தமிழ் சினிமாவில் ஓர் ஒளிப்பதிவாளர் எழுத்தாளராகவும், மக்கள் பிரச்னைக்கு குரல் கொடுப்பவராகவும் இருப்பது அரிதிலும் அரிது. அப்படியானவர் இயக்குநர் தங்கர்பச்சான். தன்னைப் பற்றிய எந்த விமர்சனங்களுக்கும் அஞ்சாமல், சமூகத்தில் தன் கருத்தை அழுத்தமாகப் பதியவைப்பதில் தங்கருக்கு நிகர் தங்கரே!
‘‘தமிழ்ச் சூழலில் ஒரு கலகக்காரராகவே அறியப்படுகிறீர்களே?’’
“இன்றைக்கு கிராம மக்களின் வாழ்க்கை சூறையாடப்பட்டுட்டு இருக்கு. எழுத, படிக்கத் தெரியாத மக்களை இந்தச் சமூகம் மதிக்குறதில்ல. எழுதப் படிக்கத் தெரியறதெல்லாம் நம்மோட வளங்களை சுரண்டறதுக்குத்தான். மத்தவங்களோட உடைமைகளையும், உரிமைகளையும் பறிக்கத்தான். படிச்ச அல்லது படிக்காத மனிதர்களில் யாருடைய வாழ்க்கை முழுவதுமாக அழிக்கப்பட்டிருக்குன்னா அது படிக்காதவர்களின் வாழ்க்கைதான். அதனாலதான் படிக்கலைன்னா இந்த உலகத்துல வாழமுடியாதுன்னு நினைக்கிறான்.
அப்படித்தான் நானும் படிச்சு, நகரத்துக்கு வந்துட்டாலும் இன்னும் படிக்காதவனோட மனநிலையில் இருந்துதான் இந்தச் சமூகத்தை பார்க்குறேன். அவசியம் இல்லாமல் பொருள் தேடறது படிச்சவனோட வேலையா, மனநிலையா இருக்கு. அதனாலதான் இந்தப் படிச்ச கூட்டத்தோட சேர எனக்கு விருப்பமில்ல!
நம்ம மக்களோட மனசு, மண்ணு, நீர்நிலை, காற்று, நுண்ணுயிர்னு எல்லாத்தையும் அழித்தொழிக்கிற எந்த விஷயத்துக்கு எதிராவும் என்னோட குரலை உயர்த்துவேன். அதைத்தான் இந்தச் சமூகம் கலகக்காரன்னு சொல்லுது. அது எங்கிருந்து நடக்கிறதுன்னா, அடிப்படையில நான் கிராமத்து மனுஷனா இருக்குறதாலதான். அதனாலதான் இப்படியான பெயர்கள் எல்லாம் எனக்குக் கிடைக்குறதா நினைக்கிறேன்!”
‘‘தொடர்ந்து விவசாயிகளின் பிரச்னைகளுக்குக் குரல் கொடுத்து வருகிறீர்கள். விவசாயக் குடும்பத்தில் பிறந்ததுதான் காரணமா, அல்லது மக்களின் மீதான நேசமா?’’
“என்னோட தாய் எனக்கு தலைவாரிவிட்டு, சோறூட்டி, பள்ளிக்கு அனுப்பிவெச்சதா என் நினைவில் இல்ல. அன்பு இல்லாமலும் என் தாய் என்னை வளர்க்கல. அவங்களுக்கு நேரமில்ல அவ்வளவுதான். அவங்க காலையில நாலு மணிக்கே எழுந்துடுவாங்க. ஆடு, மாடுக்கெல்லாம் தீனிவெச்சு, தெருவை கூட்டிட்டு, சமையல் செஞ்சிவெச்சிட்டு, பிள்ளைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிட்டு, வயலுக்குப்போய் வேலைசெஞ்சிட்டு பொழுது சாயும்போது விறகு பொறுக்கிட்டு வந்து மறுபடியும் சாப்பாடு செஞ்சி போடும்போது... இரவு ஒன்பதாயிடும். அதுக்குள்ள எல்லாரும் தூங்கிடுவோம்.
விவசாயம் பண்ணி வாழ்க்கையை இழந்தவங்கதான் அதிகம். அவங்க இன்னும் கீழ் நிலையிலதான் இருக்காங்க. ஆனா, விவசாயம் செய்யாதவங்க பொருளாதாரத்துல மேலே போயிட்டே இருக்காங்க. விவசாயம் செய்றவனோட குடும்பம் அழிஞ்சிக்கிட்டே இருக்கு. அப்போ, நான் கோபப்படாமா என்ன செய்ய முடியும்? அந்தக் குடும்பத்தில இருந்துதானே வந்திருக்கேன்? அதுதானே எனக்கு சோறுபோட்டுச்சு? அந்த நெலத்துல இருந்து வந்த பணத்தாலதானே இந்த அறிவை வளர்த்துக்கிட்டேன்? அவங்களாலதானே சென்னைக்கு வந்து, திரைப்படக் கல்லூரியில படிச்சேன், சினிமா எடுத்தேன்? இந்த வீட்டைக் கட்டியிருக்கேன்னா அது விவசாயிங்களோட பணம்தானே? அவங்கப் படம் பார்த்தாதானே பணம் வரும்? அதனாலதான், விவசாயிங்க பிரச்னைகளை என் குரல் ஒலிக்குது!”
