Wednesday, 30 September 2015

தங்கர் பச்சான் கதைகள் ஒரு மறுவாசிப்பு

கண.குறிஞ்சி
 

“தங்கர் பச்சானைப் போன்ற ஒரு திறமையான திரைப்பட ஒளிப்பதிவாளர் கதை எழுதுபவராகவும் அமைந்திருப்பது பட உலகத்திற்கு ரெட்டை இலாபம். ஒரு சினிமா காமிராமேன் கதை எழுதுபவராகவும் அமைந்தது தமிழுக்கு யோகம் என்று சொல்லத் தோன்றுகிறது என்று இருபத்திமூன்று  ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த வெள்ளைமாடு என்னும் தங்கர் பச்சானின்  சிறுகதைத் தொகுப்பிற்கு கொடுத்த முன்னுரையில் கி.இராஜநாராயணன் குறிப்பிட்டார். முதல் கதை எழுதிய முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு இருபது கதைகளை உள்ளடக்கிய தங்கர் பச்சான் சிறுகதைகள் தற்போது உயிர்மை பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. தமிழில் குறிப்பிடத்தக்க எழுத்தாளராக விளங்கும் ஒருவரது கதைகளே இருபது ஆண்டுகளுக்குப் பிறகு பதிப்பிக்கப்படுவது தமிழ்ச் சூழலின் அவலம் என்றே ‘சொல்லத் தோணுது.


“(இத்தொகுப்பில்) எந்தக் கதையும் உங்களை ஏமாற்றாது. ஒவ்வொன்றுக்குள்ளும் ஒரு செய்தியும், வாழ்வு குறித்த ஒரு அனுபவமும்  தந்து உங்களைக் கடத்திச் செல்லும் என்பதை உணர்வீர்கள்...பல கதைகள் சமூகத்தின் மீது எனக்கிருந்த கோபத்தில் உருவாக்கப்பட்டவை என நினைத்தாலும், ஒவ்வொரு மனிதனின் ஆழ்மனதோடு உறவாடுகிற சிறந்த படைப்புக்கள் இத்தொகுப்பில் உள்ளன. என்ற உத்தரவாதத்தைத் தனது முன்னுரையிலேயே கதாசிரியர்  தந்துவிடுகிறார்.

இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் “வெள்ளைமாடு, “உள்ளும் புறமும் ஆகிய கதைகளைக் கி.ரா.வும், “பிணைப்பு சிறுகதையை நாஞ்சில் நாடனும் பாராட்டிய பதிவுகள் முன்பே இடம்பெற்றுள்ளன. மறுபதிப்பு, பரிசோதனை, கல்வெட்டு, குடிமுந்திரி, உறங்க மறுக்கும் மனசாட்சி, இன்னும் மறையவில்லை அந்தக் காலடிச் சுவடு எனும் ஆறு சிறுகதைகள் நனவோடை முறையில் (stream of consciousness)  எழுதப்பட்டுள்ளன.

எஞ்சியுள்ள 14 கதைகள் கதைசொல்லிப் பாணியில் பதிவாகியுள்ளன. இத்தகைய பாணியிலான “சொல்லாளர்கள் தமிழுக்கு மிகவும் தேவை என்பதைக் கி.ரா. தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்.

ஒரு படைப்பின் திறப்பே அந்தப் படைப்பின் சுவையை, ஈர்ப்பைத் தீர்மானிப்பதாக அமைந்து விடுகிறது. தங்கர் பச்சானின் ‘உள்ளும் புறமும் கதையில் வரும் “சக்கரைக்கும் இப்படி ஒரு நிலை வரும் என்று யார்தான் நினைத்துப் பார்த்திருப்பார்கள் என்பதாகட்டும், உறங்க மறுக்கும் மனசாட்சி கதையில் வரும் “காலம் முழுக்க இந்த நெருடல் இருந்துகொண்டு தான் இருக்குமா?என்பதாகட்டும், “கருமேகங்கள் ஏன் கலைந்து சென்றன? கதையில் வரும்  “கடவுள் யாருக்கு வேண்டும்? இருக்கிற கடவுளும், இனிமேல் உருவாகப்போகிற கடவுளும் என்னதான் செய்துகொண்டிருக்கிறார்கள்? என்பதாகட்டும் வாசகனிடம் பெரும் எதிர்பார்ப்பைத் தூண்டிப் படைப்பினுள் கரைய வைத்துவிடுகிறது.

