Tuesday, 20 September 2016




இன்று வரலாற்றில் முக்கியமான நாள்.சொந்த நலனுக்காக தமிழகத்தை இவ்வளவு காலம் நசுக்கி கண்டுகொள்ளாமலிருந்த காங்கிரஸ்,பா.ஜ.கட்சிகளின் மூக்கை உடைத்து உச்ச நீதிமன்றத்தின் மூலமாக நமக்கு நீதி கிடைத்திருக்கிறது. நான்கு வாரத்திற்குள் மேலாண்மை வாரியத்தை உருவாக்க வேண்டிய கட்டயத்திற்கு மத்திய அரசு தள்ளப்பட்டிருக்கிறது.
அதிர்ச்சியில் உறைந்துள்ள கர்நாடகம் பழையபடி தன் அடாவடித்தனங்களைக்காட்டும். அதைக்காரணம் காட்டி மத்திய அரசு நிறைவேறாமல் எப்பொழுதும் போல் நழுவப்பார்க்கும்.
தமிழகத்தின் அனைத்துக்கட்சிகளும் டெல்லியிலேயே முகாமிட்டு காரியத்தை நிறைவேற்ற வேண்டும். அப்படி நடக்குமாத்தெரியவில்லை. காரியத்தை நிறைவேற்ற தமிழக மக்களின் முன் எப்போழுதுமில்லாத போராட்டம் நடத்த வேண்டியதன் தேவையும் உருவாகலாம்!
தேய்ந்து கொண்டிருக்கும் தமிழினம் இப்பொழுதாவது விழிக்கட்டும். நமதுரிமை நமக்கு கிடைக்கட்டும்.

Monday, 19 September 2016




இனி ஒவ்வொன்றாய் !!

சென்னையை வெள்ளம் மூழ்கடித்து மக்கள் பரிதவித்து, கதறி அரசாங்கத்தை கேள்விகேட்டபோது, "பீப் பாடல்" வெளிவந்து அனைவரும் "பீப் பாடலை" பிடித்துக்கொண்டார்கள்.அதன்பின் வெள்ளப்பிரச்சினையை மக்கள் மறந்தே போனார்கள்!
அதேபோல் காவிரிப்பிரச்சினை கழுத்தைப்பிடிக்கிற நிலை வந்ததும் "ராம்குமார்" செய்தி வெளிவந்திருக்கிறது. இனி காவிரி மறந்துபோகும்.

Friday, 16 September 2016




அப்பா என நான் அன்போடு அழைக்கின்ற தமிழின் தலைசிறந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் 94 வயது இன்று. நான் அவருடன் உரையாடிய நேர்காணலின் இணைப்பு இது. அவரது பிறந்த நாளையொட்டி இன்று தந்தி தொலைகாட்சி இந்த 3௦ நிமிடப்படத்தை ஒளிபரப்பி அவருக்குசிறப்பு சேர்த்தது.https://youtu.be/mp-6Iiu5cZI

Thursday, 15 September 2016


   உலக நாடுகளிலெல்லாம் தடைசெய்யப்பட்ட தொழிற்சாலைகளுக்கெல்லாம் அனுமதி அளித்து, எங்கெல்லாம் ஆறுகள் இருக்கிறதோ அங்கெல்லாம் கொண்டுவந்து தங்களின் சொந்த நன்மைக்காக அவைகளை நிறுவியவர்கள்தான் நம்மை ஆண்டவர்களும், ஆள்பவர்களும்!
  நீர் ஆதாரங்களை பாதுகாக்காமல் அவரவர்களுக்கென தனித்தனியாக கொள்ளைக்கூட்டங்களை வைத்து கொள்ளையடித்துக்கொண்டிருக்கும் இவர்கள் மூலமாகத்தான் தீர்வு கிடைக்கும் எனத் தொடர்ந்து  நம்பிக்கொண்டிருக்கிறோம்!
  நீர் நிலைகளை,இந்த மண்ணை,காற்றை மாசுப்படுத்தி மக்களையும்,உயிரினங்களையும் அழித்துக்கொண்டிருக்கும் ஆலைகளையும்,தொழிற்சாலைகளையும் நிரந்தரமாக மூடி வெளியேற்றுவதை விட்டுவிட்டு வெறும் துடைப்பத்தை வைத்துக்கொண்டு இந்தியாவை தூய்மை நாடாக்க முயலும் பிரதமர் நரேந்திரமோடிக்கு தமிழர்களின் உரிமைப்பற்றியும்,உணர்வுப்பற்றியும்,வாழ்வுப்பற்றியும் என்ன கவலை இருக்கிறது?
  என்றைக்கும் மாறாத சிக்கலாக மாறிவிட்ட காவிரிக்காக இதுவரை எத்தனை எத்தனைத் தீர்ப்புகள்! எத்தனை எத்தனைப் போராட்டங்கள்!
  இவையெல்லாம் தெரிந்தும் நாளை நடக்கவிருக்கும் போராட்டம் ஒவ்வொரு தமிழனின் உணர்வையும்,நமக்கு இழைக்கப்படுகின்ற அநீதியையும் இந்த உலகுக்குச்சொல்லும் போராட்டம்.
  நம்மைவைத்து அரசியல் தொழிலை நடத்துபவர்கள் இதுவரை அனைவரும் ஒன்றிணைத்து எந்தப்போராட்டத்தையும் நடத்தாதவர்கள். ஒரேயொரு முறைகூட ஓரிடத்தில் அமர்ந்து இந்த மக்களின் நலனுக்காக குரல்கொடுக்காதவர்கள். இவர்களுக்கும்,கர்நாடக மாநில அரசின் செயல்பாடுகளுக்கும் எந்தவித வேறுபாடும் இல்லை.

