Sunday 23 August 2015

சொல்லத் தோணுது 48 - குற்றமும் தண்டனையும் - தங்கர் பச்சான்


மனிதனை அசைத்துப் பார்க்க அவ னது மனசாட்சியால் மட்டுமே முடியும். அரசாங்கம் வழி தவறும் பொழுது அதனை கேள்வி கேட்கவும், நெறிப்படுத்தவும் நீதிமன்றம் என்கின்ற ஒன்று இல்லாமல் போயிருந்தால் எப்பொழுதோ இங்கு எல்லாமும் நடந்து முடிந்திருக்கும்.
செய்து கொண்டிருக்கின்ற குற்றத் தையே குற்றமென உணராமல் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல் வதாக நினைத்துக் கொண்டிருப்பவர் களை, உத்தரபிரதேசத்தில் உள்ள அலகா பாத் உயர் நீதிமன்றத்தில் நீதிமான் பிறப் பித்துள்ள தீர்ப்பு அனைவரின் மனசாட்சி யையும் பிடித்து உலுக்கியிருக்கிறது.
எதிர்காலத் தலைமுறையினரை உரு வாக்க ஊற்றுக்கண்ணாக இருக்கின்ற அரசுப் பள்ளிகளின் ஊற்றுக்கண் மூடப்பட்டு தூர்ந்துபோனதை நீதிமான் திறந்துவிட முயன்றிருக்கிறார். தன் னலத்தை மட்டுமே மதித்து பொதுநலன் குறித்த அக்கறையையே உணராத சமு தாயத்தை உருவாக்கித் தரும் தனியார் பள்ளிகள் பெருக்கெடுத்து, பொதுநல னையும், சமுதாய உணர்வையும், மக்கள் பற்றையும் போதிக்கிற அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுக் கொண்டிருக்கும் காலத்தில் இந்தத் தீர்ப்பு ஒவ்வொருவரின் மனசாட்சியையும் ஒரு நிமிடம் பிடித்து நிறுத்துகிறது.
அரசுப் பள்ளிகள் மூடப்படுவது குறித்து சற்றும் சிந்திக்காமல், அதை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் மாதா மாதம் சம்பளத்தை பெறும் அத்துறை சார்ந்தவர்களும், அரசாங்கமும் இதனை சீர்திருத்துகிற எந்த நடவடிக்கை களிலும் இறங்காமல் போவதன் விளைவை இந்த இந்திய சமுதாயம் இனி அனுபவிக்கபோகிறது.
வாழ்வதற்கு வழியில்லை, உடலில் தெம்பும் இல்லை. தான் படும் இன்னல் களை தாங்கள் பெற்ற பிள்ளைகள் படக்கூடாது என்பதால்தான் ஒவ்வொரு பெற்றோரும் தங்களின் பிள்ளைகளைப் படிக்க வைக்க நினைக்கிறார்கள். வயிற்றுக்கே வழியில்லாத நிலையில் பிள்ளைகளின் படிப்புக்கும் சேர்த்து பொருளீட்ட ஒவ்வொரு பெற்றோரும் இங்கு ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் மட்டும் 1,500 பள்ளி கள் மூடப்படுவதாக சொல்லிக்கொள் வதை எல்லோரும் காது குளிர கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். இந்திய நாட்டின் மிகச் சிறந்த பொற்காலங்கள் அரசுப் பள்ளிகள் ஆலமரம் போல், அரச மரம்போல் தழைத்தோங்கியிருந்த காலங்கள்தான். நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள் அரசுப் பள்ளிகளை வளர்த்தெடுத்தார்கள். அது தேவையில்லை என நினைத்தவர்கள் அதை தனியாரிடம் கொடுத்துவிட்டு கண்டும் காணாமல் ஒதுங்கிக் கொண்டார்கள். அதன் விளைவுதான் இப்போது பெற்றோர்கள் தனியார் பள்ளிக்கூடங்களின் முன்னால் அதிகக் கட்டணம் வசூலிப்பதாகச் சொல்லி போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
அரசுப் பள்ளிகளை வளர்த்தெடுத் திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. அரசுப் பள்ளிகளில் காற்றோட்டம் இருந்தது. இடவசதி இருந்தது. விளை யாட்டுத் திடல் இருந்தது. அறிவையும், நட்பையும், தோழமையும், பண்பையும், ஒழுக்கத்தையும் நேர்மையையும், தூய்மையையும் கற்றுக்கொடுத்த அந்த இடங்கள் இன்று மாட்டுக் கொட்டகைகள் போல் மாறிப் போனதன் விளைவுதான் இந்த தனியார் பள்ளிகளின் ஆதிக்கம்.
அரசுப் பள்ளிகளால் என்னதான் சிக்கல்? ஏன் அவற்றை மூடுகிறார்கள்?
தூய்மைக்கேட்டின் இருப்பிடமாக அரசுப் பள்ளிகள் இருக்கின்றன. கணக்குக்காகவே கட்டப்பட்ட பயன் படுத்தாத கழிப்பறைகள், பெரும்பாலும் மரத்தடிகளிலும், தரையிலும் அமர்ந்து படிக்க வேண்டிய நிலை. தொடர்ந்து நிரப்பப்படாத பணியிடங்களால் அல்லல் படும் ஆசிரியர்கள் என சீர்கேட்டின் பட்டியல்கள் நீள்கின்றன.