இதிலுள்ள இருபது கதைகளில் எட்டுக் கதைகளில் சாவு பற்றிய சித்தரிப்புக் காணக் கிடக்கிறது. அதில் மூன்று கதைகளில் தற்கொலையும், இரண்டு கதைகளில் கொலையும், இரண்டு கதைகளில் நோய் காரணமான மரணமும், பிறிதொன்றில் மரணம் பற்றிய சித்தரிப்புக்கள் பதிவாகியுள்ளன. பாத்திரங்களின் வழியான அனுபவத்தில், தற்கொலைச் சாவை நிம்மதி தரும் ஒரு வடிகாலாக அவர்கள் காண்கிறார்கள். சாவே இறுதித் தீர்வாகவும் அவர்களுக்கு அமைந்துவிடுகிறது. அதேசமயத்தில் கொலை என்பதன் கொடூரமும் அதன் துயரங்களும் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. சாவு என்பது ஆட்டிப்படைக்கும் ஓர் ஆற்றலாகக் கதாசிரியரிடம் உறைந்துபோயிருக்கிறதோ என்ற ஐயம் ஒரு கணம் வாசகனிடம் தோன்றுகிறது. ஆனால் “கருமேகங்கள் ஏன் கலைந்து சென்றன? என்னும் கதை தற்கொலை என்பது ஒரு தீர்வல்ல என்பதோடு, அது தவறான, முட்டாள்தனமான தீர்வு என்பதைத் தவறாமல் சுட்டிக் காட்டுகிறது.

சாவு என்பதைத் தனது காதலனாகவும், அக்காதலனின் வருகைக்காகத் தான் எப்படி அலங்கரித்துக் கொண்டு ஆவலோடு காத்திருப்பதாகவும் சித்தரிக்கும் எமிலி டிக்கன்சனின் கவிதை இந்தச் சமயத்தில் நமக்குள் தோன்றுவதைத் தவிர்க்கமுடியவில்லை.

தங்கர் பச்சானின் கதைகளில் வரும் பெண் பாத்திரங்கள் கடும் உழைப்பாளிகள், வாழ்வின் கொடுங்கரங்களால் நசுக்கப்பட்டு, கனவுகள் பொசுக்கப்பட்டு, அவலவடிவங்களாக நடமாடுகின்றனர். விசாலாட்சி (பெருவழியில் ஒரு கூத்து மேடை), தனலட்சுமி (கல்வெட்டு), ஜெயந்தி (அம்மாவின் கைபேசி) ஆகியோர் வாழ்வில் என்ன சுகத்தைக் கண்டுவிட்டார்கள்? விரும்பியவனைத் திருமணம் செய்ய முடியாமல், அல்லது தான் விரும்பாதவனைத் திருமணம் செய்துகொண்டு, இவர்கள் படும் துன்பம் நம்மைப் பாடாய்ப்படுத்துகிறது. மூச்சுவிடும் பிணங்களா நம் பெண்கள்? என மனம் ஆயாசப்படுகிறது. கதாசிரியர் தன் பெண் பாத்திரங்களின் மீது நியாயமாக நடந்துகொள்ளவில்லையோ என மனம் ஒருகணம் அல்லாடுகிறது. இவர் ஒரு கல்மனசுக்காரர் எனக் கொஞ்சம் கோபம் கூட வரலாம். ஆனால் சமூகம் தான் நம் பெண்களின் கனவுகளை நிர்மூலமாக்குகிறது, அவர்களது ஆசைகளை, இலட்சியங்களைப் பொய்த்துப்போக வைக்கிறது என்பதைப் பூடகமாக இக்கதைகள் இறுதியில் வெளிப்படுத்துகின்றன.

இக்கதைகளில் தூக்கலாகக் காணப்படும் மற்றொரு கூறு, இயற்கை மீது இந்தப் படைப்பாளிக்கு இருக்கும் நேசமும் கரிசனமும். வோர்ட்ஸ்வொர்த்தை ‘இயற்கையின் பூசாரி என ஆங்கில விமர்சகர்கள் கொண்டாடுகின்றனர். ‘நான் வளர்த்த மாடுகள், ஆடுகள், பறவைகள் இவற்றிற்குத் தனது சமர்ப்பணத்தை – படையலை- பதிவுசெய்யும் தங்கர் பச்சான் தனது மண்ணின் வாசத்தைத் தனது படைப்புக்களில் அடர்த்தியாகப் பதிந்திருக்கிறார். தோப்பை அழித்துக் குடியிருபுக்களாக்கியதையும், நகர்மயத்தின் அழிம்புகளையும்,  இவரது பேனா கோபத்தோடு சாடியுள்ள அதேவேளை, வாலாட்டிக் குருவியின் சத்தமும், கவுதாரிகளின் குயிலோசையும், கருவந்தோப்புக் குயிலோசையும், வீடு இடிந்தாலும் அதிலுள்ள அணில் குஞ்சுகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற தவிப்பும், இயற்கை நம் இரண்டாம் தாய் எனும் தாயன்பும் நேசத்தோடும் உயிர்ப்போடும் பேசப்படுகிறது. எழுத்தில் மட்டுமல்லாமல், ‘தானே புயல் தனது தாய் மண்ணைக் குரூரமாகச் சிதைத்த பொழுது, மடிதற்று முன்நின்றவர் தங்கர் பச்சான் எனபதை நாடறியும், நல்லோர் அறிவர்.

