Saturday, 23 January 2016

“ என் அம்மா – இயக்குநர் தங்கர் பச்சானின் தாயார்  குறித்த ஆவணப்படம்   
   ஒரு தாயின்   வயிற்றில் பிறந்த பிள்ளைகள் இந்த பரபரப்பான இயந்திரத்தனமான பொருள் தேடும் உலகத்தில் ஆளாளுக்கு எதோ ஒரு ஊரில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் கண்டு பிடிக்கப்படும்அறிவியல் தொழில் நுட்பங்களால் மனிதர்கள் பேசிக்கொள்வதற்குக் கூட நேரமில்லை. இந்த நிலையில் உறவுகளோடு உறவாடவும், உரையாடவும் யாருக்கும் நேரமில்லை. நம்மையெல்லாம் பெற்று, வளர்த்து, உருவாக்கி விட்டு நம் தாயும், தகப்பனும் நாம் நல்ல முறையில் வாழ்ந்தால் போதும் என ஏதோ ஒரு மூலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.பட்டினி கிடந்து, அவமானப்பட்டுதான் ஒவ்வொரு பெற்றோரும் தங்களது பிள்ளைகளை வளர்த்து படிக்க வைக்கிறார்கள்.இறுதி காலத்தில் கூட அந்த பிள்ளைகள் அவர்களின் பக்கத்தில் இருப்பதில்லை. வெளி நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்ட எத்தனையோ நூற்றுக்கணக்கான பிள்ளைகள் வந்து இறுதிச் சடங்கை செய்வதற்காக நாள்கணக்கில் பிணவறையில் பிணமாக கிடக்கும் பெற்றோர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.
ஒவ்வொரு தாய் தகப்பனும் தங்களின் தலைமுறைகளுக்காக இரவு பகல் பாராமல் ஓடி உழைத்து பொருள் சேர்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த சொத்துக்களை எல்லாம் அனுபவிக்கும் தலைமுறைகளுக்கு அதனை உருவாக்கியவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புவதில்லை. எல்லோர் கைய்யிலும் கைபேசி, எப்பொழுதும் யாருடனாவது பேசிக் கொண்டிருக்கிறார்கள். வாட்ஸ் ஆப், பேஸ் புக், டுவிட்டர் என விரல்கள் ஓய்வில்லாமல் பக்கங்களை புரட்டிக்கொண்டே இருக்கிறது. எதைக்கண்டாலும் கைப்பேசியிலுள்ள கேமராவால் படம் பிடிக்க தொடங்கிவிடுகிறார்கள். யாரை பார்த்தாலும் படம் பிடிக்கும் கேமராக்கள் இப்பொழுது “ செல்பி எனும் பெயரில் அவர்களையே படம் பிடித்துக் கொண்டிருக்கிறது.
எத்தனையோ லட்சக்கணக்கான அடி  பிலிம் சுருள்களில் யார் யாரையோ படம்பிடித்துக் கொண்டிருந்த நான் என் அப்பாவை பிடித்து வைத்த படம் ஒன்றே ஒன்றுதான். அது கூட கடைசி காலத்தில் காச நோய் வந்து மருத்துவமனையில் இருந்த போது எடுத்ததுதான். அந்த ஒரு கருப்பு வெள்ளைப்படமும் பதிவு செய்யாமல் போயிருந்தால் பத்துப் பிள்ளைகளை பெற்ற அவரின் எதிர்காலத் தலைமுறைகளுக்கு அவர் எப்படி இருப்பார் என்பதேத் தெரியாமல் போயிருக்கும்.
அப்பா எப்படி நடப்பார், எப்படி பேசுவார், கோபப்படுவார், அன்பு செலுத்துவார் என்பதை வீடியோவாக பதிவு செய்யாமல் விட்டுப் போனதை நினைத்து வருந்துகிறேன்.