பள்ளியை விட்டு வீட்டுக்குச் சென் றால் வீட்டில் படிப்பதற்கான சூழல் இல்லை. பல மாணவர்கள் மீதி நேரத் தில் ஏதாவதொரு வேலையைச் செய்து பொருளீட்டவும், குடும்பத்தின் வேலைகளைச் செய்யவும், தம்பி, தங்கைகளை கவனித்து பராமரிக்கவும், வீட்டு சமையலை செய்யவும், பயன் படுத்தப்படுகிறார்கள். பெற்றோர்களின் இடையறாத சண்டையில் மிச்சமிருக்கிற அமைதியும் கிடைப்பதில்லை.
இப்படிப்பட்ட மாணவர்களின் ஒரே ஆறுதல் அவர்களின் ஆசிரியர்கள்தான். அவர்களின் குறைகளையும், தேவை களையும் புரிந்துகொண்டு பொறுமை யுடன் நல்வழிப்படுத்தி வளர்த்தெடுக்கிற அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்களை வணங்குவது நம் ஒவ்வொருவரின் கடமையாக இருக்கிறது.
மாதம் ஒன்றுக்கு ஐந்தாயிரத்துக்குக் குறைவாக வருமானம் உள்ள 85 விழுக்காடு மக்கள் உள்ள நாட்டில் கல்விக்காகவும், மருத்துவ செலவுக்காக வுமே இரவு, பகலாக உழைத்து தங்கள் வாழ்வின் பெரும் பகுதியை செலவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மக்களுக்கு, எதிர்காலத் தலை முறைக்கு கல்வியையும், மருத்துவத் தையும் தரவேண்டியதுதான் முதல் கடமையென உணர்ந்தால் அலகா பாத் நீதிமன்றத்தின் குரல் உரியவர் களின் காதுகளுக்கு இந்நேரம் கேட்டிருக்கும்.
அரசின் மொத்த செலவில் 40 விழுக்காடுத் தொகை அரசு ஊழியர் களுக்கே மாத ஊதியமாகவும், ஓய்வூதிய மாகவும் செலவிடப்படுகிறது. மக்களின் வரிப் பணத்தில் 40 விழுக்காட்டை எடுத்துக்கொள்கின்ற இவர்கள்தானே அரசுப் பள்ளிகளை சீர் செய்ய வேண்டும்.
நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதுபோல் அடுத்த ஆண்டுத் தொடக்கத்திலிருந்து அரசாங்கத்தின் ஊதியமாக ஒரு ரூபாய் வாங்கும் ஊழியராகவும், மக்களின் பிரதிநிதியாக இருக்கும் எவராக இருந் தாலும் அரசுப் பள்ளிகளில்தான் தங் களின் குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும். அப்பொழுதுதான் எக்கேடு கெட்டால் என்ன என கண்டுகொள் ளாமல் இருந்தவர்கள் அரசுப் பள்ளி களை மாணவர்கள் பயிலும் தகுதி யுடைய இடமாக மாற்றுவார்கள். இதனால் கல்விச் சுமையிலிருந்து பெற்றோர்கள் விடுபட்டு அரசாங்கப் பள்ளிகளில் தங்களின் பிள்ளைகளை ஒப்படைப்பார்கள். அனைத்து மாநில அரசுகளும் மனசு வைத்தால் அடுத்த கல்வியாண்டின் தொடக்கத்தில் இது சாத்தியமானதுதான்.
எந்த பெற்றோர்களுக்கும் பணத்தைக் கொட்டி தங்களின் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில்தான் படிக்க வைக்க வேண்டுமென்கிற ஆசை யில்லை. அதே வசதிகளையும், தரத்தை யும் கொடுத்தால் அனைவரும் பாகு பாடில்லாமல் சேர்ந்து பயிலும், பழகும் சமூகக் கூடமாக அரசுப்பள்ளிகள் மாறும்.
இந்தத் தீர்ப்பு மனசாட்சியை அசைத் திருந்தால், உடனடியாக இந்தியாவி லுள்ள அனைத்து அரசியல் கட்சி களின் தலைவர்களும், அதன் பொறுப் பாளர்களும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும், அரசு ஊழியர் சங்கங்களும் அடுத்தக் கல்வி யாண்டிலிருந்து எங்களின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் தான் படிக்க வைக்கப்போகிறோம் என அறிவியுங்கள். அத்துடன் அரசு மருத்துவமனைகளில்தான் மருத்துவம் செய்து கொள்வோம், தனியார் மருத்துவமனைகளுக்கு உயிரே போகும் நிலை வந்தாலும் போக மாட்டோம் என உடனடியாக அறிவியுங்கள். இதனைச் செய்தாலே போதும் எங்களின் வணக்கத்துக்குரியவர்களாக நீங்கள்தான் விளங்குவீர்கள்!
எல்லாவற்றுக்கும் காரணங்களைத் தேடிச் சொல்லும் அரசுகள் இவைகளைச் செய்ய பணம் தேவையில்லை. மனம் இருந்தாலே போதும்!
 
