Monday, 29 June 2015

சொல்லத் தோணுது 40 - மாயமான்!



விளம்பரபற்ற மனிதர்களை கவனிக்க எப்படி ஆட்கள் இல்லையோ, அப்படித்தான் விளம்பரமற்றப் பொருட்களும். ஆனால், தகுதி இல்லாத ஒன்றை கூவிக் கூவி விளம்பரப்படுத்தினால், ஒன்றுக்கும் உதவாத உயிரைக் கொல்கிற பொருட்களையும் மக்கள் மனங்களில் இடம்பிடிக்க வைத்துவிட முடிவும். பணம் இருந்தால் யாரையும், எதையும் விளம்பரப்படுத்திக் கொள்ளலாம். எந்தப் பொருளையும் மக்கள் விழுந்தடித்துக்கொண்டு ஓடி வாங்கும் அளவுக்கு பித்து பிடிக்க வைத்துவிடலாம். பணம் இருந்தால் எந்த விளையாட்டையும் விளம்பரப்படுத்தி அனைவரையும் ஈர்த்துவிடலாம் என்பதெல்லாம் நடைமுறையில் நாளுக்கு நாள் நாம் காணும் காட்சிகள்.
உணவும், நீரும் மனிதனுக்கு எவ்வளவு முக்கியமோ அவ்வாறு முக்கியமானதுதான் விளையாட்டும். ஆனால், இளரும் தலைமுறைகள் விளையாட்டை விளையாடுவதை விட்டுவிட்டு, மற்றவர்கள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டே இருக்கின்றன.
கிரிக்கெட் எனும் மட்டைப் பந்து விளையாட்டு எனக்கு அறிமுகமானபோது என்னை அது ஈர்க்கவே இல்லை. அதற்கு தரப்படுகிற முக்கியத்துவத்துக்குரிய தகுதி அந்த விளையாட்டுக்கு இல்லை என்பதும், அதற்கான அதிரடி விளம்பரங்களும், பணத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களை கண்ணி வைத்துப் பிடிக்கும் அதன் மாய வலையில் ஒளிந்திருக்கும் அரசியலைப் புரிந்து கொண்டதாலும், இன்று வரை அந்த மட்டையை நான் தொட்டதுகூட இல்லை. என் மகன்களுக்கும் இதில் ஈடுபாடு இல்லாமல் போனதும் எனக்கு வியப்புதான்.
இந்திய சாலைகளில் நீங்கள் எங்கு பயணம் செய்தாலும் எல்லா இடங்களிலும் காணக்கூடியது, திறந்த வெளிகளில் பலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பதையும், ரியல் எஸ்டேட் எனும் பெயரில் விளைநிலங்களை முடக்கி, நிலங்களில் வேலியமைத்து, பல வண்ணங்களைத் தீட்டி வைத்திருப்பதையும் காணலாம்.
ஆங்கில மொழியையும், அவனது கலாச்சாரத்தையும், அவனது விளையாட்டையும் நம்மேல் திணித்து, தலைமுறை தலைமுறையாக பல நூற்றாண்டுகளாக நம் தேசிய இனங்கள் பேசி வந்த மொழியையும், நமது உணவு மற்றும் கலாச்சாரத்தையும், நமது அடையாளத்தையும் இன்று மதிப்பிழக்கச் செய்துவருவது குறித்த சிந்தனையோ, கவலையோ எவருக்கும் இல்லை.
தொடக்கத்தில் வானொலி மூலமும், பின்னர் தொலைக்காட்சி மூலமாகவும் விளம்பரப்படுத்தப்பட்ட இந்தக் கிரிக்கெட், நான்காயிரம் ஆண்டுகளுகு முன்பிருந்தே விளையாடி வந்த நம் விளையாட்டுகளை நாற்பதே ஆண்டுகாலத்தில் நம்மிடம் இருந்து விரட்டியடித்துவிட்டது.
கிரிக்கெட் என்பது எல்லாவற்றையும் போல் அதுவும் ஒரு விளையாட்டு, அதனை விளையாடுபவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தான் என்பதை மறக்கடித்து, 'அதுதான் சிறந்த விளையாட்டு' என்பதுபோலவும், அவர்கள்தான் சிறந்த விளையாட்டு வீரர்கள் எனவும், தெய்வங்களுக்கு இணையாக போற்றும்படியான மனநிலையை விதைத்துவிட்டனர். இந்த விளையாட்டின் மூலம் பணம் குவிக்கும் அந்த வீரர்களுக்கோ, அவர்களை இயக்கும் பன்னாட்டு வணிக நிறுவனங்களுக்கோ மட்டுமில்லை; இந்த ஊடகங்களுக்கும் பெரும் பொறுப்பு உள்ளது.
எல்லா நாடுகளிலும் ஏன் கிரிக்கெட் இல்லை? எல்லா நாடுகளிலும் ஏன் இந்த விளையாட்டை விளம்பரப்படுத்தவில்லை. ஏனெனில், சில பொருட்களை உற்பத்தி செய்து விற்கும் முதலாளிகளும், தரகர்களும் தங்களின் பொருட்களை மக்கள்தொகை அதிகம் உள்ள நாடுகளில்தான் விற்க முயற்சிப்பார்கள். அந்த வகையில் அனைத்து பன்னாட்டு முதலாளிகளின் பார்வையில் இந்தியா முதல் வரிசையில் நிற்கிறது. அவர்களுடைய பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு கிரிக்கெட் மூலமாக இந்தியாவுக்குள் நுழைந்தார்கள்.
கிரிக்கெட் முதலில் அந்த வீரர்களுக்கு விளம்பரம் தேடித் தரும். அதன்பின், அவர்கள் பலபொருட்களுக்கு விளம்பரம் தேடித் தருவார்கள். இது இரண்டையும் இணைத்து முதலாளிகள் தங்களின் தொழிலுக்கு மூலதனமாக்கி நம்மை முட்டாளாக மாற்றுவார்கள்.
கிரிக்கெட் இந்திய மக்களின் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் விளையாட்டாகவே இன்று மாறிவிட்டது. இந்திய அணியின் தோல்வியினால் பாதிக்கப்படாதவன் நாட்டுப்பற்று இல்லாதவனாக கருதப்படுகிறான்.