நமது சமூகம், சாதியச் சமூகம். நாம் விரும்பாவிட்டாலும்  சாதி நம்முள் ஊறி நிற்கிறது. அனிச்சை மொழியாக அது வெளிப்படவும் செய்கிறது. கதாசிரியர் இதுகுறித்துக் கவனமாக இருக்கிறார் என்பது படைப்பின் வழி தெரிகிறது. “வண்ணார் ஆறுமுகம் பார்த்துக்கொண்டே இருந்தார் (பக்.123) எனவும் “பரியாரி பெருமாள் தான் என் ரசனையை முடிவுசெய்தார் எனவும் வரும் வாசகங்கள்   ஒப்பீட்டளவில் பின்தங்கிய சாதிகளைச் சார்ந்தவர்களை அவர்களுக்குரிய மரியாதையைக் கொடுத்துப் பதிவு செய்யும் நேர்மை படைப்பாளியிடம் இருப்பது பாராட்டத்தக்கது. இருப்பினும் ஓரிடத்தில் (பக்.213) சலவை செய்யும் குழந்தைவேலு இவரைச் சறுக்கி விழச் செய்வதையும் காணமுடிகிறது. அதேவேளையில் தலித்துக்களின் அறச்சீற்றத்தையும், ஆற்றொணா வெறுப்பையும் தங்கர் அருமையாகப் பதிவுசெய்திருக்கிறார்.

“ஆமா, சாமியாம் பெரிய சாமி. எம் மசுரு சாமி. இத்தினி வருசமா சீனம் பறையன் காலத்துலேயிருந்து, தாத்தனுக்குத்  தாத்தனா இந்த உசுரு ஒன்னைத்தவிர எல்லாத்தையும் கொடுத்து ஒழைக்கிறோமே, இந்த சாமி என்னடா செயஞ்சிது. ஆயிரம் அய்நூரையும் குடுத்திட்டு இப்படி நம்மள  கொத்தடிமையா வச்சிருக்கானுவளே இவனுள, இந்த மாரியாத்தா கேட்டா என்ன? (பக்.159) என்னும் மலையானின் கடுங்கோபம் நியாயமானது எனபதை யார் மறுக்க முடியும்?

அதேபோல் கழிவும் சகதியும் நிறைந்த கோயில் கிணற்றைத் தூர் வாரும்போது, தனது மூத்திரத்தைக் கிணற்றுக்குள் பெய்யும் ஒரு தலித்தின் குரல் ஆத்திரத்தோடு கேட்கிறது.

“செவக்கொழுந்து, இதாண்டா நாம செய்யிற வேல. இந்த தூருவார்ற வேலைய இவனுவ செய்யமாட்டானுவளாம். காலங்காலமா நாமதான் செய்யணுமின்னு என்ன எழுதியா வெச்சிருக்கு. சனாதிபதியாவே நம்ம ஆளு வந்தாச்சு. நம்மளப் புடிச்ச சனியன் உடவே மாட்டேங்குதே. தீர்த்தத்தோடு தீர்த்தமா சேர்த்துக் குடிக்கட்டும்எனும் உழைப்பாளியின் வெறுப்பை நாம் புறந்தள்ளிவிட முடியாது.

இப்படி ஏழை எளிய உழவர்களையும், மண்ணின் மைந்தர்களையும் காட்சிப் படுத்துவதோடு சில கதைகள் எழுத்தாளர்களையும் பாத்திரங்களாகக் கொண்டிருக்கின்றன. தவிரவும் எதிர்நாயகன் (anti-hero) என்ற வகையினத்தில், சக்கரையும் (உள்ளும் புறமும்) பிரசாத்தும் (அம்மாவின் கைப்பேசி) சித்தரிக்கப்படுகிறார்கள். மனிதன் ஒட்டுமொத்தமாகக் கொடியவனாக இருந்துவிட முடியாது. மனச்சான்றின் குரல் தவிர்க்க முடியாமல் அவனுள்ளும் உரத்துக் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது என்பதை இப்பாத்திரங்கள் பறைசாற்றுகின்றன.


கதைகள் எழுதபட்ட ஆண்டுகள் குறிப்பிடப்படாததால் இருபதாண்டுக் காலவெளியில் படைப்பாளியின் பரிணாமத்தைக் கணிக்க முடியாமலிருக்கிறது. சில கதைகளின் இறுதிப் பகுதியில் ‘குறிப்பு எனப் போட்டிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். (இசைக்காத இசைத்தட்டு, கருமேகங்கள் ஏன் கலைந்து சென்றன?) கொய்யாப் பழத்தின் வாசனையும், முந்திரிப் பருப்பின் தித்திப்பும், கம்பும் கேழ்வரகும் கலந்தாக்கிய  கூழின் ருசியும், நம் தமிழ்ச் சமூகத்தின் நினைவிலி மனத்தில் உறைந்திருக்கும் வரையும், மண்-மரம்-மாடு-பறவைகளின் மீதான நேசமும் தோழமையும் தொடரும் வரையும் தங்கர்பச்சானின் கதைகளுக்கு மவுசு இருக்கும்; செலாவணி மதிப்பும் இருக்கும்.

