்டும் மக்கள் முன் முகத்தைக் காட்டுவதோடு ஒதுங்கிக் கொள்கிறார்கள். பதவியில் இருக்கும் இந்த ஐந்தாண்டுகள் மட்டுமல்ல; வாழ் நாள் முழுக்க மக்களின் வரிப் பணத் தில் அதற்கான ஊதியத்தையும், சலுகைகளையும் அனுபவித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
மக்கள் மன்றங்களில் மக்களின் குரலை, மக்களின் சிக்கல்களை, மக் களின் தேவைகளை எடுத்துரைத்து கடமை ஆற்றாத பலரே மீண்டும் அடுத்தத் தேர்தலிலும் அதே தொகுதி யில் அதே மக்களிடத்தில் வந்து கூசாமல் ‘பெருவாக்கு வித்தியாசத்தில்’ வெற்றி பெறச் செய்யுங்கள் என வாக்கு கேட் பார்கள். இந்த மக்களும் அவர்களைக் கேள்வி கேட்பது இல்லை. கொடுக்கிற பணத்தை வாங்கிக்கொண்டு அந்த வேட்பாளரின் தகுதியைப் பார்க்காமல் அவர் சார்ந்த கட்சியின் சின்னத்துக்கு வாக்களித்துவிடுகிறார்கள். இதனால் அந்த வேட்பாளர் மீண்டும் மக்களின் சார்பாக ஐந்தாண்டு காலங்களுக்குப் பதவியில் நீடிக்கிறார்.
மக்களுக்காக குரல் எழுப்பாமல் புகழ் பாடுவதற்கு மட்டும் கற்றுக்கொண்டுள்ள சிலர், ஒரு கட்சியின் வாக்குகளைப் பெற்று உறுப்பினராகிவிட்டு பதவி ஏற்றவுடன் தனது சொந்த நலனுக்காக மாற்றுக் கொள்கையுடைய வேறொரு கட்சிக்குத் தாவிவிடும் போக்கும் பெருகிக்கொண்டு வருகிறது.
நான் வாக்களித்த கட்சியில் இருந்து எதற்காக வேறொரு கட்சிக்குத் தாவினீர் கள் என அந்தத் தொகுதி மக்களும் கேட்பது இல்லை. எங்கேயாவது ஒரு தொகுதியில் அப்படிப்பட்டவர்களைத் தொகுதிக்குள் வரவிடாமல் விரட்டி அடித்திருந்தால் அவர்களுக்குத் தன்னை உறுப்பினராக்கிய மக்கள் மேல் பயம் இருந்திருக்கும்.
எந்தத் தகுதியின் அடிப்படையில் அரசியல் கட்சிகள் தங்களின் வேட் பாளர்களைத் தேர்வு செய்கின்றன என்பது புரியவில்லை. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பு எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை பல உறுப்பினர்கள் இன்னும் உணராததுபோல், மக்களும் உணரவில்லை. மீண்டும் தேர்தல் வந்தால் தங்களின் சிக்கல்களும், தேவைகளும் தீர்ந்துவிடுவதாக எண்ணி ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களித்துவிட்டு மக்கள் தோற்றுக்கொண்டே இருக்கிறார்கள். பொதுக் கூட்டங்களிலும், திருமண மேடைகளிலும் ஆவேசமாக முழங்கு பவர்கள், பேச வேண்டிய மன்றத்தில் பேசாமல் பெட்டிப் பாம்பாய் முடங்கிப் போய் உட்கார்ந்திருக்கிறார்கள். தலை வரைப் போற்றுவதற்கே ஐந்தாண்டு களை வீணாக்கிவிட்டு அச்சமின்றி மீண்டும் அதே தொகுதியில் வேட்பாள ராக வந்து நிற்கிறார்கள்.
முன்பெல்லாம் சட்டமன்றமோ, நாடாளுமன்றமோ கூடப்போகிறது என்றால் மக்களிடத்திலும் ஊடகங் களிலும் ஒரு எதிர்ப்பார்ப்பு இருக் கும். எதிர்க்கட்சிகளாக எதிரணியில் இருப் பவர்கள் விவாதம் செய்து தங்களின் தேவையை நிறைவேற்றுவார்கள் என் கின்ற எதிர்பார்ப்பு இருந்தது. எப்போது ஒரே கட்சி பெரும்பான்மையான உறுப் பினர்களுடன் ஆட்சியைப் பிடிக்கிறதோ, அப்போதே எதிர்க்கட்சிகளுக்கும் மக் களின் குரலுக்கும் இடமில்லாமல் போய் விடுகிறது. பெரும்பான்மையாக இருப் பவர்கள் அவர்களின் வசதிக்கு ஏற்றபடி எந்த சட்டத்தையும் உருவாக்கிக்கொள் ளும் இடமாக மக்களின் இரு மன்றங் களும் முடங்கிப்போகின்றன. அரசு என்பது ஆளும் கட்சிக்காகவும், சபை என்பது எதிர்கட்சிக்காகவும் இருந்த இடம், பெரும்பான்மை உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்கிற ஒரே காரணத்துக் காக சட்டமன்றம், நாடாளுமன்றம் இரண்டுமே ஆளுங்கட்சியின் இடமாக மாறிப் போகிறது.
மக்களுக்காகப் போராடுபவர்கள், குரல் எழுப்புபவர்கள் எதிரணியில் இருப் பவர்கள்தான். அவர்கள் மூலமாகத்தான் இந்நாட்டின், இம்மாநிலங்களின் தேவைகளும், சிக்கல்களும் விவாதித்து தீர்க்கப்படும். அவ்வாறு இல்லாமல் போகும்போது இரு சபைகளும் வெறும் சடங்குக்காகவே நடத்தி முடிக்கப்படும்.
பெரும்பான்மை இல்லாததால் எதி ரணியில், எதிர்க்கட்சியில் இருப்பவர் களால் எதைப் பற்றியும் பேச முடிவ தில்லை. பேசினாலும் அந்தந்தக் கட்சித் தலைவர்கள் வரலாறுகளை, செயல் பாடுகளை, சீண்டல்களைப் பற்றிப் பேசியே ஐந்தாண்டுகளைக் கழித்துவிடு கிறார்கள். பேச மறுப்பதைக் காரணம் காட்டி மற்ற கட்சிகளின் உறுப்பினர்கள் வெளியேறிவிடுவது, ஆளுங் கட்சியின ருக்கு வசதியாகிவிடுகிறது. மக்கள் பிரச் சினைகளை விவாதித்துத் தீர்க்கவேண் டிய மன்றங்கள் வெற்றுப் புகழ்பாடும் மன்றங்களாகவும், வசைபாடும் மன்றங்களாகவும் சிலர் அதைக் கண்டு பெருமகிழ்ச்சி கொள்வதற்காகவும் மட்டுமே கூடிக் கொண்டிருப்பது இந்த நாட்டுக்கும், அவர்களைத் தேர்ந் தெடுத்து அனுப்பிய மக்களுக்கும் எவ்வளவு பெரிய துரோகச் செயல்!
தமிழகத்தில் கடந்த சில ஆட்சி களில்தான் எதிர்க்கட்சித் தலைவர்களே வராமல் சட்டமன்றம் செயல்படுகிறது. பிற நாடுகளில் இருப்பதுபோல் தேர்தலில் பெற்ற வாக்குகளின் விழுக்காட்டு அடிப் படையில் இரு மன்றங்களிலும் மக்களின் பிரதிநிதிகள் உருவாக்கப்பட்டால் அப் போதுதான் அது உண்மையான மக்கள் மன்றம். பெரும்பான்மை மக்களால் வாக்களித்த கட்சிகள் மூன்றாவது இடத்துக்கும் நான்காவது இடத்துக்கும் போய்விடுவதும், குறைந்த அளவில் வாக்குகளைப் பெற்றக் கட்சி வெற்றி பெற்ற தொகுதி எண்ணிக்கையின் அடிப் படையில் இரண்டாவது இடத்துக்கு வந்து எதிக்கட்சியாக ஏற்கப்படுவதும் இனியும் தொடரத்தான் வேண்டுமா?
‘சட்டமன்றம் நடந்துகெண்டிருக் கிறதே, உங்களது தொகுதியின் சார்பாக என்னென்னவற்றைப் பேசுவதற்குத் தயார்ப்படுத்தியிருக்கிறீர்கள் என ஒரு சட்டமன்ற உறுப்பினரைக் கேட்டேன். ‘‘அரசியலில் சேர்ந்து எதை யாவது மக் களுக்கு செய்யலாம் என்கிற எண்ணத் துடன் அரசியலுக்கு வருபவர்களுக்கு அதற்கான இடமில்லை இது’’ என அந்த உறுப்பினர் கூறினார்.
முதல் முறை சட்டமன்றத்துக்குச் சென் றவரின் மனமுடைந்த குரல் ஒரு செய்தியை எனக்கு அறிவுறுத்துகிறது. இந்திய அரசியலில் சில குடும்பங்கள் மட்டுமே அரசியலை ஒரு பரம்பரைத் தொழிலாக செய்துகொண்டு, பொறுப் புணர்வு வாய்ந்த இளைஞர்களுக்கு வழிவிடாமல் செய்து கொண்டிருப்பது, தொடர்ந்து தேர்தலை மட்டுமே நம்பிக் கொண்டிருக்கும் இந்த மக்களுக்கு இழைக்கும் துரோகம் இல்லையா?
மக்களின் கணக்கற்ற சிக்கல்களுக் கும், வாழ்வாதார உரிமைகளுக்கும், தேவைகளுக்கும் இரு மன்றங்களும் விவாதிக்கப்படாமல் ஒரு சடங்காகவே நடந்து முடிவது போன்ற சோகத்தைக் காட்டிலும் இம்மக்களுக்கான சோகம் எதுவாக இருக்க முடியும்?
- இன்னும் சொல்லத்தோணுது 
எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள: thankartamil@gmail.com