‘‘இந்தியாவில் தொடர்ந்து விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்துக்கொண்டே வருகிறதே...?’’
“எங்க தாத்தாவுக்கு அஞ்சு பசங்க. எல்லோரும் விவசாயிங்கதான். என்கூட பிறந்தவங்களும் அஞ்சு பேருதான். அவங்களும் விவசாயம்தான் பண்றாங்க. சென்னையில வசிச்சாலும் நானும் ஊருக்குப்போய் அப்பப்போ விவசாயத்தை கவனிச்சிக்கிறேன். ஏன்னா, விவசாயத்தை விடவே கூடாது என்கிற வைராக்கியம்தான். என்கூட பிறந்தவங்க நான் விவசாயம் செய்யுறத எதிர்க்கிறாங்க. ஏன்னா, அந்த விவசாயத்துல போடுற முதலீடு எதுவும் திரும்ப வர்றதேயில்ல. இருந்தாலும் விவசாயம் செய்யுறேன். என்னுடைய பிள்ளைகள் ஒருபோதும் அதை செய்யப்போறதே இல்ல. அப்போ விவசாயி அழிஞ்சிக்கிட்டே இருக்கான். அவன் கடனாளியா மாறிக்கிட்டே இருக்கான். தன்மானத்தோட வாழ்றவன் விவசாயிதான். அவன் வளர்த்த ஆடு, மாடு உள்பட எதுவுமே இப்போ அவனோட இல்ல. எல்லாத்தையும் இழந்து, விவசாயிங்கிற வெறும் பேரோடதான் இப்போ இருக்கான்.
அப்போ எல்லாம் வீட்டுல இருக்குற குப்பைகளையும், மரத்தோட தழைகளையும் வெட்டிக்கிட்டு போய் நெலத்துல போட்டுட்டு, விவசாயம் செஞ்சிட்டு வந்துடலாம். விதை மட்டும் இருந்தா போதும். வீட்டுல மாடு இருக்கும். ஏர் உழுதா, களையெடுத்தா போதும்னு இருந்துச்சு. இன்னைக்கு அப்படியில்ல. விவசாயம் செய்யணும்னா முதலீடு நிறையா போடணும். ஆனா, திரும்பி வருமான்னா வராது. செலவழிச்சு செய்யுற வேலையா விவசாயத்தை மாத்தினது, இந்தப் படிச்ச திருடர்கள்தான்.
அறிவியலாளன் என்கிற பேர்ல, ஆராய்ச்சி பண்றேன்ங்கிற பேர்ல நம்மோட மண்ணுல விஷத்தை கலந்துட்டாங்க. அது நம்மோட உணவுப்பொருள் எல்லாத்துலேயும் கலந்துடுச்சு. அதுக்கு அரசும் உதவியா இருக்கு. இவ்ளோ நடந்தும்கூட யாருமே விவசாயிகளை காப்பாத்த முன்வரல. அரசியல்வாதிகளும், பொதுமக்களும்கூட அவனை கைவிட்டுட்டாங்க. மற்ற பொருளையெல்லாம் கண்ணை மூடிகிட்டு வாங்குறவன், விவசாயப் பொருள்னு வந்துட்டா மட்டும், தான் சொல்ற விலைக்கு தந்தா மட்டும்தான் வாங்குவேங்கிறான். இயற்கையும் அவனை கைவிட்டுடுச்சு. இப்படி எல்லாமும் அவனைவிட்டு போயிட்டதாலதான், விவசாயிகளுக்காக குரல்கொடுக்க வேண்டியிருக்கு. விவசாயிகளோட இழப்பு விவசாயிகளுக்கு இல்ல, நமக்குத்தான். நாம விவசாயிகளைப் பார்த்து பாவம்ங்கிறோம். உண்மையில் பாவப்பட்ட ஜென்மங்கள், நாம்தான்!
‘‘சமூகப் பிரச்னையை எந்த மீடியத்தின் வழியாக சொன்னால், மிகத் தீவிரமாக மக்களைச் சென்றடையும் என நினைக்கிறீர்கள்?’’