Tuesday, 29 September 2015




தங்கர் பச்சான் கதைகள் புத்தகம் குறித்த விவரங்கள்:
http://uyirmmai.com/Publications/BookDetails.aspx?bid=447
Book Name : தங்கர் பச்சான் கதைகள்
Author Name : தங்கர் பச்சான்
Language : தமிழ்
Price : Rs:210.00
Price Outside India : Rs:410.00
PublishedYear : 2013
Account Name : UYIRMMAI PATHIPPAGAM
Account Type : CC
Accouont No. 064102000001191
Bank : Indian Overseas Bank
Branch : R.K.Nagar, Chennai-28
RTGS / NEFT CODE - IOBA0000641
for contact :
uyirmmai
11/29subramaniyan street,abiramapuram
chennai-60018
phone:91-4424993448
mobile:9444366704
email:uyirmmai@gmail.com
website:www.uyirmmai.com
91-44-24993448
e-mail : uyirmmai@gmail.com
நன்றிச் செய்தி: 
வாழ்த்துகள் குவிந்து கொண்டே இருக்கின்றன.வாழ்த்தியவர்களின் மனம் புரிகிறது.நமது பண்பாட்டின் அடையாளமாக பொன்னாடை,பூச்செண்டு,கைப்பேசியில் வாழ்த்துச்செய்தி,முகநூலில் வாழ்த்துச்செய்தியும் பாராட்டும் எனத்தந்து வாழ்த்தினீர்கள்! ஒருவர்கூட பரிசு வாங்கித்தந்த அந்தப்புத்தகம் படிக்கவேண்டும் அது எங்கே கிடைக்கும் என்று கேட்கவேயில்லை.இந்தநிலையில் இன்னும் நிறைய எழுதுங்கள்;நிறைய விருது பெறுங்கள் எனவும் சொல்கிறீர்கள்! மேலும் யாருக்காக எழுதச்சொல்கிறீர்கள், யாருக்காக நான் தொடர்ந்து எழுத வேண்டும் எனவும் புரியாமல் நிற்கிறேன்.வாழ்த்துக்கு மிக்க நன்றி!!!

Sunday, 27 September 2015

தினத்தந்தி நிறுவனர் சி.பாஆதித்தனார்
                                                                 இலக்கியப் பரிசு
பரிசளிப்பு விழாவில் தங்கர் பச்சான் ஏற்புரை
{முழு வடிவம்}
நாள் : 27.09.2015
இடம் : இராணி சீதை மன்றம், சென்னை

