Wednesday, 30 September 2015

தங்கர் பச்சான் கதைகள் ஒரு மறுவாசிப்பு

கண.குறிஞ்சி
 

“தங்கர் பச்சானைப் போன்ற ஒரு திறமையான திரைப்பட ஒளிப்பதிவாளர் கதை எழுதுபவராகவும் அமைந்திருப்பது பட உலகத்திற்கு ரெட்டை இலாபம். ஒரு சினிமா காமிராமேன் கதை எழுதுபவராகவும் அமைந்தது தமிழுக்கு யோகம் என்று சொல்லத் தோன்றுகிறது என்று இருபத்திமூன்று  ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த வெள்ளைமாடு என்னும் தங்கர் பச்சானின்  சிறுகதைத் தொகுப்பிற்கு கொடுத்த முன்னுரையில் கி.இராஜநாராயணன் குறிப்பிட்டார். முதல் கதை எழுதிய முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு இருபது கதைகளை உள்ளடக்கிய தங்கர் பச்சான் சிறுகதைகள் தற்போது உயிர்மை பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. தமிழில் குறிப்பிடத்தக்க எழுத்தாளராக விளங்கும் ஒருவரது கதைகளே இருபது ஆண்டுகளுக்குப் பிறகு பதிப்பிக்கப்படுவது தமிழ்ச் சூழலின் அவலம் என்றே ‘சொல்லத் தோணுது.


“(இத்தொகுப்பில்) எந்தக் கதையும் உங்களை ஏமாற்றாது. ஒவ்வொன்றுக்குள்ளும் ஒரு செய்தியும், வாழ்வு குறித்த ஒரு அனுபவமும்  தந்து உங்களைக் கடத்திச் செல்லும் என்பதை உணர்வீர்கள்...பல கதைகள் சமூகத்தின் மீது எனக்கிருந்த கோபத்தில் உருவாக்கப்பட்டவை என நினைத்தாலும், ஒவ்வொரு மனிதனின் ஆழ்மனதோடு உறவாடுகிற சிறந்த படைப்புக்கள் இத்தொகுப்பில் உள்ளன. என்ற உத்தரவாதத்தைத் தனது முன்னுரையிலேயே கதாசிரியர்  தந்துவிடுகிறார்.

இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் “வெள்ளைமாடு, “உள்ளும் புறமும் ஆகிய கதைகளைக் கி.ரா.வும், “பிணைப்பு சிறுகதையை நாஞ்சில் நாடனும் பாராட்டிய பதிவுகள் முன்பே இடம்பெற்றுள்ளன. மறுபதிப்பு, பரிசோதனை, கல்வெட்டு, குடிமுந்திரி, உறங்க மறுக்கும் மனசாட்சி, இன்னும் மறையவில்லை அந்தக் காலடிச் சுவடு எனும் ஆறு சிறுகதைகள் நனவோடை முறையில் (stream of consciousness)  எழுதப்பட்டுள்ளன.

எஞ்சியுள்ள 14 கதைகள் கதைசொல்லிப் பாணியில் பதிவாகியுள்ளன. இத்தகைய பாணியிலான “சொல்லாளர்கள் தமிழுக்கு மிகவும் தேவை என்பதைக் கி.ரா. தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்.

ஒரு படைப்பின் திறப்பே அந்தப் படைப்பின் சுவையை, ஈர்ப்பைத் தீர்மானிப்பதாக அமைந்து விடுகிறது. தங்கர் பச்சானின் ‘உள்ளும் புறமும் கதையில் வரும் “சக்கரைக்கும் இப்படி ஒரு நிலை வரும் என்று யார்தான் நினைத்துப் பார்த்திருப்பார்கள் என்பதாகட்டும், உறங்க மறுக்கும் மனசாட்சி கதையில் வரும் “காலம் முழுக்க இந்த நெருடல் இருந்துகொண்டு தான் இருக்குமா?என்பதாகட்டும், “கருமேகங்கள் ஏன் கலைந்து சென்றன? கதையில் வரும்  “கடவுள் யாருக்கு வேண்டும்? இருக்கிற கடவுளும், இனிமேல் உருவாகப்போகிற கடவுளும் என்னதான் செய்துகொண்டிருக்கிறார்கள்? என்பதாகட்டும் வாசகனிடம் பெரும் எதிர்பார்ப்பைத் தூண்டிப் படைப்பினுள் கரைய வைத்துவிடுகிறது.