  மூன்று வேளையும் தவறாமல், பசியில்லாமல் போனாலும் கடிகாரம் பார்த்து சாப்பிடுகிற நாம் இந்தப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். நானும் ஒரு தமிழனாக,ஒரு உழவனாக நாளை போராட்டத்தில் பங்கேற்று என் கடமையை ஆற்றுகிறேன்.


 

Monday, 12 September 2016






இன்றைய தமிழ்நாட்டு மக்களின் உரிமைக் குரலாக ஒலிக்கும் இந்தக்காட்சி 2௦௦3 ஆம் ஆண்டு எனது இயக்கத்தில் வெளியான “தென்றல்” திரைப்படத்தில் இடம்பெற்றது. 27 ஆண்டுகளுக்கு முன்பாக நடப்பதாக இருக்கின்ற இக்காட்சி சொல்லும் அரசியலில் இன்னும்கூட சிறிதும் மாற்றம் ஏற்படவில்லை. இருந்தாலும் நாமெல்லாம் இந்தியர்கள்தான். நாம் இந்தியர்களாக இருந்து இழந்தவைகளும்,இழக்கப்போவதும் இன்னும் நிறைய..!.

Saturday, 10 September 2016

இந்த பாரதி இன்றிருந்தால்!!



       2000 ஆண்டில் பாபநாசம் காட்டில் வெறும் 11 மணி நேரத்தில் படமாக்கப்பட்ட பாடல் இது. எனது ஒளிப்பதிவில் எனக்கு மிகவும் பிடித்தப்படம் பாரதி.

Tuesday, 16 August 2016



என்ன செய்யப்போகிறோம்?