என்னை இந்த இடத்தில் நிறுத்தியிருக்கும் என் உயிரினும் மேலான என் தாய்மொழிக்கு வணக்கம். நான் என்றைக்கும் மதிக்கின்ற, வணங்குகின்ற தமிழர் தந்தை ஐயா சி.பா. ஆதித்தனார் அவர்களுக்கும் வணக்கம். எனது இலக்கியப் படைப்பினைப் பரிசீலித்து இந்த இலக்கியப் பரிசைப் பெறும் தகுதியைப் பெற்றுத் தந்த பரிசுப் போட்டிக் குழுவின் நடுவர்களுக்கும், மேடையில் வீற்றிருக்கின்ற நீதியரசர் வெ.இராமசுப்ரமணியன்  மற்றும் தமிழறிஞர் வா.மு.சேதுராமன் ஐயா அவர்களுக்கும், பார்வையாளர்களாக வந்திருக்கின்ற பெருமக்களுக்கும், தமிழ் மக்களின் போராட்டக் கருவியாக இயங்கிக் கொண்டிருக்கின்ற மக்கள் பத்திரிக்கை தினத்தந்திக்கும் எனது வணக்கங்கள்.
இலக்கியப் பரிசுகளும், விருதுகளும் இலக்கியத் தரத்தை உயர்த்துவதற்காகத் தரப்படுகிறது என்பதைவிட இலக்கியவாதிகளை உயிர்ப்புடன் வைத்துக் கொள்வதற்காகவே தரப்படுவதாக உணர்கிறேன்.
திரைப்படத் துறையை தொழிலாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டாலும் என் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வது இலக்கியத்தின் வழியாகத்தான். திரைப்படப் படைப்பாற்றலுக்காக எனக்கு அளிக்கப்படும் விருதுகளையும், பரிசுகளையும் விட இலக்கியத்திற்காக அளிக்கப்படும் அங்கீகாரத்தில்தான் எனக்கு மனநிறைவும், பெருமையும் இருக்கிறது. எழுத்தாளனாக வேண்டும் என்பதற்காக எழுத ஆரம்பித்தவன் இல்லை.என்னைச்சுற்றிலும் நிகழும் சம்பவங்களும்,அதனால் எனக்குள் ஏற்பட்ட தாக்கங்களையும் பதிவு செய்வதற்காகவே எழுதினேன்.  1984 ஆம் ஆண்டில் எழுதத் தொடங்கினேன். 1990 இல் திரைப்படத்துறையில் ஒளிப்பதிவாளனாக அறிமுகமானேன். அன்றிலிருந்து இன்றுவரை இரண்டு துறைக்கும் சேர்த்து பல விருதுகளையும், பரிசுகளையும் அரசாங்கங்களும், தனியார் அமைப்புகளும் நிறைய கொடுத்திருக்கின்றன.
அவற்றை விடவும் மிகுதியான மகிழ்ச்சியும், மனநிறைவும் இந்த சி.பா. ஆதித்தனார் இலக்கியப் பரிசின் மூலமாகக் கிடைத்திருக்கிறது. நான் யாருக்காக, யாரைப்பற்றி, எனது குடும்பத்தைக் காட்டிலும் அதிகமாக சிந்திக்கிறேனோ, உலகம் முழுமையும் உள்ள அந்தத் தமிழர்கள் அனைவருக்கும் இந்தப் பரிசின் மூலம் தினத்தந்தி நாளிதழ் என் படைப்பினை அறியச் செய்திருக்கிறது.
நான் சந்திக்கும் மக்களெல்லாம் அடுத்ததாக என்ன படம் வெளிவருகிறது என்று மட்டும்தான் கேட்டிருக்கிறார்கள். நான் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துத் துறையில் இயங்கி வந்தாலும் அந்தப் படைப்புகள் பற்றி ஒருவர் கூட கேட்பதில்லை. விபரமறிந்தவர்கள் இதுபோன்ற கேள்வியைக் கேட்கும் பொழுதெல்லாம் எனது ஆதங்கத்தையும் நியாயமான கோபத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறேன். இனிமேல், அடுத்து என்ன படம் என்பதோடு, என்ன எழுதுகிறீர்கள் என்னும் கேள்வியையும் என்னைச் சந்திப்பவர்கள் கேட்பார்கள் என நம்புகிறேன். அதற்குக் காரணம் தினத்தந்தி மட்டுமே.
தினத்தந்தியின் வெள்ளிவிழா ஆண்டில் அறிஞர் அண்ணா ஆற்றிய உரை காணக் கிடைத்தது. பெரியவர் ஆதித்தனார் அவர்களைக் கண்டு அவர் வியந்தது போலவே நானும் வியக்கின்றேன்.
பத்திரிக்கை என்பதைப் பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே என நினைத்துத் தொடங்குபவர்களுக்கிடையில் அதைத் தனது வாழ்நாளின் கடமையாக ஏற்றுச் செயல்பட்டவர்கள் மிக அரிதாகவே இருக்கிறார்கள். அவர்களில் முதன்மையானவர் ஐயா ஆதித்தனார் அவர்கள்.
