Sunday, 19 July 2015

சொல்லத் தோணுது 41 - தலை தப்புமா?

என்னதான் வெளிநாடுகளைப் புகழ்ந் தாலும் நம் நாடு போலாகுமா? கட்டுப் பாடுகளுடன் சட்டத்தை மதித்து வாழ்வதெல்லாம் ஒரு வாழ்க்கையா? அயல்நாடுகளில் எந்நேரமும் அரசாங் கம் கண்காணிப்பு கேமரா வைத்து கவனித்துக்கொண்டே இருக்கிறது. உறங்குகிற நேரம் மட்டும்தான் அரசின் சட்டவிதிகளை மறந்து உறங்கு கிறார்கள். எந்த ஓர் இடத்தை சேதப் படுத்துவதோ, கண்ணில் படும் இடங் களில் எல்லாம் விளம்பரங்களையும், எப்போதும் சிரித்துக்கொண்டே இருக் கும் அரசியல் கட்சித் தலைவர்களின் படங்களையும், பட்டங்கள் சூட்டிக் கொண்ட பெயரையும் எழுதிவைக்க முடியாது. அதேபோல் காணும் இடங் களில் எல்லாம் எச்சிலைத் துப்பி குப்பை களை வீச முடியாது. தனி ஆளாக சாலையில் இருந்தாலும் நடு இரவு 2 மணிக்குக் கூட சாலை விதிகளைப் பின்பற்றியாக வேண்டும். இதுதான் வல்லரசு நாடுகளிலும் அல்லது வளரும் நாடுகளிலும் நடைமுறையில் உள்ளது.
அரசாங்கமோ, சட்டமோ நம்மவர் களை கட்டுப்படுத்துவது நமக்குப் பிடிப் பதில்லை. வீட்டில் உள்ளக் குப்பையை வெளியில் வீசிவிட்டு, கதவை மூடிக்கொண்டால் சுத்தமாக வாழ்வதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். பொது இடங்களையும், பொது சொத்துகளையும் நம்முடையவை களாகப் பராமரிக்கும் எண்ணம் நமக்கு எப்போதுமே இல்லை. நமக்காகவே வாழ்வதாகவே சொல்லிக்கொள்ளும் அரசியல்வாதிகளும் இதனைக் கடை பிடிப்பது இல்லை.
உலகத்துக்கே முன்னுதாரணமாக இருக்கக் கூடிய ‘திருக்குறள்' உரு வாகக் காரணமாக இருந்த இந்த இனம், அதற்கு நேர்மாறாக எல்லா நெறிமுறைகளையும் பின்பற்றாமல், மற்றவர்கள் பரிகாசம் செய்யும் அளவுக்கு வாழ்ந்து கொண்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் காரணம் நமது மக்கள் தொகைப் பெருக்கம் எனச் சொல்லி தப்பித்துக்கொள்கிறோம்.
சீனாவைவிட நம் நாட்டு மக்கள் தொகை குறைவுதான். அந்த நாட்டை இப்படி குப்பைத் தொட்டி போலவா வைத்திருக்கிறார்கள்? எல்லாவற்றையும் சட்டம்போட்டுத்தான் கட்டுப்படுத்த வேண்டும் என மக்கள் நினைக்காமல், ‘நமக்கும் பொறுப்பு இருக்கிறது' என அவர்கள் நினைக்கிறார்கள். அதனால், அயல்நாடுகள் எல்லா வகையிலும் முன்னேறிக்கொண்டு வருகின்றன. அவர்களை ஆள்பவர்களும் தலைவர் களாக இருப்பவர்களும் மக்களுடன் நெருக்கமாக பழகுகின்றனர். சட்டத்தை மதிக்கின்றனர். அதனால் மக்களும் சட்டத்தை மதித்து வாழப் பழகிவிட்டனர்.
ஆஸ்திரேலியாவில் சாலை நிறுத்தத்தில் விதிமீறப்பட்ட பிரதமர் ஒருவர் அந்த ஒரே காரணத்துக்காக பத வியை இழந்ததை எல்லோரும் அறிந் திருக்கலாம். இங்கு ஒரு கவுன்சிலரை இப்படி செய்துவிட வாய்ப்பிருக்கிறதா? ஆனால், எல்லா நாடுகளிலும் கையாள் வது ஒரே சட்டம்தான்!
எல்லா குற்றங்களில் இருந்தும், எல்லா தண்டனைகளில் இருந்தும் தப்பிக்கும் வழிவகைகளை அதிகாரம், பண பலம், செல்வாக்கு படைத்தவர்கள் மீறுவது போல் மக்களும் அவற்றைக் கற்று கையாளப் பழகிவிட்டார்கள்.