அதனாலேயே நேரம் கிடைக்கின்ற போதெல்லாம், அம்மாவுடன் இருந்த  போதெல்லாம் அம்மாவின் நடவடிக்கைகளையும், பேச்சுக்களையும் பதிவு செய்து வைத்திருந்தேன்.
பதினான்கு வயதில் தாலி கட்டிக்கொண்டு பத்து பிள்ளைகளை பெற்று  வளர்த்து கரைசேர்த்து இறுதிவரை எந்த ஒரு மருந்து மாத்திரைகளையும் உட்கொள்ளாமல் மருத்துவரிடமே செல்லாமல் 91 வயது வரை தனி அடையாளத்துடன் வாழ்ந்து மறைந்த என் அம்மா “லட்சுமி அம்மாளின்” முதலாமாண்டு நினைவு நாள் இன்று.
நான் எதைப்  பேசினாலும், எதை எழுதினாலும், எதற்காக கோபப்பட்டாலும் எல்லாமே அம்மாவிடமிருந்து பெற்றவைகள்தான். அவளிடமிருந்து கற்றவைகளைக் கொண்டுதான் நான் இயக்கிய அழகி, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, அம்மாவின் கைபேசி என எந்தப் படங்களானாலும்  படைக்க முடிந்தது. ஒவொருவருக்கும் நினைவில் அதிகப்படியாக நிற்பது அம்மாவைப் பற்றிய நினைவுகள்தான். அம்மாவை பற்றிய நினைப்பு என்னுள் எழும் போதெல்லாம் “ பத்து நிமிடங்கள் ஓடக்கூடிய என்  அம்மா பற்றிய “ என் அம்மா “  என்னும் இந்த ஆவணப் படம்தான் எனக்கு ஆறுதலாக இருக்கிறது.
இந்த படத்தை பார்த்து முடித்தவுடன் ஒவொருவரும் தவறாமல் வெளிப்படுத்தும் சொல் “ ஐயோ நான் என் அம்மாவை இதுபோல் எடுத்து வைக்கவில்லையே ! என் அப்பா, தாத்தா, பட்டிகளை பதிவு செய்து வைக்கவில்லையே !கையில் அதற்கான வசதிகள் இருந்தும் படம் பிடித்து வைக்காமல் போய்விட்டேனே என புலம்புகிறார்கள்.
நம் வீட்டிலேயே, நம்முடனேயே இருக்கும் நம்முனோர்கள் நம் கண்களுக்கு தெரிவதில்லை. நமக்காக காத்துக்கிடக்கும் நம்மை உருவகியவர்களை பேசவிட்டு அவர்கள் சொல்ல விரும்புவதையெல்லாம் நம் பிள்ளைகளை விட்டே படம் பிடித்து வைக்க சொல்லுங்கள். அவர்கள் உருவாக்கி வைத்த சொத்துக்களை நம் பிள்ளைகளுக்குத் தந்து விட்டுப் போகும் நாம் அவர்களின் வரலாற்றை எதிர்கால தலைமுறைகளுக்கு கொடுத்துவிட்டுச் செல்ல வேண்டாமா ?
“ என் அம்மா ‘ஆவணப்படம் எனது அம்மா குறித்த ஆவணப்படம் மட்டுமல்ல ஒவ்வொருவருக்குமான அவர்களின்  மனசாட்சியோடு பேசும் படம்..
                                                                                                             அன்போடு
                                                                                                          தங்கர் பச்சான்

குறிப்பு  ; என் அம்மா ஆவணப்படத்தை https://www.youtube.com/watch?v=1gK6-i3A35U  இதை சொடுக்கி காணலாம்.

