Friday 13 January 2017



“தமிழர் திருநாள்” வாழ்த்து

‘நான் தமிழன்’ என ஜல்லிக்கட்டு நடத்திக்காட்டி வீரத்தைப் பறைசாற்ற மல்லுக்கட்டும் தமிழ்க்கூட்டம்.
‘பொங்கலோ திருநாளோ எது  வந்தால் நமக்கென்ன? என காவல் நாயாய் காலையிலேயே மதுக்கடை வாசலில் காத்துக்கிடக்கும் தமிழ்க்கூட்டம்.
‘நூறு ரூபாய் பொங்கல் பரிசு கிடைக்காமல் போய்விடுமோ’ என கல் போட்டு இடம் பிடித்து ஒரு முழ கரும்புத்துண்டுக்கும், ஒரு கிலோ பச்சரிசிக்கும் கால் கடுக்க காத்துக் கிடக்கும் தமிழ்க் கூட்டம்.
கடனில் கிடந்தாலும், வறுமையில் உழன்றாலும் நட்டம் வரும் என அறிந்தே நமக்கெல்லாம் உணவளித்து கால்படி அரிசிக்கு வழியில்லாமல் தன் வீட்டு இழவுச் செய்தியைக்கூட யாரும் கண்டு கொள்ளாததால் கால் நடைகளை கட்டிக்கொண்டு அழும் உழவுக்குடிகளின் கூட்டம்.
இவைகள் அனைத்தையும் கண்டுகொண்டே நாடெங்கும் சிரித்தபடி பதாகைகள் நட்டு வைத்து சிறிதும் மனசாட்சியின்றி எப்பொழுதும்போல் தமிழர்களை வாழ்த்தும் அரசியல் கூட்டம்.
இந்நிலையில் என்ன சொல்லி வாழ்த்துவது?
சாதி,மதம்,கட்சி,ரசிகர் மன்றங்கள் என கடந்து தமிழர்களாய் ஒன்றிணைந்தால் தமிழன் எனச் சொல்லலாம்! தலை நிமிர்ந்து நிற்கலாம்!
தள்ளாடும் தமிழன் தலை நிமிர்ந்து வாழும் நாள் என்று வருமோ அதுதான் தமிழனுக்கு உண்மையான பொங்கல்.
அந்த நாள் வர வாழ்த்துகிறேன்.
அன்போடு

தங்கர் பச்சான் 

1 comment: