Tuesday, 10 May 2016

புதிய தலைமுறை -கல்வி வார இதழில் மனதில் நின்ற ஆசிரியர்கள் குறித்த பதிவுகள்:


உள்ளேன் ஐயா:

சில்லென்ற சாரலாக மனதில் இருக்கிறது” 

மறக்கமுடியாத ஆசிரியர்கள் பற்றி தமிழ் சினிமா ஒளிப்பதிவாளர், இயக்குநர் தங்கர்பச்சான் நினைவலைகள்


கடலூர் மாவட்டம், பண்ருட்டுக்கு அருகிலுள்ள ஊர் பத்திரக்கோட்டை. முந்திரிக் காடுகளும் கடலை, துவரை, சோளப் பயிர்கள் செழித்த சிறு கிராமம். இங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில்தான் மூன்று வயதில் பெயர் சேர்த்துவிட்டார்கள். என் அண்ணனும் நானும் ஒரே வகுப்பில் படித்தோம். என்னைவிட அவருக்கு நாலு வயசு அதிகம். அப்பெல்லாம் கையால் காதைத் தொடச் சொல்வார்கள். நானும் அப்படி தொட்டுத்தான் பள்ளியில் சேர்க்கப்பட்டேன்.


என் நினைவில் நிற்கிற முதல் ஆசிரியர் சுப்ரமணியன். அவர்தான் எல்லா பாடங்களையும் எடுப்பார். எங்களுக்குச் சொந்தக்காரர். மாணவர்களுக்கு மிகவும் கண்டிப்பான ஆசிரியர். அகரமும் ஏபிசிடியும் அவர்தான் கற்றுக்கொடுத்தார்.  ‘அழகிபடத்தின் வெற்றிக்குப் பிறகு பத்திரக்கோட்டை மக்கள் சேர்ந்து எனக்கு பாராட்டு விழா எடுத்தார்கள். அந்த ஆசிரியரும் கலந்துகொண்டது மகிழ்ச்சியாக இருந்தது.
அவர்தான் எனக்கு விவசாயத்தை கற்றுக்கொடுத்தார். செடி, கொடிகள், உயிரினங்கள் பற்றிய அறிவை அவரிடமிருந்துதான் பெற்றோம். பள்ளிக்கு அருகிலேயே குளம் இருந்தது. அதனால் பள்ளி வளாகத்தில் தோட்டம் வளர்க்க வைத்தார். நாங்கள் நான்கு பேராக சேர்ந்து போய் தண்ணீர் எடுத்துவந்து செடிகளுக்கு ஊற்றுவோம். உழவு வேலைகள் செய்து விதைகளிட்டு காப்பாற்றும் பணிகள் செய்வோம். காய்கறிகளை அறுவடை செய்து பக்கத்து ஊர் சந்தையில் போய் ஆசிரியருடன் சேர்ந்து விற்றுவந்திருக்கிறோம்.