- இன்னும் சொல்லத்தோணுது 
எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள: thankartamil@gmail.com

2 comments:

  1. ஒரே ஒரு அரசாணை மூலம் வங்கிகளை தேசியமயமாக்கிய தலைவர் போல் அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசுப் பள்ளிகளாக உத்தரவிட வேண்டும் . ஆனால் இது எல்லாம் நடைபெறும் என்று நான் நினைக்கவில்லை. பாட்ஷா படத்தில் வருவது போல அனைத்துக் கல்வி நிறுவனங்களும் முதலில் பொறுக்கியாயிருந்து பின்னர் அரசியல் வியாதிகளாக மாறிவிட்ட கைநாட்டுகளாலேயே நடத்தப்படுகின்றன. அவற்றில் படித்தவர்கள் மாதச் சம்பளம் வாங்கும் கூலிகளாக வேலை பார்த்து வருகின்றனர்.

    ReplyDelete
  2. ஒரே ஒரு அரசாணை மூலம் வங்கிகளை தேசியமயமாக்கிய தலைவர் போல் அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசுப் பள்ளிகளாக உத்தரவிட வேண்டும் . ஆனால் இது எல்லாம் நடைபெறும் என்று நான் நினைக்கவில்லை. பாட்ஷா படத்தில் வருவது போல அனைத்துக் கல்வி நிறுவனங்களும் முதலில் பொறுக்கியாயிருந்து பின்னர் அரசியல் வியாதிகளாக மாறிவிட்ட கைநாட்டுகளாலேயே நடத்தப்படுகின்றன. அவற்றில் படித்தவர்கள் மாதச் சம்பளம் வாங்கும் கூலிகளாக வேலை பார்த்து வருகின்றனர்.

    ReplyDelete