Wednesday, 18 May 2016


தீராத வலி!

35 ஆண்டுகளுக்கும் மேலான போராட்டம் என்பதில் எத்தனைத்துயரங்கள் நடந்து முடிந்திருக்கின்றன என்பதை அதனால் பாதிப்புக்குள்ளானவர்கள் தவிர எவராலும் உணர முடியாது!
இரவுப்பகலாக வாழ்வு முழுக்க விடுதலைக்கேப்போராடிமாண்டவர்களும்,பிள்ளைகளையும்,உடன்பிறப்புகளையும்,கணவனையும் பலிகொடுத்துவிட்டு அத்தனைக்கனவுகளும் தகர்ந்து தவிடுப்பொடியாகிப்போனபின் இன்னும் வாழும் நம் உறவுகள் ஒருபக்கம்!
உயிரைக்காப்பாற்றிக்கொள்ள வெளியேறி ஒவ்வொரு நாடாக தப்பித்து தனக்குத்தொடர்பேயில்லாத நாடுகளிலெல்லாம் அகதியாய் தஞ்சம் புகுந்து உறங்குவதற்குக்கூட நேரமின்றி ஒருநாள் விடுதலைக்கிடைக்கும் என்னும் கனவோடு உழைத்து வாழ்ந்துகொண்டிருக்கும் நம் உறவுகளெல்லாம் ஒரு பக்கம்.
இவர்களெல்லாம் இன்று எதைநோக்கி தங்களின் எதிர்கால வாழ்வு என்பது தெரியாமல் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்!
விடுதலைக்கே தன்வாழ்வு என வாழ்க்கையை ஒப்படைத்தவர்களையும் இந்த உலகத்திற்கேத் தெரியும்.
ஈழத்தமிழன் விடுதலைப்பற்றிப்பேசியே எல்லா நிலையிலும் உயர்ந்தவர்களையும் இந்த தமிழகத்திற்குத் தெரியும்.
வீரமரணம் எய்திய போராளிகளின் ஆன்மாக்களும்,ஒன்றுமறியாத அப்பாவி உறவுகளின் ஆன்மாக்களும் எதை நினைத்து சமாதானமடையும்?
அதேபோல் உலகிலேயே பெரும் பணக்காரனாக ஆனாலும்கூட ஈழத்தமிழன் ஒருவனால் தான் நினைத்த நாடு கிடைக்காதவரை சமாதானம் அடைந்துவிட முடியுமா?
காலம் முழுக்க கனன்றுகொண்டேயிருக்கும் அந்த வலியை யாராலும் தீர்த்து வைத்துவிட முடியாது!!

Sunday, 15 May 2016





ஒரு குடிமகனாக முதல் கடமையாக வாக்களித்துவிட்டு வந்தேன்.புயலுக்கு முன் ஏற்படும் அமைதி அங்கு நிலவியது! மக்கள் மனங்களில் மாற்றம் ஏற்பட்டுவிட்டதாக உணர்கிறேன்.
மக்களிடமிருந்து கொள்ளையடித்த பணத்தைக்கொண்டு மக்களையே விலை பேசிய கூட்டத்தை விரட்டவேண்டிய பொறுப்பு நம்அனைவருக்கும்உண்டு.
நம் வாழ்வுதான் சீரழிந்தது! நம் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளாவது நிம்மதியோடு தலைநிமிர்ந்து வாழட்டும்!!

Saturday, 14 May 2016





"படம் சரியில்லை, மோசமாக இருக்கிறது" என கேள்விபட்ட பிறகும், அது எவ்வாறு மோசமாக இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்காகவே முன் பதிவு செய்து மீண்டும் மீண்டும் பெரிய நடிகர்கள் நடித்தப் படங்களைப் பார்கிறோம். பெரிய விளம்பரமில்லாத படம் ஒன்று எவ்வளவுதான் பிரம்மாதம்,நன்றாக இருக்கிறது என கேள்விப்பட்டாலும் பிறகு பார்த்துக்கொள்வோம் என தவிர்த்து விடுகிறோம்! 
அது போலவே பெரியகட்சிகள் என்பதற்காக அனைத்துக் கொடுமைகளையும் சகித்துக்கொண்டு எவ்வளவு கேவலப்பட்டாலும், எவ்வளவு சீரழிந்தாலும் அப்படிப்பட்ட மோசமான கட்சிகளையே மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுத்துக்கொண்டிருக்கிறோம்!
‪#‎தங்கர்பச்சான்‬


ஏன் அனைவரும் வாக்களிக்க வேண்டும்?