ஆசிரியர் குப்புசாமி, என் அப்பாவைப் போல நிறைய முடி வைத்திருப்பார். தெருக்கூத்து ஆடுவார். என்ன வேடமிடுவார் என்பது நினைவில் இல்லை. மானடிகுப்பம் என்ற ஊரில் இருந்து வருவார். சிறுபிராயத்தில் மாங்காய், முந்திரி, பலாப்பழம், பன நுங்கு என ருசித்துச் சாப்பிடும் பொருள்களை நண்பர்களுடன் சேர்ந்து திருடுவோம். அது திருட்டு என்பதைவிட விளையாட்டு. திருடுறது தப்பே இல்லடா என்று சொல்வார் அவர். எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். இதெல்லாம் நீங்க பெரிய ஆளானதும் நினைவுகளாக இருக்கும் என்பார். அவர் அன்று கூறிய வார்த்தை இன்று நனவாகிவிட்டது.  
நாங்கள்  துவரைத் தோட்டத்தில் இருக்கும்போது, அவரும் வந்துவிடுவார். மரவள்ளிக் கிழங்கை நெருப்பில் சுட்டு அவருக்குக் கொடுப்போம். அதனால் ஒன்றும் தப்பில்லடா என்று சொல்வார். குப்புசாமி ஆசிரியரால்தான் எனக்கு சினிமா அறிமுகமானது. பத்திரக்கோட்டையில் இருந்து 4 கி. மீ. நடந்து சென்று சென்னப்பநாயக்கன்பாளையம் ராஜா டாக்கீசில் படம் பார்த்துவிட்டு வருவோம். அவர் சொந்தக் காசில் எங்களுக்கு சினிமா காட்டுவார். அப்போது எங்களை பெஞ்சுல உட்காரவைப்பார். அந்த வயதில் அதுவொரு அற்புதம் அனுபவம். இன்று எத்தனையோ விமானங்களில் பயணம் செய்கிறேன். அந்த பெஞ்சில் உட்கார்ந்த படம் பார்த்த அனுபவத்திற்கு எதுவும் ஈடாகாது. சினிமா பார்க்கலாம், அது தப்பில்லை என்றவரும் அவர்தான். அந்த நாட்களை நினைத்தால் அடடாஎன்று சொல்லத் தோன்றுகிறது.
பத்திரக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில்தான் ஆறாம் வகுப்பு சேர்ந்தேன். அதே பள்ளியில் பெரிய அண்ணன் 10ம் வகுப்புப் படித்தார். சின்ன அண்ணனும் நானும் ஆறாம் வகுப்பு. அங்கே போனால் சில கேள்விகள் கேட்பார்கள் என்று தொடக்கப்பள்ளியில் சொல்லிக்கொடுத்திருந்தார்கள். வாட் ஈஸ் யுவர் நேம், மை நேம் ஈஸ்…. வாட் ஈஸ் யுவர் நேட்டிவ் பிளேஸ் என்று ஆங்கிலத்தில் கேட்டால் பதில் சொல்வதற்கு பயிற்சி அளித்தார்கள். எங்களுக்கு தினமும் அவற்றை மனப்பாடம் செய்வதுதான் வேலையாக இருந்தது. ஆனால் நடந்தது என்னவோ அதற்கு நேர்மாறாக.


தமிழாசிரியர் இளங்கோவன் வகுப்புக்கு வந்தார்உன் பெயர் என்ன, உன் சொந்த ஊர் எது, நீ என்னவாக விரும்புகிறாய் என்று தமிழில் கேட்டார். எங்களுக்கு பெரும் ஏமாற்றம். ஆங்கிலத்தில் பதிலளிக்க தயாராக இருந்தோம். அவருக்கு இங்கிலிஷ் தெரியாதோ என நினைத்தோம். ஒரு பையன் அவரிடமே,  உங்களுக்கு இங்கிலிஷ் தெரியாதா என்று கேட்டேவிட்டான். “இங்கிலிஷ்ல பேசுனா பெரிய ஆளுன்னு நெனப்பா. சொந்த மொழியிலதான் நீ நல்லா படிக்கணும். தமிழை முதல்ல தப்பில்லாம கத்துக்கங்க. தமிழே தெரியாம எப்படி இங்கிலிஷ் புரியும்என்று இளங்கோவன் கோபத்தில் பேசினார்.
எனக்கு தமிழை பிழையற கற்றுக்கொடுத்த மிகச்சிறந்த ஆசானாக இளங்கோவன் இருக்கிறார். செய்யுள்களை விளக்கமாகக் கூறி பாடம் நடத்துவார். அவர் விவசாயத்திலும் ஈடுபட்டார். அவருடைய தாக்கத்தால்தான் அழகி படத்தில் அவரைப்போல ஒரு கேரக்டர் வைத்திருப்பேன். பள்ளி விளையாட்டுத் திடலுக்கு அருகிலேயே அவருக்கு நிலம் இருந்தது. நாங்கள் பந்து அடித்தால் அவரது கடலை வயலில் போய் விழும். அவரது அம்மாவும் அப்பாவும் மாணவர்களை திரட்டிக்கொண்டு வருவார்கள்.


