வாழ்த்து – 2௦17
ஆங்கில புத்தாண்டு, தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொள்வது வழக்கம்போல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நாமும் சலித்துபோகாமல் சொல்லிக்கொண்டேயிருக்கிறோம். வறுமையும், துயரமும், தொல்லைகளும் தீர்ந்தபாடில்லை.
இவற்றுக்கெல்லாம் மூலக்காரணமாக இருக்கின்றவர்கள் யார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். காசு செலவழித்து செய்தித்தாள் வாங்கி, தொலைக்காட்சி வாங்கி அப்படிப்பட்ட வஞ்சகர்களையும், திருடர்களையும் பார்த்து பார்த்து திட்டித்தீர்த்துக் கொள்கிறோம். போதாக்குறையைப் போக்க சமூக வலைத்தளங்களில் இரவு பகலாக பொங்கிக்கொண்டிருக்கிறோம்.
யாரோ ஒருவன் வயிற்றுப் பசிக்காகவும், ஐம்பது, நூறுக்காகவும் வீடுகளில் நுழைந்து திருடும்போது கையில் மாட்டிக்கொள்வான். அந்த வீட்டுக்காரன் மட்டுமல்ல, அந்த தெருக்காரன் மட்டுமல்ல; அந்த மொத்த ஊரும், பக்கத்து ஊர்காரர்களும் சேர்ந்து அந்த திருடனை மரத்தில் கட்டிவைத்து உதைப்போம். போகிற வருகிற எல்லாரிடமும் அடிவாங்கி அவன் சாவான்.
ஆனால் ஒரு நாட்டின் சொத்தை, வளங்களை, மக்களின் நலத்திட்டங்களுக்கான நிதியைத் திருவதோடு மட்டுமில்லாமல் ஏழைகளிலிருந்து பணக்காரர்கள் வரை எல்லோரையும் கசக்கிப் பிழிபவர்களை நாம் ஒன்றும் சொல்வதில்லை. யார் யார் திருடுகிறார்கள், எங்கெங்கே, எவ்வளவு சேர்த்து வைத்திருக்கிறார்கள் என்பதெல்லாம் தெரிந்தும் அவர்களையே ஆதரித்து வாக்களித்துவிட்டு குடுமியை அவர்களிடம் கொடுத்துவிட்டு ஒவ்வொரு முறையும் புலம்பியே சாகிறோம்.
அப்படித்தான் காமராஜரையும், அண்ணாதுரையையும், கக்கனையும் நாமே தோற்கடித்தோம். இதையெல்லாம் செய்துகொண்டே ஒவ்வொரு பண்டிகைக்கும், புத்தாண்டுக்கும் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டிருக்கிறோம். 2017 என்ன? இந்தப்புத்தி மாறாமல், அரசியல் விழிப்புணர்ச்சி பேராமல் 3017 வந்தாலும் நம் மக்களை யாராலும் காப்பாற்ற முடியாது. இவர்களை நம்பி எந்த ஒரு நல்லவனும், நேர்மையானவனும் அரசியலுக்கு வந்து நம்மைக் காக்க முன் வரமாட்டான். அப்படியே வந்தால் அவர்களை நாம் கண்டு கொள்வதில்லை.
உங்களை ஆளவேண்டியவர்களை நீங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள் என வெள்ளைக்காரனை எதிர்த்துப் போராடி வாக்குரிமையை ஒவ்வொரு குடிமகனுக்கும் பெற்றுத்தந்தார்கள். அப்படிப்பட்ட வாக்குரிமையின் வலிமையை உணர்ந்து கொள்ளாமல் ஆள்பவர்களையும், அரசியல்வாதிகளையும் குறை சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
அதை உணர்ந்து கொள்ளும்வரை இந்த மக்களுக்கேற்ற அரசாங்கங்கள் இருந்துகொண்டேதான் இருக்கும்! அரசாங்கத்திற்கேற்ற மக்களும் இருந்து கொண்டேதான் இருப்பார்கள். இன்னும் ஒரு வாரத்தில் பொங்கல் வாழ்த்தை சொல்லத்தயாராக இருப்போம். இப்பொழுதே நூறு ரூபாயையும், கரும்பு புள்ளையும் வாங்க வரிசையில் இடம் பிடிக்க கல் போட்டு வைப்போம்!
No comments:
Post a Comment