கிரிக்கெட் வீரர்களாகும் கனவில் காட்டிலும் மேட்டிலும் சாலைகளிலும் விளையாடி வாய்ப்புக்காக காத்துக் கிடந்து, வஞ்சிக்கப்பட்டு, படிப்பு கெட்டு வாழ்க்கையை இழந்த லட்சக்கணக்கான இளைஞர்களின் நிலை இன்னும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. கிரிக்கெட் மாயை, மற்றவர்களை ஏமாற்ற நடத்தப்படும் கண்ணாமூச்சி என எத்தனைப் பேருக்குத் தெரியும்?
இது ஒரு நவீன சூதாட்டம். பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் வியாபாரச் சந்தை. அவர்களுக்கு மட்டுமே பயன்படும் விளம்பரக் கொண்டாட்டம். ஆரவாரத்துடனேயே அதனைப் பார்ப்பவர்கள் அனைவருக்கும் போடப்படும் விளம்பர விஷ ஊசி என்பதெல்லாம் இன்னும் புரியாமல் இருப்பதுதான் கொடுமை.
கிரிக்கெட் வீரர்கள் குடிக்கிற குளிர்பானத்தை எல்லாம் ரசிகர்களும் பொதுமக்களும் ஏன் விழுந்து விழுந்து குடிக்கிறார்கள். அதில் பூச்சிக் கொல்லி இருந்தால் என்ன? பாம்பு விஷம் இருந்தால் என்ன? அதனைக் குடிப்பதைப் பெருமையாக நினைப்பதையும், கிரிக்கெட்தான் உயர்ந்த விளையாட்டு என நினைப்பதையும் எப்போது மாற்றிக் கொள்வார்கள்?
'விளையாட்டு என்பது உடலுக்கு உறுதி; உள்ளத்துக்கு பலம்' என்பதை மாற்றி, விளையாட வேண்டியவர்களை எல்லாம் விளையாடுபவர்களைப் பார்த்தால் போதும் என்று மாற்றியிருக்கிறார்களே, இதுவொன்று போதாதா கிரிக்கெட்டின் தரத்தை உணர்ந்து கொள்ள.
வெற்றி, தோல்விகளை முன்கூட்டியே முடிவு செய்துவிட்டு விளையாடும் விளையாட்டு இதைத் தவிர உலகத்தில் வேறெதுவும் இல்லை. 'நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன்; நீ அழுகிற மாதிரி அழு' என்பது நாடகம், சினிமாக்களில் மட்டும்தான் நிகழும். அதை முதன்முறையாக விளையாட்டில் நுழைத்து, கோடிக்கணக்கான ரூபாய்களைக் குவித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
ஐந்து நாட்கள் வீரர்கள் விளையாடுவதைப் பார்க்க ரசிகர்களுக்குப் பொறுமையில்லை. எப்போதாவது விழும் விக்கெட்டுகளையும்; ஒன்றிரண்டு முறை மட்டுமே விழும் சிக்ஸர்களையும் பார்த்து ரசிகர்கள் சோர்ந்து போனார்கள். இதன் காரணமாக - கிரிக்கெட்டின் புகழ் சரிவதை மீட்க, உடனே அதை ஒருநாள் போட்டியாக மாற்றி புத்துயிருட்டினார்கள். ஒவ்வொரு நாட்டு அணிக்கும் தனித் தனி வண்ண ஆடைகள், நிமிடந்தோறும் பரபரப்பு என திட்டமிட்டு புகுத்தப்பட்டது. அதனாலலேயே கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு என்பதைக் கடந்து, ஒரு வியாபாரமாக பரிணாமம் அடைந்துள்ளது.
பணம் கொழிக்கும் எந்தத் துறையிலும் அரசியலும், ஊழலும், முறைகேடுகளும் நுழைவததைப் போல் கிரிக்கெட் வாரியமும் விளையாட்டுக்குத் தொடர்பே இல்லாத அரசியல்வாதிகளும் பெரு முதலாளிகளும் கூட்டணி அமைத்து வெற்றிகரமாக நடத்தப்படுகிறது.
ஒரு முக்கியப் போட்டியில் வெற்றிபெற்றுவிட்டால் போதும் நடுவண் அரசும், மாநில அரசுகளும் அந்த வீரர்களிடத்தில் பாசமழை பொழிந்து மக்களின் வரிப் பணித்தில் இருந்து லட்சக்கணக்கான பணத்தையும் சொகுசு பங்களாக்களையும், உயர்ந்த விருதுகளையும் பரிசளிக்கிறார்கள். இப்படியான புகழைக் கொண்டு கோடி கோடியாக பணத்தை அந்த வீரர்கள் சேர்த்துவிடுவதைக் காணும் ரசிகர்கள், தாங்களும் அவர்களைப் போல மாறும் கனவின் மாயவலையில் அகப்பட்டுக் கொள்கிறார்கள்.
எப்போதுமே உடல் உழைப்பு செய்து வாசிக்கும் தவில், நாதஸ்வரம் போன்ற இசைக் கருவிகளை விட்டுவிட்டு வெறும் விரல்களால் இயக்கும் இசைக் கருவிகளை மட்டுமே இசைப்பவர்களும், ஒரு சில இசுலாமியர்களையும் தவிர்த்து வேறு எவரும் இந்த அணியில் எளிதில் இடம்பெற்றுவிட முடியாது. இது புரியாத இந்த இளைஞர் கூட்டம் இன்னும் ஏமாந்து கொண்டே இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
ஒருநாள் போட்டியும் சலித்துப் போய், இப்போது 20:20 எனப்படும் 20 ஓவர் போட்டிகளைக் கொண்டு வந்துள்ளனர். இந்த 20 ஓவர் போட்டிகள் இன்னும் மிகப்பெரிய சூதாட்டத்தின் ஆடுகளமாக உருவெடுத்துள்ளது. ஊழல் புரையோடிப் போன இந்த கிரிக்கெட்டுக்கு இந்த அரசாங்கங்கள் ஏன் இவ்வளவு முக்கியத்தும் கொடுக்கின்றன?
40 ஆண்டுகளுக்கு முன் நாம் விளையாடிக்கொண்டு இருந்த விளையாட்டுக்கள் எல்லாம் விளையாட்டுக்கள் இலையா? இப்படியேத்தான் அடுத்தடுத்து தலைமுறைகளும் இதனைத் தொடரப்போகிறதா?