Sunday 23 August 2015

சொல்லத் தோணுது 48 - குற்றமும் தண்டனையும் - தங்கர் பச்சான்


மனிதனை அசைத்துப் பார்க்க அவ னது மனசாட்சியால் மட்டுமே முடியும். அரசாங்கம் வழி தவறும் பொழுது அதனை கேள்வி கேட்கவும், நெறிப்படுத்தவும் நீதிமன்றம் என்கின்ற ஒன்று இல்லாமல் போயிருந்தால் எப்பொழுதோ இங்கு எல்லாமும் நடந்து முடிந்திருக்கும்.
செய்து கொண்டிருக்கின்ற குற்றத் தையே குற்றமென உணராமல் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல் வதாக நினைத்துக் கொண்டிருப்பவர் களை, உத்தரபிரதேசத்தில் உள்ள அலகா பாத் உயர் நீதிமன்றத்தில் நீதிமான் பிறப் பித்துள்ள தீர்ப்பு அனைவரின் மனசாட்சி யையும் பிடித்து உலுக்கியிருக்கிறது.
எதிர்காலத் தலைமுறையினரை உரு வாக்க ஊற்றுக்கண்ணாக இருக்கின்ற அரசுப் பள்ளிகளின் ஊற்றுக்கண் மூடப்பட்டு தூர்ந்துபோனதை நீதிமான் திறந்துவிட முயன்றிருக்கிறார். தன் னலத்தை மட்டுமே மதித்து பொதுநலன் குறித்த அக்கறையையே உணராத சமு தாயத்தை உருவாக்கித் தரும் தனியார் பள்ளிகள் பெருக்கெடுத்து, பொதுநல னையும், சமுதாய உணர்வையும், மக்கள் பற்றையும் போதிக்கிற அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுக் கொண்டிருக்கும் காலத்தில் இந்தத் தீர்ப்பு ஒவ்வொருவரின் மனசாட்சியையும் ஒரு நிமிடம் பிடித்து நிறுத்துகிறது.
அரசுப் பள்ளிகள் மூடப்படுவது குறித்து சற்றும் சிந்திக்காமல், அதை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் மாதா மாதம் சம்பளத்தை பெறும் அத்துறை சார்ந்தவர்களும், அரசாங்கமும் இதனை சீர்திருத்துகிற எந்த நடவடிக்கை களிலும் இறங்காமல் போவதன் விளைவை இந்த இந்திய சமுதாயம் இனி அனுபவிக்கபோகிறது.
வாழ்வதற்கு வழியில்லை, உடலில் தெம்பும் இல்லை. தான் படும் இன்னல் களை தாங்கள் பெற்ற பிள்ளைகள் படக்கூடாது என்பதால்தான் ஒவ்வொரு பெற்றோரும் தங்களின் பிள்ளைகளைப் படிக்க வைக்க நினைக்கிறார்கள். வயிற்றுக்கே வழியில்லாத நிலையில் பிள்ளைகளின் படிப்புக்கும் சேர்த்து பொருளீட்ட ஒவ்வொரு பெற்றோரும் இங்கு ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் மட்டும் 1,500 பள்ளி கள் மூடப்படுவதாக சொல்லிக்கொள் வதை எல்லோரும் காது குளிர கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். இந்திய நாட்டின் மிகச் சிறந்த பொற்காலங்கள் அரசுப் பள்ளிகள் ஆலமரம் போல், அரச மரம்போல் தழைத்தோங்கியிருந்த காலங்கள்தான். நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள் அரசுப் பள்ளிகளை வளர்த்தெடுத்தார்கள். அது தேவையில்லை என நினைத்தவர்கள் அதை தனியாரிடம் கொடுத்துவிட்டு கண்டும் காணாமல் ஒதுங்கிக் கொண்டார்கள். அதன் விளைவுதான் இப்போது பெற்றோர்கள் தனியார் பள்ளிக்கூடங்களின் முன்னால் அதிகக் கட்டணம் வசூலிப்பதாகச் சொல்லி போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
அரசுப் பள்ளிகளை வளர்த்தெடுத் திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. அரசுப் பள்ளிகளில் காற்றோட்டம் இருந்தது. இடவசதி இருந்தது. விளை யாட்டுத் திடல் இருந்தது. அறிவையும், நட்பையும், தோழமையும், பண்பையும், ஒழுக்கத்தையும் நேர்மையையும், தூய்மையையும் கற்றுக்கொடுத்த அந்த இடங்கள் இன்று மாட்டுக் கொட்டகைகள் போல் மாறிப் போனதன் விளைவுதான் இந்த தனியார் பள்ளிகளின் ஆதிக்கம்.
அரசுப் பள்ளிகளால் என்னதான் சிக்கல்? ஏன் அவற்றை மூடுகிறார்கள்?
தூய்மைக்கேட்டின் இருப்பிடமாக அரசுப் பள்ளிகள் இருக்கின்றன. கணக்குக்காகவே கட்டப்பட்ட பயன் படுத்தாத கழிப்பறைகள், பெரும்பாலும் மரத்தடிகளிலும், தரையிலும் அமர்ந்து படிக்க வேண்டிய நிலை. தொடர்ந்து நிரப்பப்படாத பணியிடங்களால் அல்லல் படும் ஆசிரியர்கள் என சீர்கேட்டின் பட்டியல்கள் நீள்கின்றன.
பள்ளியை விட்டு வீட்டுக்குச் சென் றால் வீட்டில் படிப்பதற்கான சூழல் இல்லை. பல மாணவர்கள் மீதி நேரத் தில் ஏதாவதொரு வேலையைச் செய்து பொருளீட்டவும், குடும்பத்தின் வேலைகளைச் செய்யவும், தம்பி, தங்கைகளை கவனித்து பராமரிக்கவும், வீட்டு சமையலை செய்யவும், பயன் படுத்தப்படுகிறார்கள். பெற்றோர்களின் இடையறாத சண்டையில் மிச்சமிருக்கிற அமைதியும் கிடைப்பதில்லை.
இப்படிப்பட்ட மாணவர்களின் ஒரே ஆறுதல் அவர்களின் ஆசிரியர்கள்தான். அவர்களின் குறைகளையும், தேவை களையும் புரிந்துகொண்டு பொறுமை யுடன் நல்வழிப்படுத்தி வளர்த்தெடுக்கிற அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்களை வணங்குவது நம் ஒவ்வொருவரின் கடமையாக இருக்கிறது.
மாதம் ஒன்றுக்கு ஐந்தாயிரத்துக்குக் குறைவாக வருமானம் உள்ள 85 விழுக்காடு மக்கள் உள்ள நாட்டில் கல்விக்காகவும், மருத்துவ செலவுக்காக வுமே இரவு, பகலாக உழைத்து தங்கள் வாழ்வின் பெரும் பகுதியை செலவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மக்களுக்கு, எதிர்காலத் தலை முறைக்கு கல்வியையும், மருத்துவத் தையும் தரவேண்டியதுதான் முதல் கடமையென உணர்ந்தால் அலகா பாத் நீதிமன்றத்தின் குரல் உரியவர் களின் காதுகளுக்கு இந்நேரம் கேட்டிருக்கும்.
அரசின் மொத்த செலவில் 40 விழுக்காடுத் தொகை அரசு ஊழியர் களுக்கே மாத ஊதியமாகவும், ஓய்வூதிய மாகவும் செலவிடப்படுகிறது. மக்களின் வரிப் பணத்தில் 40 விழுக்காட்டை எடுத்துக்கொள்கின்ற இவர்கள்தானே அரசுப் பள்ளிகளை சீர் செய்ய வேண்டும்.
நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதுபோல் அடுத்த ஆண்டுத் தொடக்கத்திலிருந்து அரசாங்கத்தின் ஊதியமாக ஒரு ரூபாய் வாங்கும் ஊழியராகவும், மக்களின் பிரதிநிதியாக இருக்கும் எவராக இருந் தாலும் அரசுப் பள்ளிகளில்தான் தங் களின் குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும். அப்பொழுதுதான் எக்கேடு கெட்டால் என்ன என கண்டுகொள் ளாமல் இருந்தவர்கள் அரசுப் பள்ளி களை மாணவர்கள் பயிலும் தகுதி யுடைய இடமாக மாற்றுவார்கள். இதனால் கல்விச் சுமையிலிருந்து பெற்றோர்கள் விடுபட்டு அரசாங்கப் பள்ளிகளில் தங்களின் பிள்ளைகளை ஒப்படைப்பார்கள். அனைத்து மாநில அரசுகளும் மனசு வைத்தால் அடுத்த கல்வியாண்டின் தொடக்கத்தில் இது சாத்தியமானதுதான்.
எந்த பெற்றோர்களுக்கும் பணத்தைக் கொட்டி தங்களின் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில்தான் படிக்க வைக்க வேண்டுமென்கிற ஆசை யில்லை. அதே வசதிகளையும், தரத்தை யும் கொடுத்தால் அனைவரும் பாகு பாடில்லாமல் சேர்ந்து பயிலும், பழகும் சமூகக் கூடமாக அரசுப்பள்ளிகள் மாறும்.
இந்தத் தீர்ப்பு மனசாட்சியை அசைத் திருந்தால், உடனடியாக இந்தியாவி லுள்ள அனைத்து அரசியல் கட்சி களின் தலைவர்களும், அதன் பொறுப் பாளர்களும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும், அரசு ஊழியர் சங்கங்களும் அடுத்தக் கல்வி யாண்டிலிருந்து எங்களின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் தான் படிக்க வைக்கப்போகிறோம் என அறிவியுங்கள். அத்துடன் அரசு மருத்துவமனைகளில்தான் மருத்துவம் செய்து கொள்வோம், தனியார் மருத்துவமனைகளுக்கு உயிரே போகும் நிலை வந்தாலும் போக மாட்டோம் என உடனடியாக அறிவியுங்கள். இதனைச் செய்தாலே போதும் எங்களின் வணக்கத்துக்குரியவர்களாக நீங்கள்தான் விளங்குவீர்கள்!
எல்லாவற்றுக்கும் காரணங்களைத் தேடிச் சொல்லும் அரசுகள் இவைகளைச் செய்ய பணம் தேவையில்லை. மனம் இருந்தாலே போதும்!
 