லண்டனில் சட்டக் கல்வியில் தேர்ச்சியும், புலமையும் பெற்று, சிங்கப்பூரில் முதன்மையான வழக்கறிஞராக பணியாற்றிக் கொண்டிருந்தவர், நீதிபதியாகவும் உயர்வு பெற்று அங்கேயே சுகமான வாழ்க்கையை வாழ்ந்து முடித்திருக்கலாம். அவ்வாறு செய்யாமல் தானாகவே மக்கள் பணிக்காகப் பத்திரிக்கைத் துறையின் சிக்கலான வாழ்க்கைப் பாதை பற்றி முன்கூட்டியே தெரிந்திருந்தும் தனது மொழிக்கும், இனத்துக்கும், தமிழ் மக்களுக்கும் தன்னையும், தன் அறிவாற்றலையும் பயன்படுத்திதினத்தந்திஎன்னும் போர்வாளை 1942 ஆம் ஆண்டில் உருவாக்கினார்.
தொடக்கத்தில்தந்திஎனும் பெயரில் மூன்று ஆயிரம் செய்தித்தாள்கள் மட்டுமே அச்சடிக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரின் விளைவாக அச்சடிக்கத் தாள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்த காலம் அது. சிங்கப்பூர் அரசின் பாரிஸ்டர் பணியை உதறித் தள்ளிவிட்டு வைக்கோல்களை அரைத்துக் கூழாக்கி அந்த நாற்றத்தைத் தாங்கிக் கொண்டு, அதில் தாளை உருவாக்கி மதுரையில் தொடங்கப்பட்ட தந்தி இன்று தினத்தந்தியாக பரிணமித்துத் தமிழகம், இந்தியா என உலக நாடுகளிலும் அச்சாகி சேவையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அந்தக்காலத்தில் பெரும் படிப்புப் படித்தவர்கள் மட்டுமேதான் செய்தித்தாளைப் படிக்க முடியும்; அவர்கள் படித்துக்காட்டுவதைத்தான் மற்றவர்கள் தலையாட்டிக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். ஆங்கிலத்தையும், சமஸ்கிருதத்தையும் கொண்டு பெயரளவிற்கு கொஞ்சம் தமிழ்ச் சொற்களைக் கலந்துதான் தமிழ்ப் பத்திரிக்கை எனும் பெயரில் அன்றைக்குப் பத்திரிக்கைகள் வெளிவந்தன. ஐயா அவர்கள் இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல்தான் பரண் மீது போடப்பட்டிருந்த மக்கள் தமிழைத் தட்டியெடுத்துப் படிப்படியாக அதுவரை பத்திரிக்கை என்றால் என்னவென்றே தெரியாத தமிழர்களின் கைகளிலெல்லாம் கொடுத்தார். தாய் மொழியைக்கூடப் படிக்கத் தெரியாத நம் தமிழர்களைப் பெரிய பெரிய கொட்டை எழுத்துக்களில் அச்சிட்டுத் தமிழைச் சொல்லித் தந்தார். ஆதித்தனார் ஐயாவின் பணி என்பது ஓர் இயக்கம். அந்த இயக்கம் இன்று விரிவடைந்து மூன்றாம் தலைமுறையால் வளர்த்தெடுத்துத் தமிழர்களின் குரலாகவும், மனசாட்சியாகவும், போர்வாளாகவும் மாறியிருக்கிறது.
தமிழர்களைத் தமிழர்களாக மாற்ற மொழியுணர்வையும், இன உணர்வையும் விதைத்து தங்களின் அரசியலை தாங்களே உருவாக்கிக் கொள்ளும் மைய்யப் புள்ளியாகச் செயல்பட்டுநாம் தமிழர்இயக்கத்தை உருவாக்கினார். திராவிட வலையில் சிக்குண்ட தமிழர்களை மீட்டெடுக்கும் முயற்சியாக அவர் மேற்கொண்ட அரசியல் பணியின் மூலமாகத்தான் தமிழர்கள் அனைவரும் இன்று தங்களைத் தமிழராக உணரத் தொடங்கியிருக்கிறார்கள்.
தந்தையின் கடமையுணர்ச்சியை உள்வாங்கிக் கொண்ட தந்தைக்கேற்ற மகனாக ஐயா  பா.சிவந்தி ஆதித்தனார் அவர்கள், அவரது வழியிலேயே பயணப்பட்டுத் தமிழகத்தின் ஒவ்வொரு பெருநகரங்கள் தோறும் பதிப்பை விரிவுப்படுத்தியதோடல்லாமல் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் கொண்டு சென்றார். மேல் நாட்டுப் படிப்பைப் படித்தவுடன் பிறந்த மண்ணையும், தன் மக்களையும் மறந்தவர்களுக்கிடையில் தன் வாழ்வின் பெரும்பகுதியை தமிழ் மக்களின் நலனுக்காகவே செலவழித்து உழைத்தார்.
ஐயா அவர்களுக்குஒன்பது ரூபாய் நோட்டுதிரைப்படத்தினைக் காண்பித்த போது இந்நாட்டு விவசாயிகளின் நிலை குறித்த வேதனையை என்னுடன் பகிர்ந்து கொண்டார். “ஒரு கலைஞனாக எந்த உதவி தேவைப்பட்டாலும், அல்லது வேறு என்ன தேவைகள் ஏற்பட்டாலும் என்னை உடனே தொடர்பு கொள்ளுங்கள்எனச் சொல்லித் தனது கைப்பேசி எண்களைக் கொடுத்தார். எவ்வளவோ தொழில் நெருக்கடிக்கிடையிலும் ஒரு முறை கூட நான் ஐயா அவர்களை நாடவில்லை. தமிழ்ச் சமுதாயத்தைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த ஐயா சிவந்தி ஆதித்தனார் அவர்களின் கைகளினால் இந்தப் பரிசையும், பாராட்டுதலையும் பெற்றிருந்தால் இன்னும் பெருமகிழ்ச்சியடைந்திருப்பேன்.