     தலையில் இடி விழுந்ததுபோல் என்று சொல்வார்களே! அது இதுதானா? கல்லூரியில் படிக்கிறான் எனச்சொல்லி முத்துக்குமாரை அவனது அப்பாதான் 1993 ஆம் ஆண்டில் எனது “வெள்ளைமாடு” நூல் வெளியீட்டு விழாவில் அறிமுகப்படுத்தினார். இருபத்தி நான்கு மணி நேரமும் எழுத்து, சிந்தனை, புத்தகம் என்றே அலைந்தவன். என்னை உரிமையுடன் கண்டிப்பவனும், இறுதிவரை எனக்கு உண்மையாய் இருந்தவனும் தம்பிதான்.
     எந்த ஒரு தொலைப்பேசி அழைப்புக்கும் பதில் சொல்லாமல் இருந்ததில்லை. இனி, அவனிடமிருந்து பதில் வராது என நினைக்கிறபோது என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
     முத்துவுக்காக பெரிதாக எதையும் நான் செய்துவிடவில்லை. சில இசையமைப்பாளர்கள், சில இயக்குனர்களிடம் அவனுக்கு வாய்ப்புத்தரச்சொல்லி அறிமுகப்படுத்தியிருக்கிறேன். அன்புக்காகவும், உறவுகளுக்காகவும் ஏங்கியவன். உறவுகளைப்பற்றி அக்கறைப்பட்ட, விசனப்பட்ட ஒரு கவிஞன் இவன்போல் யாராவது இருப்பார்களா தெரியவில்லை. அண்ணா! என என்னை அழைக்கும்போது ஒவ்வொரு முறையும் நெகிழ்ந்திருக்கிறேன். இருவரும் ஒருதாய் வயிற்றில் பிறக்காத குறைதான்!
     கடந்த பத்து ஆண்டுகளாக அவன் முகத்தில் தெளிவும், மலர்ச்சியும் இருந்ததில்லை. தூக்கத்தில் எழுந்து நடப்பவன் மாதிரியே இருப்பான். இரண்டு நிமிடம் இடைவெளி கிடைத்தாலும் அவனை அறியாமலே அவனது கண்கள் மூடிக்கொள்ளும்.
     அவனிடம் நான் அன்பு காட்டியதைவிட அதிகமாக திட்ட மட்டுமே செய்திருக்கிறேன். ஓய்வற்ற அவனது உழைப்பு அவனை எங்கே கொண்டு போய்விடும் என்பதையும் எச்சரித்திருக்கிறேன். அவன் உடல்நலத்தைப்பற்றி என்னைவிட கவலைப்பட்டவர்கள் யாராவது இருப்பார்களா எனத் தெரியவில்லை. தூங்காத தூக்கத்தையெல்லாம் சேர்த்து மொத்தமாக தூங்கப்போய்விட்டான் என் முத்து.
     அவனது பாடல்களும், கவிதைகளும், எழுத்துக்களும் மட்டுமே நமக்குத்தெரியும். எல்லோரும் சேர்ந்து மொத்தமாக நேற்றோடு புகழ்ந்து முடித்து விட்டோம்.
     “அண்ணா! இந்த ஆண்டும் அதிகப்பாடல்கள் எழுதியவன் நான்தான் அண்ணா” என ஒவ்வொரு ஆண்டும் சொல்லி வந்தான். ஒவ்வொரு விருது கிடைத்தபோதும் முதலில் எனக்குத்தான் சொன்னான். பெண் பார்த்து விட்டேன், ஆதவன் பிறந்துவிட்டான், யோகலட்சுமி வந்திருக்கிறாள் என அவனது சொத்துக்களாயிருக்கின்ற மனைவி, குழந்தைகள் குறித்த ஒவ்வொரு சேதியையும் உடனுக்குடன் என்னோடு பகிர்ந்து மகிழ்ந்தான்.
     தாயின் முகத்தை ஐந்து வயதோடு மறந்துபோன அவன் போலவே தந்தை முகமறியாத மகளாக யோகலட்சுமி இருந்து விட்டாள். என் அம்மாவின் முகம் இதேதான் எனும் மகிழ்ச்சியில் சில நாட்களே வாழ்ந்து முடித்துவிட்டான். நேற்றிரவு முழுக்க புரண்டு புரண்டு படுத்து உறங்குவதற்காக எவ்வளவோ முயன்றும் முடியவேயில்லை.
     தூங்கிக்கொண்டிருந்த முத்துவின் முகத்தருகில் வெறித்து புலம்பியபடியே அவனது மனைவியும், தலைமாட்டில் அமர்ந்தபடி என்ன நடந்திருக்கிறது என்பது தெரியாமல் திகைத்திருந்த ஆதவனும், இவை எதுவுமேத் தெரியாமல் யாரோ ஒருத்தரின் தோளில் பசியில்  பாலுக்காக அழுதுக்கொண்டிருந்த ஆசை மகள் யோகலட்சுமியும் மீண்டும் மீண்டும் என் நினைவில் வந்து என் கண்களைவிட்டு அகலாமல் என்னை புலம்பவைத்து விட்டார்கள்.
“அப்பா என்றுகூட இன்னும் சொல்லவராத இந்த குழந்தையை வைத்துக்கொண்டு இனி என்ன செய்யப்போகிறேன் அண்ணா!” என என்னைப்பிடித்துக்கொண்டு கதறிய முத்துக்குமார் மனைவியின்  குரலுக்கு இங்கே என்ன பதில் இருக்கிறது? நான் இருக்கிறேன் என்றுதான் என்னால் சொல்ல முடிந்தது.