- இன்னும் சொல்லத்தோணுது 
எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள: thankartamil@gmail.com

Tuesday 18 August 2015

சொல்லத் தோணுது 47 - விடுதலை எதற்காக?- தங்கர் பச்சான்



இந்த ஆண்டின் சுதந்திர தினத்தை முழுமனதோடு அனுபவிக்க முடியாததுதான் இந்திய மக்கள் பெரும் பாலானோரின் பெரும் கவலை. சனி அல்லது ஞாயிற்றுக்கிழமையில் சுதந்திர தினம் அமையாமல், திங்கள்கிழமை அமைந்திருந்தால் சுதந்திர தினத்தை முழுமையாக அனுபவித்திருப்பார்களோ என்னவோ?
சுதந்திரம் என்றால் என்ன? இந்த சுதந்திரம் எப்படிக் கிடைத்தது என்பதை எல்லாம் அறியாத ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது. சுதந்திர தினம் ஒரு சடங்காகவே கடைபிடிக்கப் பட்டு, மற்ற விடுமுறை நாட்களைப் போல் இதுவும் ஒரு விடுமுறை நாளாக மட்டும் மாற்றப்பட்டுவிட்டது.
சுதந்திர தினத்தைக் குறிவைத்து எப்படியெல்லாம் பணம் பண்ணலாம் என்பதை தொலைக்காட்சிகள் நன்றாக புரிந்து வைத்திருக்கின்றன. சுதந்திரப் போராட்ட வரலாறு தொடர்பான நிகழ்ச்சிகளை, அதில் பங்கெடுத்த தியாகி களின் நேர்காணல்களை வெளி யிடுவது பற்றிய அக்கறை தொலைக் காட்சிகளுக்கு இல்லை. சுதந்திரப் போராட்டம் தொடர்பான படங்களின் உரிமை அவர்களிடம் இருந்தாலும்கூட அதனை அவர்கள் ஒளிபரப்பத் தயாரில்லை. நாள் முழுக்க பொழுது போக்கு என்கிற பெயரில் காண்பிக்கப் படுகிற நிகழ்ச்சிகளை வைத்தே ஊடகத்தினிரிடமும், நம் மக்களிடமும் உள்ள சுதந்திரம் குறித்த உணர்வினை மதிப்பிட்டுவிடலாம்.
நெடுங்காலத் தொடர் போராட்டத் துக்குப் பின்புதான் நமக்கு ஆங்கிலேயர் களிடம் இருந்து விடுதலை கிடைத்தது. எதற்காக அவர்களிடம் இருந்து விடுதலை பெறப் போராடினோம்? அந்த விடுதலையின் மூலம் என்னென்ன பலன்களை அடைந்திருக்கிறோம்? உண் மையிலேயே நமக்கு விடுதலையைப் பெற்றுத் தந்த நம் முன்னோர்களின் கனவு நனவாகி இருக்கிறதா? சுதந்திரம் என்பது ஒவ்வொரு குடிமகனுக்கு மானது. அப்படிப்பட்ட சுதந்திரம் நாம் அனைவருக்கும் கிடைத்திருக்கிறதா?
ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரத்தைப் பெற்றதற்காக மட்டுமே ஒவ்வோர் ஆண்டும் இதேபோன்று சுதந்திர தினத்தைக் கொண்டாடப் போகிறோமா? ‘நாம் நினைத்த இந்தியா அமைந்துவிட்டது; ஒவ்வோர் இந்தியனும் வெள்ளைக்காரனிடம் இருந்து பெற்ற சுதந்திரத்தை நினைத்து பெருமைப்படுவதும் கொண்டாடுவதும் தேவைதான்’ என நினைக்கிறோமா?
உண்மையான விடுதலையை இம்மக்களுக்குக் கிடைக்காமல் செய்து வருபவர்கள், அவ்வாறு நடக்காமல் பார்த்துக்கொள்ளும் சிலரின் கையிலேயே நமது தேசியக்கொடி சிக்கிக் கொண்டிருப்பதைப் பற்றிப் பேசவே நாம் தயங்குகிறோம். இந்நாட்டுக்கும், இம்மக்களுக்கும், இம்மண்ணுக்கும், இம்மொழிகளுக்கும் துரோகம் இழைப்பவர்களாலும், அழிப்பவர் களாலும்தான் பெரும்பாலும் நம் தேசியக்கொடி ஏற்றப்படுகிறது. வெள் ளைக்காரனிடம் இருந்து விடுதலையைப் பெற்று, கொள்ளைக்காரர்களிடம் நாட்டைக் கொடுத்துவிட்டு, சுதந்திர தினத்தைக் கொண்டாடிக் கொண் டிருக்கிறோம்.
இன்று காந்தியடிகள் உயிரோடு மீண்டெழுந்து வந்து இந்த நாட்டைச் சுற்றிப் பார்த்தால் என்ன கூறுவார்? நாம் கொண்டாடும் இந்த சுதந்திர தினத்தைப் பார்த்து என்ன சொல்வார்? நம் நாட்டை ஆண்டவர்களிடமும், இன்று ஆள்பவர்களிடமும் என்ன கேட்பார்? அவர்கள் அவருக்கு என்ன பதிலைச் சொல்ல முடியும்?