இதிலுள்ள இருபது கதைகளில் எட்டுக் கதைகளில் சாவு பற்றிய சித்தரிப்புக் காணக் கிடக்கிறது. அதில் மூன்று கதைகளில் தற்கொலையும், இரண்டு கதைகளில் கொலையும், இரண்டு கதைகளில் நோய் காரணமான மரணமும், பிறிதொன்றில் மரணம் பற்றிய சித்தரிப்புக்கள் பதிவாகியுள்ளன. பாத்திரங்களின் வழியான அனுபவத்தில், தற்கொலைச் சாவை நிம்மதி தரும் ஒரு வடிகாலாக அவர்கள் காண்கிறார்கள். சாவே இறுதித் தீர்வாகவும் அவர்களுக்கு அமைந்துவிடுகிறது. அதேசமயத்தில் கொலை என்பதன் கொடூரமும் அதன் துயரங்களும் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. சாவு என்பது ஆட்டிப்படைக்கும் ஓர் ஆற்றலாகக் கதாசிரியரிடம் உறைந்துபோயிருக்கிறதோ என்ற ஐயம் ஒரு கணம் வாசகனிடம் தோன்றுகிறது. ஆனால் “கருமேகங்கள் ஏன் கலைந்து சென்றன? என்னும் கதை தற்கொலை என்பது ஒரு தீர்வல்ல என்பதோடு, அது தவறான, முட்டாள்தனமான தீர்வு என்பதைத் தவறாமல் சுட்டிக் காட்டுகிறது.

சாவு என்பதைத் தனது காதலனாகவும், அக்காதலனின் வருகைக்காகத் தான் எப்படி அலங்கரித்துக் கொண்டு ஆவலோடு காத்திருப்பதாகவும் சித்தரிக்கும் எமிலி டிக்கன்சனின் கவிதை இந்தச் சமயத்தில் நமக்குள் தோன்றுவதைத் தவிர்க்கமுடியவில்லை.

தங்கர் பச்சானின் கதைகளில் வரும் பெண் பாத்திரங்கள் கடும் உழைப்பாளிகள், வாழ்வின் கொடுங்கரங்களால் நசுக்கப்பட்டு, கனவுகள் பொசுக்கப்பட்டு, அவலவடிவங்களாக நடமாடுகின்றனர். விசாலாட்சி (பெருவழியில் ஒரு கூத்து மேடை), தனலட்சுமி (கல்வெட்டு), ஜெயந்தி (அம்மாவின் கைபேசி) ஆகியோர் வாழ்வில் என்ன சுகத்தைக் கண்டுவிட்டார்கள்? விரும்பியவனைத் திருமணம் செய்ய முடியாமல், அல்லது தான் விரும்பாதவனைத் திருமணம் செய்துகொண்டு, இவர்கள் படும் துன்பம் நம்மைப் பாடாய்ப்படுத்துகிறது. மூச்சுவிடும் பிணங்களா நம் பெண்கள்? என மனம் ஆயாசப்படுகிறது. கதாசிரியர் தன் பெண் பாத்திரங்களின் மீது நியாயமாக நடந்துகொள்ளவில்லையோ என மனம் ஒருகணம் அல்லாடுகிறது. இவர் ஒரு கல்மனசுக்காரர் எனக் கொஞ்சம் கோபம் கூட வரலாம். ஆனால் சமூகம் தான் நம் பெண்களின் கனவுகளை நிர்மூலமாக்குகிறது, அவர்களது ஆசைகளை, இலட்சியங்களைப் பொய்த்துப்போக வைக்கிறது என்பதைப் பூடகமாக இக்கதைகள் இறுதியில் வெளிப்படுத்துகின்றன.

இக்கதைகளில் தூக்கலாகக் காணப்படும் மற்றொரு கூறு, இயற்கை மீது இந்தப் படைப்பாளிக்கு இருக்கும் நேசமும் கரிசனமும். வோர்ட்ஸ்வொர்த்தை ‘இயற்கையின் பூசாரி என ஆங்கில விமர்சகர்கள் கொண்டாடுகின்றனர். ‘நான் வளர்த்த மாடுகள், ஆடுகள், பறவைகள் இவற்றிற்குத் தனது சமர்ப்பணத்தை – படையலை- பதிவுசெய்யும் தங்கர் பச்சான் தனது மண்ணின் வாசத்தைத் தனது படைப்புக்களில் அடர்த்தியாகப் பதிந்திருக்கிறார். தோப்பை அழித்துக் குடியிருபுக்களாக்கியதையும், நகர்மயத்தின் அழிம்புகளையும்,  இவரது பேனா கோபத்தோடு சாடியுள்ள அதேவேளை, வாலாட்டிக் குருவியின் சத்தமும், கவுதாரிகளின் குயிலோசையும், கருவந்தோப்புக் குயிலோசையும், வீடு இடிந்தாலும் அதிலுள்ள அணில் குஞ்சுகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற தவிப்பும், இயற்கை நம் இரண்டாம் தாய் எனும் தாயன்பும் நேசத்தோடும் உயிர்ப்போடும் பேசப்படுகிறது. எழுத்தில் மட்டுமல்லாமல், ‘தானே புயல் தனது தாய் மண்ணைக் குரூரமாகச் சிதைத்த பொழுது, மடிதற்று முன்நின்றவர் தங்கர் பச்சான் எனபதை நாடறியும், நல்லோர் அறிவர்.

