நாட்டில் உள்ளத் துறைகளிலேயே முதன்மையானதாக, முக்கியமானதாக கருதப்படுவது ஊடகத்துறை. மக்களாட்சியில் வாழ்கின்ற மக்களுக்கு வழிகாட்டியாகவும், சமூகத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லக்கூடிய பொறுப்பும் கடமையும் அவற்றுக்கு உண்டு. நாம் தேர்ந்தெடுத்த அரசு நமக்கு அரணாக இருக்க வேண்டியதுபோல் போல் ஊடகங்களும் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் அரணாக இருக்க வேண்டும். கற்றவர்களும் பாமரர்களும் நாட்டு நடப்புகளை அறிந்துகொள்ள ஊடகங்களையே நம்பி இருக்கிறார்கள்.
ஒவ்வொரு துறையின் மீதும் மக்கள் நம்பிக்கையை இழந்து கொண்டு வருவதுபோல் ஊடகங்களின் மீதும் இழந்து வருவது பெரும் கவலைக்குரியது. சமூகத்தின் சீர்கேடுகளை அலசும் ஊடகங்கள் தாங்கள் வழி தவறிச் சென்று கொண்டிருப்பதைப் பற்றி உணர்ந்த மாதிரியே தெரியவில்லை.
இயற்கை வளங்கள் சீரழிகின்றன, அரசியல்வாதிகள் தங்களின் நெறிமுறைகளைத் தவறவிட்டுவிட்டார்கள், அரசியல் தொழிலாக மாறிவிட்டது, மக்களை மது சீரழித்துக்கொண்டிருக்கிறது, கல்வி வணிகத் தொழிலாக மாறிவிட்டது என மக்களிடத்தில் கவலைப்படும் ஊடகங்களுக்கு மக்களின் கவலை புரிந்தனவா எனத் தெரியவில்லை.
திரைப்படம், தொலைக்காட்சி, பத்திரிகை இவை எல்லாமே ஊடகங்கள்தான். இவைகள் ஒன்றுக்கொன்று வீரியத்தில் குறைந்தவைகளல்ல. அனைத்து கலைகளையும் உள்வாங்கிக் கொண்ட திரைப்படம் எளிதில் அனைத்து மக்களின் மனதிலும் புகுந்துவிடக்கூடியது. அதற்கு படித்தவர்கள், பாமரர்கள், அதிகாரத்தில் இருப்பவர்கள், பணக்காரர்கள், ஏழைகள் என்கிற பாகுபாடு தெரியாது. அனைவரின் சிந்தனையையும் ஒருங்கமைத்து அவர்களின் நிலையை மறந்து சிந்திக்க வைக்கும் ஆற்றல் படைத்தது. ஆனால், அப்படிப்பட்டக் கலை முறையாகப் பயன்படுத்தப்படாமல் கையில் கிடைத்தவர்களெல்லாம் அதனை எடுத்துக்கொண்டு கையாண்டதினால், உயிரைத் தக்க வைத்துக்கொள்ள போராடிக் கொண்டிருக்கிறது. தற்போது பேய்களின் பிடியில் தமிழ்த் திரைப்படக் கலை சிக்கிக்கொண்டுவிட்டதால், எப்பொழுது அது சமநிலைக்குத் திரும்பும் அதற்கு எவ்வளவு காலமாகும் எனத் தெரியவில்லை.
தொலைக்காட்சிகளின் நிலையோ அதைவிடவும் இன்னும் பரிதாபம். தமிழர்களுக்கு வயிற்றுக்கு சோறு இருக்கிறதோ இல்லையோ, வீட்டுக்கு வீடு தொலைக்காட்சிப் பெட்டியை வைத்துக்கொண்டிருக்கிறார்கள். மக்களை மகிழ்விப்பதற்கும், விழிப்புணர்வை ஊட்டுவதற்கும், ரசனையை மாற்றியமைப்பதற்கும் உதவ வேண்டிய தொலைக்காட்சி, அவர்களை பாடாய்ப்படுத்திக் கொண்டிருக்கிறது. கொஞ்ச நஞ்சமாவது சிந்தித்துக் கொண்டிருந்தவர்கள் அது வீட்டுக்குள் நுழைந்தவுடன் சிந்திப்பதையே மறந்துவிட்டார்கள். காலையிலிருந்து நடு இரவு வரை அதில் வரும் நிகழ்ச்சிகளைப் பார்த்து களைத்துப் போய்விடுகிறார்கள். தங்களின் பிள்ளைகளையும் ஆட்டக்காரர்களாக, பாட்டுப் பாடுபவர்களாக மாற்ற முடியவில்லையே என்று பல பெற்றோர்கள் கவலையில் மடிந்து கிடக்கின்றனர். இது மட்டுமின்றி தொலைக்காட்சித் தொடர்களின் வருகிற பாத்திரங்களும், சம்பவங்களும் அவர்களின் மனதை சிதைத்து மனநோயாளிகளாக மாற்றிக்கொண்டிருக்கிறது. இனி, நம் நாட்டுக்கு அதிகளவில் தேவை உடல் நல மருத்துவர்களைக் காட்டிலும் மனநல மருத்துவர்கள்தான்.