வெள்ளைக்காரனிடம் இருந்து நம் நாட்டை மீட்டெடுத்தபோது அந்த மகிழ்ச்சி இருந்தது. அப்போது ஒவ்வொரு குடிமகனுக்கும் தன் நாடு விடுதலைப் பெற்ற நாளைக் கொண்டாடுவதைத் தவிர முதன்மையான மகிழ்ச்சி வேறென்ன இருக்க முடியும்?
கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, தீண்டாமை, சாதிக் கலவரங்கள், பெண்ணடிமை போன்ற வற்றில் எது இங்கே குறைவு? மதுவை எதிர்த்து காந்தியடிகள் நாடு முழுக்கப் பயணம் செய்து போராடினார். இன்று ஆட்சி செய்பவர்களே மக்களிடத்தில் மதுவை ஊற்றிக் கொடுப்பதும், அதைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதெல்லாம் எப்படி உண்மையான விடுதலையாக இருக்க முடியும்?
ஊழலிலும், லஞ்சத்திலும் திளைத் திருக்கும் நாட்டில், சுதந்திர தினக் கொண்டாட்டம் என்பது சிறிதும் குற்றவுணர்வின்றி ஆண்டுதோறும் அரங்கேறிக் கொண்டேயிருக்கிறது.
இத்தனை ஆண்டுகள் கடந்தும் நாட்டின் மக்கள் தொகையில் பாதி பேருக்கு சொந்த வீடு கிடைக்க வழி யில்லை. கழிப்பிட வசதி கூட பெறாத மக்கள் வாழும் நாடுகளின் வரிசையில் உலகிலேயே நம்நாட்டுக்குத்தான் முதலிடம். உணவுப் பண்டங்களை வீண டிப்பதிலும் ஒருவேளை உணவுகூட கிடைக்காமல், அதற்கு உத்திரவாதமும் இல்லாமல் அலைவதும் நம்நாட்டில் தான்.
சொந்த நாட்டு மக்களுக்கான அடிப்படைத் தேவையைக் கூட 68 ஆண்டுகள் கடந்தும் செய்து தர முடியாத அவலத்துடன்தான் மக்கள் ஆட்சியின் மூலமாக உருவாக்கப்பட்ட அரசாங்கங்கள் தொடர்ந்து சுதந்திரத் தைப் பெருமையுடன் கொண்டாடிக் கொண்டு வருகின்றன.
நமக்கு விடுதலை கிடைத்த பின் நமது நாட்டின் உயிரான கிராமங்கள் அழியத் தொடங்கின. உள்ளூர் உற்பத்தி அழிந்து, சிறு தொழில்கள் அழிக்கப்பட்டு காலங்காலமாக செய்து வந்த தொழில்களை விட்டுவிட்டு, தன் மண்ணை விட்டுவிட்டு நகரத்துக்கு இடம் பெயர்ந்தோம்.
வீணாகிற நீரினை கடலுக்கு அனுப்பினாலும் அனுப்புவோம்; அதைப் பயன்படுத்த உங்களுக்கு தர மாட்டோம் என ஒவ்வொரு மாநிலமும் இன்னொரு மாநிலத்தின் மீது பகைமையை வளர்த்துக்கொண்டு வருகிறது. தண்ணீர் தேவை தீர்ந்தாலே நாட்டின் பெரும்பான்மையான சிக்கல்களிடம் இருந்து விடுதலை கிடைத்துவிடும். உண்மையான முன்னேற்றம் உருவாகித் தன்னிறைவை அடைந்துவிடலாம். அதன் பின்தான் வல்லரசு கனவெல்லாம் சாத்தியமாகும். ஆனால், அதற்கான எந்தவித முன்னேற்பாடும் இங்கு நடக்கிற மாதிரி தெரியவில்லை.
70 ஆயிரம் ராணுவத்தினரைப் பாது காப்புக்கு வைத்துக்கொண்டு சுதந்திர தினம் கொண்டாடுவதையே பெருமை யாக நினைக்கிறோம். சுதந்திரம் எதை கொடுத்ததோ, இல்லையோ நாட்டின் வளத்தை சுரண்டி, மக்களை ஏமாற்றி, சொத்துக்களை கொள்ளையடிப்பதற்கு அரசியல் கட்சிகளுக்கு அரசியல் என்னும் தொழிலைக் கொடுத்திருக்கிறது.
சேர்த்ததை,கொள்ளையடித்ததை எங்கே வைப்பது எனத் தெரியாமல் தான் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கி றார்கள். வாக்கு ஒன்று கையில் இருப்பதனாலேயே நம்நாட்டில் ஏழை எளியவர்களை உயிரோடு வைத் திருக்கிறார்கள். அது ஒன்றுதான் இந்த எளிய மக்களுக்கு இங்கேயிருக்கும் மதிப்பு. ஆட்சியை உருவாக்குபவர்கள் ஏழைகளாகவும், அதனை முழுமை யாக அனுபவிப்பவர்கள் பணக்காரர் களாகவும் இருக்கும் வரை இங்கே எந்த முன்னேற்றமும் உருவாகப் போவ தில்லை.
இனி எந்த ஒரு ஏழையும் தேர்தலில் போட்டியிட்டு மக்களாட்சியின் அதி காரத்தில் பங்கெடுக்க முடியாது. பணமுள்ளவர்கள் மூலமாகவே தேர்தல் போட்டிகள் நடக்கும். மீண்டும் மீண்டும் புதிய புதிய ஆட்சிகள் உருவாகும். எந்நாளும் எதுவும் இல்லாதவனுக்கு இனி எதுவும் கிடைக்கப் போவதில்லை.

