Friday, 11 November 2016

என்ன செய்யப்போகிறோம்? - தங்கர் பச்சான்



   விடுதலை அடைந்து 69 ஆண்டு களாகியும் இன்னும் 5௦ சதவீத மக்கள் கூட கழிப்பிட வசதியைப் பெறாமல் இருக்கிறோம். யாரெல்லாம் நாளெல்லாம் உழைத்து, இந்த நாட்டுக்கான முன்னேற்றத்துக்கு வசதிகளை ஏற்படுத்தித் தருகிறார்களோ, அந்த மக்கள்தான் வாழ்நாளின் இறுதிவரை அதே நிலையிலேயே இருக்கிறார்கள்.

சாகப்போகிறவனுக்கு மருத்துவம் பார்த்து உயிரைக் காப்பாற்றியாக வேண்டும். ஆளும் எழுந்து நடந்து பழைய நிலைக்கு வரவேண்டும். அதற்காக என்னென்ன மருத்துவம் செய்ய வேண்டுமோ அனைத்து வகையிலும் முயற்சிசெய்து போராடும் மருத்துவரைப் போலத்தான் இந்திய அரசாங்கம் இப்போது செயல்பட்டிருக்கிறது. பொருளாதாரச் சீரழிவு இந்நாட்டை மேலும் மேலும் பின்னோக்கி இழுத்துக்கொண்டிருக்கும் வேளையில், நம் பிரதமர் ஒரு மருத்துவரைப் போல் 5௦௦,1௦௦௦ ரூபாய் தாள்கள் செல்லாது என அறிவித்திருக்கிறார்.

உயிருக்காகப் போராடுபவர் அதற்கான வழிகளையும், வேதனைகளையும் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும். எந்த மருத்துவமும் பார்க்க வேண்டாம் என்றால் சாக வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை.

மக்களின் நலன், நாட்டின் நலன் குறித்து கவலைப்படாமல் அரசியலைத் தொழிலாக்கிக் கொண்டு மக்களின் வரிப்பணத்தையும், நாட்டின் வளங்களையும் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் கூட்டங்கள் குவித்துள்ள கறுப்புப் பணங்கள், கள்ளர்களின் 3௦ சதவீத கறுப்புப் பணங்கள், நாட்டின் முன்னேற்றத்துக்கு தொடர்ந்து சவாலாக இருக்கும் தீவிரவாத அமைப்புக்களின் திட்டங்கள், பதுக்கல்காரர்கள் மற்றும் யாரெல்லாம் உண்மையான வருமானத்தை மறைத்து வரி செலுத்தாமல் ஏமாற்றியவர்களோ என அவர்களை எல்லாம் ஒடுக்கும் முயற்சி இது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண் டும். எதிர்கருத்துக்களை சொல்வதென்று முடிவெடுத்துவிட்டால், எல்லாவற்றுக்கும் சொல்லிக்கொண்டே இருக்கலாம். அரசாங்கம் என்பது நாம் உருவாக்கியது. நம்மால் முடியாததை அரசாங்கம்தான் செய்ய முடியும்.

5௦௦, 1௦௦௦ ரூபாய் தாள்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதில் யாருக்குத் தான் பாதிப்பு இல்லை. நாட்டின் எதிர்காலம் குறித்து இந்த அவதிகளை சில நாட்களுக்கு நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். மக்களின் சொத்துக்களையும், நாட்டின் வளங்களையும் கொள்ளையடிப் பவர்களை ஆதரித்து அவர்களிடத்திலேயே மண்டியிட்டு கிடப்பவர்கள்தான் நாம். நமக்கு எதிரான எது குறித்தும் வீதிக்கு வந்துப் போராடும் துணிவு நமக்கு எப்போதுமே இருந்ததில்லை. நம்முடைய போராட்டமெல்லாம் வலைதளத்துக்குள் தான். நம் சொத்துக்களை எங்கெங்கு எப்படியெல்லாம் பதுக்கி வைத்திருக்கிறார்கள்? அவர்களெல்லாம் யார் யார் என்கின்ற பட்டியல் எல்லாம் நம் ஒவ்வொருவருக்கும் நன்றாகவே தெரியும். அவர்களெல்லாம் நம் முன்னேதான் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை நம்மால் ஏதாவது செய்ய முடிந்ததா?

நாம் செய்ய முடியாததை, அரசாங்கம் செய்திருக்கிறது. இத்திட்டத்தில் பலவீனங்கள் இருந்தாலும் பலன்களே அதிகம் என்பதை உணர வேண்டும். கறுப்புப் பணத்தால் நம்மை ஆட்டிப்படைத்து விலை வாசியை ஏற்றி நம்மை கொடுமைப்படுத்துபவர்கள் இதற்கும் ஒரு குறுக்கு வழியைத் தேடிக்கொண்டிருப்பார்கள். 2௦௦௦ ரூபாய் தாள் அறிமுகம் அவர்களுக்கே சாதகமாக இருக்கும் எனும் அச்சமும், கவலையும் இருப்பதை உணர முடிகிறது. இனி, வருங்காலம்தான் அதற்கான பதிலைத் தர வேண்டும்.

பெரிய திருடர்கள் எல்லாம் ஏற்கெனவே அயல்நாடுகளில் கொண்டுபோய் பதுக்கிக் கொண்டார்கள். மீதியைப் பல திருட்டு வழிகளையும் கையாண்டு தங்கமாகவும், வெள்ளையாகவும் மாற்றிவிடுவார்கள்.அதற்கடுத்த நிலையில் இருக்கும் திருடர்கள் செல்லாத தாள் கட்டுகளை எரிப்பதா, தூக்கிப்போடுவதா என நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் அவர்களுக்கு இன்னொரு கடைசி வாய்ப்பை அளித்து பாதிக்குப் பாதி வரி செலுத்தி பிழைத்துச்செல்லுங்கள்என அரசு அறிவிக்கலாம். அவ்வாறு செய்தால் கறுப்பு வெள்ளையாக மாறும். அந்தப் பணமெல்லாம் புழக்கத்துக்கு வந்து பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.

பொருளாதார முன்னேற்றத்தைப் பற்றி சிந்தித்து இப்படியொரு அதிரடி முடிவை அறிவித்திருக்கின்ற பிரதமர் பாராட்டுக்குரியவர்தான் என்றாலும், உடனடியாக ஏற்கெனவே வாக்குறுதி தந்தபடி வெளிநாடுகளில் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவர்களின் பட்டியலை வெளியிட்டு அந்தத் திருடர்களை எல்லாம் மக்களிடத்தில் அம்பலப்படுத்தி, பணத்தை மீட்டுக் கொண்டு வரவேண்டும். அத்துடன் மக்களையும், அரசாங்கத்தையும் ஏமாற்றியதற்காக கடும் சிறைத்தண்டனை விதிக்க வேண்டும். அதைத்தான் ஒரு தவறும் செய்யாமல் அல்லாடிக்கொண்டிருக்கும் இந்த மக்கள் விரும்புகிறார்கள். அதை செய்யவேண்டியது பிரதமரது கடமை. அதில் இருந்து நழுவினாலோ, தள்ளிப் போட்டாலோ இந்தப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் முழுமையான பலனைத் தராது. அதற்குப் பதிலாக மக்களிடத்தில் இத்திட்டம் அவர்மீது வெறுப்பையும், அவருக்கு களங்கத்தையுமே தேடித் தரும்.

குடிமக்களாகிய நாம் இப்போது செய்ய வேண்டியதெல்லாம் இந்தத் திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பைத் தருவது மட்டுமே! கையில் கணினி இருக்கிறது என்பதற்காக நகைச்சுவை என்கிற பேரில் கருத்துப் படங்களையும், மலினமான கருத்துக் களையும் வெளியிட்டும், ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டும் இத்திட்டத்தையும், பிரதமரையும் கேலிப்படுத்தக் கூடாது.

அதற்குப் பதிலாக, அயல்நாடுகளில் பதுக்கியிருக்கும் கள்ளப் பணத்தை மீட்டுக் கொண்டுவர பிரதமரை அனைத்து மக்களும் சேர்ந்து போராடி வற்புறுத்த வேண்டும். அது நடக்காமல் நாம் எதை பேசினாலும் பாதிக்கப்படபோவது நாம்தான்!

No comments:

Post a Comment