Tuesday, 5 August 2014
Tuesday, 24 June 2014
தமிழ் (நம்) உடைமை
ஆண்டுக்கொரு நாள் மட்டும் நான் கண்ணதாசன் அவர்களை நினைப்பதில்லை. என்
உயிரிலும், இரத்தத்திலும் கலந்துவிட்டவை பழைய தமிழ் திரைப்படப் பாடல்கள். நான்கு வயதில்
முதல் சினிமா பார்க்கத் தொடங்கியதிலிருந்து இன்னும் நான் சினிமாவுக்குள்ளேயேதான்
கிடக்கிறேன்.
மெட்டு, ராகம், இசை, பாடல் வரிகள், குரல் வளம் இவை எல்லாம் நம் மனதைத்
தொடுபவைகளாக இருந்தால்தான் அவைகள் காலம் கடந்த பாடல்கள்.காதலின் நுட்பங்களை
உணரச்செய்து மனதிற்குள் அதிர்வை உருவாக்கி அதன் மகத்துவத்தை எத்தனையோப் பாடல்கள் உணர்த்தியிருக்கின்றன. தாய் தந்தையரை நினைத்து
அழவைத்தும், உடன்பிறந்தோரை பார்க்கும்படியான ஏக்கத்தையும், தனிமைக்கான துணையையும்,தளர்ந்து
விழும்போது வாழ்க்கைக்கான நம்பிக்கைகளையும் விதைத்தவை பழைய திரைப்பாடல்கள்.
முப்பத்தைந்து ஆண்டுகளாக நான் சேர்த்துவைத்த சொத்தில் முதன்மையானதாக
என்னிடத்தில் இருப்பது சுமார் நாநூறு மணிநேரம் கேட்கும் அளவிற்கான பழைய பாடல்கள்.
உலகத்திரைப்படங்களைப்
பார்க்கும்போது எவ்வளவு கவனத்துடன் பார்க்கின்றேனோ, இலக்கிய நூல்களைப்
படிக்கின்றபோதும் எவ்வாறு ஆழ்ந்து அதனுடன் பயணம் செய்கின்றேனோ அதேபோல்தான் கவிஞரின்
பாடல்களை கேட்கும்போது மெய்மறந்து நிற்கின்றேன். அனைத்துத் தமிழனின் மனதோடு உறவாடி
ஊடுருவிய அவரின் வரிகள் என்னை
கர்வம் கொள்ளச் செய்கின்றன. ஆண்டுக் கணக்கில் இதைப் பற்றி பேசிக்கொண்டேயிருப்பேன்.
என்னைப் பைத்தியகாரன் எனக்கூட சொல்லத்தோன்றும் . எத்தனை விதமான சூழ்நிலைகள், எத்தனைவிதமான
உறவுகள், எத்தனை விதமான மனநிலைகள் என எல்லாவற்றுக்கும் எங்கிருந்துதான் அவருக்கு
சொற்கள் பிறந்ததோ!! ஒவ்வொரு பாடலின் போதும் உயர்ந்துகொண்டே போகின்றார். நாள்தோறும்
நான் வணங்கும் கடவுளாக கண்ணதாசன் இருக்கிறார்.
அவர் எந்தப்பட்டத்துக்காகவும் ஏங்கவில்லை.
விருதுகளுக்காக ஆள்பிடித்து அலைந்தவரில்லை. வாழ்ந்து கொண்டேயிருப்பார் இந்த உலகம்
உள்ளவரை. அவரின் எழுத்துக்கள் என் உடைமை, என் பிள்ளைகளின் உடைமை, நம் இனத்தின்
உடைமை, நம் மொழியின் உடைமை.
Sunday, 15 June 2014
தமிழ்நாடு என்ற பெயரையே நீக்கிவிடலாம்!
அன்பு தோழமையினருக்கு,
15-06-2014 "தி இந்து" தமிழ் நாளிதழில் எனது நேர்காணல்.
தங்களின் நேர்மையான கருத்தும், மற்றவர்குளடனான பகிர்தலும் தேவை.
அன்போடு,
தங்கர் பச்சான்.
தமிழ்நாடு என்ற பெயரையே நீக்கிவிடலாம்!
தங்கர்பச்சான் நேர்காணல்
தங்கர்பச்சானின் சமீபத்திய இலக்கு இளைஞர்கள். தேடித்தேடிப் போய் பேசுகிறார். குறிப்பிட வேண்டிய விஷயம் தன்னுடைய பேச்சில் சாதியத்துக்கு எதிரான போருக்குப் பெரும் முக்கியத்துவம் கொடுக்கிறார். மனிதரிடம் பேசவா விஷயம் இல்லை? பேசினேன்.