பாடம் நடத்தும் இடைவேளையில் பையன்களை அழைத்துப்போய் வயலுக்கு நீர் பாய்த்துவிட்டு வருவார். விவசாய வேலைகளை கற்றுத்தருவார். “நாமெல்லாம் விவசாயக் குடியில் பொறந்தவங்க. விவசாயம் செய்யறது நமக்குப் பெருமை. விவசாயின்னா திமிர் இருக்கணும்என்று சொல்வார்
கணக்கு ஆசிரியர் பண்ணரசன். பட்டிமன்றங்களில் பேசுவார். எதையும் கவிதையாகச் சொல்வார். வகுப்பில் நிறைய கவிதைகளை எடுத்துக்காட்டுவார். ஆனால் அவர் ஏழ்மையாக இருந்தார். ஒருமுறை என்னை அழைத்துப்போய் முதுகுப்புறம் இருந்தா கட்டியை காட்டி, ஆபரேசன் செய்யணும் பணம் இல்லை என்றார். எனக்கு கவலையாகப் போய்விட்டது. ஆசிரியர்கள் ஏன் பணத்துக்கு கஷ்டப்படவேண்டும் என்று யோசித்தேன். அப்ப ஆசிரியர்களுக்கு மிக் குறைவான சம்பளம் வழங்கப்பட்டுவந்தது.


ஓவிய ஆசிரியர் கிருஷ்ண மேனன். மாணவர்களுக்கு சட்டையில் சிறு ஓவியம் வரைந்துகொடுப்பார். அது சலவைக்குப் போட்டாலும் மறையாமல் இருக்கும். அதற்கு ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் கொடுப்போம். ஒவ்வொன்றையும் வரையச் சொல்லித் தருவார். ஓவியம்தான் அடிப்படை என்பார். பள்ளியில் படிக்கும்போது நான் எம்ஜிஆர் ரசிகனாக இருந்தேன். அவர் எம்ஜிஆர் பற்றிய நிறைய தகவல்களைக் கூறுவார்.
குமாரசாமி ஆங்கிலப் பாடங்கள் எடுத்தார். எங்களுக்குப் புரிகிறதா என்பதைவிட வகுப்பில் ஆங்கிலத்தில்தான் பேசுவார். மிகத் தெளிவாகப் பேசுவார். பள்ளியில் அவர் மிலிட்டரி மாதிரி நடந்துகொள்வார். பதினோராம் வகுப்பு முடித்து சான்றிதழ்கள் பெறும்போது அவர் கூறியது மறக்கவில்லை. “சுறுசுறுப்பும் இந்த பிடிவாதமும் இருந்தால் நீ ரொம்ப பெரிய ஆளாக வருவாய். எந்த காலத்திலும் படிப்பை கைவிட்டுவிடாதேஎன்றார். வெளியூர் போனால்தான் உருப்படமுடியும் என்று சொன்னவரும் அவர்தான்.


சென்னை அண்ணா நகர் கந்தசாமி நாயுடு கல்லூரியில் பியூசி சேர்ந்தேன். அங்கே ஆசிரியராக இருந்தவர் பிரபல இயக்குநர் .எஸ். பிரகாசம். கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருப்பேன். அவருடைய வகுப்பு என்றால், முதல் வரிசையில் வந்து உட்கார்ந்துவிடுவேன். நிறைய சினிமா கதைகள் சொல்வார். அந்தமான் காதலி, கண்ணன் என் காதலன், எச்சில் இரவுகள் என அவர் கதை எழுதிய, இயக்கிய படங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வார். அவர் பச்சையப்பன் கல்லூரிக்கு பணி மாற்றலாகிச் சென்றார். நானும் அங்கு போய் பிஏ வரலாறு சேர்ந்துகொண்டேன்.


கல்லூரிக்குச் சென்ற நாட்களைவிட போராட்டம் நடத்திய நாட்கள்தான் அதிகமாக இருக்கும். எந்தப் பிரச்சினை நடந்தாலும் நான்தான் முதல் ஆளா நிற்பேன்.  அம்பத்தூரில் இருந்த அண்ணன் வீட்டில் இருந்து வந்துகொண்டிருப்பேன். மாணவர்களுக்கு எம்ஜிஆர் 15 ரூபாய் பஸ் பாஸ் கொடுத்திருந்தார். நூலகம் சென்று படிக்கவேண்டும் என்பதற்காக வழங்கப்பட்ட சலுகை அது. ஆனால் மாணவர்கள் அதை வைத்துக்கொண்டு சினிமா பார்த்து ஊர் சுற்றுவார்கள். பேண்டின் கீழே ஜிப் வைத்து தைத்திருப்பார்கள். பேண்ட் பாக்கெட்டில் கட்டாயம் சீப்பு இருக்கவேண்டும். அதுதான் அப்போதைய பேஷன்.


