Saturday 5 September 2015

சொல்லத் தோணுது 50: பாரதி எங்குமில்லை! தங்கர் பச்சான்


அதிகாலை கண்விழித்து இரவு படுக்கையில் விழும்வரை நம் மில் பலருக்கு கல்வி குறித்த சிந் தனைதான். ஒரு தாய் கருவுற்றதில் இருந்தே பிறக்கப்போகும் குழந்தைக் கான சிறந்த பள்ளியைப் பற்றி பெற்றோர் சிந்திக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அப்போது தொடங்குகிற பெற்றோரின் தேடல் சிறந்த கல்லூரி, சிறந்த படிப்பு, உயர்ந்த பதவி, உயர்ந்த ஊதியம் பெறும்வரைக்கும் தொடர்கிறது.
பல இளம்பருவத்தினரின் எதிர்கால வாழ்வு உயர் கல்வியைத் தரும் பல்கலைக்கழகங்களின் கையில் இறுதியாக விடப்படுகிறது. மனித வளத்தையும் நாட்டின் வளத்தையும் உருவாக்கும் பல்கலைக்கழகங்கள் தரத்தை இழந்துகொண்டு வருகின்றன. அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சிந்திக்க மறந்து, வேறு எதையெல் லாம் பற்றிக் கவலைபட்டுக் கொண்டிருக் கிறோம்.
இப் பல்கலைக்கழகங்களை நிர்வகிக் கும் உயர்நிலைப் பொறுப்பை வகிக்கிற துணைவேந்தர்களைப் பற்றி ஊடகங்கள் மூலமாகவும், நண்பர்கள் மூலமாகவும் அறியப்படும் செய்திகள் பெருங்கவலை அளிக்கின்றன.
நம் நாட்டில் 700 பல்கலைக்கழகங் கள் இருப்பதாகத் தெரியவருகிறது. இவற்றில் ஒரே ஒரு பல்கலைக்கழகம்கூட உலகத் தரவரிசையில் 200 எண்ணிக் கைக்குள் கூட இல்லை. இப்படியான ஒரு கல்விச் சூழலில் இந்த மக்களின் வாழ்வும், நாட்டின் நிலையும் எதிர் காலத்தில் என்னவாகப் போகிறது என் பதைப் புரிந்துகொள்ளலாம்.
ஒரு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் நியமனமே தவறு என நீதி மன்றம் தீர்ப்பளிக்கிறது. உடனே அவர் மேல் நீதிமன்றத்துக்குச் சென்று தடை ஆணை பெற்று வந்து, தனது முழு பதவிக் காலத்தையும் முடித்துள்ளார். அதுமட்டுமின்றி அவரது நியமனத்தை எதிர்த்தவர்களும் தண்டிக்கப்பட்டு பழிவாங்கப்படுகிறார்கள். அவரே அந்த பதவியை மீண்டும் அனுபவிப்பதற் கான நிபந்தனை, விதிகள் மாற்றியமைக் கப்படுகின்றன. எதிர்வரும் காலங்களில் அரசியல்வாதிகளைப் போல் துணை வேந்தர் நியமனத்துக்கும் வயது ஒரு தடையே இல்லை என்கிற திருத்தம் வரலாம். அதனால் ஏற்படப்போகும் சீரழிவுகள் குறித்து எவருக்கும் கவலையில்லை.
இன்னொரு பல்கலைக்கழகத்திலும் இதே நிலைதான். மாணவர்களும் ஆசிரியர்களும் கடுமையாகப் போராடி அந்தத் துணைவேந்தரை விடுப்பில் செல்ல வைத்துள்ளனர்.
மற்றொரு பல்கலைக்கழகத்தில் அதன் துணைவேந்தர் ரூ.100 கோடி வரையில் ஊழல் செய்துள்ளார் எனக் கூறி ஊழியர்கள் போராடுகி்ன்றனர். ஒரு தொழில்நுட்பப் பல்லைக்கழகத்தின் துணைவேந்தர் பல கோடி ரூபாயைக் கொடுத்துத்தான் அந்தப் பதவிக்கு வந் துள்ளார் என ஊடகங்கள் எழுதுகின்றன.
