“ என் அம்மா – இயக்குநர் தங்கர்
பச்சானின் தாயார் குறித்த ஆவணப்படம்
ஒரு தாயின் வயிற்றில் பிறந்த பிள்ளைகள் இந்த
பரபரப்பான இயந்திரத்தனமான பொருள் தேடும் உலகத்தில் ஆளாளுக்கு எதோ ஒரு ஊரில்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் கண்டு பிடிக்கப்படும்அறிவியல் தொழில்
நுட்பங்களால் மனிதர்கள் பேசிக்கொள்வதற்குக் கூட நேரமில்லை. இந்த நிலையில்
உறவுகளோடு உறவாடவும், உரையாடவும் யாருக்கும் நேரமில்லை. நம்மையெல்லாம் பெற்று,
வளர்த்து, உருவாக்கி விட்டு நம் தாயும், தகப்பனும் நாம் நல்ல முறையில் வாழ்ந்தால் போதும்
என ஏதோ ஒரு மூலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.பட்டினி கிடந்து, அவமானப்பட்டுதான்
ஒவ்வொரு பெற்றோரும் தங்களது பிள்ளைகளை வளர்த்து படிக்க வைக்கிறார்கள்.இறுதி
காலத்தில் கூட அந்த பிள்ளைகள் அவர்களின் பக்கத்தில் இருப்பதில்லை. வெளி
நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்ட எத்தனையோ நூற்றுக்கணக்கான பிள்ளைகள் வந்து இறுதிச்
சடங்கை செய்வதற்காக நாள்கணக்கில் பிணவறையில் பிணமாக கிடக்கும் பெற்றோர்களின்
எண்ணிக்கையும் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.
ஒவ்வொரு தாய் தகப்பனும் தங்களின்
தலைமுறைகளுக்காக இரவு பகல் பாராமல் ஓடி உழைத்து பொருள் சேர்த்துக்
கொண்டிருக்கிறோம். அந்த சொத்துக்களை எல்லாம் அனுபவிக்கும் தலைமுறைகளுக்கு அதனை
உருவாக்கியவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புவதில்லை. எல்லோர் கைய்யிலும்
கைபேசி, எப்பொழுதும் யாருடனாவது பேசிக் கொண்டிருக்கிறார்கள். வாட்ஸ் ஆப், பேஸ்
புக், டுவிட்டர் என விரல்கள் ஓய்வில்லாமல் பக்கங்களை புரட்டிக்கொண்டே இருக்கிறது.
எதைக்கண்டாலும் கைப்பேசியிலுள்ள கேமராவால் படம் பிடிக்க தொடங்கிவிடுகிறார்கள்.
யாரை பார்த்தாலும் படம் பிடிக்கும் கேமராக்கள் இப்பொழுது “ செல்பி எனும் பெயரில்
அவர்களையே படம் பிடித்துக் கொண்டிருக்கிறது.
எத்தனையோ லட்சக்கணக்கான அடி பிலிம் சுருள்களில் யார் யாரையோ படம்பிடித்துக்
கொண்டிருந்த நான் என் அப்பாவை பிடித்து வைத்த படம் ஒன்றே ஒன்றுதான். அது கூட கடைசி
காலத்தில் காச நோய் வந்து மருத்துவமனையில் இருந்த போது எடுத்ததுதான். அந்த ஒரு
கருப்பு வெள்ளைப்படமும் பதிவு செய்யாமல் போயிருந்தால் பத்துப் பிள்ளைகளை பெற்ற
அவரின் எதிர்காலத் தலைமுறைகளுக்கு அவர் எப்படி இருப்பார் என்பதேத் தெரியாமல்
போயிருக்கும்.
அப்பா எப்படி நடப்பார், எப்படி
பேசுவார், கோபப்படுவார், அன்பு செலுத்துவார் என்பதை வீடியோவாக பதிவு செய்யாமல்
விட்டுப் போனதை நினைத்து வருந்துகிறேன்.