இதெல்லாம் சரிப்பட்டு வராது என்று அரசு திரைப்படக் கல்லூரியில். அண்ணன் விருப்பத்தால் பிலிம் பிராசசிங் படிக்க முதலில் விண்ணப்பித்தேன். கிடைக்கவில்லை. அடுத்த ஆண்டில் ஒளிப்பதிவு கிடைத்தது. . நீலகண்டன் கல்லூரி முதல்வராக இருந்தார். .எஸ்..சாமி, டி.ஆர். ரகுநாத் ஆகியோர் இருந்தார்கள். முதல் ஆண்டில் இயக்கம், திரைக்கதை, எடிட்டிங், பிலிம் பிராசசிங் எல்லாம் படித்தோம். இரண்டாம் ஆண்டில்தான் ஒளிப்பதிவை முழுமையாக படிக்க முடிந்தது.


.எஸ்..சாமி, அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி ஆகிய மூன்று பேருடனும் சினிமாவில் சேர்ந்து பணியாற்றியவர். சினிமாவிலேயே பணத்தை விட்டவர். எங்களுடன் 5கே பேருந்தில் கல்லூரிக்கு வருவார். அந்த ஆண்டுகளில் ராஜிவ்மேனன், ரவியாதவ், நாசர், அர்ச்சனா, ரகுவரன், ஆபாவாணன், ஆர்.கே. செல்வமணி, ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்ட பலரும் படித்தார்கள். அன்று திரைப்படக்கல்லூரி 410 ஏக்கரில் இருந்தது. இன்று 12 ஏக்கரில் சுருங்கிக்கிடக்கிறது.


கல்லூரிப் படிப்பின் ஆரம்ப நாட்களில் உலகப் புகழ்பெற்ற படங்களைப் பார்த்தே ஒளிப்பதிவைக் கற்று வந்தேன். இறுதி ஆண்டில் ஞானசேகரன் வந்தார். அவர்தான் பிலிம் என்றால் என்ன, ஒளி என்றால் என்ன, பிலிமில் காட்சி எப்படி பதிவாகிறது, லென்ஸ் என ஒளிப்பதிவின் அடிப்படையை கற்றுக்கொடுத்தார். அடுத்து நான் கல்லூரியில் இருந்து வெளியேறும் காலகட்டத்தில் ஜி.பி.கிருஷ்ணா வந்திருந்தார். முதலாண்டு மாணவர்களுக்கு பாடம் எடுக்கும்போது நானும் போய் வகுப்பில் உட்கார்ந்துவிட்டு வருவேன்


கல்லூரியில் படிக்கும்போது சபாபதி, விஸ்வம் நடராஜ், பிறகு ஜி. பி. கிருஷ்ணா ஆகியோரிடம் ஒளிப்பதிவுக் கலையின் நுட்பங்களை அனுபவத்தின் வாயிலாக கற்றேன். பால்யம் தொடங்கி இன்றைய நிலை வரை நினைவுகளை மீட்டிப் பார்த்தால் ஆசிரியர்கள் வரிசையாக வந்துபோகிறார்கள். அந்தக் காலம் மழை பெய்த மாலையில் அடிக்கும் சில்லென்ற சாரலாக மனதில் இருக்கிறது. பள்ளிக்காலம்தான் என் எழுத்தில், சிறுகதையில், நினைவுகளில், திரைப்படங்களில் நிறைந்துகிடக்கிறது.
எனக்கு பள்ளியில் ஏற்பட்ட அனுபவங்கள் என் மகன்களுக்குக் கிடைக்கவில்லை. ஏழை, பணக்கார குழந்தைகள் ஒரே பள்ளியில் படித்தார்கள். இன்று ஏழைக்கு ஒரு பள்ளி. பணக்காரர்களுக்கு ஒரு பள்ளி என்று பிரிந்துகிடக்கிறது. எல்லோரும் வேறுபாடில்லாமல் ஒரே பள்ளியில் படிக்கும் காலம் வரவேண்டும்.


சுந்தரபுத்தன்

No comments:

Post a Comment