Tuesday, 29 December 2015




படச்சுருள் - இதழில் எனது விரிவான நேர்காணல் 

        சண்டையிட்டு விருதுகள் வாங்குவது முட்டாள்தனம் – தங்கர் பச்சான்























Saturday, 12 December 2015

கடலூர் மாவட்டத்தைக் காப்பாற்றுங்கள்
தங்கர் பச்சான்அறிக்கை
மழை வராதா என ஏங்கியதுபோய், மழை வந்து விடுமோ என பயந்து கொண்டிருக்கிறோம். எங்கு திரும்பினாலும் தண்ணீராய்க் காட்சியளிக்கும் சென்னை இன்னும் நான்கு மாதங்களில் தண்ணீர் குடங்களோடு தண்ணீர் லாரியை எதிர்பார்த்துக் காத்திருக்கும். சென்னையைச் சுற்றிலும், சென்னைக்குள்ளும் ஏராளமான ஏரிகள் இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் வெளி மாநிலத்திலிருந்தும், வீராணம் ஏரியிலிருந்தும், ராட்சச கிணறு உருவாக்கி நிலத்தடி நீரை உறிஞ்சியும்தான் நிர்வாகம் செய்யப்படுகிறது. விவசாயத்துக்காகப் பயன்படுத்த வேண்டிய தண்ணீரை இவ்வாறு குடிநீருக்கு பயன்படுத்துவது குறித்து யாரும் கவலை கெண்டதே இல்லை.
எல்லா தொழில் நுட்பங்களையும் கையாளத் தெரிந்த நமக்கு, விலை மதிப்பற்ற மழை நீரை சேமித்து வைக்கத் தெரியவில்லை. அதேபோல் தேங்கித் கிடக்கும் தண்ணீரை வெளியே அனுப்பவும் தெரியவில்லை. நீர் மேலாண்மைக்கென எத்தனையோ துறைகள் இருந்தும், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கில் உருவாக்கப்படும் பொறியாளர்கள் இருந்தும் நமக்கு இந்த இரண்டையுமே செய்யத் தெரியவில்லை.
ஏரி, குளம், குட்டை, கண்மாய் என நீர் நிலைகள் இருந்த இடங்களைத் தேடி அரசாங்கமே பொது மருத்துவமனை, பேருந்து நிலையங்கள், நீதிமன்றங்கள், ஆட்சி செய்வதற்கான மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் என அனைத்து கட்டிடங்களையும் எழுப்பிக் கொண்டே இருந்தது. அரசாங்கத்திற்கு இடங்களைத் தேர்வு செய்து திட்டங்கள் தீட்டிக் கொடுத்ததெல்லாம் மக்கள் பணத்தில் கல்வி கற்று மக்கள் பணத்தில் மாத ஊதியம் முதற்கொண்டு ஓய்வூதியம் வரைப் பெறுகின்ற நம் அதிகாரிகளும், பொறியாளர்களும்தான். காலங்காலமாக நம் தலைமுறைகளை வாழவைத்து வந்த ஏரியையும், குளம் குட்டைகளையும் குப்பைகள் கொட்டும் இடமாகவே மாற்றிவிட்டோம். கர்ணம், மணியக்காரர், தலையாரி எனும் பதவியிலிருந்தவர்கள் வரை அவைகள் பராமரிக்கப்பட்டன. எப்பொழுது கிராம நிர்வாக அலுவலர் எனும் பதவியைக் கொண்டு வந்து எதைப் பற்றியும் அறியாத வெறும் ஏட்டுப் படிப்பாளர்களிடம் நிர்வாகம் முடங்கியதோ அப்பொழுதிலிருந்தே நீர்வழித் தடங்களும், நீர் நிலைககளும் கொஞ்சம் கொஞ்சமாகக் கையகப்படுத்தப்பட்டன.
மரபுவழி நிர்வாக முறைத் தொடர்ந்திருந்தால் இவைகள் களவாடப்பட்டு காணாமல் போயிருக்காது. ஏறக்குறைய ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட மதுராந்தகம் ஏரி மூன்றில் ஒரு பங்கைவிட குறைவாகச் சுருங்கியிருக்காது. சென்னை மாநகரத்துக்கே தண்ணீர் தரக்கூடடிய அளவிலான பெரிய ஏரி இன்று கண்மாய்போல் மாறியிருக்காது.