நாட்டின் வளம் பெருக்கும் மற் றொரு பல்கலைக்கழகத் துணைவேந்த ரின் செயல்பாடு, அங்கு வரலாறு காணாத அளவில் வசூல் வேட்டை நடத்தப்பட்டதை எல்லாம் ஊடகங்கள் வெளிக்கொண்டு வந்தன.
எனக்குத் தெரிந்த வேளாண்மை விஞ்ஞானி ஒருவரை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி, பணி மாற்றம் செய்து, அவரை எந்த ஆராய்ச்சிகளையும் மேற்கொள்ளாதபடி ஒரு கடைநிலை ஊழியரைப் போல் செயல்பட வைத்து விட்டனர்.
பலகோடி ரூபாய் முதலீடு செய்து பல லட்சம் கோடி கொள்ளையடிக்கும் பதவியாக மாறிவிட்டதால் Vice Chanceller என்னும் ஆங்கில சொல்லை Venture Capitalist என அழைக்கும் நிலைக்கு மாற்றிவிட்டனர். இனி கல்வி யின் தரத்தையும், மாணவர்களின் தரத்தையும், ஆசிரியர்களின் தரத்தையும் பற்றி எப்படி பேசப் போகிறோம்?
ஒவ்வொரு கட்சியும் ஆட்சிக்கு வந்ததும் எவ்வாறு தங்களுக்கு ஏற்றபடி அரசு அதிகாரிகளை மாற்றிக் கொள்கிறார்களோ அதைப் போலவே, துணைவேந்தர்களின் பதவியும் ஆகிவிட்டது.
அதிகப் பணம் கொடுப்பவர்கள், தனது கட்சிக்காரர்கள், தனது சாதிக் காரர்கள் எனப் பார்த்துப் பார்த்து துணைவேந்தர் நியமனம் முடிவுசெய் யப்படுவது நம் மாணவர்கள் அனை வரையும் ஒரே தூக்குக் கயிற்றில் மாட்டி தூக்கிலிடப்படுவது போன்றது. கல்வி அமைப்பில் இதுபோன்ற நிலை தொடர்ந்தால் வல்லுநர்களை நாம் எப்படி உருவாக்குவது?
இவ்வேளையில் கவிஞர் குணாள னின் ‘இடஒதுக்கீடு’ என்கிற இந்தக் கவிதைதான் நினைவுக்கு வருகிறது.
துணைவேந்தர் பதவிகள் 
ஆளுநருக்கு ஐந்து 
முதல்வருக்கு மூன்று 
அமைச்சர்களுக்கு ஆறு 
இன்னும் அதிகாரிகள் 
அனைத்து சாதிகள் என 
கணக்குப் போட்டதில் 
இன்னும் பல பல்கலைக்கழகங்கள் 
ஆரம்பிக்க அவசியமானது.
தங்கள் பிள்ளைகள் உயர்கல்வியைப் பெறுவதற்காக வாழ்நாள் முழுக்கப் போராடும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இப்படிப்பட்ட பல்கலைக் கழகங்களிடத்தில்தான் ஒப்படைக்க வேண்டியிருக்கிறது.
இன்னொரு கவிதையையும் என்னால் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.
இவர் 
உதவிப் பேராசிரியராக உள்ளே வந்தார் 
அமைச்சரின் அன்பால் 
இணைப் பேராசிரியரானார் 
ஆட்சி மாற்றத்தில் 
பேராசிரியரானார் 
இட ஒதுக்கீட்டில் 
துறைத் தலைவரானார் 
அழுத்தம் கொடுத்ததால் 
கல்லூரி முதல்வரானார் 
கடைசியாக காசு கொடுத்து துணைவேந்தருமானார் 
இறுதிவரை 
பணி எதுவும் செய்யாமலேயே 
பணி ஓய்வும் பெற்றார்.
இதனை ஒரு கவிஞனின் கற்பணை எனச் சொல்லி கண்டுகொள்ளாமல் கடந்து போக முடியவில்லை. நடைமுறை யில் இந்நாட்டில் இப்படிப்பட்டவர் களிடத்தில்தான் நம் பிள்ளைகளின் வாழ்வை ஒப்படைத்திருக்கிறோம்.