Sunday 9 August 2015

சொல்லத் தோணுது 46 - குடிமக்களும் குடி மக்களும்! -தங்கர் பச்சான்

பணம் உள்ளவர்களுக்குத் தங்களின் குறையை அரசாங்கத்துக்குத் தெரிவிக்க எண்ணற்ற வழிகள் உள்ளன. வீதிக்கு வந்து சொல்வதைத் தவிர ஏழைகளுக்கு வேறு வழியே இல்லை. ஏழை மக்கள்தான் வீதிதோறும் அப்துல் கலாமின் படத்தை வைத்து நினைவிரங்கல் நிகழ்த்தினார்கள். யாரும் அழைக்காமலே எல்லா வேலைகளையும் போட்டுவிட்டு ராமேசுவரத்துக்குச் சென்று வழியனுப்பிவைத்தார்கள். எந்த ஆர்ப்பாட்டமோ, சிறு சலசலப்போ இன்றி நடந்து முடிந்த அந்த நிகழ்வுக்குப் பின், தமிழ்நாடு இன்று அந்த ஏழை மக்களாலேயே போராட்டக் களமாக மாறியிருக்கிறது.
தமிழக காவல்துறையில் பணியாற்று பவர்களின் எண்ணிக்கையை இப்போது தான் கணிக்க முடிகிறது. எங்கு திரும் பினாலும், எந்த பத்திரிகையைத் தொட் டாலும், எந்த தொலைக்காட்சியைப் பார்த்தாலும், சமூக வலைதளங்களில் நுழைந்தாலும் அப்துல் கலாமின் உருவங் களாகவே காட்சியளித்த இடங்களில், மதுவுக்கு எதிரான போராட்டப் படங் களும், செய்திகளுமே நிரம்பி வழிகின் றன. மக்களுக்கு காவலர்களாக இருந்த காவல்துறையை எதிரிகளாக பார்க்கும் அளவுக்கு செய்திகள் அரங்கேறு கின்றன.
இளம்பருவத்தில் திரைப்படங்களில் நான் கண்ட காவல் துறையினர், தீயவர் களை தண்டித்து குற்றம் இழைத்தவர் களைத் தேடிப் பிடித்தார்கள். முதன்முத லாக அவர்களை நேரில் பார்த்தபோது மறைந்திருந்துதான் பார்க்க முடிந்தது. எங்கள் கிராமத்தில் மட்டும்தான் சுற்று வட்டாரத்திலேயே கள்ளச்சாராயம் காய்ச்சினார்கள். அதுவும் அண்ணன் தம்பிகளான இருவர் வீட்டில் மட்டும் தான், அதைத் தொழிலாகவே செய்தார் கள். அவர்களைப் பிடிக்க ஊருக்குள் திடீரென நுழையும் காவல்துறையின ரைக் கண்டு அந்தக் குடும்பத்தினர் தப் பித்துக்கொள்ள மறைவிடம் தேடி ஓடு வதும், பின் காவல்துறையிடம் பிடிபட்டு தலையில் சாராயப் பானையை வைத்து தெருத் தெருவாக விலங்கிட்டு அழைத் துப் போவதையும் பார்த்த காட்சிகள் உயிருள்ளவரை மறக்க முடியாதவை.
சாராயம் காய்ச்சியவர்கள்தான் என் றில்லை. அதை குடித்த ஒன்றிரண்டு பேர்கள் அந்த நேரத்தில் ஓடி மறைய முயல்வதும், பின் மாட்டிக் கொள்வதும், அடித்து வாகனங்களில் ஏற்றப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதாலும் மது பற்றிய எச்சரிக்கை உணர்வு என்னுள் குடிகொண்டன. அத்துடன் எனது அப்பா என்றைக்காவது ஒருநாள் குடித்துவிட்டு அம்மாவின் திட்டுக்கு பயந்து வீட்டுக்குள் வராமல், இருட்டில் வைக்கோல் போரில் மறைந்துகொண்டு கிடப்பதும், பின் அம்மாவிடம் அவர் கொடுக்கும் உறுதிமொழிகளும்தான் எம்.ஜி.ஆர் மேல் எனக்குப் பற்றை வளர்த்தன.
அரசுக்குப் பணம் தேவை என்கிற ஒரே காரணத்துக்காக, ஒரு தலைமுறை யையே குடிகாரர்களாக, குடி நோயாளி யாக மாற்றுவதும், அதன் மூலம் உடல் உறுப்புக்கள் கெட்டு, உழைப்பு கெட்டு, மனம் கெட்டு நாள்தோறும் அந்த மக்கள் ஆயிரக்கணக்கில் செத்தொழிவதும், மருத்துவமனைகளில் நோயாளிகளாகக் கிடப்பதும், தெருவெங்கும் வீழ்ந்து கிடப் பதும் மற்றவர்களால் கேலி செய்கிற சமூகமாக மாறி வருவதும் உரியவர் களின் கண்களுக்கும், செவிகளுக்கும் இப்போதாவது எட்ட வேண்டும்.
எந்த சிக்கல் வந்தாலும் அதற்காகப் போராட்டம் நடத்த அரசியல் கட்சிகள் இருக்கிறார்கள், தமிழர்கள் மேல் அக் கறையுள்ள இயக்கத்தினர்கள் இருக் கிறார்கள் என ஒதுங்கியிருந்த மக்களெல் லாம், இனி தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தாங்களே போராடுவதைத் தவிர வேறு வழியில்லை எனப் போராட வீதியில் இறங்கியிருக்கிறார்கள்.