நம்மிடமுள்ள ஆறுகளையும், நீர் நிலைகளையும் பராமரித்து நீர் தேக்கி நிலத்தடி நீரைப் பெருக்கிக் கொள்ளும் நிர்வாகம் தெரியாமல், பிற மாநிலங்களிடம் கெஞ்சிக் கொண்டும், விவசாயத்திற்குப் பயன்படக்கூடிய வீராணம் ஏரி நீரையும், நிலத்தடி நீரையும் உறிஞ்சி பெரிய பெரிய குழாய்களை விவசாய நிலங்களில் பதித்து 250 கிலோமீட்டரிலிருந்து சென்னைக்கு நீரைக் கொண்டு வந்திருக்க மாட்டோம்.
இயற்கை பாதுகாக்கப்படுவதையும், நீர் மேலாண்மையையும், உழவுத் தொழிலையும் கண்டு கொள்ளாத, பராமரிக்கத் தெரியாத அரசாங்கம் எங்கிருந்தாலும் குடிமக்களின் நிலை பெருந்துயரந்தான்.
கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே திருக்கண்டலத்தில் 33 கோடி ரூபாய் செலவில் எழுப்பப்பட்ட தடுப்பணை ஓராண்டுக்குள்ளேயே உடைந்திருக்கிறது. இப்படிப்பட்ட தரத்தில் அணைகள் கட்டப்படுவதற்குப் பதிலாக எதுவும் செய்யாமலேயே இருந்து விடலாமோ எனவும் நினைக்கத் தோன்றுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளாக இன்னும் புதுப்பொலிவுடன் நிற்கின்ற கல்லணைக்கும் இதற்கும் உள்ள இடைவெளியை எல்லாவற்றிலும் உணர முடியும்.
ஒரே மாதிரியாக ஒன்று விடாமல் எல்லா அரசியல் கட்சிகளும் நீர் நிலைகளை பராமரிக்கவும், பாதுகாக்கவும் தவறி விட்டோம் என கூப்பாடு போடுகிறார்கள். ஒரே ஒரு கட்சிகூட நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சுதந்திரத்திற்குப் பின் இந்த நாள் வரைக் கணக்கெடுத்து கையகப்படுத்தப்பட்ட நீர்வழித்தடங்களையும், நீர் நிலை ஆதாரங்களையும் மீண்டும் மீட்டெடுத்து உருவாக்கித் தருவோம். அது இப்போது யாரிடமிருந்தாலும், எங்கள் கட்சிக்காரரிடமிருந்தாலும் பரவாயில்லை. அதற்கான சட்டம் உருவாக்கி நீதிமன்றத்தின் துணையுடன் செயல்படுத்துவோம் எனக் கூறவேயில்லை. அன்றாடங்காய்ச்சிகள் இவற்றையெல்லாம் கைப்பற்றவில்லை. அதிகாரத்தில் இருந்தவர்களும், அவர்களைச் சார்ந்து இயங்கியவர்களுமே கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டு இப்போது நம்மை மழையைப் பார்த்து அச்சம் கொள்ள வைக்கிறார்கள்.
‘‘அசோகர் என்னத்தைய்யா செஞ்சி கிழிச்சார்? சும்மா, காலங்காலமா, ‘ஏரிகளை, குளம் குட்டைகளை உருவாக்கினார், மரங்களை வளர்த்தார், சாலைகள் நிறுவினார்என இதையேத்தான் வரலாறு பாடத்துல சொல்லிக் குடுக்கறாங்க. அதெல்லாம் ஒரு படிப்பா? ராஜாவுக்கு இதான் வேலையாஎனவும் நாம் கேலி செய்து வரலாறு பாடத்தைப் புறக்கணித்தோம்.
இன்றைக்காவது எதற்காக அசோகர் மகாராஜா அவ்வாறு ஆட்சி செய்தார்? எதனால் அவரது ஆட்சி சிறந்த ஆட்சி என்பதை உணர்ந்து கொண்டால் போதும்.