ஒரு குற்றத்தை தனியாகச் செய்தால் அது தவறு; அதையே கூட்டமாக முறைப்படுத்தி செய்தால் அது வியாபாரம். விளையாட்டு எனும் போர்வையில் வியாபாரம் நடத்தி, நம் மக்களையும் சோம்பேறிகளாக மாற்றும் இந்த 'சூதாட்ட' விளையாட்டு ஒரு 'மாயமான்' என்பதை எப்போது நாம் உணரப் போகிறோம்?
- சொல்லத் தோணுது...

Saturday, 20 June 2015

சொல்லத் தோணுது 39: விதையில்லா விதைகள் - தங்கர் பச்சான்


இப்படி ஓர் அமைதியான மக்களை உலகத்தில் எங்குமே பார்த்திருக்க முடியாது. எதற்கும் வாய் திறக்காத, எதைக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்கிற, எதையும் வேடிக்கையாக மட்டுமே பார்க்கிற சமூகம் எங்குமே இருக்க முடியாது. ஒவ்வொருவரும் தனித் தீவில் வளர்க்கப்பட்ட தனி மனிதன்போல எந்தப் பொறுப்புணர்வும், எந்தக் கடமை உணர்வும் இன்றி, தன் குடும்பம், தான் மட்டுமே வாழ்க்கை என வாழப் பழகிவிட்டான்.
தனது கடமையும், பொறுப்பையும் உணராத சமூகத்தில்தான் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எதைக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்கிற (விலையில்லாப் பொருட்கள் எனும் பெயரில்) கேள்வி கேட்காத, போராட்ட குணமில்லாத, உழைப்பு மற்றும் உற்பத்தி பற்றி உணராத ஒரு சமூகம் உருவாக்கப்பட்டுவிட்டது. எதற்காக இந்த விலையில்லாப் பொருட்களை பெறுகிறோம்? எதற்காக கொடுக்கிறார் கள்? அன்றாடம் பயன்படுத்தும் இந்தப் பொருட்களை நாம் உழைத்து வாங்கிக் கொள்ள முடியாதா என குழந்தைகளுக் குத் தெரிவதில்லை. அதனை அவர்களுக் குக் கூறுவதற்கு எந்தப் பெற்றோருக்கும் துணிச்சலும் கிடையாது. உழைத்துப் பெறாத பொருட்களைப் பெற்று இங்கு உழைப்பின் மதிப்பை குழிதோண்டிப் புதைத்துவிட்டனர்.
இப்படிப்பட்ட பெற்றோர்கள்தான் குழந்தைகளை உருவாக்குகின்றனர். இவர்களைப் பார்த்துதான் இந்தக் குழந்தைகளும் வளர்கின்றனர். இவர்களைக் கற்பதற்கு அனுப்பப்படுகிற கல்விக்கூடங்களும் வாழும் முறைகளைக் கற்றுத் தருவதில்லை. அங்கிருந்து உருவாகிறவர்கள் பின் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள்?
ஒவ்வொரு மனிதனுக்கும் குடும்பம் தான் ஆசிரியர். அவன் பயிலும் கல்விக் கூடம்தான் பல்கலைக்கழகம் . பெற்றோர்களும் ஆசிரியர்களும் இதன் பொறுப்பை உணர்ந்திருக்கிறார்களா? இன்று ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளை எதிர்கால முதலீடாகப் பார்க்கின்றனர். பணம் காய்க்கும் மரமாக மாற்ற ஆசை நீரை ஊற்றி வளர்த்து, அரசாங்கத்தின் அல்லது தான் பணிபுரியும் நிறுவனத்தின் அடிமைகளாக மாற்றுகின்றனர். நிறுவனங்களுக்கு நல்ல ஊழியனாகவும், எதைப் பற்றியும் கண்டுகொள்ளாதவனாக வளர்வதே அடிப்படைத் தகுதி என நினைக்கிறார்கள்.
பெரும்பாலான பெற்றோர் தங்களை ஒரு வேலைக்காரனாகவே நினைத்துக்கொண்டு குழந்தைகளை அன்றாடப் பணிகளைக்கூட செய்யவிடாமல், ஓடி ஓடிச் சென்று செய்து அவர்களைப் பொறுப்பவர்களாகவும், தன்னம்பிக்கை அற்ற சோம்பேறிகளாகவும் மாற்றி விடுகின்றனர். தங்கள் பிள்ளை வீட்டில் எப்படி பின்பற்றுவானோ, அதையே தானே சமூகத்திலும் பின்பற்றுவான் என்பதை மறந்துவிடுகின்றனர். அதுவும் ஒற்றைக் குழந்தையாக வளர்ப்பவர்களின் நிலைமை எல்லாவற்றையும் விடக் கொடுமை. அதிக செல்லம் கொடுத்து அவர்களைத் தங்கள் வாழ்க் கையாகவே பார்க்கின்றனர் பல பெற்றோர்.
அப்படி வளர்கிற பிள்ளைகள் பின்னாளில் தங்களது பெற்றோர்களையே பார்த்துக்கொள்ளாதவர்களாக, சுரண்டுபவர்களாக, மதிக்கத் தெரியாதவர்களாக, ஒட்டுண்ணிகளாகவே வாழ்க்கையை நடத்துகின்றனர்.
எந்தப் பெற்றோரும் குழந்தைகளிடம் தங்களின் வருமானத்தை, செலவுகளை சொல்வதே இல்லை. குடும்ப விவரங்களைப் பகிர்ந்துகொள்வதும் இல்லை. வீட்டை விட்டு இவர்கள் வெளியேறும் வரை குழந்தையாகவே நடத்துகின்றனர்.
பெற்றோர்கள் மற்றவர்களிடத்தில் நடந்துகொள்ளும் முறை, நண்பர்கள், உறவினர்களிடத்தில் பேசும்முறை, சமுதாயப் பணிகளில் தங்களை இணைத்துக்கொள்ளும் முறை போன்றவற்றை பார்த்துத்தான் குழந்தைகள் வளர்கிறார்கள். எப்போதுமே குடும்பத்தில் ஒரு சிக்கல் வரும்போது அதை தீர்ப்பதுடன், என்ன வழிவகைகளைக் கையாண்டு அந்தச் சிக்கலைத் தீர்த்தோம் என்பதை குழந்தைகளுக்குக் கற்றும் கொடுப்பதும் முக்கியம்.