பிறமொழித் திணிப்பும், ஈழத் தமிழ னின் சிக்கலும்தான் தமிழர்களின் பெரிய சிக்கல்களாக எண்ணியிருந்த கல்லூரி மாணவர்கள் தங்களின் குடும்பம், தங் களின் உறவுகள் சீரழிவதைப் பார்த்து இந்த சமுதாயத்தை இனி காப்பாற் றவே முடியாது என நினைத்து யாரை யும் எதிர்பார்க்காமல் போராடத் துணிந்து விட்டார்கள். குடியில் தனது தந்தையை இழந்த பிஞ்சுக் குழந்தைகளையும், இளம் பள்ளிப் பருவத்தினரையும் அவர்கள் பள்ளிக்குச் செல்லும்போது வீதியில் காணும் காட்சிகளும், வீட்டுக்கு வந்தால் தொலைக்காட்சிகளில் காணும் காட்சிகளும் அவர்களை சிந்திக்க வைக் கின்றன. யாரிடம் இவர்கள் கெஞ்சு கிறார்கள்? யாரை எதிர்த்துப் போராடு கிறார்கள் என்கிற கேள்வி உருவாகிறது.
உரிமைகளைக் கேட்டதற்காக காவல்துறையினரால் கண்மூடித்தன மாக தாக்கப்படும் மாணவர்கள் ஒன்று சேரத் தொடங்கியிருக்கிறார்கள். மதுக் கடைகள் மூடும்வரை இனி எங் களுக்கு பள்ளியும் வேண்டாம், கல்லூரி யும் வேண்டாம் என அனைவரும் ஒன்று கூடும் காலம் நெருங்கி விட்டதாகவே தோன்றுகிறது. இவ்வளவு காலங் கள் இதை ஒரு பொருட்டாகவே நினைக் காமல் கண்டுகொள்ளாமல் இருந்த அரசியல் கட்சியினர் கூட, வரப் போகிற தேர்தலை மனதில்கொண்டு அவர்களும் போராட்டத்தில் பங்கெடுக் கின்றனர். சில கட்சிகள் மாணவர்களைப் போராடத் தூண்டிவிடுவதாகவும் குற்றச்சாட்டுக் கள் எழுந்திருக்கின்றன. யார், யாருக்கு மதுவை ஒழிப்பதில் அக்கறை இருந்தது என்பதையெல்லாம் தொடக்கத்தில் இருந்தே கவனித்து வரும் மக்கள், யார் மூலமாக நடந்தாலும் நல்லது நடந்தால் போதும் என போராட்டத்தில் தங்களை யும் ஈடுபடுத்திக்கொள்ளத் தொடங்கி விட்டார்கள்.
ஏற்கெனவே உடல் உழைப்பு வேலைக்கு ஆள் கிடைக்காத நம் மாநிலத் தில், வடமாநிலத்தவர் உள்ளே நுழைந்து அனைத்து வேலைவாய்ப்புகளிலும் ஊடுருவிவிட்டார்கள். உடல் நலத்தை சிதைக்கக் கூடிய குறைந்த விலை மதுவை குடித்துக் குடித்து அவர்களது உடலில் வலு இல்லாமல் போய்விட்டது. மதுக்கடைகளில் இருந்து வருபவர்களின் பஞ்சடைந்த கண்களையும் கைகள் ஒடுங்கிய உடலையும் பார்த்தால் அவர் கள் மரணத்தை நெருங்கிக் கொண்டிருப் பதை உணரமுடியும். குடிப்பதால் மன மும் உடலும் சிதைந்து, புத்தி சிந்திக்க மறுக்கிறது. குடும்பத்தைக் காப்பாற்ற பொருளாதாரம் இன்றி குழந்தைகளின் கல்வி தடைபடுகிறது. குடியினால் நம் கலாச்சாரத்தை சிதைக்கும் அருவருக் கத்தக்க அனைத்து பாலியல் குற்றங் களும் பெருகிக்கொண்டே இருக்கின் றன. ஒரு கெட்ட பழக்கத்துக்கு ஆட்பட்ட மனிதர்களை அதில் இருந்து மீட்டுக் கொண்டு வருவது என்பதே எதிர்காலத் தில் பெரும் சமுதாய சிக்கலாகிவிடும்.
மது விற்பனையை நடைமுறைப் படுத்துவதற்கு முன் தமிழகத்தில் ஆண்டுதோறும் வெறும் 200 பேர் களுக்குள்தான் கள்ளச் சாராயத்தால் இறந்தார்கள். அந்த 200 பேரைக் காப்பாற்றுவதற்காகக் கொண்டுவரப் பட்டதாக சொல்லப்பட்ட இந்த மதுக் கடைகள் தினமும் 20 ஆயிரம் பேரின் உயிரைக் கொன்று, அத்தனை குடும்பத் தையும் நடுத்தெருவில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.
அரசு எவ்வளவோ நலத் திட்டங் களைச் செய்தாலும்கூட அனைத்து சீரழிவுக்கும் காரணமாக இருக்கும் அரசாங்கமே மது விற்கும் திட்டத்தால் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகப் போய்விடுகிறது.
ஏற்கெனவே மிகமிகச் சிறிய எழுத் தில் எழுதியிருக்கும் எச்சரிக்கை வாசகத் தைப் படிக்க முடியாதவர்கள் கண்கள் சுருங்கி, பஞ்சடைந்து பார்வையை இழந்து கொண்டிருக்கிறார்கள். ஒவ் வொரு மது புட்டியிலும் எழுதியிருக்கும் எச்சரிக்கைக் குறிப்புகளை எவ்வளவு பலம் வாய்ந்த மூக்குக் கண்ணாடி களைக் கொண்டும் இனி யாராலும் படிக்க முடியாது. அதில் எழுதியிருப்பதெல்லாம் இதுதான்.
குடி நாட்டுக்குக் கேடு!
குடி வீட்டுக்குக் கேடு!
குடி உயிருக்குக் கேடு!
எப்போதுமே ஒரு கட்டம் வரை அரசாங்கம்தான் மக்களை வழிநடத்தும். தாங்கள் உருவாக்கிய தங்களுக்கான அந்த அரசாங்கம் வழி தவறும்போது… அந்த மக்களே அந்த அரசாங்கத்தை வழி நடத்தத் தொடங்கிவிடுவார்கள். அதன் பெயரும் ’மக்களாட்சி’தான்!