நமக்கு நீர்வழித் தடங்களைப் பராமரிக்கிற அளவுக்கு நேரந்தான் கிடைக்கவில்லை. பெருமழை வெள்ளம் தொடர்ந்து ஒரு வார காலமாக கொட்டித் தீர்ப்பது தெரியும். செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு என்ன என்பதும் தெரியும். ஏரியில் வந்து சேருகிற நீருக்கேற்ப வெளியேற்றக் கூடவாத் தெரியாது. அதை கண்காணிப்பது யாருடைய வேலை? ஏற்கெனவே மழைநீரில் தத்தளித்துத் தவித்துக் கொண்டிருக்கிற மக்களிடத்தில் சொல்லாமல் கொள்ளாமல் முன்னறிவிப்பின்றி திடீரென நடு இரவில் ஏரியைத் திறந்து விடுவதென்பது யார் செய்த வேலை? நான்தான் இதற்கான ஆணையைப் பிறப்பித்தேன் என ஏற்றுக் கொள்பவர்கள் யாராவது இருக்கிறார்களா?
தேங்கிக் கிடக்கும் அழுக்கு நீரிலேயே கால்கடுக்க நின்று கொண்டு நிவாரணம் தர யார் வருவார்கள் எனக் காத்திருக்கும் மக்களுக்கு இதைப் பற்றியெல்லாம் சிந்திக்க நேரமேது!
சென்னை மக்களுக்கு இந்த முறைதான் இதுபோன்றதொரு துயரம். கடலூர் மாவட்ட மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தைக் கடப்பதற்குள் அடுத்த ஆண்டு வந்துவிடும். சரியாக 28 நாட்களுக்கு முன்னால் தொடங்கிய மழை இன்னும் நின்றபாடில்லை. மேட்டுப்பகுதியான ஒருசில பஞ்சாயத்துக்கள் தவிர மற்ற முழு மாவட்டமும் நீரிலேயே மிதக்கிறது.
இலட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாயப் பயிர்கள் முற்றிலும் மூழ்கி சேதமடைந்து விட்டது. இலட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் நெய்வேலி சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் நீரும் சுரங்க கரித்தூள் மண்ணும் நிலத்தில் படிந்து மேடாக்கி இனி புல் பூண்டு கூட முளைக்காத பூமியாக்கிவிட்டது. எதிர்காலம் கேள்விக்குறியாகி நிற்கும் இந்த விவசாயக் குடிகளும், அவர்களின் பிள்ளைகளும் எங்கே போவார்கள்? என்ன செய்வார்கள்?
ஐயாயிரம் பணம், வேட்டி, புடவை, பத்து கிலோ அரிசியை வாங்கிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டு சாவதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார்கள். விவசாயிகள் எதை விற்று, எப்படி கடன் வாங்கி விவசாயம் செய்திருந்தாலும் அரசு கொடுக்கிற ஐய்யாயிரம் நிவாரணத் தொகையை வாங்கிக் கொண்டால் அவர்களின் பிரச்சினை தீர்ந்து விடும் என நினைக்கிறார்களா?
மண்மேடாய் கிடக்கும் நிலத்தை சீர் செய்து விவசாயத்திற்கு தகுதியுடைய மண்ணாய் மாற்ற எவ்வளவு பணம், எவ்வளவு உழைப்பு தேவைப்படும்? இதற்கெல்லாம் அவர்கள் எங்கே போவார்கள்? அவ்வளவு காலம் வரை அவர்கள் என்ன செய்வார்கள்?
ஆண்டுக்கு 1400 கோடி வருமானம் ஈட்டும் என்.எல்.சி நிறுவனம் கண்டுகொள்ளவேயில்லை. நம் அரசாங்கத்திற்கு மின்சாரம் வேண்டும். மத்திய அரசை பகைத்துக் கொள்ளவும் கூடாது. ஒருவேளை ஒரு கட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் இவர்களுக்காகக் கோரிக்கை வைத்தால் கொஞ்சம் பணம் தருவார்கள். அந்தப் பணமும் டாஸ்மாக் மூலம் அவர்களின் கல்லாவிற்குப் போய்விடும்.