மராத்திய படமான 'ஃபன்றி'க்கு (Fandry) விருது கிடைக்க திரைப்படத் தேசிய விருதுகளுக்கான நடுவர் குழுவில் இடம்பெற்றிருந்த நீங்களும் ஒரு காரணம் என்கிறார்கள். அப்படியென்ன விசேஷம் அந்தப் படத்தில்?
இந்திய சினிமாவே ஃபன்றி படத்துக்காக பெருமைகொள்ள வேண்டும். ஃபன்றி என்ற படத்தின் தலைப்பே சாதீயத்தின் இழிநிலையை சுட்டும் ஒன்றுதான். சாதி அடுக்கிலிருந்து மீளமுடியாத ஒரு மராட்டிய கிராமத்தில் கதை நடக்கிறது. அதை ஒரு பேச்சுக்காக வேண்டுமானால் நாம் கதை என்று சொல்லலாமே தவிர, அந்தப் படத்தில் உள்ளதைவிட மோசமானதாக தலித்துகளின் வாழ்நிலை இன்றும் இருக்கிறது. பன்றி படத்தின் நாயகன் பதின்பருவத்தில் இருக்கும் ஒரு பள்ளி மாணவன். ஆதிக்க சாதியைச் சேர்ந்த தனது சக பள்ளி மாணவியை மனசுக்குள் தனது காதலாக வரித்துக் கொள்கிறான். அவளை கிராமத்தின் எல்லா தருணங்களிலும் பார்த்துக்கொண்டே இருக்கிறான். ஆனால் அவளுக்கு அவன் மீது அப்படி எந்த உணர்வும் கிடையாது. ஒரு தலித்தாக தனது தாழ்நிலையை, ரத்தத்தில் ஊறிப்போன தனது வலியை எங்கே அவள் பார்த்துவிடுவாளோ என்று அவன் பதறியது ஒருகட்டத்தில் அரங்கேறுகிறது. அவனை இழிந்த விலங்கினைவிட கேவலமாகச் இந்தச் சமூகம் பார்க்கிறது. அப்போது கோபத்தில் அந்த இளைஞன் வீசியெறியும் கல், கேமரா நோக்கி வந்து பார்வையாளன் முகத்தைத் தாக்குகிறது. அவன் விட்டெறிந்ததை நான் கல்லாக எடுத்துக் கொள்ளவில்லை. செருப்பாகத்தான் எடுத்துக்கொண்டேன். இந்தப் படத்தைப் பார்க்கும் தலித் அல்லாத பார்வையாளன் கண்டிப்பாக என்னைப் போலத்தான் உணர்வான்.
இந்தப் படைப்பு தலித் கலைஞர்களின் அதிமான பங்கேற்பால் மட்டுமே சாத்தியமாகியிருக்கிறது. என் போன்றவர்களால் தலித்துகளின் புண்களைப் பார்த்து வேதனைப்பட முடியுமே தவிர அவர்களின் உயிர்போகும் வேதனை அவர்களால் மட்டுமே வெளியே சொல்ல முடியும். அதேபோல்தான் தலித்துகளின் வலியை தலித்துகள்தான் படமாக்க முடியும். நம்மிடம் இந்தப் படத்தின் இயக்குநர் நாகராஜ் மஞ்சுலே போன்ற கலைஞர்கள் இருக்கிறார்கள். தங்களின் கலையறிவை, தம் மக்களின் விடுதலைக்கு பயன்படுத்துவது குறித்து சிந்திக்க வேண்டிய காலம் நெருங்கி விட்டதை ஃபன்றி படம் நமக்கு உணர்த்துகிறது.
மயிலாடுதுறையில் அம்பேத்கரின் 123-வது பிறந்த நாள் கூட்டத்தில் பேசிய நீங்கள், தனித் தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற தலித் உறுப்பினர்களை ஒட்டுமொத்தமாக கேள்விக்குள்ளாக்கியிருக்கிறீர் களே?
உண்மைதான்! புரட்சியாளர் அம்பேத்கரை தங்கள் கட்சிகளின் முதன்மை அடையாளமாக முன்னிருத்தும் இந்திய தலித் அரசியல் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் அவர்களின் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லட்டும்... அண்ணல் சொன்னதைத்தான் நீங்கள் செய்கிறீர்களா?