இன்றைய கல்விமுறை எதைப் பற்றி யும் சிந்திக்காத, எதையும் கண்டுகொள் ளாத அடிமைத் தலைமுறைகளை உரு வாக்கத் தயாராகிவிட்டது. நாம் நம் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண் டியது. இந்த அடிமைக் கல்வியல்ல. நம்மை, நம் தலைமுறைகளை அடிமை என எண்ணிக்கொண்டு நம்மை சீரழித்துக் கொண்டிருப்பவர்களுக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடுவதே, அவர் களின் முதல் வேலை என்பதைத்தான்.
ன்பு வாசகர்களே… நான் உங் களிடத்தில் சொல்லத் தோன்றியதை எழுதத் தொடங்கி சரியாக ஒராண்டு நிறைவடையப் போகிறது. நம் குறைகளையும், தேவைகளையும், நிறைகளையும், செய்ய வேண்டியதையும் தொடர்ந்து எழுதி வந்துள்ளேன்.
எப்போதும் என் மக்கள், என் மொழி, என் இனம், எனது மண் என்றுதான் அதிகம் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். தண்ணீர் எப்படி உடனே கொதிநிலைக்கு வந்துவிடாதோ, அவ்வாறே என் மக்களின் மனநிலையும் என்றேனும் ஒருநாள் கொதிநிலைக்கு வரும். அப்போது நான் நினைத்தது நடக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
எனது சிந்தனையும், ‘தி இந்து’வின் சிந்தனையும் ஒன்றிணைந்ததால்தான் இவ்வளவு தொலைவு என்னால் பயணிக்க முடிந்தது. இனி ஒவ்வொரு வாரமும் உங்களை எனது சிந்தனை சந்திக்காமல் போனாலும் எனது இலக் கியம், திரைப்படம், மக்கள் சந்திப்பு, ஊடகத் தொடர்பு என எல்லாவற்றின் மூலமாக எனது மக்களுக்கான என் பணியை செய்துகொண்டே இருப்பேன்.
மகாகவி சுப்பிரமணிய பாரதி எங்கேயும் இருக்கவில்லை. அவரை நாம்தான் ஒவ்வொருவருக்குள்ளும் ஏற்றிக்கொள்ள வேண்டும். அன்றைக்கு அந்த பாரதியை வேடிக்கை பார்த்துக் கொண்டு வெறும் 14 பேர் மட்டுமே இறுதிச் சடங்கை செய்தார்கள். இன்று பாரதி இருந்திருந்தால் இரண்டு பேர்களாவது வருவார்களா என என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அன்று ஒரு பாரதி தேவைப்பட்டால், இன்று ஒரு கோடி பாரதிகள் தேவை. இன்றைக்கு நமக்குத் தேவை அடிப்படை தேவைகள் என்றாலும், உடனே தேவைப்படுவது பாரதிக்கு இருந்த அந்த உணர்ச்சிதான். அது நமக்கு இருக்கிறதா?
பாரதி இன்று நம்மிடம் வந்தால் நம்மைப் பார்த்து, நம்மை ஆள் பவர்களைப் பார்த்து என்ன கேட்பார் என எண்ணிக்கொண்டே உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன். முடிந்தால் நீங்களும் ஒரு நிமிடம் எண்ணிப் பாருங்கள்.

- இன்னும் சொல்லத் தோணுது… 
ஆனாலும் நிறைவு செய்கிறேன்.
எண்ணங்களைப் பகிர்ந்துக்கொள்ள: thankartamil@gmail.com

2 comments:

  1. இதற்கு தீர்வுதான் என்ன

    ReplyDelete
  2. வல்லான் வகுத்ததே வாய்க்கால்

    ReplyDelete