வெளிநாடுகளில் ஒவ்வொரு குழந்தையிடமும் தன்னம்பிக்கை வளரும் விதத்தில்தான் வளர்க்கிறார்கள். 18 வயது வரைதான் குழந்தைகளுக்கு வேண்டியவற்றைச் செய்து கொடுப்பார்கள். பின்னர் அவரவர் பணிகளை அவரவர்களே செய்துகொண்டு, அவரவரும் அவரவர் வாழ்க்கையைப் பார்த்துக் கொள்ள வேண்டும். 18 வயதுக்குப் பின் ஓய்வு பெறும் வயது வரை ஒருவர்கூட சொந்தமாக சம்பாதிக்காமல் இருக்க முடியாது. மற்றவர்களின் உழைப்பில் உடல் வளர்த்து, வாழ்க்கையைக் கழிக்க முடியாது.
நம் நாட்டில்தான் ஒருவன் உழைப்பில் குடும்பமே உட்கார்ந்து உண்ணுவதெல்லாம். அங்குள்ள அரசாங்கம் வீடு வீடாகச் சென்று கணக்கெடுத்து, ஒவ்வொருவரின் கல்வித் தகுதி மற்றும் உடல் தகுதிக்கு ஏற்ற வேலையை வழங்கி, அவர்களை உழைக்கச் செய்து வருமானம் உடையவர்களாக மாற்றும். இங்கிருப்பதைப் போல் வீட்டிலேயே பலரை முடக்கிப்போட்டு, வீட்டுக்கு வீடு தொலைக்காட்சி, மாவாட்டும் இயந்திரம் போன்றவற்றை இலவசமாக கொடுத்து, வாக்களிக்க மட்டும் நீங்கள் வந்தால் போதும் என்று சொல்வது இல்லை. வாக்களிக்க வருபவர்களுக்கு பணம் கொடுக்கும் ‘சிறப்புத் திட்டங்களும்’ உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லை. அதனால்தான் வாக்குரிமை பெறுவதற்கும் அதனைப் பதிவதற்கும் இங்கே அவ்வளவு போட்டி.
இன்றைய நாளில் குழந்தைகளின் கையில் எப்போதும் கைப்பேசி அல்லது கணினிதான். மனிதர்களைப் பார்ப்பதே இல்லை. அவர்களுடன் பேசுவது இல்லை. இந்நிலையில் எவ்வாறு, எங்கிருந்து மனித உறவுகளை இவர்கள் கற்றுக்கொள்ள முடியும்?
இன்றைய அனைத்து பிரச்சினைகளுக்கும் மக்களின் மவுனமே காரணம். இன்று அரசியல் தொடங்கி, கல்வி, ஊடகங்கள் வரை அனைத்திலும் ஒடுக்கப்பட்டவர்களின் உண்மை நிலை மறுக்கப்படுகிறது அல்லது மறைக்கப்படுகிறது. ஒவ்வொரு மனிதனையும் சமூக மனித னாக மாற்ற வேண்டிய பொறுப்பு, குடும்பம் மற்றும் கல்விக்கூடங்களுக்கே உண்டு. ஆனால், இவை இரண்டுமே சரியில்லாததால்தான் மனிதர்கள் மனிதத் தன்மையற்றவர்களாக, சமூகப் பொறுப்பற்றவர்களாக இருக்கிறார்கள். ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் குழந்தைகளும் தாங்கள் ஏமாற்றப்படுவதை, நசுக்கப்படுவதை உணராதவர்களாக; விடுதலையை அறியாத அடிமைகளாக; ஆதிக்க ஆசை கொண்ட அடிமைகளாக வளர்க்கப்படுகின்றனர்.
‘உண்மையான சுதந்திர மனிதன் எப்படி இருப்பான்’ என்பது இன்றைய இளைஞனுக்குத் தெரியவே தெரியாது. ஓர் அதிகாரியாக, அரசு ஊழியனாக, முதலாளியாக மாறுவது மட்டும்தான் விடுதலை என நினைக்கிறான். இன்று ஒவ்வொருவரும் இதுபோல் மாறியதால்தான் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் குணமாகவே இந்த மவுனம் உருவாகியுள்ளது.
தனிமனிதர்கள், குடும்பங்கள், சமூக அமைப்புகள் ஆகியவற்றின் வாழ்க்கை முறையையும், அன்றாட நடவடிக்கை களையும் அறியாத ஒருவன் ஒரு சாதாரண மனிதனாகக்கூட உருவாக முடியாது. இங்கு பெற்றோர்கள் உழைக்கவில்லை அல்லது உழைக்க வழியில்லை. அதற்கான காரணமும் இவர்களுக்குத் தெரியவில்லை. உழைப் பின் அவசியத்தை உணர்த்தாமல் ‘இலவசமாக கிடைக்காதா’ என ஏங்க வைக்கும்போது சமுதாயத்தின் முக்கியத்துவம் உணர்த்தப்படாமல் போகிறது. வெறும் அடிமைகளாகவே பிறந்து, அடிமைகளாகவே வாழ்ந்து, அடிமைகளாகவே மடிந்து ஒருவித மவுன கலாச்சாரத்தை உருவாக்கிவிடுகிறார்கள்.
கூட்டுச் சமூக வாழ்க்கையின் மூலம் சமூகத்துக்கு நாம் திருப்பிச் செய்ய வேண்டிய கடமைகளை, பொறுப்புகளை உணரச் செய்ய வேண்டியது பெற்றோர்களும், ஆசிரியர்களும்தான். நம்மைச் சுற்றி நிகழும் திருட்டு, கூட்டுக் கொள்ளை, ஏமாற்று, பித்தலாட்டம், முறைகேடு, அடாவடித்தனம், அநீதி பற்றியெல்லாம் நம் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லாமல், 500-க்கு 499 மதிப்பெண்களை 41 பேர் பெறுகிற புத்தகப் பூச்சிகளாக மட்டுமே மாற்றிக் கொண்டிருக்கிறோம்.
எதையும் கேள்வி கேட்காமல் வளர்க்கப்படும் குழந்தைகள், இந்த சமுதாயத்தில் எந்த மாற்றத்தையும் செய்ய முயற்சிக்காத மவுன கலாச்சாரத்தையே விதைப்பார்கள். இவர்கள் தான் இன்றும் நாளையும் நம் விளைச்சல்கள். ஆம்… இவர்கள்தான் நம் விதையில்லா விதைகள்!

- இன்னும் சொல்லத் தோணுது!
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: thankartamil@gmail.com

சொல்லத் தோணுது 38: மீண்டும் ‘அ’வில் இருந்தா? - தங்கர் பச்சான்


நானும் ஒவ்வொரு வாரமும் எழுதுகிறேன். நீங்களும் படிக்கிறீர்கள். இதன்மூலம் எங்கேயாவது ஒரு எள்ளளவு மாற்றமாவது நிகழ்ந்திருக்கிறதா? வேலையில்லாமல் ஒருத்தன் எழுதுகிறான், வெட்டிக் கூட்டம் அதைப் படிக்கிறது; பாவம் இவர்கள் என சிலர் நினைக்கலாம். எல்லாவற்றையும் கேட்டு மறந்துவிடும் கூட்டம், கேட்டும் எந்த மாற்றத்தையும் செய்யத் துணியாத அதிகாரவர்க்கம்; இதுதான் தற்கால இந்தியா!
‘‘நீ தொடர்ந்து எழுத வேண்டுமா? மக்கள் வீதியில் இறங்கிப் போராடாத வரை இதெல்லாம் வீண் வேலை’’ என எனது நண்பர்கள் என்னைத் திட்டி, என் பேனாவைப் பிடுங்குகிறார்கள். உணர்ச்சியோடு வாழ்வதால் தொடர்ந்து நான் எழுதுகிறேன்.
நேற்றுவரை நாம் சாப்பிட்டு மகிழ்ந்த உணவுகள் இன்று வேதிப் பொருட் கள் கலந்தவை எனக் கூறினால் எப்படி இருக்கும்? நூடுல்ஸ் எனும் சீனாக்காரன் உணவு, இன்று நம் ஒவ்வொருவரின் வீட்டுக்குள்ளும் வந்துவிட்டது. நாஞ்சில் நாடன் எழுதியது மாதிரி நூடுல்ஸ் வாங்கி, அதில் சாம்பார் ஊற்றி பிசைந்து சாப்பிடும் கிராமத்து மனிதர்களை நானும் கண்டிருக்கிறேன்.
இங்கு ஒரு சிறிய பொருள்கூட அரசு அனுமதியின்றி விற்பது சட்டப்படி குற்றம். முறைகேடுகளைக் கண்டுபிடித்தால் கடும்தண்டனை உண்டு. லட்சக்கணக் கான பொருட்கள் விற்பனையில் உள்ள இவ்வளவு பெரிய நாட்டில், ஒரேயொரு குற்றவாளியாவது கடும்தண்டனைக்கு உட்பட்டிருக்கிறாரா?
அரசாங்கம்தான் கலப்படத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பில் இருக்கிறது. சட்டமும் அதன் கையில்தான் இருக் கிறது. ஏன் எதுவும் நடக்கவில்லை? நடக்கவில்லை எனச் சொன்னால் நாம் விவரம் இல்லாதவர்களாகிவிடுவோம். நடக்கிறது. அதாவது, அடிக்கிற மாதிரி அடிப்பார்கள்; அழுகிற மாதிரி அவர்களும் அழுவார்கள். தாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை மக்களிடத்தில் உறுதிபடுத்த, இப்படி வீதியோரக் கடைகளில் சோதனை நடத்தி, செய்தி அறிவிப்பார்கள். அதனைப் பார்த்து நாம் நடவடிக்கைகள் நடைபெறுவதாக நம்ப வேண்டும்.
தரமற்றப் பொருட்களைத் தடை செய்யும் உணவு பாதுகாப்பு அதிகாரி கள் கையூட்டு வாங்கிக் கொண்டு, மக்களின் எதிரிகளாக மாறி நெடுநாட் களாகிவிட்டன. இவர்களுக்குத் தெரி யாமல் எந்தக் கலப்படப் பொருளும் இங்கே விற்க முடியாது. இன்று அச்சமின்றி எந்தப் பொருளையும் வாங்க பயமாக இருக்கிறது.
இந்தப் பொருட்களை உற்பத்தி செய்ய மூலக் காரணியாக இருக்கும் அறிவியலாளன், அதன் முதலாளி, அதனை விற்பவன், வேண்டியதைப் பெற்றுக் கொண்டு கண்டும் காணாமல் ஒதுங்கிக்கொள்ளும் அந்தத் துறை அதிகாரிகள், அதனோடு தொடர்புடைய அமைச்சகம் எல்லாமும் ஒவ்வொரு நொடியும் நம்மை கொன்றுகொண்டே இருக்கிறது.
எனது நண்பனின் அண்ணன் சிறு நகரத்தில் உள்ள ஒரு கடைக்கு வீட்டுப் பொருட்கள் வாங்கப் போயிருக்கிறார். அங்கே எல்லா பொருளுமே காலாவதி யான பொருளாக இருந்திருக்கிறது. ஒருமணி நேரத்தில் அந்தக் கடைக்கு பூட்டுப் போடச் செய்துவிட்டார். உடனே அவருக்கு பல நிலைகளில் இருந்து கொடுக்கப்பட்ட அழுத்தமும், மன உளைச்சலும் யாருக்குத் தெரியும்? அவரால் அந்தக் கடையை 6 மணி நேரம்தான் மூடி வைக்க முடிந்த‌து. இந்தப் பிரச்சினையில் இறுதியாக தண்டிக் கப்பட்டவர், பொருட்களை விற்பனை செய்த அந்தக் கடைக்காரர் இல்லை. தடை செய்த நண்பரின் அண்ணன்தான்!
ஒரே நாளில் மதுராந்தகத்தில் பெப்சி குளிர்பானத் தொழிற்சாலைக்கு பூட்டு போட்டு நான்கு மாநிலங்களில் விற்பனையை நிறுத்தி, தடை செய்ய உத்தரவிட்ட அதிகாரி சகாயம் இரவோடு இரவாக பணிமாற்றம் செய்து கடைநிலைப் பணிக்கு தள்ளப்பட்டது போல் நண்பரின் அண்ணனும் தள்ளப் பட்டார்.
சிக்கல் வெளிவந்த உடனே தமிழக அரசு 5 நிறுவனங்களின் நூடுல்ஸ்களை தற்காலிகமாக தடை செய்துள்ள‌து. அப்படியென்றால் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிற மற்ற எல்லாப் பொருட்களும் பாதுகாப்பானவை என கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறதா? இத்தனை நாட்களுக்குள் விற்பனைக்கு உள்ளான அனைத்துப் பொருட்களின் தரமும் உறுதி செய்யப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவிக்குமா?
