Sunday, 2 August 2015

சொல்லத் தோணுது 45 - வேலி ! - தங்கர் பச்சான்


நமக்கு எல்லாமே செய்திதான். அதைப் படிப்பது, பார்ப்பது, விவாதிப்பது, பின் அதை மறந்து போவது என்பதே நடைமுறையில் உள்ளது. மறுமுறை அது நிகழும்போது வெறும் செய்தியாக மட்டுமே மனதில் பதிந்துவிடுகிறது.
ஆணும், பெண்ணும் சேர்ந்து உருவாக்குவதுதான் இந்த மனித இனம்; இந்த சமுதாயம். ஆனால், இதில் பெண் மட்டும் எப்போதுமே அதிக பாதிப்புக்குள்ளாகிறாள். கேள்விக்கு உட்படுத்தப்படுகிறாள். எல்லாப் பொறுப்புகளும் அவளுக்கு மட்டுமே உண்டு. இதைத் தான் ஆணாதிக்க உலகம் நடைமுறைப்படுத்தி சாதித்துக்கொண்டு வருகிறது.
சமுதாய வளர்ச்சி, தனிமனித வளர்ச்சி, உளவியல், மனித ஆளுமை இவற்றில் பாலியலின் பங்கு என்ன என்பதை அறிவுபூர்வமாக, அறிவியல்பூர்வமாக ஆராய்வது அவசியமாகிறது. பெண் ணுடல் சார்ந்து பார்க்கப்படும் பார்வைகளும், கேட்கப்படும் கேள்விகளும் விவாதத்துக்குரியவை. பெண்ணுடல் சார்ந்து மட்டுமே தங்களின் வணிகப் பார்வையை வளர்த்து, காலங்காலமாக அதைக் கொண்டு சந்தைப்படுத்திவரும் ஊடகங்களும் இதில் பங்குபெறுகின்றன.
பாலியல் வன்கொடுமைகள் காலங்காலமாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அடிமைச் சமுதாயத்தில் எவ்வாறு அது நியாயமாக்கப்பட்டதோ, அதுபோலவே ‘தாங்கள் அனுபவிப்பதற்காக மட்டுமே படைக்கப்பட்டவர்கள் பெண்கள்’ எனும் மனநிலையோடு வாழும் பெரும்பான்மையான ஆண்கள்தான் இன்னமும் இருக்கிறார்கள்.
பெண்கள் எப்போது பொருள் சேர்ப்பில் பங்கெடுக்கத் தொடங்கி வீட்டுக்கு வெளியே சென்று வருவாய் ஈட்டத் தொடங்கினார்களோ, அப்போது முதல் அவர்கள் தங்களின் உரிமைகளை அறியத் தொடங்கிவிட்டார்கள். இருப்பினும், அண்மைக்காலமாக பாலியல் குற்றங்கள் பெருகிக் கொண்டிருப்பதையும் மறுப்பதற்கில்லை. பெண்கள் வெளியில் சென்று பயில வேண்டிய, பொருளீட்டவேண்டிய கட்டாயம் காரணமாகவே அறிமுகமில்லாத மனிதர்களை அதிகம் சந்திக்க வேண்டியச் சூழல் உருவாகிறது.
பாலியல் வன்கொடுமைகள் இன்று வெளியில் தெரிவதற்குக் காரணம் ஊடகங்களின் வளர்ச்சியும், பாதிக்கப்பட்டவர்கள் இதை துணிவோடு வெளியில் சொல்லத் தொடங்கி இருப்பதும்தான். பொதுவாகவே குழந்தைப் பருவத்தில் இருந்தே ஓர் ஆணின் மனதில் ‘பெண் என்பவள் ஆணால் அனுபவிக்க மட்டுமே பிறந்தவள்’ என்ற எண்ணம் உருவாகிவிடுகிறது. புறச்சூழலில் அவன் பார்க்கும் திரைப்படங்கள், படிக்கும் பத்திரிகைகள், குறிப்பாக விளம்பரங்கள் எல்லாமே சேர்ந்து அந்த எண்ணத்தை அவனது மனதில் பதியவைத்துவிடுகின்றன. பெண்களின் ஆடையை குறைத்து ஊடகங்களில் உலவவிடுவதே, ஏற்கெனவே ஆண்களின் மனத்திரையில் பதிவாகியிருக்கிற பெண்களின் உடல்குறித்த ஆசையை அதிகரித்து பணம் பண்ணத்தான்.