சாலைகளில் பயணிக்கிறபோது பய ணிப்பவர்கள் விபத்தில் இருந்து தப்பிக்க எத்தனையோ விதிகள் இருக்கின்றன. ஒரே ஒரு விதிகளைக்கூட முறையாக நாம் பெரும்பாலும் பின்பற்றுவதில்லை. வாக னத்தில் உள்ளவர்கள் அனைவருக்குமே தான் விபத்து நேரிட்டால் பாதிப்பு ஏற் படும். எனவே, அனைவருமே நான்கு சக்கர வாகனத்தின் இடுப்புப் பட்டை யைக் கட்டாயம் அணிய வேண்டும். இந்தியாவில் ஒரே ஒரு வாகனத்தில்கூட பயணிக்கும் அனைவரும் இதனை பின்பற்றுவதில்லை. வாகன ஓட்டி மட்டும் சில வேளைதான் விரும்பியோ, காவல்துறைக்கு பயந்தோ அணிந்து வாழப் பழகிவிட்டனர்.
தற்போது நடுத்தட்டு மக்களின் பெரும் சிக்கலாக உருவாகியிருப்பது இருசக்கர வாகனப் பயணத்தில் கட்டாயம் ஒவ் வொருவரும் தலைக்கவசம் அணிவது. இப்படிப்பட்ட உத்தரவுகள் இதற்கு முன் பலமுறை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நெருக்கடிகள் தரப்படும் அந்தந்த காலங்களில் மட்டும் காவல்துறையின ருக்கு பயந்து அணிந்துவிட்டு, பின் அந்த தலைக்கவசத்தை வீசி விடுகிறோம். நெருக்கடி தராத காலங்களில் தலைக் கவசம் அணிந்து பயணிப்பவர்கள் நூற் றில் ஐந்து பேர்கூடத் தேராது. பயணத் துக்கு வசதியில்லாமல் இடைஞ்சல் தருவதாலும், காவல்துறை ஒருவேளை கேட்டால் சரிகட்டிக்கொள்ளலாம் என் பதாலும், போகிற உயிர் எப்படியும் போய்த்தான் தீரும் என விதியின்மேல் நம்பிக்கைக் கொண்டு, எத்தனைமுறை சட்டம் போட்டு உத்தரவு பிறப்பித்தாலும் மீதமுள்ளவர்கள் தலைக்கவசத்தைப் பின்பற்றாமல் விட்டுவிட்டார்கள்.
இப்போதுகூட இங்கே நடந்திருப்பது நீதிமன்ற உத்தரவுக்கு பயந்து காவல் துறையும், காவல்துறைக்கு பயந்து மக் களும் தலைக்கவசம் அணிய முன் வந் திருக்கிறார்கள். இப்படி ஒரே நாளில் திரும்பியப் பக்கமெல்லாம் தலைக்கவ சங்களைக் காண்பது எல்லோருமே உயிருக்குப் பயந்து அல்ல.
உலகம் முழுக்க இந்த சட்டம் நடை முறையில் இருக்கிறது. மக்கள் பின்பற்று கிறார்கள். ஆனால், நாம் மட்டும் இன்னும் ஏதாவது காரணம் சொல்லி தப்பித்துகொண்டே வருகிறோம்.
நீதிமன்றம் காலக்கெடு கொடுத்தது. அது அனைவருக்கும் தெரியும். இருந்தும் கடைசி இரண்டு நாட்களில்தான் எல்லோ ருமே போக்குவரத்து தடைபடும் அளவுக்கு எல்லா வேலைகளையும் போட்டுவிட்டு, அந்த விற்பனைக் கடைகளில் குவிந்தோம்.
இப்படிப்பட்ட நேரங்களில் மனசாட்சி இன்றி, யாருக்கும் பயப்படாமல் இயங்கி பணம் பார்த்தவர்கள் மூன்று மடங்கு விலை வைத்து வாரிக் குவித்தார்கள். மக்களின் மனக்குமுறல் வெளிப்பட்டப் பிறகு அவர்கள் இனி அவ்வாறு செயல் படக் கூடாது என அறிவித்து, அதிகாரி கள் திறம்பட சோதனை செய்து குற்றம் கண்டுபிடிக்கப்பட்டு, கடை ஒன்றுக்கு 2,500 ரூபாய் பணம் கட்டச்சொல்லி இருக்கிறார்கள்.
இந்த அதிகாரிகளுக்கு இவ்வாறெல் லாம் நடக்கும் என்பது முன்கூட்டியே தெரியாதா? ஒரு வாரமாக எல்லாவற்றை யும் வேடிக்கை பார்த்தபடியே இருந்து விட்டு, மக்களின் பணம் முழுக்க கொள்ளையடிக்கப்பட்ட பின்னர், இப்போது அறிக்கைத் தருகிறார்கள்.