'எதிர்காலத்தில் என் மக்களை இந்த அரசியல் வியாபாரிகள் விலைக்கு வாங்கிவிடுவார்கள்' என்று அன்றைக்கு அவர் சொன்னதுதானே இன்றைக்கு நடந்திருக்கிறது!
கடந்த 63 ஆண்டுகளில் தனித் தொகுதிகள் மூலம் எத்தனை தலித்துகள் பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் சென்றிருப்பார்கள்? அவர்களில் எத்தனை பேர் அம்பேத்கர் போராடிப்பெற்றுத் தந்த உரிமைக்கு உழைத்து உரிய பலனைப் பெற்றுத்தந்து தலித்மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தினார்கள்? அவர்கள் தங்களை நிறுத்தும் கட்சிகளின் தலைமையிடம் போராடி தம் மக்களின் தேவையை தீர்க்கத் தவறிவிட்டனர் என்பதுதானே உண்மை?
இதுபோக தலித் மக்களின் முன்னேற்றத்துகென தனியாக அரசியல் கட்சி தொடங்கியவர்களின் செயல்பாடுகளையும் இன்று அம்பேத்கர் பார்த்தால் மகிழ்ச்சியடைவாரா? ஆதிக்க சாதிகள் தலித் மக்களை நடத்துவதுபோலத்தான் பெரிய அரசியல் கட்சிகளும், தங்களுடன் கூட்டுசேரும் தலித் கட்சிகளையும் நடத்துகின்றன எல்லோருக்கும் கொடுத்ததுபோக கடைசியாக மீதி இருப்பதைக் கொடுத்து, முடிந்தால் வாங்கிக்கொள்ளுங்கள் இல்லாவிட்டால் நடையைக் கட்டுங்கள் என்கின்றன. தம் மக்களின் வாக்குகளையெல்லாம் அரும்பாடுப்பட்டு வாங்கி, பெரிய கட்சிகளிடம் கொடுத்துவிட்டு ஏமாந்துபோகின்றன தலித் கட்சிகள்.
விடுதலைக்குப் பிறகு சட்டத்தின் மூலம் தலித்துகளுக்கு கிடைத்த கல்வி, இடஒதுக்கீடு,வேலைவாய்ப் பில் அவர்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டவில்லை என்கிறீர்களா?
அது அண்ணல் பெற்றுத்தந்த சட்டத்தின் மூலம் மட்டுமே கிடைத்தது. ஆனால் அம்பேத்கர் பெற்றுத்தந்த தனித்தொகுதிகள் மூலம் அதிகாரம் பெற்றவர்கள் என்ன செய்தார்கள் என்பதுதான் என்னுடைய கேள்வி. இன்று, தலித் மக்களுக்குப் பெரிய எதிரி யாரென்று பார்த்தால் முன்னேறிய தலித்துகள்தான். கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேறிய தலித்துகள் அந்தக் கூட்டத்திலிருந்து தங்களை அறுத்துக்கொண்டு ஓடிவிட வேண்டும் என்பதில்தானே குறியாக இருக்கிறார்கள்! அண்ணலும் இப்படி தன்னலத்துடன் வாழ்ந்திருந்தால் இன்றைக்கு இந்த ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை என்ன? நாம் முன்னேறிய மாதிரி நமது சமுதாயத்தில் நாலு பேரையாவது முன்னேற்றுவோம் என நினைக்க வேண்டும். அம்பேத்கருக்கு இருந்த பொறுமையும் காரியமாற்றும் திறனும்தான் ஒவ்வொரு தலித்துக்கும் உண்மையான விடுதலையைப் பெற்றுத்தரும். அண்ணலுக்கு சிலை வைப்பதால் மட்டுமே இது கிடைத்துவிடாது.
இந்த இடத்தில் ஒரு திரைப்படக் கலைஞராக உங்களிடம் ஒரு கேள்வி. அம்பேத்கரை வார்த்தைக்கு வார்த்தை அண்ணல் என்று கொண்டாடும் நீங்களும் அம்பேத்கர் திரைப்படத்தை மக்களிடம் கொண்டுசேர்க்க தவறிவிட்டீர்களே?