தானேப் புயல் முப்பத்தி ஐந்து லட்சம் மக்களின் வாழ்வைச் சூறையாடிப் பல லட்சம் மரங்களை அழித்தது. நாள்தோறும் தவறாமல் தினத்தந்தியின்தலையங்கத்தைவாசிக்கிறேன். ஒரு நாள், தானேப் புயல் அடித்து இரண்டாண்டுகள் கடந்த நிலையில் பாதிப்படைந்த அந்த மக்களின் வாழ்வு சீர் பெறாததையும், நிவாரணங்கள் முறையாகச் சென்றடையாததையும், அழிந்த மரங்களுக்கு மாற்றாக மரங்கள் வளர்க்கும் பணி நடைபெறாததையும் சுட்டிக்காட்டி என்றைக்கும் மறக்க முடியாத ஒரு  தலையங்கத்தைப் படித்தேன். உடனே தலைமைச் செய்தியாளர் சுகுமார் அண்ணனிடம் தொடர்பு கொண்டு, பாதிக்கப்பட்ட அந்த மக்களின் சார்பாக நன்றி தெரிவித்தேன். அப்பொழுது, ‘‘நான் அதனை எழுதவில்லை, இயக்குநர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தனார்  ஐயாவின் குரல்தான் அது. அவர் சொல்லச் சொல்ல நான் எழுதித் தருகிறேன்; அவ்வளவுதான் என் வேலை’’ எனச் சொன்னார். என்னதான் பெரிய படிப்பு, வெளிநாட்டுப் படிப்பு என்றிருந்தாலும் உங்களின் தாத்தா போன்றே, தந்தையார் போன்றே நீங்களும் தாய்மொழிக்காகவும், இனத்துக்காகவும், குறிப்பாக வாழ்நாள் முழுக்க ஏழையாக வறுமையிலேயே கடனாளியாக செத்து மடியும் விவசாயிகளுக்காகவும் எழுப்பும் குரல் கண்டு சிலிர்த்துப் போனேன்.
நாள்தோறும் வெளியாகும் தலையங்கம் எளிய மொழியில் எந்த மேதமைத் தனத்தையும் வெளிப்படுத்தாமல் தமிழ்ச் சமுதாயத்தின் அவலம், தேவை, முன்னேற்றம், வளர்ச்சி குறித்த அக்கறையுடன் வெளிவருவது உங்களின் கூரிய பார்வைதான் என்பது தெரிந்து உங்களின் மீதுள்ள மதிப்பு மேலும் உயர்கிறது.
தமிழை  படிப்பதையும்,தமிழில் பேசுவதையும்  கேவலமாகப் பார்க்கக் கூடிய சமுதாயத்தை உருவாக்கிவிட்ட இந்தச் சூழலில் அதிகப்படியாக தமிழ் மக்களால் கொண்டாடப்படும் உயிர் நாடியாக தினத்தந்தி விளங்கிக் கொண்டிருக்கிறது. பொருளாதாரத்திற்காகவும், கல்விக்காகவும், உறவுகளையும், மண்ணையும், மொழியையும் பிரிந்து உலகம் முழுக்கப் பரந்து வாழும் தமிழர்கள் அனைவருக்கும் பத்திரிக்கை கிடைக்க வேண்டும் என்பதற்காக முன்னோட்டமாக துபாயில் தினத்தந்தி பதிப்பு தொடங்கப்பட்டிருப்பது தமிழன் என்ற முறையில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. வேறெந்த தமிழ்ப் பத்திரிக்கையும் இதுபோன்று வெளிநாட்டில் பதிப்பை ஏற்படுத்தவில்லை. இந்தச் சாதனையை சாத்தியப்படுத்தியவர் இளையவர் பாலசுப்பிரமணியன் ஆதித்தனார்  ஐயா அவர்கள்தான்.
இத்தகைய பெருமை வாய்ந்த தினத்தந்தி பெயரால் வழங்கப்படுகின்ற இந்த இலக்கியப்பரிசு இதுவரை நான் பெற்ற அனைத்து விருதுகள், பரிசுகளைக் காட்டிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகின்றேன்.
எனது 23 ஆம் வயதில் எழுதத் தொடங்கினேன். சிந்திக்க முடிந்ததையெல்லாம் படைப்புகளாக்குகிறேன். அவற்றுள் சில திரைப்படங்களாக உருவாகின்றன; சில புனைகதைகளாக சிறுகதை, குறுநாவல், நாவல்களாக வடிவம் பெறுகின்றன. சமூகத்தின் மீதான எனது கோபத்தையும், ஆற்றாமையையும் கட்டுரைகளாக்கி பத்திரிக்கைகளில் வெளியிடுகின்றேன். உலகம் முழுமையும் இருக்கின்ற தமிழர்களைக் கணக்கெடுத்தால் எட்டரை கோடிக்கு மேல் வரும். ஆனால் எவ்வளவு பெரிய பேர் எடுத்த தமிழ் எழுத்தாளனின் நூல்களும், அதன் விற்பனையில் ஐந்தாயிரத்தைத் தாண்ட படாதபாடு பட வேண்டியிருக்கிறது.