தொலைக்காட்சி நிறுவனங்கள் அதிகளவில் தனியார் வசமே இருப்பதால் அவர்கள் கொடுப்பதுதான் செய்தி. அவர்கள் காண்பிப்பதைத்தான் பார்த்தாக வேண்டும்; நம்பவும் வேண்டும். ஒரே செய்தி ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் அவரவர்களின் நோக்கங்களுக்குத் தகுந்த மாதிரி திரிக்கப்படுகிறது.உண்மைச்செய்திகளை அறிந்துகொள்ள மக்கள் அலைய வேண்டியிருக்கிறது. சமூக நோக்குடன் செயல்படவேண்டிய ஊடகங்கள் இன்று ஒரு தொழிலாக, வணிக நிறுவனங்களாக பரிணாமம் அடைந்திருக்கின்றன. இது இந்த நாட்டுக்கும், சமுதாயத்துக்கும் எவ்வளவு பெரிய கேடு,எவ்வளவு பெரிய இழப்பு என்பதை எவரும் உணர்ந்த மாதிரி தெரியவில்லை. ஒரு தேசத்தின் மனநிலையை அறியப் பயன்படும் ஊடகங்கள் மக்களின் மனங்களை கெடுக்கக் கூடியவைகளாக மாறிவிட்டன.
ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் அவரவர்களின் செல்வாக்கை, அதிகாரத்தை வளர்த்துக்கொள்ள அவரவர்களுக்கு சொந்தமான தொலைக்காட்சி மூலம் மக்களின் மேல் அவர்களின் கருத்துக்களை திணிக்கின்றன. தங்களுக்கு சொந்தமாக ஒரு தொலைக்காட்சி நிறுவனம் இல்லாமல் இங்கு எதையும் செய்ய முடியாது என்பதை உணர்ந்து, புதிதாக அரசியல் கட்சித் தொடங்குபவர்களும் நிறுவனங்களைத் தொடங்கிவிடுகிறார்கள். மீதியிருக்கும் தொலைக்காட்சிகளும் பெரு முதலாளிகள், பண முதலைகளின் வணிகக்கூடமாக மாறிவிடுவதால் மக்கள் நடுநிலையான செய்திகளுக்கு அலைய வேண்டியிருக்கின்றது.
ஒன்றிரண்டு நடுநிலையான தொலைகாட்சி நிறுவனங்கள் நேர்மையாக செயல்பட்டாலும் ஆட்சி நடத்துபவர்களை, அரசின் செயல்பாடுகளை விமர்சித்தால், அவர்களின் நிகழ்ச்சிகள் மக்கள் கண்களில் படாதபடி அரசின் கம்பிவடப் பாதையில் இருந்து நீக்கப்படுகின்றன. அந்தத் தடைகளையும் மீறி அப்படிப்பட்டவர்கள் துணிச்சலோடு செயல்பட முனைந்தாலும் அந்த முதலாளிகளின் கல்வி நிறுவனங்களும், மருத்துவ நிறுவனங்களும், மற்றைய வணிகங்களும் பாதிக்கப்படும் என்பதால் அவைகளும் உண்மையைச்சொல்ல தயங்குகின்றன. அரசின் நேர்மையற்ற செயல்பாடுகள் மக்களின் கண்களிலிருந்து மறைக்கப்படுகின்றன. இதனாலேயே காலங்காலமாக ஒரு சில பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் வணிகத் தந்திரத்தைக் கையாண்டு அரசின் கைப்பாவையாக மாறி, அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி சலுகைகளையும் பெற்றுவிடுகின்றன.
இந்த நெருக்கடிகள் ஒருபக்கம் இருந்தாலும், அந்த ஊடகத்தில் பணிபுரிகிறவர்கள் அவர்களின் சாதி, மத, கொள்கைக்கு உட்பட்டவர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இதனால் அவர் களுக்கு வேண்டியவர்களின் செய்திகளே முதன்மைப்படுத்தப்படுகின்றன. நம் நாட்டில் உள்ள ஊடகங்களில் பல அதன் கண்ணியத்தையும், மக்களின் நம்பிக்கையையும் இழந்துவிட்டன. ஆளாளுக்கு பேச்சாளர்களை வளர்த்துவிட்டு தினமும் விவாதம் என்கிற பெயரில், கோழிச்சண்டை போடவைத்து மக்களின் மனதில் இடம்பிடிக்கப் போராடுகின்றனர்.