ஒரு பொறுப்புள்ள மனிதனாக, கலைஞனாக என் கடமையிலிருந்து நான் தவறவே இல்லை. செயல்பட்டேன் அதற்கான பலன்தான் கிடைக்கவில்லை.. இந்தியா முழுக்க அனைத்து மாநிலங்களிலும், இத்திரைப்படம் வெளியானபோது தமிழ்நாட்டிலும் வெளியாகியிருக்க வேண்டும். அதற்காக அப்போது இருந்த தமிழக அரசும் பத்து லட்சரூபாய் மொழிமாற்றம் செய்ய நிதியுதவி அளித்தது. ஆனால் அப்போது யாருமே அதை வாங்கி வெளியிட முன்வரவில்லை. இறுதியாக நானே களத்தில் இறங்கி வெளியிட முயன்று தோற்றுப்போனேன். இதுபற்றிய கவலை என்றுமே எனக்குண்டு. இதுபற்றி வெளிப்படையாக என்னால் உங்களுடன் பகிர்ந்துகொள்ள முடியவில்லை.
நடந்ததெல்லாம் முடிந்துபோகட்டும். நான் சொல்வது ஒன்றை மட்டும் செய்தாலே அம்பேத்கரை அடுத்த தலைமுறையிடம் கொண்டு சேர்க்கலாம். ஒவ்வொரு மாணவனும் முழுமையான அம்பேத்கர் திரைப்படத்தை பார்க்க வேண்டுமென மத்திய மாநில அரசுகள் ஆணையை உருவாக்கி செயல்படுத்தட்டும். அது இளம் உள்ளங்களில் மிகப் பெரிய மனமாற்றத்தை உருவாக்கும். காட்சி ஊடகத்தின் வலிமையை புரிந்தவன் என்ற பார்வையில் இதைச் சொல்கிறேன். அண்மையில் பகுஜன் சமாஜ் கட்சியின் அகில இந்திய பொருளாளர் அம்பேத்ராஜனைச் சந்தித்தபோது இந்திய அளவில் எல்லா மொழிகளிலும் அம்பேத்கர் திரைப்படத்தை மொழிபெயர்த்து, அதனை தொலைக்காட்சி மூலமாகவும் டிவிடி மூலமாகவும் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறேன். அவரும் அதனை காரியமாற்றித் தருவதாக உறுதியளித்திருக்கிறார்.
தொடர்ச்சியான உங்களது பேச்சுகளில் தமிழர்கள் குறித்த அவநம்பிக்கை அதிகமாக வெளிப்படுகிறதே?
இவர்களை எதை வைத்து நீங்கள் தமிழர்கள் என்று சொல்கிறீர்கள்? முதலில் உனது மொழி உன்னிடம் இருக்கிறதா? கேவலம் ஒருநிமிடம்கூட உன்னால் உன் சொந்த மொழியைப் பேசக்கூடத் தெரியவில்லை. மொழிக்கலப்புடன் பேசுவதை அவமானமாகக் கருதாமல், பெருமையோடு மிதப்பில் அலைகிறாய். எதைவைத்து உன்னை நீ தமிழன் எனச் சொல்கிறாய்? உன் போன்றவர்கள் மட்டுமே பெருகிவிட்ட இந்த மாநிலத்தை எதற்காக இன்னும், தமிழ்நாடு என நாக்குக் கூசாமல் அழைக்கிறாய். பேசாமல் மாநிலத்தின் பெயரை மாற்றிவிட்டால் குற்றவுணர்ச்சியில்லாமல் மகிழ்ச்சியாக எதைப்பற்றியும் சிந்திகாமல் வாழலாமே!
தமிழா.. உன் பெயர் கூட உன் மொழியில் இல்லையே? உன் நிலம், உன் கல்வி, உன் உணவு, உன் மருத்துவம், உன் கலைகள், உன் போராட்ட குணம் எதுவுமே உன்னிடமில்லை. உன் பிள்ளைகள் பள்ளிக்கூடத்தில் தமிழில் பேசினால் தண்டனை தருகிறான். தமிழ்ப் பாடம் ஒன்றையாவது படியென்று சொன்னால், அதுவும் முடியாது என்று நீதிமன்றத்துக்குப் போகிறார்கள். இப்படிப்பட்ட பள்ளிக்கூடங்களில்தான் உன் குழந்தைகளைச் சேர்க்க இரவு பகலாக நாய்போல் தெருவில் காத்துகிடக்கிறாய்.