அதனாலேயே நேரம் கிடைக்கின்ற போதெல்லாம்,
அம்மாவுடன் இருந்த போதெல்லாம் அம்மாவின்
நடவடிக்கைகளையும், பேச்சுக்களையும் பதிவு செய்து வைத்திருந்தேன்.
பதினான்கு வயதில் தாலி கட்டிக்கொண்டு
பத்து பிள்ளைகளை பெற்று வளர்த்து
கரைசேர்த்து இறுதிவரை எந்த ஒரு மருந்து மாத்திரைகளையும் உட்கொள்ளாமல்
மருத்துவரிடமே செல்லாமல் 91 வயது வரை தனி அடையாளத்துடன் வாழ்ந்து மறைந்த என் அம்மா
“லட்சுமி அம்மாளின்” முதலாமாண்டு நினைவு நாள் இன்று.
நான் எதைப் பேசினாலும், எதை எழுதினாலும், எதற்காக
கோபப்பட்டாலும் எல்லாமே அம்மாவிடமிருந்து பெற்றவைகள்தான். அவளிடமிருந்து
கற்றவைகளைக் கொண்டுதான் நான் இயக்கிய அழகி, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு,
அம்மாவின் கைபேசி என எந்தப் படங்களானாலும்
படைக்க முடிந்தது. ஒவொருவருக்கும் நினைவில் அதிகப்படியாக நிற்பது அம்மாவைப்
பற்றிய நினைவுகள்தான். அம்மாவை பற்றிய நினைப்பு என்னுள் எழும் போதெல்லாம் “ பத்து
நிமிடங்கள் ஓடக்கூடிய என் அம்மா பற்றிய “
என் அம்மா “ என்னும் இந்த ஆவணப் படம்தான்
எனக்கு ஆறுதலாக இருக்கிறது.
இந்த படத்தை பார்த்து முடித்தவுடன்
ஒவொருவரும் தவறாமல் வெளிப்படுத்தும் சொல் “ ஐயோ நான் என் அம்மாவை இதுபோல் எடுத்து
வைக்கவில்லையே ! என் அப்பா, தாத்தா, பட்டிகளை பதிவு செய்து வைக்கவில்லையே !கையில்
அதற்கான வசதிகள் இருந்தும் படம் பிடித்து வைக்காமல் போய்விட்டேனே என
புலம்புகிறார்கள்.
நம் வீட்டிலேயே, நம்முடனேயே
இருக்கும் நம்முனோர்கள் நம் கண்களுக்கு தெரிவதில்லை. நமக்காக காத்துக்கிடக்கும்
நம்மை உருவகியவர்களை பேசவிட்டு அவர்கள் சொல்ல விரும்புவதையெல்லாம் நம் பிள்ளைகளை
விட்டே படம் பிடித்து வைக்க சொல்லுங்கள். அவர்கள் உருவாக்கி வைத்த சொத்துக்களை நம்
பிள்ளைகளுக்குத் தந்து விட்டுப் போகும் நாம் அவர்களின் வரலாற்றை எதிர்கால
தலைமுறைகளுக்கு கொடுத்துவிட்டுச் செல்ல வேண்டாமா ?
“ என் அம்மா ‘ஆவணப்படம் எனது அம்மா
குறித்த ஆவணப்படம் மட்டுமல்ல ஒவ்வொருவருக்குமான அவர்களின் மனசாட்சியோடு பேசும் படம்..
அன்போடு
தங்கர் பச்சான்
பெங்களூரு,
ReplyDelete07-02-2016.
அன்புள்ள அன்ணன் செம்புலம் திரு.தங்கராசு அவர்களுக்கு உங்கள் தம்பி இர.த.உதயகாந்த் எழுதிக்கொள்வது.