தரமற்ற உணவுப் பொருட்களினால் கல்லீரல், இரைப்பை, மண்ணீரல், சிறு குடல், பெருங்குடல், நுரையீரல், இதயம், நரம்பு மண்டலம் போன்றவைகள் பாதிக்கப்பட்டு பக்கவாதம் மூளைச் செயலிழப்புகூட வர வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மஞ்சள் மற்றும் துவரம் பருப்பில் மஞ்சள் நிறம் வருவதற்காக மெட்டா னில் என்ற‌ வேதிப் பொருள் சேர்க்கப் படுகிறதாம். சர்க்கரையில் சுண்ணாம்புத் தூள், கொத்தமல்லித் தூளில் குதிரைச் சாணம், கருப்பு வெல்லத்தை வெள்ளை யாக மாற்ற ஹைட்ரோ குளோரிக் அமிலம், பாக்குத் தூளில் மரத் தூள், பாலில் சோப்புத் தூள் மற்றும் காஸ்ட்டிக் சோடா, ஆப்பிள் பழத்தின் மேல் மெழுகு என பட்டியல் முடியவே முடியாது. தரமற்ற கலப்படப் பொருட்களை ஆய்வு செய்தால் ஒரே ஒரு கடையைக்கூட திறந்து வைத்திருக்க முடியாது. ஒவ்வொரு நாளும் நம் வயிற்றுக்குள் போய்க் கொண்டிருக்கும் கோடிக் கணக்கான கறிக்கோழிகளை உருவாக்கப் பயன்படுத்தும் நஞ்சுப் பொருட்களைப் பற்றி சிந்தித்து, அதற்குரிய‌ கட்டுப்பாட்டை விதிக்க, யாருக்கு இங்கே நேரமிருக்கிறது. ஒரு மாம்பழத்தைக்கூட அச்சமின்றி உண்ணும் பாதுகாப்பை அளிக்க அரசாங்கத்தால் முடியவில்லை.
பான் மசாலாவுக்கு இங்கே தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனை விற்காத கடைகள் உண்டா? இதெல்லாம் இந்த அதிகாரிகளுக்குத் தெரியாதா? ஊழல் பணத்தில், லஞ்சப் பணத்தில் உயிர் களைக் கொல்லும் இந்த அயோக்கி யர்கள்தான் மக்களைக் காப்பாற்றுவார் கள் என்று எத்தனை நாளைக்குத்தான் நம்பிக் கொண்டிருக்கப் போகிறோம்? வேண்டியவர்களுக்கு வேண்டியதைக் கொடுத்துவிட்டு, யாரும் எதையும் செய்து கொள்ளலாம். இதற்குத்தான் கால்கடுக்க வரிசையில் நின்று வாக்களிக்கிறோம். அதன் பெயர்தான் நாம் மார்தட்டிக் கொள்ளும் ஜனநாயகம்!
குளிர்பான நிறுவனம்தான் தண் ணீரை உறிஞ்சி விவசாயத்தைக் கெடுக்கிறது. அதற்காகத்தான் அந்தக் கதை நாயகனும், விவசாயிகளும் போராடுகிறார்கள் என்று அந்தப் படத்தைப் பார்த்துப் பாராட்டிக் கொண்டே, அதே படத்தின் இடைவேளை யில் கொஞ்சமும் வெட்கமில்லாமல் அதே குளிர்பானத்தை வாங்கி சுவைக்கிறோம். அவ்வாறு நடிப்பவர்களுக்கு கோடிக் கணக்கில் பணம். அந்தக் குளிர்பான விளம்பரத்தில் நடிப்பவருக்கு பணம். இரண்டையும் பார்த்துக் கொண்டிருக் கும் சமூகத்துக்குக் கிடைத்த புதிய‌ செய்திதான் - நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்ததற்காக நடிகர்களின் மேல் வழக்கு என்பது. ஒருவேளை பரிசோதனை எல்லா பொருட்களின் மீதும் நிகழ்த்தப்பட்டால் யார் யார் மீதெல்லாம் வழக்குகள் தொடர வேண்டியிருக்கும்? அந்தப் பட்டியலில் மக்களைத் தவிர அரசாங்கம், அதிகாரிகள், விற்பனையாளர்கள் என எல்லோருமே இருப்பார்கள்.
இதற்கு ஒரே தீர்வு, மீண்டும் ஒரு விடுதலைப் போரை சிப்பாய்க் கலகத்தில் இருந்து தொடங்குவதுதான்!

- சொல்லத் தோணுது…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: thankartamil@gmail.com

Sunday, 7 June 2015

சொல்லத் தோணுது 37: கண்ணுக்குத்தெரியும் கடவுள்கள் - தங்கர் பச்சான்



நாட்டில் உள்ளத் துறைகளிலேயே முதன்மையானதாக, முக்கியமானதாக கருதப்படுவது ஊடகத்துறை. மக்களாட்சியில் வாழ்கின்ற மக்களுக்கு வழிகாட்டியாகவும், சமூகத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லக்கூடிய பொறுப்பும் கடமையும் அவற்றுக்கு உண்டு. நாம் தேர்ந்தெடுத்த அரசு நமக்கு அரணாக இருக்க வேண்டியதுபோல் போல் ஊடகங்களும் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் அரணாக இருக்க வேண்டும். கற்றவர்களும் பாமரர்களும் நாட்டு நடப்புகளை அறிந்துகொள்ள ஊடகங்களையே நம்பி இருக்கிறார்கள்.
ஒவ்வொரு துறையின் மீதும் மக்கள் நம்பிக்கையை இழந்து கொண்டு வருவதுபோல் ஊடகங்களின் மீதும் இழந்து வருவது பெரும் கவலைக்குரியது. சமூகத்தின் சீர்கேடுகளை அலசும் ஊடகங்கள் தாங்கள் வழி தவறிச் சென்று கொண்டிருப்பதைப் பற்றி உணர்ந்த மாதிரியே தெரியவில்லை.
இயற்கை வளங்கள் சீரழிகின்றன, அரசியல்வாதிகள் தங்களின் நெறிமுறைகளைத் தவறவிட்டுவிட்டார்கள், அரசியல் தொழிலாக மாறிவிட்டது, மக்களை மது சீரழித்துக்கொண்டிருக்கிறது, கல்வி வணிகத் தொழிலாக மாறிவிட்டது என மக்களிடத்தில் கவலைப்படும் ஊடகங்களுக்கு மக்களின் கவலை புரிந்தனவா எனத் தெரியவில்லை.