நீயே அனைத்தையும் இழந்து, தமிழன் என்ற தகுதியை இழந்து, அகதியாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டபிறகு நீ எப்படி ஈழத்தமிழனுக்காக போராட முடியும்? ஈழத்தமிழனுக்கு நாடு மட்டும்தான் இல்லை. அதனால் அவன் அகதியாகிவிட்டான். உனக்கு நாடு ஒன்று மட்டும்தான் இருக்கிறது. அவனிடமிருக்கும் மொழிப்பற்று, போராட்ட குணம், அரசியல் தெளிவு எதுவுமே உன்னிடம் இல்லை. ஒருநாள் ஈழத்தமிழனுக்கு இழந்த மண் கிடைக்கும். ஆனால் நீ இழந்த எதுவுமே உனக்கு கிடைக்கப்போவதில்லை!
Saturday, 7 June 2014
இந்து தமிழ் நாளிதழில் பத்திரிகையாளர் சி. முருகேஷ் பாபு அவர்கள் என்னைக் குறித்து எழுதிய அனுபவக் குறிப்பு
சிறப்பிதழ்களுக்கான வேலைகள் என்பது பத்திரிகைப் பணிகளில் சுவாரஸ்யமாக இருக்கும். தினம் ஒரு பிரபலம் என்ற கணக்கில் சந்தித்துக்கொண்டே போகும் நிலையில் இருப்போம். ஆனால், ஒரு சிறப்பிதழ் தயாரித்து முடிந்த பிறகு பத்திரிகைத் தொடர்பு என்பதைத் தாண்டி மனதில் நிற்கும் பிரபலங்கள் என்றால் ஓரிருவர் என்ற நிலைதான் எப்போதுமே இருக்கும். அப்படியொரு சிறப்பிதழ் தயாரிப்பில்தான் தங்கர்பச்சானை முதன்முதலாகச் சந்திக்க முடிந்தது. ஒரு பழைய போட்டோகிராபி புத்தகத்தை எடுத்துக்கொண்டு போய், அதில் அவருக்குப் பிடித்த புகைப்படங்களைக் குறித்துத் தரச் சொல்லி அது குறித்த கமெண்ட்களை வைத்துக் கட்டுரை எழுதலாம் என்று திட்டம்.
புத்தகத்தை வாங்கி முழுமையாகப் புரட்டியவர், "ரொம்ப அருமையான புத்தகமா இருக்கே… இதுல உங்களோட தேர்வு என்ன… அதைச் சொல்லுங்க முதல்ல" என்றார். இருள் நிறைந்த ஒளிப்பதிவு, முகத்தின் ரேகைகள் படரும் க்ளோசப், என்று சில படங்களைத் தேர்வு செய்து கொடுத்தவுடன், " ஒரு புகைப்படக்காரனா இந்தப் படங்களைப் பத்தி பல குறிப்புகளை நான் சொல்ல முடியும். அதுக்கான படங்களாகத்தான் உங்களோட தேர்வு இருக்கு. ஆனா, நான் வெறும் படப்பதிவாளன் மட்டுமில்லே… அதைத் தாண்டி எனக்கும் சில சமூகப் பொறுப்புகள் இருக்கு. அதனால என் தேர்வுப் பட்டியல் வேற மாதிரி என்று சொல்லிவிட்டுச் சில படங்களைத் தேர்வு செய்தார்.
அதில் இன்றுவரையில் நினைவில் நிற்கும் படம் ஒரு வேலைக்காரப் பெண்மணி பெரிய மாளிகையில் அமர்ந்து தரை துடைத்துக்கொண்டிருக்கும் படம். அதைக் கையில் எடுத்துக்கொண்டு அந்தப் பெண்ணின் முகத்தில் இருக்கும் களைப்பு, அந்தப் பெண் ஒரு கையை ஊன்றியிருப்பதில் தெரியும் அழுத்தம் என்று உழைக்கும் வர்க்கத்தின் எல்லா அம்சங்களையும் விளக்கிச் சொன்னார். வெறுமே லைட்டிங், கோணம் என்ற அளவில் வந்திருக்க வேண்டிய அந்தக் கட்டுரையில் சமூகம் சார்ந்த விஷயங்களைப் புகுத்தி, அதை வித்தியாசப்படுத்தினார்.
கட்டுரைகள் வெறுமே பொழுதுபோக்குக்காக மட்டும் அமையக் கூடாது; அதைத் தாண்டி நம் சமூக அக்கறையையும் கோடிட்டுச் சொல்ல வேண்டும் என்ற கருத்தை என்னுள் விதைத்தவர் அவர்தான்.