நமது சமூகம், சாதியச் சமூகம். நாம் விரும்பாவிட்டாலும்  சாதி நம்முள் ஊறி நிற்கிறது. அனிச்சை மொழியாக அது வெளிப்படவும் செய்கிறது. கதாசிரியர் இதுகுறித்துக் கவனமாக இருக்கிறார் என்பது படைப்பின் வழி தெரிகிறது. “வண்ணார் ஆறுமுகம் பார்த்துக்கொண்டே இருந்தார் (பக்.123) எனவும் “பரியாரி பெருமாள் தான் என் ரசனையை முடிவுசெய்தார் எனவும் வரும் வாசகங்கள்   ஒப்பீட்டளவில் பின்தங்கிய சாதிகளைச் சார்ந்தவர்களை அவர்களுக்குரிய மரியாதையைக் கொடுத்துப் பதிவு செய்யும் நேர்மை படைப்பாளியிடம் இருப்பது பாராட்டத்தக்கது. இருப்பினும் ஓரிடத்தில் (பக்.213) சலவை செய்யும் குழந்தைவேலு இவரைச் சறுக்கி விழச் செய்வதையும் காணமுடிகிறது. அதேவேளையில் தலித்துக்களின் அறச்சீற்றத்தையும், ஆற்றொணா வெறுப்பையும் தங்கர் அருமையாகப் பதிவுசெய்திருக்கிறார்.

“ஆமா, சாமியாம் பெரிய சாமி. எம் மசுரு சாமி. இத்தினி வருசமா சீனம் பறையன் காலத்துலேயிருந்து, தாத்தனுக்குத்  தாத்தனா இந்த உசுரு ஒன்னைத்தவிர எல்லாத்தையும் கொடுத்து ஒழைக்கிறோமே, இந்த சாமி என்னடா செயஞ்சிது. ஆயிரம் அய்நூரையும் குடுத்திட்டு இப்படி நம்மள  கொத்தடிமையா வச்சிருக்கானுவளே இவனுள, இந்த மாரியாத்தா கேட்டா என்ன? (பக்.159) என்னும் மலையானின் கடுங்கோபம் நியாயமானது எனபதை யார் மறுக்க முடியும்?

அதேபோல் கழிவும் சகதியும் நிறைந்த கோயில் கிணற்றைத் தூர் வாரும்போது, தனது மூத்திரத்தைக் கிணற்றுக்குள் பெய்யும் ஒரு தலித்தின் குரல் ஆத்திரத்தோடு கேட்கிறது.

“செவக்கொழுந்து, இதாண்டா நாம செய்யிற வேல. இந்த தூருவார்ற வேலைய இவனுவ செய்யமாட்டானுவளாம். காலங்காலமா நாமதான் செய்யணுமின்னு என்ன எழுதியா வெச்சிருக்கு. சனாதிபதியாவே நம்ம ஆளு வந்தாச்சு. நம்மளப் புடிச்ச சனியன் உடவே மாட்டேங்குதே. தீர்த்தத்தோடு தீர்த்தமா சேர்த்துக் குடிக்கட்டும்எனும் உழைப்பாளியின் வெறுப்பை நாம் புறந்தள்ளிவிட முடியாது.

இப்படி ஏழை எளிய உழவர்களையும், மண்ணின் மைந்தர்களையும் காட்சிப் படுத்துவதோடு சில கதைகள் எழுத்தாளர்களையும் பாத்திரங்களாகக் கொண்டிருக்கின்றன. தவிரவும் எதிர்நாயகன் (anti-hero) என்ற வகையினத்தில், சக்கரையும் (உள்ளும் புறமும்) பிரசாத்தும் (அம்மாவின் கைப்பேசி) சித்தரிக்கப்படுகிறார்கள். மனிதன் ஒட்டுமொத்தமாகக் கொடியவனாக இருந்துவிட முடியாது. மனச்சான்றின் குரல் தவிர்க்க முடியாமல் அவனுள்ளும் உரத்துக் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது என்பதை இப்பாத்திரங்கள் பறைசாற்றுகின்றன.


கதைகள் எழுதபட்ட ஆண்டுகள் குறிப்பிடப்படாததால் இருபதாண்டுக் காலவெளியில் படைப்பாளியின் பரிணாமத்தைக் கணிக்க முடியாமலிருக்கிறது. சில கதைகளின் இறுதிப் பகுதியில் ‘குறிப்பு எனப் போட்டிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். (இசைக்காத இசைத்தட்டு, கருமேகங்கள் ஏன் கலைந்து சென்றன?) கொய்யாப் பழத்தின் வாசனையும், முந்திரிப் பருப்பின் தித்திப்பும், கம்பும் கேழ்வரகும் கலந்தாக்கிய  கூழின் ருசியும், நம் தமிழ்ச் சமூகத்தின் நினைவிலி மனத்தில் உறைந்திருக்கும் வரையும், மண்-மரம்-மாடு-பறவைகளின் மீதான நேசமும் தோழமையும் தொடரும் வரையும் தங்கர்பச்சானின் கதைகளுக்கு மவுசு இருக்கும்; செலாவணி மதிப்பும் இருக்கும்.

No comments:

Post a Comment