திரைப்படம், தொலைக்காட்சி, பத்திரிகை இவை எல்லாமே ஊடகங்கள்தான். இவைகள் ஒன்றுக்கொன்று வீரியத்தில் குறைந்தவைகளல்ல. அனைத்து கலைகளையும் உள்வாங்கிக் கொண்ட திரைப்படம் எளிதில் அனைத்து மக்களின் மனதிலும் புகுந்துவிடக்கூடியது. அதற்கு படித்தவர்கள், பாமரர்கள், அதிகாரத்தில் இருப்பவர்கள், பணக்காரர்கள், ஏழைகள் என்கிற பாகுபாடு தெரியாது. அனைவரின் சிந்தனையையும் ஒருங்கமைத்து அவர்களின் நிலையை மறந்து சிந்திக்க வைக்கும் ஆற்றல் படைத்தது. ஆனால், அப்படிப்பட்டக் கலை முறையாகப் பயன்படுத்தப்படாமல் கையில் கிடைத்தவர்களெல்லாம் அதனை எடுத்துக்கொண்டு கையாண்டதினால், உயிரைத் தக்க வைத்துக்கொள்ள போராடிக் கொண்டிருக்கிறது. தற்போது பேய்களின் பிடியில் தமிழ்த் திரைப்படக் கலை சிக்கிக்கொண்டுவிட்டதால், எப்பொழுது அது சமநிலைக்குத் திரும்பும் அதற்கு எவ்வளவு காலமாகும் எனத் தெரியவில்லை.
தொலைக்காட்சிகளின் நிலையோ அதைவிடவும் இன்னும் பரிதாபம். தமிழர்களுக்கு வயிற்றுக்கு சோறு இருக்கிறதோ இல்லையோ, வீட்டுக்கு வீடு தொலைக்காட்சிப் பெட்டியை வைத்துக்கொண்டிருக்கிறார்கள். மக்களை மகிழ்விப்பதற்கும், விழிப்புணர்வை ஊட்டுவதற்கும், ரசனையை மாற்றியமைப்பதற்கும் உதவ வேண்டிய தொலைக்காட்சி, அவர்களை பாடாய்ப்படுத்திக் கொண்டிருக்கிறது. கொஞ்ச நஞ்சமாவது சிந்தித்துக் கொண்டிருந்தவர்கள் அது வீட்டுக்குள் நுழைந்தவுடன் சிந்திப்பதையே மறந்துவிட்டார்கள். காலையிலிருந்து நடு இரவு வரை அதில் வரும் நிகழ்ச்சிகளைப் பார்த்து களைத்துப் போய்விடுகிறார்கள். தங்களின் பிள்ளைகளையும் ஆட்டக்காரர்களாக, பாட்டுப் பாடுபவர்களாக மாற்ற முடியவில்லையே என்று பல பெற்றோர்கள் கவலையில் மடிந்து கிடக்கின்றனர். இது மட்டுமின்றி தொலைக்காட்சித் தொடர்களின் வருகிற பாத்திரங்களும், சம்பவங்களும் அவர்களின் மனதை சிதைத்து மனநோயாளிகளாக மாற்றிக்கொண்டிருக்கிறது. இனி, நம் நாட்டுக்கு அதிகளவில் தேவை உடல் நல மருத்துவர்களைக் காட்டிலும் மனநல மருத்துவர்கள்தான்.
தொலைக்காட்சி நிறுவனங்கள் அதிகளவில் தனியார் வசமே இருப்பதால் அவர்கள் கொடுப்பதுதான் செய்தி. அவர்கள் காண்பிப்பதைத்தான் பார்த்தாக வேண்டும்; நம்பவும் வேண்டும். ஒரே செய்தி ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் அவரவர்களின் நோக்கங்களுக்குத் தகுந்த மாதிரி திரிக்கப்படுகிறது.உண்மைச்செய்திகளை அறிந்துகொள்ள மக்கள் அலைய வேண்டியிருக்கிறது. சமூக நோக்குடன் செயல்படவேண்டிய ஊடகங்கள் இன்று ஒரு தொழிலாக, வணிக நிறுவனங்களாக பரிணாமம் அடைந்திருக்கின்றன. இது இந்த நாட்டுக்கும், சமுதாயத்துக்கும் எவ்வளவு பெரிய கேடு,எவ்வளவு பெரிய இழப்பு என்பதை எவரும் உணர்ந்த மாதிரி தெரியவில்லை. ஒரு தேசத்தின் மனநிலையை அறியப் பயன்படும் ஊடகங்கள் மக்களின் மனங்களை கெடுக்கக் கூடியவைகளாக மாறிவிட்டன.
ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் அவரவர்களின் செல்வாக்கை, அதிகாரத்தை வளர்த்துக்கொள்ள அவரவர்களுக்கு சொந்தமான தொலைக்காட்சி மூலம் மக்களின் மேல் அவர்களின் கருத்துக்களை திணிக்கின்றன. தங்களுக்கு சொந்தமாக ஒரு தொலைக்காட்சி நிறுவனம் இல்லாமல் இங்கு எதையும் செய்ய முடியாது என்பதை உணர்ந்து, புதிதாக அரசியல் கட்சித் தொடங்குபவர்களும் நிறுவனங்களைத் தொடங்கிவிடுகிறார்கள். மீதியிருக்கும் தொலைக்காட்சிகளும் பெரு முதலாளிகள், பண முதலைகளின் வணிகக்கூடமாக மாறிவிடுவதால் மக்கள் நடுநிலையான செய்திகளுக்கு அலைய வேண்டியிருக்கின்றது.