     மீண்டும், முத்துக்குமாரைப்போல் அவனது இளந்தளிர்களும் இந்த போலியான உலகத்தில் போராடி கரை சேர வேண்டும். அவன் 1500 பாடல்கள் எழுதி என்ன சம்பாதித்தான் என எனக்குத்தான் தெரியும். சொந்த பந்தங்களையும், நண்பர்களையும் விட்டுக்கொடுக்காத முத்துக்குமாருக்கு பெரும்பொருளாக அது சேரவேயில்லை. நினைத்தாலே நெஞ்சு பதறுகிறது. பணமில்லாமல் எதுவும் நடக்காத இந்த நாட்டில் இந்தக் கவிஞனின் பிள்ளைகளும் அவன் போன்ற பண்புள்ள, சிறந்த மனிதாக வாழ்ந்து காட்டத்தான் வேண்டும்.
     ஹாவேர்ட் பல்கலைக்கழகத்தில் ஒதுக்க இருக்கும் தமிழ் இருக்கைக்காக 50 கோடி ரூபாய் வேண்டும் என்று, தமிழை மூச்சாக நினைப்பவர்கள் பணத்திற்காக யார் யாரிடமோ கையேந்திக் கொண்டிருக்கிறார்கள். அதற்கான நிதியைத் திரட்டத்தான் ஐந்து வாரப் பயணமாக தம்பி அமெரிக்கா சென்று ஒவ்வொரு கூட்டத்திலும் பேசினான். “இந்த அசைச்சல் உனக்குத் தேவையா பேசாமல் உடம்பை கவனி; இருக்கிற வேலையைப்பார்” என அவன் செல்வதற்கு முன் சொன்னேன். “தமிழுக்காகப் பணி செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டாமா?” என சொல்லிவிட்டுப்போனான்.
     இங்கிருந்து எழுதியப் பாடல்களைவிட அமெரிக்காவிலிருந்தபடி பயணத்துக்கிடையில் எழுதியப் பாடல்கள்தான் அதிகம். “மகனை அறிமுகம் செய்ய இருக்கிறேன். அந்தப் படத்திற்கு அனைத்துப் பாடல்களையும் நீதான் எழுத வேண்டும், இசையமைப்பாளர் யார் என்பதையும் நீயே முடிவு செய்” என ஒரு வாரத்திற்குமுன் கைப்பேசியில் அழைத்துக்கேட்டேன். உடல்நிலை சரியில்லாமல் போய் மருத்துவமனையிலிருந்து திரும்பியிருப்பதாகவும், டைபாய்ட் காய்ச்சல்தான் பாடாய் படுத்திவிட்டதாகவும், ஆறு மாத காலம் ஓய்வு தேவையென்றும் சொன்னான்.
     நான் திட்டப்போகிறேன் என்பதை புரிந்து கொண்டு அமெரிக்கப் பயணத்தில் போகும் வழிகளில் சாப்பிட்ட கேஎப்சி, மெக்டொனால்ட்ஸ் சாப்பாடுதான் ஏற்றுக்கொள்ளாமல் போய்விட்டதாகச் சொன்னான். நான் உடனே பார்க்க வருகிறேன் எனச் சொன்னதை மறுத்து பாடல் எழுதும்போது சந்தித்தால் போதுமெனத் தடுத்துவிட்டான்.
     தமிழைக் காப்பாற்ற நிதி திரட்டப்போன கவிஞன் நா.முத்துகுமார் தன் குடும்பத்தை நடுவழியிலேயே விட்டுவிட்டுப் போய் விட்டான். தமிழைக் காப்பாற்ற எத்தனையோ பேர் இருக்கிறார்கள்! இனி முத்துக்குமாரின் குடும்பத்தைக் காப்பாற்ற யார் இருக்கிறார்கள்? தமிழ் சினிமாவில்  ஒரு படத்திற்கு ஒரு பெரிய  கதாநாயகனுக்கு தரப்படுகிற சம்பளத்தில் பதினைந்தில் ஒரு பகுதியைத்தான் இந்த பதினைந்து ஆண்டுகள் முழுக்க இரவு பகலாக கண்விழித்து சம்பாதித்தான். படைப்பாளிகள் எப்போதுமே பாவப்பட்டவர்கள்தான்.
     தமிழ் இருக்கை அமைக்க 50 கோடி ரூபாய்க்காக கையேந்துவதை உலகத்தமிழ் செல்வந்தர்களும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நம் அரசாங்கமும் அதையெல்லாம்  பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது.
     எண்ணற்ற எத்தனையோ படைப்பாளிகளைக் கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டு சிறிதும் குற்றவுணர்ச்சி இல்லாமல்  அவர்களுக்கு ஆண்டுக்கு ஆண்டு நினைவுநாளில் மட்டும் பணம் கொடுத்து பத்திரிகைகளில் விளம்பரம் செய்துகொண்டு சிலைக்கு மாலை போட்டுக்கொண்டிருக்கிறோம்.
     இவர்கள்தான் தமிழர்கள்! இதுதான் தமிழ் பண்பாடு!
     முத்துக்குமாருக்கு இப்போது புரியும்! தனக்கு உடல் முக்கியம், மனைவிக்கு கணவன் முக்கியம், தன் செல்வங்களுக்கு தந்தை முக்கியம், குடும்பத்துக்கு தலைவன் முக்கியம் என்பது!

-          தங்கர் பச்சான்