இந்த பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அவர்களின் உண்மையான நிலை புரிந்து போராடி கோரிக்கை வைக்க விவசாய சங்கங்களால்தான் முடியும். அந்த சங்கங்கள் நமது அரசியல் கட்சிகள் போலவே ஒற்றுமையில்லாமல் ஒவ்வொரு சங்கமும் ஒரு அரசியல் கட்சியை சார்ந்து இயங்குவதால் அதற்கு வழியுமில்லை. இவ்வளவு துயரங்களுக்குப் பிறகும் முப்பதுக்கும் மேலிருக்கும் விவசாய சங்கங்கள் கடலூர் மாவட்டத்தை கவனிக்கவும் இல்லை. அது தொடர்பாக எதையும் பேசவும் இல்லை.
ஏற்கெனவே என்ன நடக்குமோ என நடுங்கி நிற்கும் இம்மக்களுக்கு எப்பொழுதும் போல ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் இறுதி வாரத்தில் உருவாகும் புயல் இவ்வாண்டும் உருவாகுமா என முன்கூட்டி அறிவித்து முன்னேற்பாடுகளைச் செய்யப் போகிறார்களா? எனத் தெரியவில்லை.
உலகத்தின் கவனமும், நம் ஊடகங்களின் கவனமும் இப்பொழுது சென்னைக்குத் திரும்பி விட்டபின் கடலூர் மாவட்டத்து மக்களை கவனிப்பாரில்லை. ஏற்கெனவே நிவாரணப் பொருட்களைப் பெற்றவர்களே மீண்டும், மீண்டும் பெறுகிறார்கள். யாருக்கு கிடைக்க வேண்டுமோ அவர்களுக்குப் போய்ச் சேரவில்லை. முறைப்படுத்திக் கொண்டு செல்வதும், சென்னையை கவனிப்பது போலவே அம்மக்களுக்கும் நிவாரணப் பொருட்கள் போய்ச் சேரும்படி தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், தன்னார்வலர்களும் கவனத்தில் கொண்டு உடனே செயலாற்றுவது அவசியமாகிறது.
ஒவ்வொரு முறையும் சேதங்களையும், பாதிப்பையும், அழிவையும் எதிர்கொள்கிற கடலூர் மாவட்டத்திற்கு நிவாரணங்களை வழங்குவதால் தீர்வை எட்ட முடியாது. அம்மாவட்டத்திற்கு என தனியாக நிதி ஒதுக்கி வல்லுனர்களின் குழு ஒன்றை நியமித்து சிறப்புத் திட்டங்கள் தீட்டி நிரந்தரத் தீர்வை எட்ட வேண்டும். அப்பொழுதுதான் அம்மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு அச்சமின்றி வாழ்வார்கள்.
நிவாரணப் பணம் வங்கிகளின் மூலம் சென்று சேர வேண்டும் என்பதாலோ, பணத்தின் அளவை உயர்த்திக் கொடுப்பதாலோ தீர்வு கிடைத்துவிடாது. மக்களின் மேல் உண்மையிலேயே அக்கறை இருப்பதாக சொல்லிக் கொள்ளும் முதலமைச்சர் இந்நேரத்தில் உடனே செய்ய வேண்டியது நிவாரணங்கள் பெறுபவர்களின் பட்டியலைத் தயாரிப்பது அல்ல. டாஸ்மாக் கடையை இம்மக்கள் எழுந்து உட்காரும் வரை மூடி வைக்க உத்தரவிடுவதுதான். இதைத்தான் ஒரு மாதமாக படுக்க இடமின்றி ஈரத்திலேயே தவித்துக் கொண்டிருக்கும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
-       தங்கர் பச்சான்

thankartamil@gmail.com