"சொல்லத் தோணுது' நூல் வெளியீட்டு விழா"
'தி இந்து' தமிழ் நாளிதழில் தங்கர் பச்சான் எழுதி தொடராக வந்த 'சொல்லத் தோணுது' நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. ஐ.ஏ.எஸ் அதிகாரி உ.சாகயம் நூலை வெளியிட முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் கல்வியாளர் பழனி, ஜி.பெரியசாமி, வேளாண்மை அறிவியலாளர் ப.வெங்கடாசலம், பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தங்கர் பச்சான் எழுதி ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் தொடராக வந்த ‘சொல்லத் தோணுது’ நூல் கிழக்குப் பதிப்பகம் சார்பில் சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது. ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம் நூலை வெளியிட முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு பெற்றுக்கொண்டார். விழாவில் கல்வியாளர் பழனி ஜி.பெரியசாமி, வேளாண்மை அறிவியலாளர் ப.வெங்க டாசலம், ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் ஆசிரியர் கே.அசோகன், கிழக்குப் பதிப்பகம் பத்ரி சேஷாத்ரி, ‘எஸ்டேட்’ சண்முகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கே.சந்துரு பேசியதாவது:
எட்டு கோடி மக்கள் தொகை கொண்ட நம் மாநிலத்தில் தரமான புத்தகங்கள் 2,000 பிரதிகள் வரை விற்பதே பெரிய விஷயம். அதே நேரத்தில் நம்மில் பாதி மக்கள் தொகையைக் கொண்ட கேரளாவில் 50,000 பிரதிகளில் இருந்து 2 லட்சம் பிரதிகள் வரை விற்பனையாகிறது. தமிழகத்தில் வாசிப்பு மிகவும் குறைந்துவிட்டது.
நல்ல நூல்களை வாங்கி சேமிக்கவும், மக்களை பயன்படுத்தச் செய்வதும் அரசின் கடமை. ஆனால், இங்கே நம் தமிழ்நாட்டு நூலகத் துறை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நோயாளியைப் போல இருக்கிறது. மக்களிடம் இருந்து பெறப்பட்ட வரியை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக நூலக ஆணையம் உருவாக்கப்பட்டது. ஆனால் நூலகத்துறை கட்டிட அரங்குகளின் அறைகள் ஒரு நிகழ்ச்சியைக்கூட நடத்த முடியாமல் பூட்டப்பட்டிருக்கிறது. தேர்தலில் போட்டியிடுபவர்கள் நூலகப் பிரச்சினைகள் குறித்து மக்களிடம் தெளிவாக எடுத்துவைக்க வேண்டும். அது பற்றி உறுதி அளிப்பவர்களுக்கு மட்டுமே மக்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஐ.ஏ.எஸ் அதிகாரி உ.சகாயம் பேசும்போது, “கிராமத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர் தங்கர் பச்சான். இந்த மாநகரின் தாக்கமோ, ஆங்கிலத்தின் தாக்கமோ, திரையின் தாக்கமோ இல்லாமல் ஊரையும், பேரையும், தன்னையும், மண்ணையும், மரபையும், மொழியையும் நினைத்து இந்த புத்தகத்தில் தன் எண்ணத்தை வெளிப்படுத்தியிருப்பது வியப்பில் ஆழ்த்துகிறது. நூலில் மது, விவசாயப் பிரச்சினை உள்ளிட்ட பல விஷயங்களை பேசியிருக்கிறார். இந்த சமூகத்தில் பதவிக்கு ஆசைப்படு பவர்கள் எல்லோரும் வாசிக்க வேண்டிய புத்தகம் இது” என்றார்.
தங்கர் பச்சான் பேசும்போது, “இங்கே மக்களை வைத்து மிகப்பெரிய சூதாட்டம் நடந்து கொண்டி ருக்கிறது. தேர்தல் முடிந்தால் எல்லாம் சரியாகிவிடுமா என்றால் இல்லை. கடந்த 50 ஆண்டுகளாக தமிழர்களை அழித்து ஒழித்துவிட்டார்கள். கஷ்டமே இல்லாத தொழிலாக இன்றைக்கு அரசியல் இருக்கிறது.
‘தி இந்து’ நாளிதழைத் தவிர வேறு எந்த நாளிதழும் இந்த அரசியல், சமூகக் கட்டுரைகளை தொடராக கொண்டு வர முன்வந்திருக்க மாட்டார்கள். தேர்தல் நேரத்தில் இது வெளிவந்தால் சரியாக இருக்கும் என்றே வெளியிடப்படுகிறது.கோவை, திருப்பூர் பகுதியைச் சேர்ந்த சிலர் இது ‘தி இந்து’ நாளிதழில் தொடராக வெளிவந்தபோது படித்துவிட்டு, ‘மகன், மகள் திருமண விழாவில் கொடுக்க வேண்டும். புத்தகமானதும் 2,500 பிரதிகள் வேண்டும் என கேட்டனர். ஒவ்வொரு திருமணங்களிலும் இந்நூல் போய் சேர வேண்டும். இது மக்களுக்காக எழுதப்பட்டது’’ என்றார்