- இன்னும் சொல்லத்தோணுது 
எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள: thankartamil@gmail.com

Sunday 2 August 2015

சொல்லத் தோணுது 45 - வேலி ! - தங்கர் பச்சான்


நமக்கு எல்லாமே செய்திதான். அதைப் படிப்பது, பார்ப்பது, விவாதிப்பது, பின் அதை மறந்து போவது என்பதே நடைமுறையில் உள்ளது. மறுமுறை அது நிகழும்போது வெறும் செய்தியாக மட்டுமே மனதில் பதிந்துவிடுகிறது.
ஆணும், பெண்ணும் சேர்ந்து உருவாக்குவதுதான் இந்த மனித இனம்; இந்த சமுதாயம். ஆனால், இதில் பெண் மட்டும் எப்போதுமே அதிக பாதிப்புக்குள்ளாகிறாள். கேள்விக்கு உட்படுத்தப்படுகிறாள். எல்லாப் பொறுப்புகளும் அவளுக்கு மட்டுமே உண்டு. இதைத் தான் ஆணாதிக்க உலகம் நடைமுறைப்படுத்தி சாதித்துக்கொண்டு வருகிறது.
சமுதாய வளர்ச்சி, தனிமனித வளர்ச்சி, உளவியல், மனித ஆளுமை இவற்றில் பாலியலின் பங்கு என்ன என்பதை அறிவுபூர்வமாக, அறிவியல்பூர்வமாக ஆராய்வது அவசியமாகிறது. பெண் ணுடல் சார்ந்து பார்க்கப்படும் பார்வைகளும், கேட்கப்படும் கேள்விகளும் விவாதத்துக்குரியவை. பெண்ணுடல் சார்ந்து மட்டுமே தங்களின் வணிகப் பார்வையை வளர்த்து, காலங்காலமாக அதைக் கொண்டு சந்தைப்படுத்திவரும் ஊடகங்களும் இதில் பங்குபெறுகின்றன.
பாலியல் வன்கொடுமைகள் காலங்காலமாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அடிமைச் சமுதாயத்தில் எவ்வாறு அது நியாயமாக்கப்பட்டதோ, அதுபோலவே ‘தாங்கள் அனுபவிப்பதற்காக மட்டுமே படைக்கப்பட்டவர்கள் பெண்கள்’ எனும் மனநிலையோடு வாழும் பெரும்பான்மையான ஆண்கள்தான் இன்னமும் இருக்கிறார்கள்.
பெண்கள் எப்போது பொருள் சேர்ப்பில் பங்கெடுக்கத் தொடங்கி வீட்டுக்கு வெளியே சென்று வருவாய் ஈட்டத் தொடங்கினார்களோ, அப்போது முதல் அவர்கள் தங்களின் உரிமைகளை அறியத் தொடங்கிவிட்டார்கள். இருப்பினும், அண்மைக்காலமாக பாலியல் குற்றங்கள் பெருகிக் கொண்டிருப்பதையும் மறுப்பதற்கில்லை. பெண்கள் வெளியில் சென்று பயில வேண்டிய, பொருளீட்டவேண்டிய கட்டாயம் காரணமாகவே அறிமுகமில்லாத மனிதர்களை அதிகம் சந்திக்க வேண்டியச் சூழல் உருவாகிறது.
பாலியல் வன்கொடுமைகள் இன்று வெளியில் தெரிவதற்குக் காரணம் ஊடகங்களின் வளர்ச்சியும், பாதிக்கப்பட்டவர்கள் இதை துணிவோடு வெளியில் சொல்லத் தொடங்கி இருப்பதும்தான். பொதுவாகவே குழந்தைப் பருவத்தில் இருந்தே ஓர் ஆணின் மனதில் ‘பெண் என்பவள் ஆணால் அனுபவிக்க மட்டுமே பிறந்தவள்’ என்ற எண்ணம் உருவாகிவிடுகிறது. புறச்சூழலில் அவன் பார்க்கும் திரைப்படங்கள், படிக்கும் பத்திரிகைகள், குறிப்பாக விளம்பரங்கள் எல்லாமே சேர்ந்து அந்த எண்ணத்தை அவனது மனதில் பதியவைத்துவிடுகின்றன. பெண்களின் ஆடையை குறைத்து ஊடகங்களில் உலவவிடுவதே, ஏற்கெனவே ஆண்களின் மனத்திரையில் பதிவாகியிருக்கிற பெண்களின் உடல்குறித்த ஆசையை அதிகரித்து பணம் பண்ணத்தான்.
சமூகப் பின்னணி இல்லாத ஒரு பெண்ணைப் பார்க்கும் ஆணுக்கு அவள் மீதான அத்துமீறிய இச்சை அதிகமாக தலைதூக்குகிறது. தவிர, இது யாருக்கும் தெரியாது என நினைக்கும் எண்ணம் அவனை அந்தக் குற்றத்தை செய்யத் தூண்டுகிறது. தனிமையில் ஒரு பெண் அவனுக்கு கிடைக்கிற வாய்ப்பு வரும்போது சிறிது சிறிதாக ஏற்கெனவே மிருகத்தனமாக மனதில் உருவாகியிருந்த எண்ணம், அவனை மிருகமாக மாற்றுகிறது. எவ்வித சமூக உணர்வும் இன்றி மிருகமாகவே நடந்துகொள்கிறான்.
இப்படிப்பட்ட பாதிப்புக்குள்ளாகும் பெண் சமுதாயத்தில் இருந்தே புறக்கணிக்கப்படுகிறாள். தற்போது இக் குற்றங்கள் குழந்தைகளிடமும் வாலாட்டுவது பெரும்கொடுமை. இக்குற்றத் தில் ஈடுபடுபவர்கள் இந்தக் குழந்தைகளின் குடும்பங்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் என இவர்களுக்குள்ளேயேதான் இருக்கிறார்கள்.
குழந்தைகள் கல்வி கற்றுத் தரும் தங்கள் ஆசிரியர்களாலேயே சீரழிக்கபபடுகிற செய்திகளையும் அவ்வப்போது பார்க்கிறோம்.