என்மீது அன்பு கொண்டவர்களும், நண்பர்களும் உலகம் முழுமையிலிருந்தும் இந்ததங்கர் பச்சான்கதைகள் நூலுக்கு இலக்கியப் பரிசு பெற்றதற்காக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேயிருக்கிறார்கள். அவர்களிடம் வாழ்த்து தெரிவித்ததில் மகிழ்ச்சிதான்; இந்தப் புத்தகத்தை எப்போது வாங்கிப் படிப்பீர்கள்எனக் கேட்டேன். “அனுப்பி வைய்யுங்கள் படிக்கிறேன்என எந்தக் கூச்சமும் இல்லாமல் சொல்கின்றார்கள். இதுதான் தமிழனின் மனநிலை. ஒரு காலணிக்கு ஐந்தாயிரம் ரூபாயையும், கைப்பேசிக்கு ஐம்பதாயிரம் ரூபாயையும், ஒரு வேளை சாப்பாட்டிற்கு, உணவகத்தில் ஆயிரக்கணக்கிலும் செலவழிக்கத் தயாராக இருக்கின்றான்; வரலாறாக மாறப்போகிற, சமுதாயத்தின் மனக்குரலாக இருக்கின்ற எழுத்தாளனின் இலக்கியப் படைப்புக்களை நூறு, இருநூறு ரூபாய்கூட கொடுத்து வாங்க அவனுக்கு மனம் வருவதில்லை.
எழுத்தாளனையும், விவசாயியையும் பாதுகாக்காத நாடு உருப்பட வழியிருப்பதாக எனக்குத் தெரியவில்லை; உருபட்டதாக சரித்திரமும் இல்லை. ஏற்கெனவே புத்தகங்கள் படிக்கின்ற பழக்கம் குறைந்து கொண்டே வருகிறது. புத்தகங்கள் விற்றால்தான் அதில் ஒரு சிறு பகுதியின் மூலமாக எழுத்தாளனுக்கு வருவாய் கிடைக்கும். வேறு தொழில் செய்து கொண்டும், மாதச் சம்பளத்துக்கு வேலை பார்த்துக் கொண்டும் எழுதும் பகுதிநேர எழுத்தாளர்கள் உயிர் வாழ்வார்கள். எழுத்தை மட்டுமே தொழிலாகக் கொண்ட எழுத்தாளர்களின் நிலை என்ன என்பதை எவரும் இங்கே உணருவதில்லை. அறுபது ஆண்டுகளுக்கு மேலாக எழுத்தையே கடமையாகவும், தொழிலாகவும் கொண்டு எழுதிவரும் எழுத்தாளர்களை எனக்குத் தெரியும். மாதம் மூன்றாயிரம் ரூபாய்க்கு வழியில்லாமல் அந்த வறுமை  நிலையிலும் இந்த சமுதாயத்திற்காக தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
திரைப்படத் துறையில் இருந்து கொண்டுதான் இதனைச் சொல்லுகிறேன். தமிழ் சினிமாவில் ஒரு நகைச்சுவை நடிகர் ஒரு நாளைக்கு வாங்கும் ஊதியத்தை அறுபது ஆண்டுகள் இரவு பகலாக சிந்தித்து இலக்கியங்களைப் படைக்கும் ஒரு எழுத்தாளன் பெற முடிவதில்லை.
எத்தனையோ செல்வந்தர்கள், கல்வி நிறுவனங்கள், தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் என இவர்கள் நடத்தும் விழாக்கள், கணக்கற்ற குடும்ப விழாக்கள், கொண்டாட்டங்கள், திருமணங்கள் என எங்கு பார்த்தாலும் நாள்தோறும் ஆயிரக் கணக்கில் நிகழ்வுகள் அரங்கேறுகின்றன. ஒன்றுக்கும் உதவாத பொன்னாடை என்கிற பெயரில் அணிவிக்கும் சால்வைகளையும், பூக்கொத்துக்களையும், மாலைகளையும் நூற்றுக் கணக்கில் பணம் செலவழித்து வாங்கித் தருவதற்குப் பதிலாகச் சமுதாயத்திற்குப் பயன்படும் நூல்களைத் தேர்வு செய்து பரிசுப் பொருளாகத் தரும் பழக்கத்தை ஒவ்வொரு தமிழனும் ஏற்படுத்திக் கொண்டால் எழுத்தாளன் உயிர் பெறுவான். மனித குலத்தின் எதிர்காலம் வளம் பெறும்.
ஒரு என்ஜினியர் போல், ஒரு டாக்டர் போல், ஒரு அரசியல்வாதி போல், ஒரு தொழிலதிபர் போல் ஒரு தீவிரமான எழுத்தாளனை யார் நினைத்தாலும் உருவாக்கிவிட முடியாது. எங்கிருந்தோ ஒருவன் பிறப்பான். அப்படிப்பட்டவர்களை இந்த சமுதாயம்தான் பாதுகாக்க வேண்டும். அவனை  கொண்டாடாமல் போனாலும் பரவாயில்லை; அவனது படைப்புகளைப் படிக்காமல் தொடர்ந்து மேலும் மேலும் எழுதுங்கள் எனச்சொல்லாதீர்கள். தனது படைப்புகளை படிக்காமல் தன்னை  கொண்டாடுவதை உண்மையான எந்த எழுத்தாளனும் விரும்ப மாட்டான்.
எனது முப்பது ஆண்டுகளுக்கு மேலான இரவு பகல் பாராது உருவாக்கப்பட்ட படைப்புக்குக் கிடைத்திருக்கும் இந்தப் பரிசினைத் தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறேன். இந்தப் பரிசு சோர்ந்து போயிருந்த என்னை மீண்டும் ஊக்கப்படுத்தி எழுப்பி உட்கார வைத்திருக்கிறது. தமிழர்களின் சொத்தாக மாறிப்போன தினத்தந்தி பத்திரிக்கைக்கும், அதன் நிறுவனத்திற்கும், நடுவர் குழுவிற்கும், இயக்குநர் ஐயா திரு.பாலசுப்பிரமணியன் ஆதித்தன்  அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வளம் பெறுக என் தமிழ்மொழி!
வளர்க  என் தமிழகம்!

நீண்ட உறக்கத்திலிருந்து விழித்தெழட்டும்  என் தமிழினம்!!