ஒன்றிரண்டு நடுநிலையான தொலைகாட்சி நிறுவனங்கள் நேர்மையாக செயல்பட்டாலும் ஆட்சி நடத்துபவர்களை, அரசின் செயல்பாடுகளை விமர்சித்தால், அவர்களின் நிகழ்ச்சிகள் மக்கள் கண்களில் படாதபடி அரசின் கம்பிவடப் பாதையில் இருந்து நீக்கப்படுகின்றன. அந்தத் தடைகளையும் மீறி அப்படிப்பட்டவர்கள் துணிச்சலோடு செயல்பட முனைந்தாலும் அந்த முதலாளிகளின் கல்வி நிறுவனங்களும், மருத்துவ நிறுவனங்களும், மற்றைய வணிகங்களும் பாதிக்கப்படும் என்பதால் அவைகளும் உண்மையைச்சொல்ல தயங்குகின்றன. அரசின் நேர்மையற்ற செயல்பாடுகள் மக்களின் கண்களிலிருந்து மறைக்கப்படுகின்றன. இதனாலேயே காலங்காலமாக ஒரு சில பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் வணிகத் தந்திரத்தைக் கையாண்டு அரசின் கைப்பாவையாக மாறி, அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி சலுகைகளையும் பெற்றுவிடுகின்றன.
இந்த நெருக்கடிகள் ஒருபக்கம் இருந்தாலும், அந்த ஊடகத்தில் பணிபுரிகிறவர்கள் அவர்களின் சாதி, மத, கொள்கைக்கு உட்பட்டவர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இதனால் அவர் களுக்கு வேண்டியவர்களின் செய்திகளே முதன்மைப்படுத்தப்படுகின்றன. நம் நாட்டில் உள்ள ஊடகங்களில் பல அதன் கண்ணியத்தையும், மக்களின் நம்பிக்கையையும் இழந்துவிட்டன. ஆளாளுக்கு பேச்சாளர்களை வளர்த்துவிட்டு தினமும் விவாதம் என்கிற பெயரில், கோழிச்சண்டை போடவைத்து மக்களின் மனதில் இடம்பிடிக்கப் போராடுகின்றனர்.
செய்திகளை நடுநிலையோடு வெளியிடுவதை விட்டுவிட்டு அவரவர்களுக்குச் சாதகமான கருத்துருவாக்கத்தை உருவாக்குவதால், மக்களும் நம்பிக்கையை இழந்து அந்தந்த பத்திரிகையில் இருந்தும், தொலைக்காட்சிகளில் இருந்தும் வெளியேறுகின்றனர்.
இவ்வாறு வெளியேறுபவர்களுக்கு சமூக வலைதளங்கள் வசதியாக அமைந்து விடுகின்றன. ஒவ்வொரு சாதாரண மனிதனும், அவன் பெயரில் ஒரு கணக்கினைத் தொடங்கி அவனால் முடிந்தவரை சில நூறு பேர்களுக்கு அவனது மனநிலையை வெளிப்படுத்துகிறான். நேர்மையான, நடுநிலையான செய்திகளுக்காக மக்கள் இன்று காத்திருக்க வேண்டியது இல்லை. கணினி மூலமாக, கைபேசி மூலமாக தன் குரலை வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டனர். ஊடகங்கள் மூலம் தன் கடமையை, தான் நினைத்ததை சாதிக்க வேண்டும் என அத்துறையைத் தேர்ந்தெடுத்த சிலரும், எதையும் செய்ய முடியாமல் கைகள் கட்டப்பட்டு மாதாந்திரக் கூலிகளாக மனமுடைந்து தங்களுக்கு சோறுபோடும் நிறுவனங்களின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிருக்கும் ஊடகத்துறையினர் சிலர் அங்கிருந்து உடைத்துக்கொண்டு வெளியேறி கணினி மூலம் தங்களின் ஆசையை, கடமையை நிறைவேற்றிக்கொள்கின்றனர். இவர்கள் போன்றவர்களாலேயே இன்று மக்களுக்கு உண்மைச் செய்திகள் கிடைத்துக்கொண்டிருக்கிறது. மக்களை கட்டிப்போட்டு சிந்திக்க விடாமல் வைத்துக்கொண்டிருக்கும் சில ஊடகங்களும் வேறு வழியின்றி அந்தச் செய்திகளையே வெளிடவேண்டியிருக்கிறது.
சின்னச் சின்ன செய்திகளை ஊதி ஊதி பெரிது படுத்தும் ஊடகங்கள் மக்களிடத்தில் அம்பலப்படுத்த வேண்டிய, விவாதத்துக்குள்ளாக்க வெண்டிய செய்திகளை ஒருவருக்கும் தெரியாமல் மறைத்தும் விடுகின்றன. ஊழியர்கள் மூலம் திரட்டப்பட்ட செய்தியை மட்டுமே தாங்கி வருகின்ற பத்திரிகைகளைவிட மக்களின் குரலையும், எண்ணங்களையும், படைப்பாளிகளின் படைப்புகளையும், எண்ணத் தேடல்களையும் தாங்கி வரும் ஊடகங்கள் தான் இன்றைக்குத் தேவை. மக்களை வழி நடத்தவும், கை கொடுக்கவும், அவர்கள் எல்லாவற்றின் மீதும் நம்பிக்கையோடு வாழ்வதற்கும் இன்றியமையாதவைகள் மக்களாட்சியின் நான்குத் தூண்கள்தான். ஒவ்வொன்றின் மீதும் அவர்களின் நம்பிக்கை அறுந்து வருகிறது. எதையும் காசு கொடுத்து வாங்கலாம். காசு இருப்பவர்களுக்கே இவ்வுலகம் எனும் கருத்தும், மதிப்பீடும் அனைத்து மக்களின் மனதிலும் உருவாகிக்கொண்டிருக்கிறது.
மக்களாட்சி அதன் மகத்துவத்தை, வலிமையை இழந்து திருடர்கள் கையில் மாட்டிக்கொண்ட சாவியாக திகழ்கிறது. இந்நிலையில் மக்களிடத்தில் ஒவ்வொன்றையும் தெளிவுபடுத்தி, விழிப்புணர்வூட்டி, நம்பிக்கையை உருவாக்கி உண்மையான மக்களாட்சியை மலரச் செய்யும் பொறுப்பு ஊடகத்துறைக்கு மட்டும்தான் உண்டு.
மக்களுக்குக் கடமைப்பட்டவர்கள், மக்களுக்கு அரணாக இருக்க வேண்டியவர்கள் ஊடகத்தினரைச் சந்திப்பதையே தவிர்க்கும்போது, ஏற்கெனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு சிலரையே ஊடகத்தினர் மீண்டும் மீண்டும் பிடித்து உலுக்கிக்கொண்டிருப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? ஊடகங்கள் தன்னுடைய குரலை இழந்து விடக்கூடாது எனும் கவலை மக்களுக்கு இருப்பதுபோல் எனக்கும் உண்டு.
- சொல்லத் தோணுது…