பெரும்பாலான மக்களைப்போன்று வர்த்தக திரைப்படங்களைப் பார்த்துவிட்டு, வரும் வழியில் மது அருந்திவிட்டு மட்டமான காரியங்களை செய்யும் சராசரி தமிழன் நான் இல்லவே இல்லை.
முதலில் எனக்கொரு சந்தேகம்….???
திரைத்துறையை சார்ந்த மற்ற கலைஞர்கள் எல்லாம் பிற மாநில அழகிகளின் உடலழகையும், பிரம்மாண்டங்களையும் வைத்து பொருள் சேர்க்கும் இத்தருணங்களில்… நீங்கள் மட்டும் ஏன் இந்த உறவுகளையும், உணர்வுகளையும் ஏதோவொரு வகையில் எந்த ஒரு பலனும் இல்லாமல் புதுப்பித்துகொண்டிருக்கிறிர்கள்???
உங்களது ‘அழகி’யை பார்க்கும் ஒவ்வொரு முறையும் நான் அழாமல் இருந்ததேயில்லை…
‘பள்ளிக்கூடம்’ பார்த்து பதறிப்போய் பள்ளிக்கு ஓடினேன்…
‘அம்மாவின் கைப்பசி’ கண்டு மிகவும் கலங்கிப்போனேன்,
தங்களது நேர்காணல்களைக் கண்டு நெஞ்சம் கனத்திருக்கிறேன்.
நீரெல்லாம் என்ன மனுஷன்யா???
தங்களுடைய தாயார் திருமதி.இலட்சுமி அம்மாள் அவர்களைப்பற்றிய ஆவணப்படத்தை கண்டேன், கலங்கினேன்.
என் கல்லூரி காலத்தில் அம்மாவைப்பற்றி நான் எழுதிய கவிதை என் நினைவில் நிற்கிறது.
அம்மா… என்ற வார்த்தை எத்தனை ஆழமான வார்த்தை, என்னொருவனும் எழுந்திருக்க முடியாத ஆழம் அது.
கடந்த சில வருடங்களாகவே என்னுடைய குடும்பத்தை பற்றிய புகைப்படங்களை ஆவணப்படுத்த தொடங்கிவிட்டேன். ‘என் அம்மா’ பார்த்த பின் அதன் முக்கியத்துவம் எனக்கு நன்றாக விளங்கியது.
பெற்ற குழந்தைகளையெல்லாம் தெய்வமாக பார்க்கும் இந்த தெய்வங்கள் இதுவரை என்னத்தை கண்டார்கள். அப்பாவின் கோபத்தையும், அவளது பிள்ளகளின் அலட்சியத்தையும் மட்டுமே…
இப்படியொரு அருமையான ஒரு படைப்பை, எந்தவொரு பொருளாதார எதிர்பார்ப்புமின்றி எமக்கு கொடுத்தமைக்கு, உமக்கு கோடான கோடி நன்றி.
இணையதளம் (வாட்ஸ் ஆப்) வாயிலாக நேரடியாக சுமார் 281 நபர்களுக்கு என் அலைபேசியிலிருந்து ‘என் அம்மா’வை அனுப்பியிருக்கிறேன். வெறும் 5 பேர் மட்டுமே என்னை திரும்ப அழைத்து, ‘என் அம்மா’வை பகிர்ந்தமைக்கு நன்றி தெறிவித்தனர். மேலும் 500 நண்பர்களைக் கொண்ட என் முக நூல் பக்கத்திலும் பகிற முடிவு செய்திருக்கிறேன். நல்ல படைப்புகள் இப்புவி முழுதும் முழுதும் காட்டுத்தீ போல பரவட்டும்.
அண்ணே… நீங்க நல்லா இருக்கனும்.
எனக்கு வேற எதுவும் எழுத வரலை… தங்களை நேரில் சந்திக்கும்போது மற்றவை பற்றி பேசலாம்.
நன்றி – வணக்கம்.
இவன்
இர,த.உதயகாந்த்,
பெங்களுரு.