சமூகப் பின்னணி இல்லாத ஒரு பெண்ணைப் பார்க்கும் ஆணுக்கு அவள் மீதான அத்துமீறிய இச்சை அதிகமாக தலைதூக்குகிறது. தவிர, இது யாருக்கும் தெரியாது என நினைக்கும் எண்ணம் அவனை அந்தக் குற்றத்தை செய்யத் தூண்டுகிறது. தனிமையில் ஒரு பெண் அவனுக்கு கிடைக்கிற வாய்ப்பு வரும்போது சிறிது சிறிதாக ஏற்கெனவே மிருகத்தனமாக மனதில் உருவாகியிருந்த எண்ணம், அவனை மிருகமாக மாற்றுகிறது. எவ்வித சமூக உணர்வும் இன்றி மிருகமாகவே நடந்துகொள்கிறான்.
இப்படிப்பட்ட பாதிப்புக்குள்ளாகும் பெண் சமுதாயத்தில் இருந்தே புறக்கணிக்கப்படுகிறாள். தற்போது இக் குற்றங்கள் குழந்தைகளிடமும் வாலாட்டுவது பெரும்கொடுமை. இக்குற்றத் தில் ஈடுபடுபவர்கள் இந்தக் குழந்தைகளின் குடும்பங்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் என இவர்களுக்குள்ளேயேதான் இருக்கிறார்கள்.
குழந்தைகள் கல்வி கற்றுத் தரும் தங்கள் ஆசிரியர்களாலேயே சீரழிக்கபபடுகிற செய்திகளையும் அவ்வப்போது பார்க்கிறோம்.
கற்பு என்பதை ஒரு பெண்ணுக்கானதாக மட்டுமே இங்கு பார்க்கப்படுவது பாரபட்சமானதாகும். ஒரு பெண் பாலியல் வன்முறையை எதிர்கொள்ளும்போது அதில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள எதிராளியின் உயிர் போனாலும் அவள் மீது தவறு இல்லை என சட்டம் சொல்கிறது. ஆனால், சில திரைப்படங்கள் அந்த நேரங்களில் அவள் தன் உயிரை மாய்த்துக் கொண்டாலும் பரவாயில்லை, கற்பை மட்டும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என போதிக்கின்றன.
இப்படியான சூழலில் தற்கொலை செய்து கொண்டவர்கள் கற்புக்கே இலக்கணம் படைத்தவர்களாக கருதப்பட்டு தெய்வமாக போற்றப்பட வேண்டியவர்கள் என இங்கே போதிக்கப்படுகிறது. தற்கொலை செய்து கொள்வது ஒரு தியாகச் செயல் அல்ல; குற்றம் இழைப்பவன் மீது புலியைப் போல தாக்குதல் நடத்தச் சொல்லி கற்றுக் கொடுப்பதுதான் திரைப்படங்களின் பொறுப்பாக இருக்க வேண்டும்.
ஆடைகளைக் குறைத்து பெண்ணுடலை திரையில் காட்டி, விதம் விதமாக அவர்களை ஆடவிட்டும் உலவவிட்டும் ஆண்களின் மனதைக் கிளறி, பணம் பார்க்கும் ஆசையில் பெண்களை அடிமைப்படுத்தும் படைப் பாளிகள் முதலில் இக்குற்றங்களை உணர வேண்டும். 50 வயதைக் கடந்தாலும் தனக்குத் துணையாக நடிக்கும் பெண்கள் 20 வயதுகளில் இருக்க வேண்டும் என நடிகர்கள் தேர்வு செய்வது பெண்ணுடலை சந்தைப்படுத்துவதைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும்?