நம் மக்கள் மீண்டும் பிழை செய்து விடுவார்களோ எனும் அச்சத்தில் மனம் கனக்கிறது. இவ்வளவு சீரழிவுக்குப்பின்னும் சிந்திக்க மறுக்கின்ற நம் பாவப்பட்ட மக்களுக்கு தங்களின் பலம் தெரியவில்லை. அவர்களின் கையில் உள்ள வாக்கு ஒன்றினால்தால் அழிவிலிருந்து மீளமுடியும் என்பதை எப்படிசொல்லி புரிய வைப்பது? அதிகாரவெறிக் கொள்ளையர்களின் பிடியிலிருந்து விடுவித்துகொண்டு அப்படிப்பட்டவர்களை தூக்கி ஏறிய இந்தத் தேர்தல் ஒரு பெரும் வாய்ப்பு. இந்த வாய்ப்பை நழுவ விடாமல் அனைவரும் சென்று வாக்களிக்க வேண்டும்.



அரவாக்குறிச்சி சொல்லும் சேதி!

திமுக,அதிமுக- இரண்டு கட்சிகளின் பணம்பிடிபட்டதின் காரணமாக தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் மட்டும் நேர்மையான தேர்தல் நடந்து விடுமா? ஏற்கெனவே பிடிபட்டிருக்கிற நூறு கோடிக்கும் மேலான பணத்தில் முக்கால்பகுதி இந்த இரண்டு கட்சிக்காரர்களிடமிருந்தே கைப்பற்றப்பட்டிருக்கிறது.அந்த இடங்களிலெல்லாம் ஏன் தேர்தல் தள்ளிவைக்கப்படவில்லை?
இதற்கான காரணத்தை தேர்தல் ஆணையத்திடம் யார் கேட்பது?
அதிகாரவெறியில் பணத்தைக்கொடுத்து ஜனநாயத்தையே கேவலப்படுத்தும் இந்த இரண்டு கட்சிகளும்தான் இதுவரை செய்யாமல் இனி ஊழலற்ற ஆட்சியை நடத்தமுடியும் என நினைக்கிறீர்களா? தேர்தலை தள்ளிவைப்பதுதான் இதற்கு தண்டணையா? முதலில் தண்டனையை அறிவித்துவிட்டு பிறகு நடத்தப்படுவதுதான் நியாயம்!
எத்தனையோ சட்டம் படித்த மேதைகள் நம்மிடம் இருந்தும் நம் மக்களுக்கு அவர்களால் என்ன பயன்?
எது எப்படியோ இவர்களுக்கான பெரும்தண்டனையை யாரும் கொடுக்கப்போவதில்லை. இந்நிலையில் அந்த தண்டணையை குடிமக்களாகிய நாம்தான் தரவேண்டும்.

Friday, 13 May 2016


இம்முறை தப்புமா இந்த  ஆடுகள்!



இன்னும் தீராத அதிகாரப்பசியில் பணத்தைக்கொடுத்து பிடித்துக்கொள்ளத் துடிக்கும் ஓநாய்களிடமிருந்து ஆடுகளாகிய மக்கள் தப்பித்து பிழைக்க வேண்டுமானால் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த ஓநாய்களின் அட்டகாசங்களுக்கு முடிவுகட்ட வேண்டிய நேரமிது! நம்மைக்காப்பாற்ற தற்போதைக்கு யாரால் முடியும் என சிந்தித்து கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு பாதுபாப்பாளனை முடிவுசெய்து கொள்ளாமல் போனால் பிறகு அழுது புலம்பி பயனில்லை!



என்ன தண்டனை இவர்களுக்கு?


அரசியல் குறித்த அரிச்சுவடியைக்கூட தெரிந்துகொள்ளாமல் வாக்குரிமையை வைத்துக்கொண்டு தங்களின் எதிர்காலம் பற்றி எந்தக்கவலையும் இன்றி திரியும் நம் இளைஞர்களும், இலவசத்திற்கும்,பணத்திற்கும் கையேந்தி காத்திருக்கும் மக்களும் மீண்டும் தமிழகத்தை தலைதூக்கவிடாமல் செய்து விடுவார்களோ என்னும் அச்சம் மிகுதியாகிக்கொண்டு வருகிறது.
இதனிடையில் பல ஊடகங்கள் கைய்யூட்டைப் பெற்றுக்கொண்டு இரண்டு கட்சிகளுக்கும் இரவு பகல் பாராமல் உழைத்துக்கொண்டிருக்கின்றன.
மக்கள் என்ன நினைப்பார்கள் என சிறிதும் பயமில்லாமல் நம் மூளையை குழப்புவதாக நினைத்துக்கொள்கின்றன! தேர்தல்முடிந்தால் நாம் மக்களிடம்தானே பிழைப்பு நடத்த வேண்டும் என்கின்ற அச்சம் கொஞ்சமும் அவைகளுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. நம்மை சிந்திக்கவிடாமல் கருத்தைத்திணிக்கும் இந்த விலைபோன தரகர்களின் தொலைக்கட்ட்சிகளுக்கும் பத்திரிக்கைகளுக்கும் எவ்வாறு பாடம் புகட்டப்போகிறோம்?