“இதுல சந்தேகம் என்ன! காட்சி ஊடகம்னு சொல்லக்கூடிய திரைப்படம்தான். என்னோட ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ நாவல், சுமார் 50 ஆயிரம் புத்தகங்கள் வித்திருக்கு. தமிழ்ல ஒரு நாவல் அந்தளவுக்கு விக்கிறதுக்கு வாய்ப்பே இல்லைன்னு சொல்றாங்க. உண்மையில் அதற்கு மேலேயும் வித்திருக்கு. ஆனா, அதே நாவல் திரைப்படமானபோது முக்கால்வாசி மக்கள் பார்த்திருக்காங்க. அது வெறும் நாவலா இருந்திருந்தா, இலக்கியத்துல ஆர்வம் உள்ளவங்க மட்டும்தான் அதை வாசிச்சிருப்பாங்க. நாவல், காட்சி ஊடகமா மாறும்போதுதான் பெரும்பாலோனரை சென்று சேர்ந்திருக்கு.
இப்போ மக்கள் தியேட்டரைவிட தொலைக்காட்சி முன்னாடிதான் அதிகமான நேரத்தை செலவழிக்கிறாங்க. அதனால, விவசாயிகளோட பிரச்னைகளை அந்த ஊடகம் மூலமா கொண்டுபோய் சேர்க்கணும். விவசாயிகளோட துயரங்கள் கதைப்படமா வந்தா இன்னும் சிறப்பா இருக்கும். ஆனா, அதைச் செய்ய இங்கே யாருமில்ல!”
‘‘கலை கலைக்கானதா, அல்லது மக்களுக்கானதா? ஒரு படைப்பாளிக்கு சமூக அக்கறை அவசியம்தானா?’’
“கலை கலைக்கானதுன்னா அப்போ அதை ஒண்ணுமே செய்ய வேண்டியதில்ல. என்னைப் பொருத்தவரைக்கும் எல்லாமே மக்களுக்கானதுதான். கலை மட்டுமென்ன, எதுவாயிருந்தாலும் அது மக்களுக்கானதுதான். மக்களை சிந்திக்க வைக்கிறதுக்கு, மேம்படுத்துறதுக்கு, வழிகாட்டுறதுக்கு, கைத்தூக்கிவிடுறதுக்கு கலைதான் வேணும். சில நேரங்கள்ல தூங்கிக்கிட்டு இருக்குற சமூகத்தோட தலையில் கொட்டி விழிப்புணர்வை ஏற்படுத்துறதுக்கும் கலைதான் பயன்படும். எனவே படைப்பாளிக்கு சமூக அக்கறை அவசியம்!”
‘‘ ‘அஞ்சலை’, ‘நெடுஞ்சாலை’, ‘வந்தாரங்குடி’ போன்ற நாவல்களின் மூலம் தென்னாற்காடு மாவட்டத்தின் ஆன்மாவாக ஒலிக்கும் குரல் எழுத்தாளர் கண்மணி குணசேகரனுடையது. உங்களது எழுத்துதான் இலக்கியத்தின் பக்கம் அவரை இழுத்து வந்தது என்று குறிப்பிடுகிறாரே?’’
“தென்னாற்காடு மாவட்ட மக்களோட மொழி, வாழ்க்கைமுறை, செயல்பாடு, குணங்கள் என நிறைய விஷயங்கள் என் படைப்பில் தெரியறதுக்குக் காரணம், கவிஞர் பழமலய் எழுதிய ‘ஜனங்களின் கதை’ தொகுப்புதான். அது என் மக்களோட வாழ்க்கையை பதிவு செஞ்சிருந்தது. அந்தப் படைப்பை படிச்சவுடனே எனக்கு இலக்கியத்தின் மேல பெரிய ஆர்வம் வந்துடுச்சு. அந்தப் பாதிப்புலதான் ‘வெள்ளைமாடு’ என்கிற தொகுப்பை வெளியிடுறேன். அந்தப் படைப்பை படிச்சுட்டுதான் எழுத்தாளர் கண்மணி குணசேகரன் என்னைத் தொடர்பு கொண்டாரு. பிறகு, இந்தப் பயணத்தில் நான் வியக்கிற ஒரு எழுத்தாளராக கண்மணி மாறியிருக்காரு. நான் எப்படி பழமலய்யால ஈர்க்கப்பட்டேனோ அதேபோல என்னால அவர் ஈர்க்கப்பட்டிருப்பாருன்னு நினைக்கிறேன். அதன்பிறகு இன்னும் நிறைய இலக்கிய ஆளுமைகள் எல்லாம் தென்னாற்காடு மாவட்டத்துல உருவாயிருக்காங்க. அவங்க எல்லாம் என்னைப் பார்த்துதான் வந்தாங்கன்னு சொல்லிட முடியாது. ஆனா, நானும் சில வேலைகள் பண்ணியிருக்கிறேன் என்பது சந்தோஷமே!”
நேர்கானல் : கிராபியன் பிளாக்
மனம் இணையதளத்திலிருந்து,
No comments:
Post a Comment