எப்போது தங்கர்பச்சானிடம் பேட்டிக்குச் சென்றாலும் காரசாரமான தலைப்பு நிச்சயம் கிடைக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், எதையுமே அவர் திட்டமிட்டுச் செய்ய மாட்டார். தன்னுடைய கோபத்தை முழு உணர்வோடு வெளிப்படுத்துவார். அவரைப் பேட்டி எடுத்துவிட்டு வந்தால் எதைத் தலைப்பாக வைப்பது என்று குழப்பம் ஏற்படும் வகையில் பல விஷயங்களைப் பேசியிருப்பார்.
பேட்டி எடுக்கச் செல்லும் நிருபரிடம், "உங்க ஊர்ல என்ன தானியம் விளையும்… உங்களுக்கு வயல் இருக்கா… விவசாயம் செய்றது யாரு..?" என்றெல்லாம் கேள்வி கேட்கும் பிரபலம் தங்கர்பச்சானாக மட்டும்தான் இருக்கும். "நீங்க யாரா வேணா இருந்துட்டுப் போங்க… நீங்க விவசாயி மகனா இருக்கறதுதான் பெருமை. நான் இன்னிக்கும் அதைச் சொல்லித்தான் பெருமைப்பட்டுக்கறேன்" என்பார்.
பத்திரிகைக்கு எது பயன்படும் என்பதைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருப்பார் அவர். ஒருமுறை, "எவ்ளோ சீக்கிரம் பிரசாத் ஸ்டுடியோவுக்கு வரமுடியுமோ அவ்ளோ சீக்கிரம் வாங்க…" என்று போன் பண்ணினார். அடித்துப் பிடித்துக்கொண்டு ஓடினால் அங்கே மஜ்னு படத்துக்கான போட்டோ டெஸ்ட் ஷூட் நடந்து கொண்டிருந்தது. "பிரசாந்த் ஹீரோ, அவருக்கு ஜோடி டிம்பிள் கபாடியா பொண்ணு ரிங்கி கன்னா நடிக்குது. இன்னும் கன்பர்ம் ஆகலை. படத்துக்கு ஹீரோயினா வருதோ இல்லையோ …உங்களுக்கு அட்டைக்கு உதவுமேனுதான் வரச் சொன்னேன்" என்றார்.
கதைகள் எழுதி அவை வெளியாகும் சமயங்களில் அவற்றைப் படித்துவிட்டுக் கதை பற்றிய ஆழமான கருத்துகளைச் சொல்வார். "கதையிலே, நாம நம்ம கருத்தைச் சொல்றது முக்கியம்தான். ஆனா, அதை கதைக்குள்ளே மறைச்சு வைக்கணுமே தவிர, பிரசங்கமாச் சொல்லக் கூடாது. என்னோட ஒன்பது ரூபாய் நோட்டு கதையைப் படிச்சிருக்கீங்களா?" என்று தன் படைப்புகளைப் பற்றியும் அதன் பின்புலம் பற்றியும் விளங்கச் சொல்லி அடுத்த கதையை நன்றாக எழுதிவிட வேண்டும் என்னும் நம்பிக்கையை நமக்குள் விதைத்துவிடுவார்.
பத்திரிகைக்குள்ளே ஏன் நிக்கிறீங்க… அதைத் தாண்டி வரலாமே என்று எப்போதோ சொன்னதை சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி பேட்டிக்காக வந்திருந்தபோது நினைவுபடுத்தி சந்தோஷப்பட்டார். மிகச் சமீபத்தில் தேசிய விருதுக்கான தேர்வுக் குழுவில் இடம்பெற்று சிறந்த படங்களைப் பார்த்து தேர்வு செய்துவிட்டு வந்திருந்த தங்கர்பச்சானை சமீபத்தில் சந்தித்தபோது, "ஃபன்ட்ரீ(Fandry) முக்கியமான படம்… ரொம்ப பயன்படும் உங்களுக்கு.' என்றார்.
நீங்கள் பத்திரிகையாளனாக இருக்கும்போது தங்கர்பச்சான் நல்ல கட்டுரைகளைத் தருவார். எழுத்தாளனாக இருக்கும்போது நல்ல கதைகளைத் தருவார். காட்சி ஊடகத்தைச் சேர்ந்தவராக இருந்தால் நல்ல சினிமாக்களைத் தருவார். மொத்தத்தில் அவர் எப்போதுமே தகவல் களஞ்சியம்.
நட்சத்திரங்களுடன் என் வானம்..!
தங்கர் தேர்ந்தெடுத்த படம்

Subscribe to:
Posts (Atom)