செய்திகளை நடுநிலையோடு வெளியிடுவதை விட்டுவிட்டு அவரவர்களுக்குச் சாதகமான கருத்துருவாக்கத்தை உருவாக்குவதால், மக்களும் நம்பிக்கையை இழந்து அந்தந்த பத்திரிகையில் இருந்தும், தொலைக்காட்சிகளில் இருந்தும் வெளியேறுகின்றனர்.
இவ்வாறு வெளியேறுபவர்களுக்கு சமூக வலைதளங்கள் வசதியாக அமைந்து விடுகின்றன. ஒவ்வொரு சாதாரண மனிதனும், அவன் பெயரில் ஒரு கணக்கினைத் தொடங்கி அவனால் முடிந்தவரை சில நூறு பேர்களுக்கு அவனது மனநிலையை வெளிப்படுத்துகிறான். நேர்மையான, நடுநிலையான செய்திகளுக்காக மக்கள் இன்று காத்திருக்க வேண்டியது இல்லை. கணினி மூலமாக, கைபேசி மூலமாக தன் குரலை வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டனர். ஊடகங்கள் மூலம் தன் கடமையை, தான் நினைத்ததை சாதிக்க வேண்டும் என அத்துறையைத் தேர்ந்தெடுத்த சிலரும், எதையும் செய்ய முடியாமல் கைகள் கட்டப்பட்டு மாதாந்திரக் கூலிகளாக மனமுடைந்து தங்களுக்கு சோறுபோடும் நிறுவனங்களின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிருக்கும் ஊடகத்துறையினர் சிலர் அங்கிருந்து உடைத்துக்கொண்டு வெளியேறி கணினி மூலம் தங்களின் ஆசையை, கடமையை நிறைவேற்றிக்கொள்கின்றனர். இவர்கள் போன்றவர்களாலேயே இன்று மக்களுக்கு உண்மைச் செய்திகள் கிடைத்துக்கொண்டிருக்கிறது. மக்களை கட்டிப்போட்டு சிந்திக்க விடாமல் வைத்துக்கொண்டிருக்கும் சில ஊடகங்களும் வேறு வழியின்றி அந்தச் செய்திகளையே வெளிடவேண்டியிருக்கிறது.
சின்னச் சின்ன செய்திகளை ஊதி ஊதி பெரிது படுத்தும் ஊடகங்கள் மக்களிடத்தில் அம்பலப்படுத்த வேண்டிய, விவாதத்துக்குள்ளாக்க வெண்டிய செய்திகளை ஒருவருக்கும் தெரியாமல் மறைத்தும் விடுகின்றன. ஊழியர்கள் மூலம் திரட்டப்பட்ட செய்தியை மட்டுமே தாங்கி வருகின்ற பத்திரிகைகளைவிட மக்களின் குரலையும், எண்ணங்களையும், படைப்பாளிகளின் படைப்புகளையும், எண்ணத் தேடல்களையும் தாங்கி வரும் ஊடகங்கள் தான் இன்றைக்குத் தேவை. மக்களை வழி நடத்தவும், கை கொடுக்கவும், அவர்கள் எல்லாவற்றின் மீதும் நம்பிக்கையோடு வாழ்வதற்கும் இன்றியமையாதவைகள் மக்களாட்சியின் நான்குத் தூண்கள்தான். ஒவ்வொன்றின் மீதும் அவர்களின் நம்பிக்கை அறுந்து வருகிறது. எதையும் காசு கொடுத்து வாங்கலாம். காசு இருப்பவர்களுக்கே இவ்வுலகம் எனும் கருத்தும், மதிப்பீடும் அனைத்து மக்களின் மனதிலும் உருவாகிக்கொண்டிருக்கிறது.
மக்களாட்சி அதன் மகத்துவத்தை, வலிமையை இழந்து திருடர்கள் கையில் மாட்டிக்கொண்ட சாவியாக திகழ்கிறது. இந்நிலையில் மக்களிடத்தில் ஒவ்வொன்றையும் தெளிவுபடுத்தி, விழிப்புணர்வூட்டி, நம்பிக்கையை உருவாக்கி உண்மையான மக்களாட்சியை மலரச் செய்யும் பொறுப்பு ஊடகத்துறைக்கு மட்டும்தான் உண்டு.
மக்களுக்குக் கடமைப்பட்டவர்கள், மக்களுக்கு அரணாக இருக்க வேண்டியவர்கள் ஊடகத்தினரைச் சந்திப்பதையே தவிர்க்கும்போது, ஏற்கெனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு சிலரையே ஊடகத்தினர் மீண்டும் மீண்டும் பிடித்து உலுக்கிக்கொண்டிருப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? ஊடகங்கள் தன்னுடைய குரலை இழந்து விடக்கூடாது எனும் கவலை மக்களுக்கு இருப்பதுபோல் எனக்கும் உண்டு.
- சொல்லத் தோணுது…
No comments:
Post a Comment