இதெல்லாம் போதாது என்று அண்மைக்காலமாக மது ஒவ்வொரு வரின் வீட்டுக்குள்ளும் புகுந்து மனித வாழ்கையையே புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. தான் பெற்ற மகளையே தீண்டிப் பார்க்கத் துடிக்கும் அப்பாக்களையும், தான் பிறந்த வயிற்றிலேயே பிறந்த அக்கா, தங்கை களை வக்ரக் கண்ணோடு அணுகும் சகோதரர்களையும் மதுக் கலாச்சாரம் அரக்கத்தனமாக உருவாக்கிவிடுவதை செய்திகளில் பார்க்கத்தானே செய்கிறோம்.
சட்டங்கள் மட்டுமல்ல; கல்விமுறையும் சேர்ந்தே இதில் செயலாற்ற வேண்டும். பாலியல் வன்முறைகளைத் தடுக்க தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய ஒரு செயல்திட்டம் உருவாக்கப் பட வேண்டும். இதுகுறித்த பாதுகாப்பான கல்வி வழிமுறைகளை உருவாக்கி, மாணவப் பருவத்திலேயே அவர்களுக்குப் புரியும் விதத்தில் சொல்லித் தந்து, விவாதிக்கப்பட வேண்டும்.
இவைகுறித்த விழிப்புணர்வு ஆசிரியர்களிடையேயும் குறைவாகவே உள்ளது. சமூகத்தின் பழமையான வாதங்களை முன்னிறுத்துவதுகூட பாலியல் கல்விகுறித்த புரிதலை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கு முதல் காரணமாகும்.
குழந்தைகளுக்குத் தீங்கிழைக்கும் குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதும், குற்றவாளிகளாக மாற வாய்ப்புள்ளவர்களைப் பற்றி அறிந்துகொண்டு குழந்தைகளைப் பாதுகாப்பதும் மிகமிக அவசியம். பாலியல் பாதிப்பு ஏற்படுத்துவோர் குறித்தும், குற்றவாளிகளிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் தற்காப்பு முறைகள் குறித்தும் குழந்தைகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் முக்கிய தேவையாகிவிட்டது. குழந்தைகள் மீது தொடரும் தாக்குதல்களைத் தடுக்க, ஒரு விசாரணைக் குழு அமைத்து தடுப்பு செயல்திட்டத்தை அரசு வகுக்க வேண்டும்.
இன்றைய நாட்களில் எல்லா குழந்தைகளின் கைகளிலும் கைப்பேசி கள் தவழத் தொடங்கிவிட்டன. விரல் நுனியில் நல்லவற்றையும், கெட்டவற்றையும் சில நொடிகளிலேயே பார்க்கக்கூடிய வசதியை அவர்களிடம் கொடுத்திருக்கிறோம். ஆயிரக்கணக்கான ஆபாசப் படங்களின் வலைதளங்களைத் தாண்டித்தான் நம் பிள்ளைகள் வளர வேண்டியிருக்கிறது. பாலியல்குறித்துப் பேசத் தயங்குகிற இந்தியச் சமூகம்தான் உலக மக்கள் தொகைப் பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கிறது.
குற்றங்களைத் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் நடந்ததற்குப் பின்னால், காவல்துறை பல அலைச் சல்களுக்கு இடையில் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதும், நீதிமன்றங்கள் விசாரிப்பதும் தண்டிப்பதும், புள்ளியியல் துறையாளர்கள் புள்ளிவிவரங்களை வெளியிடுவதும் தொடர்ந்துகொண்டே தான் இருக்குமா?

- இன்னும் சொல்லத்தோணுது 
எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள: thankartamil@gmail.com

No comments:

Post a Comment