தலைக்கவசத்தின் தரம், அதனை அணிபவர்களுக்கு வசதியாக இருக் கிறதா? அணிந்து பயணிக்கும்போது என்னென்ன முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதெல்லாம் மக்களுக்கு அறிவுறுத் தப்பட்டிருக்க வேண்டும். தரமான வற்றைத் தவிர்த்து வேறு தலைகவசங் களை விற்பனைக்கு வைத்திருக்கக் கூடாது என்கிற சோதனைகளை முன் கூட்டியே மேற்கொண்டு, தரமற்றவற்றை அப்புறப்படுத்தி இருக்க வேண்டும்.
இவை எதையுமே செய்யாமல், மீறு பவர்களைப் பிடிக்கிற வேலை மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது.
எப்போதும்போல் செல்வாக்கு மிக்கவர்கள், அதிகார அமைப்பில் உள்ளவர்கள், விளம்பரமடைந்தவர்கள் என யாருடைய பெயரைச் சொன்னா லும் நடவடிக்கை இல்லை என்கிற நிலையும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
தலைக்கவசத்தை அணிந்துகொண் டால் நினைத்தப்படி திரும்பிப் பார்க்க முடியாது, பின்னால் வரும் வாகனங் களின் சத்தம் கேட்பது குறைந்து விடும், இதனாலேயே நிறைய விபத்துக் கள் ஏற்படும், இரண்டு பக்கங்களிலும் கண்ணாடி பொருத்தப்படாத வாக னத்தை எவ்வளவு தரமான கவசம் அணிந்து ஓட்டினாலும் விபத்து நடக்க அதிக வாய்ப்பு உண்டு... இதுபோல் எவ்வளவோ முன்னேற்பாடுகளையும், சீர்திருத்தங்களையும் மேற்கொண்ட பின்னர் தலைக்கவசம் அணிந்து பய ணிப்பதுதான் உயிரைக் காக்கும் வழி. இதெல்லாம் இல்லாமல் வெறும் தலைக் கவசம் அணிந்தால் மட்டும் போதும் என கண்காணிப்பதால், மீண்டும் திரும் பப் பெறமுடியாத உயிர்களைக் காப்பாற்றிவிட முடியாது.
இருக்கிற வழக்குகளைத் தீர்க்கவே இங்கே நேரமில்லை. உயர்நீதி மன்றத்தி லேயே பெரிய பெரிய வழக்குகளெல் லாம் பாதிக்கும் மேற்பட்ட நீதிபதிகளின் இடம் நிரப்பப்படாததால் காத்துக்கிடக் கின்றன. நம் ஊர் காவல் நிலையங்களில் இருக்கிற வசதியில், கையகப்படுத்துகிற இத்தனை ஆயிரம் வாகனங்களையும் எங்கே கொண்டு போய் நிறுத்தி வைக்க முடியும்?
‘ஒருவேளை பிடித்தாலும் எப் போதும் போல் காவலர்களை சரிகட்டிவிடலாம்; இருக்கிற பிரச்சினை யில் இதெல்லாம் ஒரு பிரச்சினையா’ என்கிற அலட்சிய குரல்களும் கேட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. இம்முறை தலை தப்புமா தெரியவில்லை!

- சொல்லத் தோணுது...
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: thankartamil@gmail.com

2 comments:

  1. அறம் மறந்த
    மறம் மறந்த
    மானம் இழந்த
    மறத்தமிழன்

    ReplyDelete
  2. உலகிற்கே அறத்தை கற்பித்தவன்
    இரண்டே அடியில் உலகை அளந்தவன்
    நம். பூட்டன்

    மனிதன் மனிதம் இழந்து நாளாகிவிட்டது
    அறம் சார்ந்த கல்வியை கரு அருத்துவிட்டனர்
    நம்மவர் என சொல்லி நம்மை ஆள்பவர்கள்

    இருப்பவற்றை எல்லாம் இழந்து
    வந்தவர்களைஎ ல்லாம் வாழவைத்துக்கொண்டுயிருக்கிறோம்

    விழிப்போம் ஒன்றுபடுவோம்
    நாம் வாழ

    ReplyDelete