கற்பு என்பதை ஒரு பெண்ணுக்கானதாக மட்டுமே இங்கு பார்க்கப்படுவது பாரபட்சமானதாகும். ஒரு பெண் பாலியல் வன்முறையை எதிர்கொள்ளும்போது அதில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள எதிராளியின் உயிர் போனாலும் அவள் மீது தவறு இல்லை என சட்டம் சொல்கிறது. ஆனால், சில திரைப்படங்கள் அந்த நேரங்களில் அவள் தன் உயிரை மாய்த்துக் கொண்டாலும் பரவாயில்லை, கற்பை மட்டும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என போதிக்கின்றன.
இப்படியான சூழலில் தற்கொலை செய்து கொண்டவர்கள் கற்புக்கே இலக்கணம் படைத்தவர்களாக கருதப்பட்டு தெய்வமாக போற்றப்பட வேண்டியவர்கள் என இங்கே போதிக்கப்படுகிறது. தற்கொலை செய்து கொள்வது ஒரு தியாகச் செயல் அல்ல; குற்றம் இழைப்பவன் மீது புலியைப் போல தாக்குதல் நடத்தச் சொல்லி கற்றுக் கொடுப்பதுதான் திரைப்படங்களின் பொறுப்பாக இருக்க வேண்டும்.
ஆடைகளைக் குறைத்து பெண்ணுடலை திரையில் காட்டி, விதம் விதமாக அவர்களை ஆடவிட்டும் உலவவிட்டும் ஆண்களின் மனதைக் கிளறி, பணம் பார்க்கும் ஆசையில் பெண்களை அடிமைப்படுத்தும் படைப் பாளிகள் முதலில் இக்குற்றங்களை உணர வேண்டும். 50 வயதைக் கடந்தாலும் தனக்குத் துணையாக நடிக்கும் பெண்கள் 20 வயதுகளில் இருக்க வேண்டும் என நடிகர்கள் தேர்வு செய்வது பெண்ணுடலை சந்தைப்படுத்துவதைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும்?
இதெல்லாம் போதாது என்று அண்மைக்காலமாக மது ஒவ்வொரு வரின் வீட்டுக்குள்ளும் புகுந்து மனித வாழ்கையையே புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. தான் பெற்ற மகளையே தீண்டிப் பார்க்கத் துடிக்கும் அப்பாக்களையும், தான் பிறந்த வயிற்றிலேயே பிறந்த அக்கா, தங்கை களை வக்ரக் கண்ணோடு அணுகும் சகோதரர்களையும் மதுக் கலாச்சாரம் அரக்கத்தனமாக உருவாக்கிவிடுவதை செய்திகளில் பார்க்கத்தானே செய்கிறோம்.
சட்டங்கள் மட்டுமல்ல; கல்விமுறையும் சேர்ந்தே இதில் செயலாற்ற வேண்டும். பாலியல் வன்முறைகளைத் தடுக்க தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய ஒரு செயல்திட்டம் உருவாக்கப் பட வேண்டும். இதுகுறித்த பாதுகாப்பான கல்வி வழிமுறைகளை உருவாக்கி, மாணவப் பருவத்திலேயே அவர்களுக்குப் புரியும் விதத்தில் சொல்லித் தந்து, விவாதிக்கப்பட வேண்டும்.
இவைகுறித்த விழிப்புணர்வு ஆசிரியர்களிடையேயும் குறைவாகவே உள்ளது. சமூகத்தின் பழமையான வாதங்களை முன்னிறுத்துவதுகூட பாலியல் கல்விகுறித்த புரிதலை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கு முதல் காரணமாகும்.
குழந்தைகளுக்குத் தீங்கிழைக்கும் குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதும், குற்றவாளிகளாக மாற வாய்ப்புள்ளவர்களைப் பற்றி அறிந்துகொண்டு குழந்தைகளைப் பாதுகாப்பதும் மிகமிக அவசியம். பாலியல் பாதிப்பு ஏற்படுத்துவோர் குறித்தும், குற்றவாளிகளிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் தற்காப்பு முறைகள் குறித்தும் குழந்தைகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் முக்கிய தேவையாகிவிட்டது. குழந்தைகள் மீது தொடரும் தாக்குதல்களைத் தடுக்க, ஒரு விசாரணைக் குழு அமைத்து தடுப்பு செயல்திட்டத்தை அரசு வகுக்க வேண்டும்.
இன்றைய நாட்களில் எல்லா குழந்தைகளின் கைகளிலும் கைப்பேசி கள் தவழத் தொடங்கிவிட்டன. விரல் நுனியில் நல்லவற்றையும், கெட்டவற்றையும் சில நொடிகளிலேயே பார்க்கக்கூடிய வசதியை அவர்களிடம் கொடுத்திருக்கிறோம். ஆயிரக்கணக்கான ஆபாசப் படங்களின் வலைதளங்களைத் தாண்டித்தான் நம் பிள்ளைகள் வளர வேண்டியிருக்கிறது. பாலியல்குறித்துப் பேசத் தயங்குகிற இந்தியச் சமூகம்தான் உலக மக்கள் தொகைப் பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கிறது.
குற்றங்களைத் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் நடந்ததற்குப் பின்னால், காவல்துறை பல அலைச் சல்களுக்கு இடையில் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதும், நீதிமன்றங்கள் விசாரிப்பதும் தண்டிப்பதும், புள்ளியியல் துறையாளர்கள் புள்ளிவிவரங்களை வெளியிடுவதும் தொடர்ந்துகொண்டே தான் இருக்குமா?

- இன்னும் சொல்லத்தோணுது 
எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள: thankartamil@gmail.com